தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி நினைக்காமல் குடும்பத்துக்காகவே வாழும் அந்தப் பெண்ணின் மனதைப் புரிந்துகொண்டார்.
அப்போது ராஜேந்திரவர்மன் பேசினார்.
“இளம்பிறை, உங்க குடும்பத்துக்கு என்னென்ன தேவையோ அதை எங்களால் முடிஞ்ச அளவுக்கு ஏற்பாடு செய்ய விரும்புறோம். இதை நீங்க உதவின்னு நினைக்க வேண்டாம். எங்களுடைய சேவையா நினைச்சுக்கோங்க.”
“உன்னுடைய குடும்பத்தைப் பார்த்துக்கிறது உன்னுடைய பொறுப்பு. அதே மாதிரி உன்னைப் போன்ற குடும்பங்களுக்கு உதவி செய்யுறது எங்களுடைய பொறுப்பு. இதுல தயங்குறதுக்கு எதுவுமில்லைம்மா.”
அவருடைய வார்த்தைகளில் இருந்த அன்பும் மரியாதையும் இளம்பிறையை அமைதியாக்கின.
மீனாட்சி அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டார்.
“முதல்ல உங்க அம்மாவை நல்ல மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போகலாம். அதுக்கான செலவை நாங்க பார்த்துக்கிறோம். பாட்டிக்கும் தேவையான மருந்துகள், மருத்துவ உதவிகள் எல்லாம் ஏற்பாடு செய்யலாம். செல்வத்தோட படிப்புச் செலவையும் நாங்க ஏத்துக்கிறோம்.”
அதைக் கேட்ட இளம்பிறையின் கண்கள் கலங்கின.
“அம்மா…”
“போதும்மா. எதுவும் பேச வேண்டாம். உன்னுடைய குடும்பம் நல்லா இருக்கணும். அதுதான் எங்களுக்குச் சந்தோஷம்.”
அவளால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.
—
சிறிது நேரத்திற்குப் பிறகு…
வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த வயதான பாட்டியிடம் சென்றார் மீனாட்சி.
“எப்படி இருக்கீங்க அம்மா?”
“இருக்கேன்மா. இந்த வயசுல என்னத்தச் சொல்ல? ஏதோ காலம் போய்க்கிட்டு இருக்கு.”
“உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா?”
“எனக்குன்னு என்னம்மா இருக்கு? இந்தப் புள்ளைங்க நல்லா இருந்தா அதுவே போதும்.”
அவருடைய பதிலைக் கேட்ட மீனாட்சிக்கு அந்தப் பாட்டியின் மீது தனிப் பாசம் ஏற்பட்டது.
“பாட்டி, உங்களுக்குத் தேவையான மருந்து, உணவு எல்லாம் இனிமேல் குறையாமல் பார்த்துக்கிறோம். கவலைப்படாதீங்க.”
—
அன்றைய மதிய நேரம்…
ஊர் தலைவர் மூலமாகத் தெரிந்துகொண்டபடி, இளம்பிறையின் வீட்டிற்குத் தேவையான உதவிகளைச் செய்ய ராஜேந்திரவர்மன் ஏற்பாடுகளைச் செய்தார்.
மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கான பணத்தை ஆதர்ஷிடம் கொடுத்து கார் டிரைவருடன் அவனை அனுப்பி உயர்தர சூப்பர் மார்க்கெட்டில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் படி அனைத்தையும் லிஸ்ட் போட்டு கொடுத்து அனுப்பினார்..
இளம்பிறையின் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முழுமையான பரிசோதனை செய்யவும், அதற்கான மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்தார்கள்.
பாட்டிக்குத் தேவையான முதியோர் உதவிகளும் தொடர்ந்து கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.
இளம்பிறை எவ்வளவோ மறுத்துப் பார்த்தும், அவளுடைய சுயமரியாதைக்குப் பாதிப்பு ஏற்படாத விதமாகவே ஒவ்வொரு உதவியும் செய்யப்பட்டன.
புறப்படுவதற்கு முன்பு மீனாட்சி அவளிடம்,
“இளம்பிறை, ஏதாவது தேவைன்னா தயங்காமல் எங்களுக்குத் தகவல் சொல்லும்மா. உன்னுடைய குடும்பம் நல்லா இருக்கணும். அதுதான் எங்களுடைய ஆசை” என்றார்.
அந்த அணைப்பில் இரக்கத்தைவிட அன்புதான் அதிகமாக இருந்தது.
—
ஊரின் மற்ற பகுதிகள்…
இளம்பிறையின் குடும்பத்தைப் பார்த்துவிட்டு வந்த ராஜேந்திரவர்மன் குடும்பத்தினர் அத்துடன் தங்களுடைய பணியை நிறுத்திக்கொள்ளவில்லை.
ஊர் தலைவரிடம் மற்ற குடும்பங்களைப் பற்றியும் கேட்டறிந்தார்கள்.
ஒரு வீட்டில் வயதான தம்பதியினர் பிள்ளைகளின் ஆதரவின்றி வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
அந்த வீட்டிற்குச் சென்ற மீனாட்சி, அவர்களுடைய உணவுத் தேவைகளையும் மருந்துச் செலவுகளையும் கேட்டறிந்தார்.
மற்றொரு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்துகொண்டிருந்த விதவைப் பெண்ணின் நிலைமை அவர்களை வருத்தமடையச் செய்தது.
அந்தக் குடும்பத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டார்கள்.
இன்னொரு வீட்டில் படித்து முடித்தும் வேலை கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த இளைஞனுக்குத் தங்களுடைய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்வதாக ராஜேந்திரவர்மன் உறுதியளித்தார்.
அதேபோல் வேலை தேடிக்கொண்டிருந்த மற்ற இளைஞர்களின் கல்வித் தகுதிகளையும் விவரங்களையும் பெற்றுக்கொண்டார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று, அவர்களுடைய தேவைகளை அறிந்து, அதற்கேற்ற உதவிகளைச் செய்தார்கள்.
அவர்களுடைய அறப்பணி எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றது.
—
பேரூர் — மாலை நேரம்…
அன்றைய வேலைகளை முடித்துவிட்டு ஓய்வாக அமர்ந்திருந்த ராஜேந்திரவர்மனிடம் ஆதர்ஷ் வந்தான்.
“அப்பா, இன்னைக்கு நம்ம பார்த்த குடும்பங்களோட நிலைமையை நினைச்சுப் பார்த்தா மனசுக்குக் கஷ்டமா இருக்கு. நம்மளால முடிஞ்ச உதவியை இன்னும் நிறைய பேருக்குச் செய்யணும்பா.”
“கண்டிப்பா ஆதர்ஷ். நம்மிடம் இருக்கிற வசதிகளை மற்றவர்களோட தேவைக்குப் பயன்படுத்துறதைவிடப் பெரிய சந்தோஷம் வேற எதுவும் இல்லை.”
அப்போது மீனாட்சி அருகில் வந்து அமர்ந்தார்.
“என்னங்க, இன்னைக்கு இளம்பிறையோட குடும்பத்தைப் பார்த்ததும் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது. அந்தப் பொண்ணு சின்ன வயசுல இருந்தே எவ்வளவு பொறுப்பைச் சுமக்கிறா!”
“ஆமாம் மீனாட்சி. அவளுக்கு நம்மால் முடிஞ்ச உதவியைத் தொடர்ந்து செய்யலாம். அந்தக் குடும்பம் கொஞ்சம் நிம்மதியா வாழ ஆரம்பிக்கணும்.”
சிறிது நேரம் அமைதியாக இருந்த மீனாட்சி, பின்னர் தயக்கத்துடன் கேட்டார்.
“ஆனா, ஆதி மட்டும் நம்ம கூட இருந்திருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும் இல்லையா?”
அந்தக் கேள்விக்கு ராஜேந்திரவர்மன் புன்னகைத்தார்.
“வருவான் மீனாட்சி. அவனுக்கான நேரம் வரும்போது கண்டிப்பா வருவான். நாம நம்ம கடமையைச் சரியா செய்வோம்.”
அப்போது ஆதர்ஷ்,
“அண்ணனும் ஒருநாள் இங்கே வந்து நம்மளோட சேர்ந்து வேலை செய்வார்ப்பா. அப்போ அவருக்கும் இந்த அனுபவம் புரியும்” என்றான்.
அதைக் கேட்ட மீனாட்சி மகனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
—
மறுபுறம் — சென்னை…
தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்திருந்த ஆதிவேந்தன், கணினியில் சில முக்கியமான கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது கைபேசி ஒலித்தது.
திரையில் அம்மாவின் பெயரைப் பார்த்ததும் அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்கம்மா.”
“என்னப்பா, சாப்பிட்டியா?”
“சாப்பிட்டேன்மா. நீங்க சாப்பிட்டீங்களா?”
“சாப்பிட்டேன்பா. இன்னைக்கு நாங்க நிறைய குடும்பங்களைப் பார்த்தோம். அவங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தோம். மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு.”
“சரி ஆனா ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளம்பிறைன்னு ஒரு பொண்ணைப் பார்த்தேன். பார்த்ததுமே மனசுக்குள்ள அப்படியே ஒட்டிக்கிட்டா.
நிறம் கொஞ்சம் கறுப்புதான். ஆனா நீங்க இந்தக் காலத்துல சொல்லுவீங்களே… டஸ்கி பியூட்டி அப்படின்னு, அந்த மாதிரி ஒரு பொண்ணு..
நிறத்தை விட அவளோட குணம் தங்கம். ஏனோ அந்தப் பொண்ணை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
இந்தச் சின்ன வயசுல எவ்வளவு போராட்டம், எத்தனை கஷ்டங்கள்! அத்தனையையும் தாங்கிக்கிட்டு தைரியமா கடந்து வர்ற பக்குவம் அவள்கிட்ட இருக்கு. அவளைப் பத்திச் சொல்லிக்கிட்டே போகலாம்…” என்று இளம்பிறையைப் பற்றிய வியப்பும் பாசமும் கலந்த குரலில் கூறினார்.
“அம்மா… ப்ளீஸ், கொஞ்சம் நிறுத்துங்க! என்னதான் கொஞ்ச நேரம் பார்த்திருந்தாலும், அதுக்குள்ள அந்தப் பொண்ணைப் பத்தி உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சா?
நாம உதவி செய்யப்போறோம்னு தெரிஞ்சு, உதவி தேவைப்படுற குடும்பம் மாதிரி நடிக்கிறவங்களும் இருக்காங்க. அதனால எடுத்ததும் எல்லாரையும் நம்பி எதுவும் செஞ்சிடாதீங்க. முதல்ல அவங்களைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டு அப்புறம் முடிவு பண்ணுங்க…” என்று எச்சரித்தான்.
“சரிப்பா. நீயும் வேலை வேலைன்னு உடம்பைக் கெடுத்துக்காதே.”
“சரிம்மா. அப்புறம் பேசுறேன்.”
அழைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினான்.
ஆனால், தாயின் குரலில் இருந்த மகிழ்ச்சி அவனுடைய மனதில் சிறிது நேரம் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.
—
சித்தரின் இருப்பிடம்…
தியானத்திலிருந்து மெல்லக் கண் திறந்த சித்தரின் இதழ்களில் புன்னகை அரும்பியது.
“ம்… தர்மத்தின் விதை ஊன்றப்பட்டாயிற்று. ஒவ்வொரு உயிருக்கும் ஈசன் வகுத்த கடமை உண்டு. காலம் கனியும்போது, அவரவர் கர்மம் அதற்கான பாதையைத் தேடிக்கொள்ளும். அனைத்தும் அவன் சித்தம்!”
“ம்… அந்த முரண்டு பிடிக்கும் மானிடனை ஈசன் சந்நிதிக்கு எவ்வழியில் அழைத்து வருவது?” என்று தனக்குள் புன்னகைத்தார் சித்தர்.
“வருவான்… தேடி ஓடி அலைந்து களைத்தபின், விதி அவனை இங்கே அழைத்து வந்தே தீரும். காலம் அவனை விட்டுவிடுமா என்ன? வந்துதான் ஆக வேண்டும்!” என்று புன்னகைத்தார் சித்தர்.
“அவனது திருமணப் பேறு கைகூடவும், தகுந்த துணை அமையவும் ஈசன் வழி வகுத்துவிட்டான். அவன் கரத்தால் சேர வேண்டிய தாலி, பட்டுப்புடவை, மெட்டி, சீர்வரிசைப் பொருட்கள் அனைத்தும் அவன் வருகைக்காகக் காத்திருக்கின்றன. காலம் கனியட்டும்… அனைத்தும் ஈசன் சித்தம்!” என்று கூறி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் சித்தர்.
அந்தப் பிடிவாதக்காரன் எப்போது வருவான்? அவன் வாழ்வில் என்ன மாற்றங்கள் நிகழப்போகின்றன?