அவர்கள் விரும்புவது போல அவனால் இப்பொழுது திருமணம் எல்லாம் செய்ய முடியாது. அவனது அக்கா கன்னிகா காதல் திருமணம் செய்து விட்டாள். பெற்றவர்களைப் போல இவனுக்கும் ஆரம்பத்தில் ரொம்பவும் கோபம் தான்! அவளின் செய்கையில் மனமுடைந்து உலாவிய நாட்கள் ஏராளம். ஆனால், இப்பொழுது அக்கா செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அவளை மன்னித்து ஏற்றுக்கொண்டான். தற்போது அவனது பெரும் எதிர்பார்ப்பு தன் அக்காவைப் பெற்றோரோடு சேர்த்து வைக்க வேண்டும் என்பது தான். ஆனால், பெற்றவர்கள் பிடிகொடுக்க மறுக்கிறார்கள்.

அதையெல்லாம் விட அதிமுக்கியமாக அவனது மனதில் ஓயாமல் நச்சரித்துக் கொண்டே இருப்பவள் (கேமர் த்ரீ) இவனிடம் கோபம் கொண்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக விலகியிருக்கிறாள். அவளை அவன் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும். அதன்பிறகு தான் அவனால் வேறு எதிலும் கவனம் செலுத்தவே முடியும்! இந்த சமயத்தில் போய் பெற்றவர்கள் திருமணம் என்று நச்சரித்தால்? உண்மையில் அவனால் திருமணத்தைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை. இதெல்லாம் அவர்களிடம் சொல்லிப் புரிய வைக்கவும் முடியாது என்பதால் அவர்களோடு தினமும் சண்டையாகத் தான் இருக்கிறது.

இப்பொழுதும் அம்மாவின் வருத்தத்தைக் கடந்து போக முடியாமல் வேறு வழியேயின்றி தான் அவர்கள் பார்த்த பெண்ணைப் போய் பார்த்துவிட்டு, அவளிடம் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று எடுத்துச் சொல்லிவிட்டு வந்துவிடலாம் என்று யோசித்து அம்மாவிடம் சரியென்று சொன்னதும்!

என்னவோ இவன் யோசித்தது யோசித்தபடி நடப்பது போல! இவன் வேண்டாம் என்று சொல்வதற்காக பார்க்கச் செல்லும் பெண், அந்த வார்த்தைகளை உதிர்க்கவே யோசிக்க முடியாதபடி இவனை மாற்றிவிடப் போகிறாள் என்று அறியாமல் இவனாக ஒரு தீர்மானத்தை எடுத்து வைத்திருக்கிறான் பாவம்.

*** சென்னையில் ஓ.எம்.ஆர்., சாலையில் பெருங்குடி அருகே அமைந்திருக்கும் பெண்கள் விடுதி இரவு நேர ஆராவாரத்துடன் பரபரப்பாக இருந்தது. அவ்விடுதியின் ஓர் அறையினுள் தோழிகள் மூவர் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அந்த அறையிலிருக்கும் கோபக்கார கிளி வெண்மதியின் கோபத்தை வெகுவாக கிளறி விட்டுக் கொண்டிருந்தாள் அவளின் அறைத்தோழி சிந்து.

“ஹே மதி டார்லி ப்ளீஸ்டி. உன்னைத்தவிர வேற யாரும் இதை சரியா செய்ய முடியாதுடி” என்று தன் தோழி வெண்மதியிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருந்தாள் அவள்.

டார்லி, டியர், செல்லம் எல்லாம் அவர்களுக்குள் வருகிறதென்றால் ஏதோ வேலையாக வேண்டும் என்று அர்த்தம்! இல்லையென்றால் பொதுவாகப் பேய், பிசாசு, எருமை என்பதாகத்தான் இவர்களது அழைப்புகள் இருக்கும். அந்த அறையில் வசிக்கும் மூன்று தேவிகளும் வெவ்வேறு நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். ஒரே அறையை பகிர்ந்து கொண்டதால் தொடங்கிய நட்பு விரைவிலேயே விருட்சமாக வளர்ந்து விட்டது.

டார்லி என்ற கெஞ்சலுக்கு மயங்காத வெண்மதியோ முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு, “மரியாதையா ஓடிப் போயிடு, இல்லை எதையாவது தூக்கி மேலே வீசிடப் போறேன்” என்று கண்களை உருட்டி மிரட்டிக் கொண்டிருந்தாள்.

சிந்து முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு, “இப்ப வேற என்ன செய்ய முடியும்ன்னு நீயே சொல்லு? எனக்காக நீ இதைக்கூட செய்ய மாட்டியா?” என்று உணர்ச்சிகரமாகப் பேசியவள், “ஹே நிஷா கொஞ்சம் இவளுக்கு எடுத்து சொல்லேன்டி” என்று அருகில் நின்றிருந்த மற்றொரு தோழியை உதவிக்கு அழைத்தாள்.

“ஆமாம்டி மதி இவ சொல்லற ஐடியா நல்லா வொர்கவுட் ஆகும். இந்த விஷயத்துக்கு உன்னை விட்டா வேற பொருத்தமான ஆளே இல்லை. கொஞ்சம் கன்சிடர் பண்ணுடி. அவளும் பாவம் தானே ப்ளீஸ்…” என்று நிஷாவும் சிந்துவுக்காகப் பரிந்து பேச மதி கடுப்பாகிப் போனாள்.

“லூசுங்களாடி நீங்க ரெண்டு பேரும். கல்யாணம் பிடிக்கலைன்னா அதை இவ வீட்டுல இருக்கிறவங்ககிட்ட தைரியமா சொல்லணும். அதை விட்டுட்டு கல்யாண மாப்பிள்ளையைப் பார்க்க பிராக்ஸி (ஒருவருக்குப் பதில் இன்னொருவர் ஏமாற்றி செல்வது) ஏற்பாடு செய்வீங்களா?” என்றாள் உச்சகட்ட கடுப்பில். எதையும் துணிச்சலோடு எதிர்கொள்பவளுக்கு இவர்களுடைய லாஜிக் சுத்தமாகப் புரியவே இல்லை.

“அதை சொல்ல முடிஞ்சா நான் ஏன்டி இப்படி கெஞ்ச போறேன். முடியாம தானே உன்கிட்ட கேட்கிறேன்” கண்ணைச் சுருக்கி கெஞ்சலாகக் கேட்ட தோழியை நெருப்பாகப் பார்த்தாலே தவிரக் கொஞ்சம் கூட இளகவில்லை அவள்.

“சொன்னா கேளு மதி பேபி உன்னை எல்லாம் பார்த்ததும் மாப்பிள்ளை தெறிச்சு ஓடிடுவான். அது தானே நமக்கு வேணும்?” என்று சிந்து பாவமாகச் சொல்ல, அவள் சொன்னதைக் கேட்டதும் வெண்மதிக்கு சுறுசுறுவென்று கோபம் ஏற, “ஹே என்ன லந்தா?” என எகிறியபடி வந்தாள்.

“பர்பெக்கட் டி. இதே டோன்’ல போயி அவன்கிட்ட பேசு… பையன் விழுந்தடிச்சு ஓடாட்டி என்கிட்ட கேளு, கண்டிப்பா இந்த ஐடியா சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்” என்று மேலும் மேலும் வெண்மதியை சிந்து சேதம் செய்தாள்.

‘அடங்க மாட்டேங்கிறாளே!’ என்ற ஆத்திரத்துடன், “வேணாம்டி… எனக்கு வர கோபத்துக்கு…” என்று பல்லைக் கடித்தாள் மற்றவள்.

நிஷாவும் சிந்துவுக்கு பாவம் பார்த்து, “ஊர்ப்பக்கம் இருக்க பசங்க எல்லாம் அடக்க ஒடுக்கமான பொண்ணு வேணும்ன்னு எதிர்பார்ப்பாங்கடி. நீ கொஞ்சம் தைரியமான ஸ்ட்ரைட் பார்வேர்ட் பொண்ணு. உன்னை அந்த பையனுக்கு பிடிக்க வாய்ப்பே இல்லை. அவனே இந்த கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிட்டா அது எவ்வளவு பெரிய நல்ல விஷயம்ன்னு யோசி… சிந்து இந்த கல்யாணத்துல இருந்து தப்பிக்கத் தானே இந்த உதவியைக் கேட்கிறா” என அவளுக்காக மீண்டும் பேசினாள். ஏற்கனவே அங்கு ஒருவன் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் முடிவில் தான் இருக்கிறான் என்று புரியாமல் இங்கே இப்படித் திட்டமிடுகிறார்கள்!

நிஷா சொன்ன தினுசில் ஊர்ப்பக்கம் இருக்கும் ஒருவனை வெண்மதிக்கும் தெரியும். இவர்கள் சொல்வது போல அப்படி ஒன்றும் இவளின் அடாவடிப் பேச்சும், தைரியமும் அவனுக்குப் பிடிக்காமல் போனதில்லை! இன்னும் சொல்லப்போனால் அவன் அவளை மதித்தவன். அவளோடு நல்ல நட்போடு இருந்தவன். மனதிற்குள் அவனைப்பற்றி யோசித்தவள், ‘ம்ப்ச் இது வீண் வேலை’ என்று தலையை உலுக்கி அவன் நினைவுகளை வேகமாக ஒதுக்கினாள். அப்படி ஒதுங்கி நிற்பதா அவனது நினைவுகள்?

வெண்மதி யோசனையோடான குரலில், “ஊர்க்கார பசங்க எல்லா அந்த மாதிரி தான் இருப்பாங்கன்னு நீங்களே ஜட்ஜ் பண்ணிக்கிட்டா எப்படி? ஒருவேளை நான் பார்க்கப் போற பையன் அப்படி இல்லாம இருந்தா என்ன செய்வ?” என்றாள். மனதிற்குள் திடீரென எழுந்தவனின் நினைவுகள் அவளின் கோபத்தை வெகுவாகத் தணித்திருந்தது. அதில் அவளின் குரலில் வெகுவாக சூடு குறைந்திருக்க, அவளின் திடீர் மாற்றத்திற்கான காரணம் மற்ற இருவருக்கும் புரியவில்லை.

யோசனையும் குழப்பமுமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சிந்து தான், “இல்லைடி எங்க ஊர்ப்பக்கம் பசங்க பெரும்பாலும் இப்படித்தான் எதிர்பார்ப்பாங்க” என்றாள்.

“என்னவோ போ… ஒருத்தனை பிராங்க் பண்ணனும் அவ்வளவு தானே? சரி போனா போகுதுன்னு பண்ணறேன். ஆனா இதுனால எனக்கு எதுவும் பிரச்சனை வந்துடாதே” என்றாள் தன்னிலையிலிருந்து இறங்கி வந்து.

“ச்சே! ச்சே!” என்று வேகமாக மறுத்துத் தலையாட்டினாள் சிந்து. அவளுக்கு எங்கே வரவிருக்கும் பிரச்சனைகள் குறித்து தெரியப் போகிறது?

“மவளே! எனக்கு மட்டும் இதுனால எதுவும் பிரச்சனை வந்துச்சு நீ தொலைஞ்சடி…” என விரல் நீட்டி எச்சரித்தவளிடம், “அதுதான் வராதுன்னு சொல்லறேனேடி” என்றாள் உறுதியாக.

“சரி அந்த பையன் போன் நம்பர் வெச்சிருந்தா போன்லேயே இந்த டீலிங் முடிச்சிடலாமே… எதுக்கு வீணா நேர்ல போயி அலைஞ்சிட்டு…” என வெண்மதி கேட்க,

“எங்க அப்பா இப்படி பெத்தவங்க வராம பொண்ணு பார்க்க விடறதே பெருசு. இதுல போன் நம்பர் வேற தருவாரா? நம்ம கபாலீஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு அப்பாகிட்ட எங்கே இருக்கோம்ன்னு சொன்னா அவரு அந்த பையனுக்கு போன் பண்ணி நம்ம இருக்கிற இடத்தை சொல்லிடுவாராம்…” என்று சிந்து விளக்கம் தந்தாள்.

வெண்மதிக்கு சிந்து சொல்லும்போது திட்டம் என்னவோ சுலபமாகத்தான் தெரிந்தது.

ஆனால், அவள் பிராக்ஸி (ஆள்மாறாட்டம்) செய்து மாப்பிள்ளை பார்க்கப் போகும் இளமுகிலன் அவள் வேலைப் பார்க்கும் கம்பெனியில் பணியாற்றுபவன். அது தெரியாமல், இவள் திருமணம் நிற்க வேண்டும் என்கிற காரணத்துக்காக அவனிடம் செய்துவிட்டு வரும் அலப்பறையில் என்னென்ன எதிர்வினைகளை அவள் எதிர்கொள்ளப் போகிறாளோ?