அதிகாலைப் பொழுதில் கோயில் மணி ஓசையும், வேத மந்திரங்களும் அந்தப் பகுதியையே பக்தி மணம் கமழச் செய்துகொண்டிருந்தன.
ராஜேந்திரவர்மன் குடும்பத்தினர் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்து ஈசனை மனமுருகித் தரிசனம் செய்தனர்.
சித்தர் கூறியபடி தங்களுடைய முப்பது நாள் அறப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, இறைவனின் பாதங்களில் மனமுருகிப் பிரார்த்தனை செய்துகொண்டார்கள்.
தரிசனம் முடிந்து வெளியே வந்ததும் அனைவரையும் பார்த்த ராஜேந்திரவர்மன்,
“சரி, நம்முடைய பயணத்தை இங்கிருந்து ஆரம்பிக்கலாம். முதல்ல உதவி தேவைப்படுற மக்களுக்காக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம்.”
அவருடைய வார்த்தைகளுக்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.
மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எந்தவிதமான விளம்பரமும், ஆடம்பரமும் இல்லாமல் அமைதியாகத் தங்களுடைய பணிகளைத் தொடங்கினார்கள்.
ஆதர்ஷ் ஒவ்வொரு வேலையிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்த அவன் தாய் மீனாட்சி புன்னகைத்தார்.
அவனுடைய ஈடுபாட்டைப் பார்த்த ராஜேந்திரவர்மனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால், மீனாட்சியின் மனம் மட்டும் மூத்த மகனையே நினைத்துக்கொண்டிருந்தது.
‘ஆதியும் நம்ம கூட இருந்திருந்தா எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும்!’
மகனின் நினைவுடன் மீண்டும் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார்.
—
மறுபுறம் — ஊர் தலைவர் வீடு
ஊர் தலைவர் வீட்டில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு ஒரு வேனும், அதைத் தொடர்ந்து இரண்டு கார்களும் வந்து நின்றன.
வாகனங்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தவர், அங்கே காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த ராஜேந்திரவர்மன் குடும்பத்தினரைப் பார்த்தார். அவர்களைப் பார்த்ததும் அருகில் சென்றார்..
“வாங்க ஐயா… வாங்க! என்ன திடீர்னு எல்லாரும் வந்திருக்கீங்க? வாங்கம்மா… வாங்க தம்பி… பொண்ணு, நீயும் வாம்மா. எல்லாரும் உள்ளே வாங்க. நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க, வெளியிலேயே நிக்க வச்சுப் பேசிக்கிட்டு இருக்கேனே!” என்று அன்போடு வரவேற்றார் ஊர் தலைவர்.
“வாங்க, வாங்க… முதல்ல உள்ளே வந்து உட்காருங்க. சாப்பிட்டு வந்தீங்களா? இல்லையென்றால் ஏதாவது சாப்பிட ஏற்பாடு செய்கிறேன்” என்று உரிமையோடு அழைத்தார்.
“ஐயா, வணக்கம். நாங்கள் சென்னைலிருந்து வருகிறோம். இங்குள்ள கஷ்டப்படும் மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்திருக்கிறோம். உங்கள் ஊரில் உதவி தேவைப்படும் குடும்பங்கள் யாராவது இருந்தால், அவர்களைப் பற்றிச் சொல்லுங்கள் ஐயா. எங்களால் முடிந்தவரை அவர்களுக்கு உதவ விரும்புகிறோம்.
அதற்குள் ஊர் தலைவரின் மனைவி அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தார்.
அனைவரும் புன்னகையுடன் காபியைப் பெற்றுக்கொண்டனர். பின்னர் ஊர் தலைவரும் அவர்களுடன் அமர்ந்து பேசத் தொடங்கினார்.
“இந்த ஊர்ல உண்மையிலேயே உதவி தேவைப்படுற குடும்பங்கள் யாராவது இருந்தா எங்களுக்குச் சொல்லுங்க. குறிப்பாக வயதானவங்க, உடல்நலம் சரியில்லாதவங்க, படிக்க வசதியில்லாத குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் இருக்கிற குடும்பங்கள் என யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுதோ அவங்களைப் பற்றித் தெரிஞ்சுக்க விரும்புறோம்.”
“ஐயா, நீங்க இப்படி வந்து உதவி செய்ய முன்வந்ததே எங்களுக்குப் பெரிய சந்தோஷம். இந்த ஊர்ல வசதியில்லாமல் ரொம்பக் கஷ்டப்படுற குடும்பங்கள் நிறைய இருக்கு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கு.”
“அப்படியா? அப்போ எங்களால் முடிஞ்ச அளவுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேர்ல போய் உதவி செய்ய விரும்புறோம்.”
“கண்டிப்பா ஐயா. முதல்ல ஒரு குடும்பத்தைப் பற்றிச் சொல்றேன். அந்தப் பொண்ணு பெயர் இளம்பிறை. சின்ன வயசுல இருந்தே குடும்பத்துக்காக உழைச்சுக்கிட்டு இருக்கா. அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. கூடவே வயதான பாட்டியும் இருக்காங்க. படிக்கிற தம்பியும் இருக்கான். அந்தக் குடும்பத்துல சம்பாதிக்கிற ஒரே ஆள் அந்தப் பொண்ணுதான்.”
அவர் சொன்னதைக் கேட்ட மீனாட்சியின் முகம் வாடியது.
“அப்படியா? அந்தப் பொண்ணுக்கு எத்தனை வயசிருக்கும்?”
“இருபத்தி மூணு வயசு இருக்கும் அம்மா. அந்த வயசுல இருக்கிற பொண்ணுங்க சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல, இவ குடும்ப பாரத்தைச் சுமந்துக்கிட்டு இருக்கா.”
“அப்படியென்றால் முதல்ல அந்த வீட்டுக்குத்தான் போகணும்” என்றார் மீனாட்சி.
ராஜேந்திரவர்மனும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
ஊர் தலைவர் அவர்களை அழைத்துக்கொண்டு இளம்பிறையின் வீட்டை நோக்கிச் சென்றார்.
—
இளம்பிறையின் வீடு…
வீட்டினுள் அமர்ந்திருந்த தன்னுடைய தாய்க்கு மருந்து கொடுத்துக்கொண்டிருந்தாள் இளம்பிறை.
அப்போது வாசலில் ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும் வெளியே வந்தாள்.
ஊர் தலைவருடன் சிலர் வருவதைப் பார்த்ததும்,
“வாங்க தலைவரே…” என்று அவரை அன்புடன் வரவேற்றாள் இளம்பிறை.
அவருடன் வந்திருந்தவர்களைப் பார்த்தவளின் கண்களில் சிறிய குழப்பம். இவர்கள் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்? என்ற கேள்வியுடன் ஒவ்வொருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“இளம்பிறை, இவங்க சென்னையிலிருந்து வந்திருக்காங்கம்மா. இந்த ஊர்ல இருக்கிற ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வந்திருக்காங்க. உங்க குடும்பத்தைப் பற்றிச் சொன்னேன். அதான் உங்களைப் பார்க்க வந்திருக்காங்க.”
அவள் சற்றுத் தயக்கத்துடன் அவர்களைப் பார்த்தாள்.
“வாங்க ஐயா… வாங்க அம்மா… ரொம்ப நல்ல விஷயம் செய்ய வந்திருக்கீங்க. உங்களுடைய இந்த நல்ல எண்ணம் நிச்சயம் பலிக்கட்டும். உங்களால் உதவி கிடைக்கப்போகும் குடும்பங்களின் வாழ்த்துகள் உங்களைச் சேரட்டும். மனதார வாழ்த்துகிறேன் அம்மா” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் இளம்பிறை.
“ரொம்ப சந்தோஷம்மா… உன் வாக்கு பலிக்கட்டும். உன்னுடைய வாழ்த்தோடு எங்க குடும்பம் தழைக்கட்டும்” என்று புன்னகையுடன் கூறினார் ராஜேந்திரவர்மன்.
“இருங்க ஐயா, அம்மா…” என்று கூறி திண்ணையைக் காட்டினாள்.
வந்தவர்கள் திண்ணையில் அமர்ந்ததும், வீட்டிற்குள் சென்று அனைவருக்கும் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். மீனாட்சி மட்டும் தண்ணீரை வாங்கிக் குடிக்க, மற்றவர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டனர்.
அதன்பிறகு மீனாட்சி எழுந்து வீட்டிற்குள் சென்றார். அங்கே இருந்த இளம்பிறையின் அம்மா மீனாட்சியையும் பாட்டியையும் பார்த்து நலம் விசாரித்தார்.
மீனாட்சி அவளைப் பாசத்துடன் பார்த்தார்.
“எப்படிம்மா இருக்க?”
“நல்லா இருக்கேன்மா.”
“உங்க அம்மாக்கு என்ன வருத்தம்?”
“தொடர்ந்து இருமல் இருக்கும்மா… மருந்து கொடுத்தும் இன்னும் சரியாகல” என்று கவலையுடன் கூறினாள்.
சிறிய வீடு. பழைய மரச்சாமான்கள். ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில பாத்திரங்கள். ஒரு மூலையில் செல்வத்தின் புத்தகங்களும் பள்ளிப் பையும் இருந்தன.
வீட்டின் நிலைமையைப் பார்த்த ராஜேந்திரவர்மனும் மீனாட்சியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
அப்போது கட்டிலில் படுத்திருந்த இளம்பிறையின் தாய், வந்தவர்களைப் பார்த்து எழுந்திருக்க முயன்றார்.
“இருங்கம்மா, நீங்க எழுந்திருக்க வேண்டாம். அப்படியே இருங்க” என்று அருகில் சென்றார் மீனாட்சி.
“நீங்க யாரும்மா?”
“நாங்க வெளியூர்ல இருந்து வந்திருக்கோம். இந்த ஊர்ல உதவி தேவைப்படுற குடும்பங்களுக்கு எங்களால் முடிஞ்ச உதவிகளைச் செய்யலாம்னு வந்திருக்கோம்.”
அந்தப் பெண்ணின் உடல்நிலையைப் பார்த்ததும் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுவது புரிந்தது.
“என்னம்மா உடம்புக்கு?”
“கொஞ்ச நாளாவே உடம்பு சரியில்லம்மா. மருத்துவமனைக்குப் போய்ப் பார்க்கணும். ஆனா, என் பொண்ணு ஒருத்தியே குடும்பத்தைப் பார்த்துக்கிறா. அவளுக்கு ஏற்கனவே நிறையச் சுமை இருக்கு. அதனாலதான் என்னால முடிஞ்ச அளவுக்கு சமாளிச்சுக்கிட்டு இருக்கேன்.”
அதைக் கேட்ட இளம்பிறை உடனே,
“அம்மா, அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீங்க கவலைப்படாதீங்க” என்று தாயைச் சமாதானப்படுத்தினாள்.
அவளுடைய வார்த்தைகளில் தாயின் மனம் வருந்தக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.