கவிதை – 7

கண்ணதாசனுக்கு, ஒருமாதிரி படபடப்பான மனநிலை. இப்படி குடும்பத்தினர் அனைவரும், திருமணத்திற்குச் செல்லும் பெயரில் பெண் பார்க்கக் கிளம்பி நின்றதைக் கண்டு, ஒருநொடி திடுக்கிட்டுத்தான் போனான். அதுவும் எப்படி, பெண்ணுக்குத் தெரியாமல், பெண்ணின் குடும்பத்திற்கும் தெரியாமல் ஒரு பெண் பார்க்கும் நிகழ்வு. இதில் மாப்பிள்ளையும் கூட இடம்பெறவில்லை.

இப்படியெல்லாம் அவனுக்கு மட்டும் தான், இவ்வுலகில் நடந்திடும் என்பது போலவே இருந்தது, அந்நொடி அவனின் சிந்தனை எல்லாம். கடைக்கு வந்தமர்ந்த பின்னரும் கூட, அவனால் இந்த யோசனைகளில் இருந்து வெளிவர முடியவில்லை. மனது என்னவோ, அங்கே திருமண மண்டபத்தில் தான். கவிதாஞ்சலி வந்திருப்பாளா, தன் வீட்டினர் அவளை கண்டிருப்பார்களா, அவள் எப்படி வந்திருப்பாள் என்று அவனுள் பல கேள்விகள் பிறக்க, மனதோ நிச்சயம் அவள் மிக மிக அழகாய் தான் வந்திருப்பாள் என்று தனக்கே சொல்லிக்கொண்டது.

‘இப்படியொரு அவஸ்தை எனக்கு..’ என்றவன், அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அவனது இரு அக்காக்களில் யாரேனும் ஒருவருக்கு அழைத்து, அங்கே என்ன நடக்கிறது என்பதனைக் கேள் என்று, மனது போட்டு உந்தித் தள்ளியது. ஆனாலும், தான் அழைத்து அது வேறுவிதமான பேச்சுக்களுக்கு வழி வகுத்துவிட்டால் என்ன செய்வது?! 

மிகவும் முயன்று மனதினை அடக்கிக்கொண்டான். என்னதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டாலும், இதோ வீட்டினர் எடுக்கும் இம்முயற்சி, அவனுள் ஒரு இதமான சாரல் உணர்வைக் கொடுக்கிறதே. மெல்லிய மென்னகை முகத்தினில் பூக்க, மனதிற்குள் அதற்குள் ஏதேதோ கற்பனைகள் வளம் வந்தது.

 இருந்தும், இதுவொன்றும் உறுதியாகிடவில்லையே. எல்லாவற்றிற்கும் மேலே, அவர்கள் வீட்டினில் இதற்கு சம்மதம் சொன்னால்தானே. என்னவோ, நிச்சயம் இந்த சம்பந்தம் மேற்கொண்டு அடுத்தபடிக்கு போகாது என்கிற எண்ணம்தான் அவனுள் வேர்விட்டது. அதற்கான காரணங்கள் தான் நிறைய இருக்கிறதே. அதனாலேயே, நடக்காத ஒன்றிருக்கு எதற்காக தன் மனதைப் போட்டு அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டும் என்று, வெகுவாய் ஒருமாதிரி தன்னை சமநிலை படுத்திக்கொள்ள முயன்றான்.

ஆனால் அனைத்திற்கும் மேலாய், கவிதாஞ்சலியின்  அழகிய புன்னகை பூசிய முகம், அவன் மனக்கண்ணில் வந்து நின்று, அவனைப் பார்த்து கேலி செய்வது போலிருந்தது.

“ச்சே..” என்று தானாய் சுளித்துக்கொண்டான்.  

“தம்பி, இந்த பில்லு போட்டு குடுங்க..” என்று மூர்த்தி வந்து நிற்க, அதற்குள் கடையில் இருந்த வாடிக்கையாளரும் அங்கேயே வந்து நின்றுவிட்டார்.

“என்ன கண்ணா நீ வந்திருக்க?” என்று வாடிக்கையாளர் கேட்க,

“அப்பா ஒரு கல்யாணத்துக்கு போயிருக்கார் தாத்தா..” என்றான்.

“சரி சரி. பார்த்து கொஞ்சம் ரேட் கம்மி பண்ணி போடு கண்ணா..” என, அவனும் ஓரளவு அனுசரித்துத் தான் விலை போட்டு பணம் வாங்கினான்.

“பரவால்ல, உங்கப்பா போல எங்க எதுல குறைக்கணும்னு தெரியுது..” என்று அவர் பாராட்டிவிட்டுப் போக, அடுத்து துணிக்கடையில் பெரிதாய் வியாபராம் இல்லை.

ஆனால் அடுத்தடுத்து வரிசையாய் திருமண முஹூர்த்தம் வருவதால், பாத்திரக்கடையில் ஆட்கள் வந்தபடி இருக்க, அங்கே சென்று பார்வையிட்டான் கண்ணதாசன். என்னதான் மற்றதில் எல்லாம் கவனம் வைத்தாலும், உள்ளுக்குள்ளே ஒரு புறுபுறுப்பு இருக்கவே செய்தது.

‘பார்த்திருப்பார்களா?!’ என்று நினைத்துக்கொண்டே இருந்தான்.

திருமணத்திற்குப் பிறகு வேண்டுமென்றால்  வேலையை விட்டுவிடுவாளாம். இல்லையோ மாற்றிக்கொள்வாளாம். அவள் படித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும், யாரேனும் வேலையை விடு என்று சொன்னால், சொல்பவன் தான் முட்டாள். அப்படியிருக்க, திறமையிருக்கும் ஒருத்தியை திருமணம் எனும் பெயரில், அவன் ஒரு குறுகிய வட்டத்தில் அடைக்க விரும்பவில்லை.

படித்தவனாய், பண்பானவனாய்,  அவர்கள் இருவரின் குடும்ப நிலவரம் புரிந்தவனாய், அவன் எடுத்திருக்கும் இம்முடிவு சரியே. ஆனாலும் ஆசைகொண்ட மனம், அவளை ஒருமுறையேனும் கண்டுவிட்டு வா என்று அழிச்சாட்டியம் செய்கிறதே.

நேரில் பார்க்காத போதே இப்படியொரு தவிப்பு. கண்டுவிட்டு, பின் அவள்தான் வேண்டும், அவள்மட்டும் தான் வேண்டும் என்று, மனம் சண்டித்தனம் செய்துவிட்டால்?!

அதெல்லாம் தாண்டி, இவர்கள் வீட்டினில் சம்மதம் சொல்லி பேசி, அவர்கள் வீட்டினில் வேண்டாம் என்று மறுத்துவிட்டால்?!

இந்த விஷப்பரிட்சைக்கு எல்லாம் அவன் தயாரே இல்லை.

என்னவோ, முதல்முறையாய் ஒரு பெண் மனதில் சலனம் கட்டுகிறாள். இன்னும் சில தினங்கள் கடந்து, அவனுக்கே அவனுக்கு என்று ஒருத்தி வந்து, பேசி பழகினால், நிச்சயம் இந்த நினைவுகள் எல்லாம் கடந்து போகும் மேகங்கள் தான்.

இப்படியாக அவன் சிந்தனைகள் உருண்டோடிக்கொண்டு இருக்க “கண்ணா இந்த பாத்திரத்துல எல்லாம் பேர் போடணும்..” என்று வந்து நின்றார், பாத்திரக் கடையில் வேலை செய்பவர்.

“சரி ண்ணா..” என்றவன், என்ன பெயர் என்று கேட்டு, அதற்கேற்ப அந்த பித்தளைப் பாத்திரங்களில், பெயர் பதிக்க,

“அப்படியே உங்கப்பா போலவே எழுதுற கண்ணா..” என்றார் ஊழியர்.

“ம்ம்..” என்று அவருக்கு ஒரு புன்னகையை பதிலாய் கொடுத்தவன், வேலையில் கவனமாய் இருந்தான்.

இங்கே இவனின் நிலை அப்படி இப்படி என்று ஊசலாடிக்கொண்டு இருக்க, அங்க திருமணவீட்டிலோ களைகட்டியது கூத்து. திருமணம் ஒருபக்கம் நன்றாய் நடந்துகொண்டு இருக்க, கண்ணதாசன் குடும்பத்திற்கு இப்போது அதுவா முக்கியம். கவிதாஞ்சலியின் குடும்பத்தைப் பார்ப்பதும், அவள் எப்படி என்று அவதானிப்பதும் தானே மிக மிக முக்கியம்.

ஆனால் இவர்களுக்கே உண்டான சந்தர்ப்பமாய் அனைத்தும் அமைந்தது தான் விந்தை. தனாவும், வராவும் தம்பிக்காகப் பார்க்கும்  பெண் என்று, களத்தில் முழுமூச்சில் இறங்கிவிட்டார்கள். அங்கே இங்கே என்று அமர்ந்து, ஒருவழியாய் கவிதாஞ்சலியும், அவள் வீட்டினரும் அமர்ந்திருக்கும் வரிசைக்கு பின் வரிசையில் இடம் பிடித்துவிட்டனர்.

பார்க்கும் உறவினர்களோடு எல்லாம் பேசினாலும், மொத்தமாய் இவர்களின் கவனமெல்லாம் இங்கே முன்வரிசையில் இருந்தவர்கள் மீதுதான் இருந்தது. இரு குடும்பத்திற்கும் பொதுவான சொந்தங்கள் பலர் இருக்க, விநாயகத்தின் சித்தப்பா முறையில் இருந்த ஒருவர், கவிதாஞ்சலியின் அப்பா பாஸ்கரிடம் பேசிக்கொண்டு இருந்தவர் அதே நேரம் விநாயகத்தையும் பார்த்துவிட்டு

“விநா.. இங்க வா.. எப்படி இருக்காப்பா? பார்த்து நாளாச்சு?” என்று விசாரிக்க,

“நல்லா இருக்கேன் சித்தப்பா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று பேச,

“சௌக்கியம் விநா. தொழில் எப்படி போகுது?” என்று விசாரித்தவர், பாஸ்கரிடம் விநாயகம் யார் என்று சொல்லி அறிமுகமும் செய்து வைக்க, அப்போதுதான் விநாயகத்திற்கு பாஸ்கர் இன்னார் என்கிற அறிமுகமே கிட்டியது.

விடுவாரா வாய்ப்பை, அங்கேயே ஒரு இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்துகொள்ள, மேற்படி பேச்சுக்கள் வளரத் தொடங்கியது.

பேச்சுவாக்கில் விநாயகத்தின் குடும்பம், அனைவரும் ஒற்றுமையாய் இருப்பது, இவரது தொழில், மகனின் படிப்பு வேலை என்றெல்லாம் பாஸ்கரிடம் பேசியவர் “பையனுக்கு ஜாதகம் விட்டாச்சா விநா?” என்று கேட்க,

“ஆச்சு சித்தப்பா.. பொண்ணு தேடிட்டு தான் இருக்கோம்..” என்றவர் “நீங்களும் நல்ல இடமா எதுவும் தெரிஞ்சது இருந்தா சொல்லுங்க..” என்று தூண்டில் போட, பாஸ்கரோ இடையில் புகுந்து எதுவும் பேசாமல், மௌனமாய் அனைத்தையும் கிரகித்துக் கொண்டுதான் இருந்தார்.

அங்கே அப்படியெனில், இங்க பெண்களின் பக்கமோ மகாவின் இரண்டு சித்திகளும் பலரோடு பேசினாலும், மகாவும் அவரின் இரு மகள்களும் என்ன செய்கிறார்கள் என்று கவனித்துக்கொண்டு  தான் இருந்தனர். மகாலட்சுமிக்கோ கவிதாஞ்சலியைப் பார்த்ததுமே முழு திருப்தி தான். அழகு பதுமை போலத்தான் வந்திருந்தாள்.

மேக வர்ண நிறத்தில் ஒரு மென்பட்டு சேலையில், அதையும் பாந்தமாய் உடுத்தி, மெல்லிய ஒப்பனைகளோடு அதற்கேற்ற நகையணிந்து என்று பார்க்கவே கண் நிறைந்து போனது. ஆனால் மகாவிற்கு என்னவோ தாரணியைப் பார்த்துத்தான் உள்ளுக்குள்ளே ஒரு உணர்வு. ஏறக்குறைய இருவருக்கும் ஓரிரு வயது வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் படித்து, நல்லதொரு வேலையில் இருக்கும் தாரணியின் தோற்றமும், பழகும் பாங்கும், இங்கே மகாவிற்கு இல்லையே. தனிப்பட்ட முறையில் மகாவும் லட்சணமான பெண் தான். ஆனாலும் என்னவோ மகாவிற்கு, தாரணியைக் கண்டதும் இவர்களிடம் தாங்கள் இயல்பாய் பழகிட முடியுமா என்கிற எண்ணமே.

அதெல்லாம் தாண்டி, தாரணி பாஸ்கரிடம் “பாஸ்கர் உங்களோட மொபைல் ரிங் ஆகுது..” என்று  அவரை பெயர் சொல்லி அழைத்துப் பேச, கேட்டிருந்த இவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் கண்கள் விரித்து திக்கென்று தான் ஆனது.

கவிதாஞ்சலி குடும்பத்தில் இது சகஜம். ஆனால் மகா இன்னமும் கணவரை மாமா என்றுதானே அழைத்துக்கொண்டு இருக்க, மகாவின் பெரிய சித்தியோ “என்ன டி அந்தம்மா, புருசன பேர் சொல்லி கூப்பிடுது?” என்று ஆரம்பித்தார்.

சின்ன சித்தியோ “அட நீ வேற, அந்த மருமக பொண்ணு, ஆன்ட்டின்னு சொல்லுது மாமியார..” என்று அடுத்து தொடுக்க,

“மகா.. பார்த்து நாளைக்கு உம்மருமகளும் உன்னைய வந்து ஆன்ட்டின்னு சொல்லிடப் போறா..” என்று பெரிய சித்தி செய்த கேலியில் முகம் சுண்டிப்போனது மகாவிற்கு.

தனாவோ “ம்மா அவங்க பேச்சை எல்லாம் விடு..“ என்று தாயை திசைத்திருப்ப,

கவிதாவும், சுஷ்மிதாவும் எதையோ பேசி சிரித்துக்கொண்டு இருக்கையில், கவிதா கொஞ்சம் சத்தமாய் சிரித்துவிட்டாள். அவளின் சிரிப்புச் சத்தம் தனியே கேட்க, சுற்றி இருந்த ஒரு சிலர் திரும்பிப் பார்த்தனர். தாரணியோ மகளை கேள்வியாய் பார்க்க “ஜஸ்ட் எ ஜோக் ம்மா..“ என்று கொஞ்சம் அசடு வழிய பதில் சொன்னவளைப் பார்த்து , தானும் புன்னகைத்தவர் திரும்பிக்கொண்டார்.

“என்ன மகா இது, இந்த பொண்ணு இப்படி பக்குன்னு சிரிக்குது. அவங்கம்மா ஒன்னும் சொல்லாம இருக்கு..” என்று சிறிய சித்தி பேசவும், மகாவிற்கு என்னவோ ஒருமாதிரி ஆனது.

கவிதாஞ்சலி பார்க்க நன்றாய் இருக்கிறாள் தான். அவர்களின் வசதியும், அதோடு சேர்ந்த வாழ்வும் அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது தான். ஆனாலும் என்னவோ அவருக்கு அப்படியொன்றும் திருப்தியாய் இல்லை. வாழ்வு முறை வித்தியாசம் என்பது பார்த்ததுமே புரிந்து போனது. மகன் வேண்டாம் என்று சொன்னதற்கான காரணமும் விளங்கியது.