கனவுப்பூவே வருக! – 1

“அதுதான் நான் சொன்னதைக் கேட்க மாட்டேன்னு சொல்லிட்ட தானே? அப்பறமும் எதுக்கு என்னை தேடற? பொறுப்பில்லாதவங்களை, பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறவங்களை எல்லாம் எனக்குப் பிடிக்காது, அவங்க என்னை தேடவும் வேண்டியதில்லை” சிலுப்பிக் கொண்டு பேசிய பெண்ணின் குரல் மட்டும் இளமுகிலனின் செவிகளில் கேட்டது. என்ன முயற்சித்தும் அந்த குரலுக்கு உரிமையானவளின் வடிவத்தை அவனால் கற்பனையில் கூட கொண்டு வர முடியவில்லை.

மேகக்கூட்டம் கூடி நின்று மறைத்த நிலவினைப் போலவே அந்த பெண்ணின் உருவமும் அவன் மனதில்!

கேமர் த்ரீ இதுதான் அவன் அறிந்த அவளின் பெயர். அவளுக்கான ஐக்கானாக (முகப்புப்படமாக) அவள் வைத்திருந்தது வெண்ணிறத்தில் பளீரென மிளிரும் மூன்றாம் எண்ணை மட்டுமே!

குழம்புகிறீர்களா? இவனுள் எங்கோ ஓர் மூலையில் ஓடி ஓடி நின்று இவனை நசநசத்துக் கொண்டிருப்பவளைப் பற்றிப் பேசினாலே குழப்பம் தான் மிஞ்சும். ஆக, இப்பொழுது அவளை விட்டுவிடலாம்.

நேரம் கிடைக்கும்பொழுது நிதானமாக வாசிக்க வேண்டிய வீணையவளுக்குத் தற்சமயம் இவனது கனவுகளிலிருந்தும் சிறு ஓய்வு தந்து விடலாம்!

இளமுகிலனின் சொந்த ஊர் கோவை அருகே இருக்கும் சத்தியமங்கலம். வேலை நிமித்தமாக சென்னையில் தனியாக வீடெடுத்து வாசம் செய்கிறான். சென்னையில் திருவான்மியூர் பகுதியில் அமைந்திருக்கும் பிரபல ஐ.டி., நிறுவனத்தில் டீம் லீடாக வேலைப் பார்க்கிறான்.

இளமுகிலன் விடியற்காலை கனவில் அவளின் குரல் ஒலித்ததில் இதழ்களில் படரவிட்ட புன்னகையுடன் தன் இரு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்தபடி எழுந்தமர்ந்தான்.

‘எப்படியும் ஒரு நாள் உன்னை கண்டுபிடிச்சுடுவேன்’ மனதோடு அவளிடம் சவால் விட்டுக் கொண்டவனுக்கு அதற்கான வாய்ப்பை தர மறுப்பவளை எண்ணி நீண்டதாக பெருமூச்சு வந்தது.

‘அதெப்படி யாரென்று தெரியாத ஒருத்தியின் நினைவுகளோடு நீ சுழல்வாய்?’ என்று காலம் கோபத்துடன் சாட்டையைத் தயாராக வைத்திருந்ததன் பயனாய் அவனின் கைப்பேசி இசைத்து அவனைக் கலைத்தது.

அம்மாவின் பெயரைத் தாங்கி ஒலித்த கைப்பேசியின் ஒலியில் அத்தனை நேரமிருந்த இதமும், இயலாமையுடன் கூடிய எதிர்பார்ப்பும் எங்கோ ஓடி மறைய மெல்லிய கடினத்தன்மை முகத்தில் குடியேறிக் கொண்டது.

காலையிலேயே மறுபடியும் தொடங்குகிறார்கள்! சலிப்புடன் எடுப்பதா வேண்டாமா என்று குழம்பியவன், அழைப்பை ஏற்காமல் விட்டால் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருப்பார்கள் என்று புரிய அதனை ஏற்று ஒன்றும் பேசாமல் அமைதி காத்தான்.

“நான் சொன்ன விஷயத்தை யோசிச்சியா?” ஜானகியின் குரலும் சலிப்புடன் ஒலித்தது.

இளமுகிலனின் அமைதி தொடர, “பிடிவாதம் பிடிக்காத தம்பி” என்றார் சற்று அழுத்தமாக.

“இப்ப எதுவும் வேண்டாம்ன்னு எத்தனை முறை உங்ககிட்ட சொல்லுவேன், இப்ப உடனே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சு என்ன சாதிக்கப் போறீங்க?” என்றான் கடினமான குரலில். எத்தனை சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. இளரத்தம் அதற்குரிய சூட்டோடு கொதித்ததில் பெற்ற மனம் நொந்தது.

“நாளுக்கு நாள் உனக்கு வயசு ஏறுதுன்னு நினைப்பு வேணாமா? காலா காலத்துல எங்க கடமையும் முடிச்சிட்டா நாங்க அக்கடான்னு இருப்போம். உனக்கு அது பொறுக்காது. எப்ப பார்த்தாலும் அபசகுணம் மாதிரி தட்டிக் கழிச்சிட்டே இருக்க” கோபத்தில் ஜானகியின் குரலும் உயர்ந்தே ஒலித்தது.

திருமண பேச்சைத் தொடங்கியதிலிருந்து வேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருந்தால் அவரும் தான் என்ன செய்வார்? இந்த காலத்தில் திருமணம் கூடி வருவதற்குள் பெற்றவர்கள் எத்தனை மெனக்கெடுகிறார்கள்? இவன் என்னவென்றால் தொடங்கவே விட மாட்டேன் என்று நின்றால்? தினமும் அவருக்கும் அவர் கணவர் லோகநாதனுக்கும் இவனிடம் கத்தி கத்தி பீபி ஏறுவது தான் மிச்சம்.

“ஹான்… ஆமா ஆமா உங்க கடமையை முடிக்கணும். இப்ப அது மட்டும் தான் உங்களுக்குப் பெரிய குறை. முதல்ல போனை வையுங்க. அதுதான் சாயங்காலம் ஆனதும் புருஷனும் பொண்டாட்டியும் மாத்தி மாத்தி கழுத்தை அறுக்கறீங்களே… காலையிலேயும் ஆரம்பிக்காட்டி என்ன? மனுஷனை நிம்மதியா வேலைக்குக் கிளம்ப விடுங்க…” என்றான் அவரை விட கோபமாக.

ஜானகிக்கு பற்றிக்கொண்டு வந்தது. அவன், ‘பெற்றவர்களின் கடமை இது மட்டும் தானா?’ என்று அழுத்தி சொல்வது ஏனென்று தெரியாதவர் இல்லையே அவர்! அதற்காகச் சண்டை பிடிக்கும் மனநிலையிலும் இப்பொழுது அவர் இல்லை.

சொல்ல வேண்டிய விஷயத்தை மகனிடம் சொல்லித்தானே ஆக வேண்டும்! அதனால் எரிச்சலும் கோபமும் கூடிய போதும் அழைப்பைத் துண்டிக்காமல், “இங்கே பாரு, எங்க கடமைக்கு நாங்க ஒரு பொண்ணை பார்த்திருக்கோம். கல்யாணம் செய்யறதும் வேண்டாம்ன்னு முடிவெடுக்கிறதும் உன்னோட இஷ்டம். பிள்ளைங்களை நம்பி மனசு வெம்பி போறது எங்களுக்கு ஒன்னும் புது விஷயம் இல்லை. அதுதான் ஏற்கனவே ஒருத்தி போதும் போதும்ன்னு செஞ்சுட்டு போயிட்டாளே…” என்று தன்னையும் மீறி ஒதுக்கி வைக்க நினைத்த மகளின் பேச்சை ஆதங்கத்துடன் தொடங்கியவரை,

“அக்காவுக்கு என்ன செஞ்சுட்டீங்கன்னு இப்ப அவ பேரை இழுக்கறீங்க. உங்களோட கடமை எல்லாம் இப்ப மகன் மேல மட்டும் தானே? அப்ப அவளை வீணா இழுக்காதீங்க” என்றான் இளமுகிலன் கோபமாக இடையிட்டு.

மகளுக்காகப் பரிந்து பேசிய மகன் மீது ஜானகிக்கு ஆத்திரம் எல்லையைக் கடந்தது. அதோடு அக்காவுக்கு என்ன செய்தீர்கள் என்று நா கூசாமல் கேட்பவனிடம் விளக்கம் சொல்லிப் புரிய வைக்கும் மனநிலையில் அவர் இல்லை. இந்த ஐந்து ஆண்டுகளாக மகளுக்காக எதையும் செய்ததில்லை தான்! ஆனால், அதற்கு முன்பு அவளை எப்படி பார்த்துக் கொண்டார்கள்? எப்படி வளர்த்தார்கள்? அதெல்லாம் இப்பொழுது ஒன்றுமில்லாமல் போய்விட்டது போல! மனதோடு நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது பெற்றவளுக்கு!

ஆனால், ஆத்திரப்பட்டால் சொல்ல வந்ததை சொல்ல விடாமல் செய்து விடுவான் என்று புரிந்து, “அவளைப் பத்தி எனக்கென்ன? நான் சொல்ல வந்தது உனக்கு ஒரு பொண்ணை பார்த்திருக்கோம். அவ இந்தவாரம் ஞாயித்துக் கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு வருவா. போயி ஒருமுறை பார்த்து பேசு. அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு வந்து உன்னோட முடிவு என்னன்னு எங்ககிட்ட சொல்லு. ஒருவேளை உனக்கு இந்த பொண்ணை பிடிக்கலைன்னா இனி நீயா சொல்லற வரை உன்னோட கல்யாண பேச்சை நாங்க எடுக்க மாட்டோம்” என்றார் வெறுத்து போய்.

அன்னையின் அந்த குரல் அவனை அசைத்துப் பார்த்தாலும் இறங்கி வர மனமில்லாதவனாய், “ஓஹோ… நீங்க இப்படி சொன்னா நான் போயி அந்த பொண்ணை பார்த்துடுவேனா?” என்ற இளமுகிலனின் குரல் ஏளனத்தோடு ஒலித்தது.

“ஆக, உன்னால எங்களுக்காக ஒரே ஒருமுறை போயி அந்த பொண்ணை பார்க்கக்கூட முடியாது அப்படித்தானே?” என்று ஜானகி கேட்டபோது அவரின் குரல் நலிந்து ஒலித்தது.

அப்படியென்ன எதிர்பார்க்கிறார்கள் அவர்களும்! ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்த்திக்கு ஒரு மகன் என்று அருமை பெருமையாய் பெற்று வளர்த்தவர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் திருமணத்தைக் கண்குளிரக் காணும் கொடுப்பினைக்கூட இல்லை என்றால் எத்தனை கொடுமை! மூத்த மகள் பெற்றவர்களுக்குத் தெரியாமல் காதலித்தவனோடு ஓடிப்போய் திருமணம் முடித்திருக்க, மகனோ திருமணம் என்ற பேச்சையே எடுக்க விடுவதில்லை!

இப்பொழுது அந்த மூத்த தம்பதி மனம் நொந்து போய் தனிமையில் வாடுகிறார்கள். திருமண பேச்சை எடுத்ததிலிருந்து மகன் பெற்றோரைப் பார்க்க வீட்டுக்குக் கூட வருவதில்லை. கட்டாயப் படுத்துகிறீர்கள் என்று சொல்லிப் புறக்கணிக்கிறான். வயோதிக காலத்தில் அது எத்தனை வேதனை!

அம்மாவின் கோபத்தைக் கூட கடந்து போக முடிந்தவனால் கண்ணீரைக் கடந்து போக முடியவில்லை. அதற்காக ஒரு பெண்ணை போய் பார்க்கவும் மனம் வர மறுத்தது. வேறு வழியே இல்லாத இந்த சூழலை அறவே வெறுத்தவன், “போயி பார்த்துத் தொலைக்கிறேன். ஆனா இதோட என்னை தொல்லை செய்யக் கூடாது” என்றான் வேண்டா வெறுப்பாக.

“பார்க்கிறதும் பார்க்காததும் உன் இஷ்டம். உன் நம்பரை அந்த பொண்ணோட அப்பா கிட்ட உங்க அப்பா தந்திருக்காங்க, கோயிலுக்கு வந்துட்டு எங்க இருக்கான்னு சொல்ல உனக்கு கூப்பிடுவாங்க. ரொம்ப தெரிஞ்ச குடும்பம், கேட்டுகிட்டே இருக்கிறதால மறுக்க முடியலை” என்றார் வெகுவாக சோர்ந்து போய்.

அம்மாவின் சோர்வு, அயர்ச்சி எல்லாம் அவனை ஆட்டிப் படைத்தது. அவர்களை ரொம்பவும் வருத்தப் படுத்துகிறோம் என்று அவனுக்கும் புரிகிறது தான். ஆனாலும் அவனால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே!