அப்போது…“கீரீச்… கீரீச்…” என்ற பூச்சிகளின் சத்தம் முதலில் கேட்கத் தொடங்கியது. அதன்பின், “சரக்… சரக்…” என்ற மெதுவான காலடி ஓசை, அந்த இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு அவனது காதுகளில் விழுந்தது.

விக்கிரமன் சட்டென்று கண்களைத் திறக்கவில்லை. பாதிக் கண்களை மட்டும் திறந்து, தூங்குவது போலப் பாசாங்கு செய்தபடி, அந்த ஓசை வந்த திசையை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினான்.

அந்த முதியவர் மெதுவாகத் தனது குடிலிலிருந்து வெளியே வந்தார். ஒரு கணம் அங்கேயே நின்று, இருபுறமும் யாரேனும் தன்னைக் கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் நோட்டமிட்டார்.

பின்னர்… யாருடைய கண்களிலும் படாமல் அமைதியாக ஆற்றைக் கடந்து, காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

முதியவரின் இந்தச் செயல் விக்கிரமனின் மனதில் சந்தேகத்தை எழுப்பியது. மெதுவாக எழுந்தவன், சற்றுத் தொலைவு விட்டு அவரைப் பின்தொடரத் தொடங்கினான்.

காட்டிற்குள் சிறிது தூரம் சென்றதும், நிலவொளி அழகாகப் படர்ந்திருந்த ஓர் இடத்தில் இருந்த பாறையின் அருகே முதியவர் சென்று நின்றார்.

அதைப் பார்த்த விக்கிரமனும் சற்றுத் தொலைவில் இருந்த ஒரு மரத்தின் பின்னால் மறைந்துகொண்டு, முதியவரின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கத் தொடங்கினான்.

அப்போது அவன் கவனத்திற்கு இன்னொரு விஷயம் தென்பட்டது.

முதியவர் நின்றிருந்த பாறையிலிருந்து சில அடிகள் தள்ளி, மற்றொரு மரத்தின் பின்னால் மறைந்தவாறு ஒருவன் நின்றுகொண்டிருந்தான்.

அவனையும் கவனித்த முதியவர், திடீரெனத் தனது வலது கையின் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் நேராக நீட்டி, வாள் போன்ற வடிவில் அந்த நிழலை நோக்கிச் சைகை செய்தார்.

அதன்பின், அந்த இரு விரல்களையும் கீழ்நோக்கி வளைத்தார்.

அந்தச் சைகையின் பொருள் என்னவென்று விக்கிரமனுக்குப் புரியவில்லை.

அதற்குள் முதியவர் மீண்டும் குடிலை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார். பாதுகாவலர்களின் கண்களில் படாதவாறு, முன்புபோலவே அமைதியாக நடந்துசென்றார்.அனைத்தையும் பார்த்த விக்கிரமனின் சந்தேகம் மேலும் வலுத்தது. ஆனால் அந்தச் சைகையின் அர்த்தம் மட்டும் அவனுக்குப் புரியவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் மெதுவாக மீண்டும் குடிலுக்குத் திரும்பியவன், மரத்தடியில் படுத்துக்கொண்டு அந்தச் சைகையின் பொருளைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கினான். அந்த முதியவர் உண்மையில் யார் என்ற சந்தேகமும் அவனுள் ஆழமாக வேரூன்றியது.

இளவரசியைப் பற்றிய கனவுகள் கூட அன்றிரவு அவனைத் தேடி வரவில்லை. முதியவரின் சைகையின் அர்த்தத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த விக்கிரமன், அறியாமலேயே உறக்கத்தில் ஆழ்ந்தான்.

மறுநாள் காலை…

கொட்டாவி விட்டபடி புத்துணர்ச்சியுடன் எழுந்தான் விக்கிரமன்.

அவனுக்கு எதிரே, ஒன்றுமே அறியாத அப்பாவியைப் போல அமைதியாக அமர்ந்திருந்தார் நேற்று இரவு அவன் பின்தொடர்ந்த அதே முதியவர். இப்போதுதான் விக்கிரமன் அவரைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். தலையில் இருந்த தலைமுடியை மறைக்கும் வகையில் அழுக்கடைந்த தலைப்பாகை ஒன்று கட்டியிருந்தார். நரைத்த மீசை, முகம் முழுவதும் படர்ந்திருந்த சுருக்கங்கள், அழுக்குப் படிந்த ஆடைகள் எனப் பார்க்க, அவர் ஒரு சாதாரண முதியவரைப் போலவே தோன்றினார். அவரது தோற்றத்தை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாமல் விக்கிரமன் குழம்பினான்.

அவரைக் கண்டும் காணாதது போல் எழுந்தவன், அருகிலிருந்த வேப்பமரத்தை நோக்கிச் சென்றான். கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த ஒரு சிறிய கிளையை ஒடித்து, அதன் நுனியை மென்று பல்துலக்கத் தொடங்கினான்.

பின்னர் அங்கிருந்து ஆற்றை நோக்கி நடந்துசென்றான். ஆற்று நீரில் முகத்தைக் கழுவியவன், அங்கிருந்த மக்களோடு மக்களாக நீரில் இறங்கிக் குளிக்கத் தொடங்கினான்.

அப்போது, சற்றுத் தொலைவில் இருந்த கோவில் அவனது கண்களில் பட்டது. அந்தக் கோவிலைக் கண்டவுடன், நேற்று சந்தித்த இளவரசியின் முகம் அவனது கண்முன்னே வந்து சென்றது.

ஏதோ ஒரு காரணத்தால், அவனது மனம் மீண்டும் அந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று துடித்தது. குளித்து முடித்து ஆடைகளை அணிந்துகொண்டவன், பணிக்குச் செல்வதற்கு முன்பாகக் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

ஏற்கனவே அது அரச குடும்பத்தினர் வந்து செல்லும் கோவில் என்று இளவரசி எச்சரித்திருந்ததால், சற்று தொலைவிலேயே நின்று கோவிலை உன்னிப்பாகக் கவனித்தான்.

கோவில் வாசலில் இரண்டு காவலர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும், உள்ளே செல்வது சாத்தியமில்லை என்பது விக்கிரமனுக்குப் புரிந்தது.

இளவரசியைக் காண முடியாது என்ற ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல முடிவெடுத்தான்.

குடிலை நோக்கி அவன் திரும்பிய அந்தக் கணத்தில்… அவனது கண்முன்னே வந்து நின்றாள் காயத்திரி தேவி. அதைச் சற்றும் எதிர்பாராத விக்கிரமன், திடுக்கிட்டு பயத்தில் கால்களைப் பின்னோக்கி நகர்த்தினான்.

அதைக் கண்டு புன்னகைத்தவள், “தாங்கள் இவ்வளவு பயந்தாங்கொள்ளி என்று நினைக்கவில்லை!” என்று நையாண்டியாகக் கூறினாள்.

“இளவரசியாரைக் கண்டால் அகதியான நான் பயந்துதானே ஆக வேண்டும்…” என்று அவனது உதடுகள் மட்டுமே பதிலளித்தன. ஆனால் அவனது கண்களோ, அவளது கண்களின் அழகை ரசித்துக்கொண்டிருந்தன. அப்படி என்ன இருக்கிறது அந்தக் கண்களில்? தன்னை இப்படி மயங்கச் செய்யும் அளவுக்கு அவற்றில் என்ன இருக்கிறது என்று விக்கிரமனுக்கே புரியவில்லை.

“என்னைக் கண்டு பயம்கொள்ள  நான் என்ன புலியா?  சிங்கமா?  இல்லை உங்களை கடித்து தின்று விடபோகிறேனா?” என்று புன்னகையுடன் கேட்டாள் காயத்திரி தேவி.

அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விக்கிரமன் வெட்கத்தில் பெண்களைப் போல் நெளிந்தான்.

அவனது செயலைக் கண்டு சிரிப்பை அடக்கிக்கொண்டவள்,“நேற்று அகதி என்றீர்கள். தங்களின் பெயர் என்னவென்று கூறவில்லையே?” என்று கேட்டாள்.

“என் பெயர் விக்கிரமன், இளவரசியாரே.” என்று கூறிவிட்டு தலையைக் குனிந்துகொண்டான்.

“என் பெயர் காயத்திரி தேவி.” என்று அவன் கேட்காமலேயே தன் பெயரைக் கூறினாள்.

அதற்கு மேலும் அங்கேயே நின்று இளவரசியுடன் உரையாடுவது உசிதமாக விக்கிரமனுக்குத் தோன்றவில்லை.

எனவே, அங்கிருந்து செல்ல நினைத்தவன்,“மன்னிக்க வேண்டும், இளவரசியாரே… பணிக்குச் செல்ல நேரமாகிவிட்டது.” என்று கூறி அவசரமாக அங்கிருந்து நகர நினைத்தான்.

“சற்று பொறுங்கள்… அதற்குள் என்ன அவசரம்? ஆயுதப்பட்டறைக்குச் செல்ல இன்னும் நேரம் இருக்கிறதே!” என்று தனது கைகளை குறுக்காகக் கட்டிக்கொண்டு கேட்டாள்.

தான் வேலை செய்யும் இடத்தை இளவரசி அறிந்திருப்பதை எண்ணி விக்கிரமன் சற்று அதிர்ந்துதான் போனான். இருப்பினும், இந்நாட்டின் இளவரசிக்கு அதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்வது ஒன்றும் கடினமான காரியமல்ல என்று அவனது மூளை உணர்த்தியது.

அதனால் அதைப் பற்றி மறுகேள்வி கேட்காமல், அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

அந்த நேரத்தில் சற்று தொலைவில் நின்றிருந்த இரு காவலர்களின் முகங்களிலும் கலவரம் தெரிந்தது. கோவிலுக்குள் சென்ற இளவரசி இன்னும் வெளியே வராததை உணர்ந்த அவர்கள், அவளைத் தேடத் தொடங்கியிருந்தனர்.

அதைக் கவனித்த காயத்திரி தேவி விக்கிரமனை நோக்கி, “நாளைக்கு இதே இடத்துல சந்திப்போம். வருவீங்க தானே?” என்று புன்னகையுடன் கேட்டாள்.

அதைக் கூறிவிட்டு, சிறுபிள்ளையைப் போல ஓடிச்சென்று கோவிலின் பின்புறமாக மறைந்தவள், அங்கிருந்து மீண்டும் கோவிலுக்குள் நுழைந்துவிட்டாள்.

சிறுபிள்ளையைப் போல ஓடிச் செல்லும் அவளைப் பார்த்து ரசித்துக்கொண்டே மனதிற்குள் சிரித்தான் விக்கிரமன்.

அவள்… அவனது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டாள் என்பதை மட்டும் அவன் இன்னும் உணரவில்லை.

அங்குமிங்கும் இளவரசியைத் தேடிய காவலர்கள், கோவிலின் மற்றொரு புறத்திலிருந்து இளவரசி வருவதைக் கண்டதும் சற்று நிம்மதியடைந்தனர்.

‘தங்கள் தலை தப்பியது’ என்ற பெருமூச்சுடன் அவர்கள் அவளைச் சுற்றி வந்தனர்.

சிறிய பல்லக்கில் காயத்திரி தேவி ஏறிக்கொள்ள, நான்கு காவலர்கள் அந்தப் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர்.

கோவிலை விட்டு பல்லக்கு நகர்ந்துகொண்டிருந்தபோது, காயத்திரி தேவி பல்லக்கின் திரைச்சீலையைச் சற்றே விலக்கி, இன்னும் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்த விக்கிரமனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

அவனும் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததும், மெல்லிய புன்னகை அவள் இதழ்களில் மலர, திரைச்சீலையை மீண்டும் மூடிக்கொண்டாள்.

அவள் சென்றுகொண்டிருப்பதை வெகுநேரம் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருந்த விக்கிரமன், இறுதியில் சூரியன் மேலேறிக்கொண்டிருக்க, தன் நிழல் சுருங்கி வருவதை கவனித்தான். பணி நேரம் நெருங்கிவிட்டதை உணர்ந்தவன், உடனே ஆயுதப்பட்டறையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

ஆயுதப்பட்டறை…

சுற்றிலும் பல கொல்லர்கள், “டண்… டண்…” என்ற ஒலியுடன் சுத்தியலால் இரும்புகளை அடித்துக்கொண்டிருந்தனர். சிலர் வாள்களையும் ஈட்டிகளையும் வடிவமைத்துக்கொண்டிருக்க, இன்னும் சிலர் உலைகளில் இரும்பை உருக்கிக்கொண்டிருந்தனர். அந்த உலைகள் கணலைக் கக்கி, நெருப்பை ஏப்பம் விட்டுக்கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தன.

அவற்றையெல்லாம் கவனித்தபடி உள்ளே சென்ற விக்கிரமன், நேற்று விட்டுச்சென்ற தனது பணியைத் தொடர்ந்தான். நேற்று பாதியில் விட்டுச்சென்ற ஈட்டியை எடுத்தான். அதன் அடிப்பகுதி மட்டுமே முடிக்கப்பட்டிருந்தது. முனைப்பகுதியை வடிவமைக்க, மீண்டும் அதை உலை நெருப்பில் இட்டு சிவக்கக் காய்ச்சினான்.

பின்னர் அதை பத்திரமாக வெளியே எடுத்தவன், கூர்மையான முனைப்பகுதியை தனது சுத்தியலால் தட்டி வடிவமைக்கத் தொடங்கினான்.

சிறிது நேரத்திலேயே ஈட்டி மெல்ல முழுமையாக வடிவம் பெற்றது. அதனை கல்தொட்டியில் இருந்த தண்ணீரில் குளிரூட்டுவதற்காக  அமிழ்த்தினான் .

“ ச்சீஸ் ..” என்று நீரிலிருந்து நீராவி எழுந்தது .

உலையின் கொதிக்கும் வெப்பத்திலும், சுத்தியலால் ஈட்டியைத் தொடர்ந்து அடிக்க அதிக அளவு சக்தியைப் பயன்படுத்தியதாலும், அவனது உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது.

அந்த வெப்பமும் வியர்வையும் அவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவே, ஆயுதப்பட்டறையை விட்டு வெளியே வந்தான்.

வெளியில் வீசிய இதமான காற்று அவனது உடலைத் தழுவிச் செல்ல, சற்றுத் தொலைவில் இருந்த நீரோடையை நோக்கி நடந்தான்.

பாறைகளுக்கு நடுவே ஆற்று நீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. குனிந்து, தன் கைகளால் நீரை அள்ளி முகத்தைக் கழுவினான்.

பின்னர் மீண்டும் தனது கைகளைத் தண்ணீருக்குள் விட்ட அந்தக் கணத்தில்…அவனது கைகளை ஏதோ ஒன்று திடீரென உள்ளுக்குள் இழுத்தது.

விக்கிரமனின் முகத்தில் பதற்றம் அதிகரித்தது.

தொடரும் …