“இந்த வீட்ல முடிவெடுக்குற உரிமை யார்கிட்ட இருக்கு?”
“புரியல? என்னாச்சு?” என்று பார்த்தான் மகிழ்நன்.
“வீட்டு வேலைக்கு ஆள் வச்சுக்கலாம்னு எல்லாரும் சொல்றீங்க. ஆனா ஆள் வர்ற மாதிரி இல்லையே. பங்ஷன், தீபாவளி எல்லாம் வருது வீட்டுல இல்லைனா எல்லோரும் கேப்பாங்க. அதனால கொஞ்ச நாள் இவளை பேசி சமாளிச்சிட்டா போதும் பழையபடி எல்லாம் மாறிடும்னு நினைச்சிட்டிங்களா?”
“நடிச்சி உன்னை ஏ மாத்துறேனு சொல்ல வரியா?” சட்டென ஏறிவிட்டது அவனுக்கு. இனி அவள் வருந்துவது போல் நடந்துகொள்ளக்கூடாது என அவன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து யோசித்து யோசித்து கற்றுக்கொள்ள, அவனின் மெனக்கெடல் தற்காலிகம் என்பது போல் அவள் பேசுவதாகப்பட்டது.
ஒருநிமிடம் பழைய மகிழ்நனாக அவன் மாறிவிட்டதில் சமுத்திரா விக்கித்துப் பார்த்தாள். குரலிற்கேற்ப அவன் முகமும் இறுகிவிட்டது.
“என்னங்க?” வார்த்தை வரவில்லை அவளுக்கு.
அப்போதுதான் உறக்கம் கலைந்து எழலாமா மீண்டும் உறங்கலாமா என்பது போல் இருந்தவன் சமுத்திரா வந்து பேசவும் எரிச்சலாகிவிட்டான். இப்போது உச்சு கொட்டியபடி எழுந்துவிட்டவன் கடுகடுவென வெளியே சென்றான்.
பதறியவளாய் இவள் பின்னே செல்ல,
“வீட்டு வேலைக்கு ஆள் சொல்லியிருந்தது என்னாச்சு? இன்னுமா கிடைக்கல?” என்று பத்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
“இன்னும் கிடைக்கலை மகிழு. காலங்காத்தால இதை கேட்கவா எழுந்து வந்த?” என்றார் பத்மா.
“ஏங்க, முகம் கழுவிட்டு வாங்க. காபி போடுறேன்.” அவன் இருக்கும் மனநிலைக்கு என்ன பேசினாலும் இப்போது பிரச்சனை ஆகுமோ என்ற எண்ணத்தில் அவனை அப்புறப்படுத்தப் பார்த்தாள் சமுத்திரா. அவளின் ஆதங்கம் பின்சென்று காலையே சச்சரவை இழுத்துக்கொள்ள வேண்டுமா என்று வந்து நின்றது.
“ப்ச், நீதான இன்னும் ஆள் வரலைன்ன? கேக்க வந்தா தொறத்துற?”
செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இருவரையும் பார்த்தார் பத்மா. மருமகள் சொல்லித்தான் மகன் வந்து கேள்வி கேட்கிறான் என்று அவன் வாயாலே சொல்லிவிட்ட பின் அவர் வாயும் சும்மாயிருக்க மாட்டேன் என்றது.
“நான்தான் உன்கிட்ட தெளிவா சொல்லிட்டேனே சமு, எதுக்கு அவன் வரைக்கும் கொண்டுபோய் சண்டை கட்டுற? அவனுக்கு வெளில ஆயிரம் பிரச்சனை இருக்கும் அதுல இந்த விஷயத்தையும் அவன் பாக்கணுமா? வீட்டு விஷயம் எல்லாம் நம்ம பாத்துக்கிட்டாதான் அவங்க நிம்மதியா அவங்க வேலையை செய்ய முடியும். இதுபுரியாம அவன்கிட்ட சொல்ற…” மருமகளை அதிருப்தியாய் பார்த்தார்.
தலையில் கைவைத்துவிட்டாள் சமுத்திரா. இதுபோன்ற சஞ்சலங்களை தவிர்க்கவே பலமுறை அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்திருக்கிறாள். இம்முறை நாம் பேசி கேட்கவில்லை கணவன் வழி இதனை சரிசெய்யலாம் என்று அவனிடம் கொண்டு சென்றால் அவனே ஓர் பிரச்சனையினை கிளப்புவது போல் பேச, சோர்வாய் வந்தது.
“சொல்ல வேண்டாம்னு யார் சொன்னா. அவ புரியாம பேசவும் எடுத்து சொன்னேன், அதை ஒரு பிரச்சனைனு உன்னை வேற தொந்தரவு பண்ணிட்டா. இதெல்லாம் நான் பாத்துக்க மாட்டேனா? எதுக்கு நீ மூக்கை நுழைக்குற?” தன் ராஜியத்தின் அதிகாரத்தில் பங்கு கேட்க வந்துவிடுபவர்களை துரத்திவிடுவது போல் அவர் பேச, சமுத்திராவின் கேள்வி மனதில் ஓடி அவனை முழுதாக விழிப்படையச் செய்தது. பார்வை தன்னால் மனைவியிடம் செல்ல, எரிச்சலாக எங்கோ பார்த்து நின்றாள் அவள்.
“காலங்காத்தால எதையாச்சு பேசாத மகிழு. போய் இன்னும் செத்த நேரம் தூங்கு, சமுவையும் கூட்டிட்டு போ.” பெரிய மனதாய் சொல்வது போல் சொல்ல, இயலாமையுடன் பெண்களை மாறி மாறிப் பார்த்தான் மகிழ்நன்.
சமுத்திரா ஒன்றும் சொல்லாமல் அறை நோக்கி நடக்க,
“அவளே புரிஞ்சிகிட்டு போயாச்சு, இன்னும் உனக்கு இங்க என்ன வேலை? இத்தனை நாள் உன் அண்ணன்தான் என்னை ஏதாச்சு சொல்லிட்டே இருப்பான், இப்போ நீயும் ஆரம்பிச்சிட்ட.” எனக் கேட்டு சின்ன மகனையும் அனுப்பிவிட்டார்.
சோர்வாக அறைக்கு வந்தவன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு மனைவியைப் பார்க்க, சுவற்றோடு ஒட்டியபடி படுத்திருந்தாள். உறங்கியிருக்கமாட்டாள் என திண்ணமாகத் தெரிந்ததால் அருகில் சென்று அவள் தோள் தொட, கையை உதறினாள் சமுத்திரா.
“சமு.” பதிலில்லை. உச்சுக்கொட்டியபடி மெத்தையில் அமர்ந்து கைகளால் தலையை தாங்கிக்கொண்டான். என்ன நடந்தது என மனது தெளிவான பின் மீண்டும் மனதினில் ஓட்டிப்பார்க்க, அவள் பேசியதும் அதற்கு அவன் சிடுசிடுத்ததும் நினைவு வந்தது. தலையை மட்டும் திருப்பி சமுத்திராவைப் பார்த்தான். அசைவின்றி படுத்திருந்தாள். வார்த்தை விட்டுவிட்டோமோ என்று தோன்றினாலும் அவளும் அப்படி பேசியிருக்க வேண்டாம், சறுக்கும் இடங்களை திருத்திக்கொள்ளப் பார்க்கும் இச்சூழலில் குறையாக சொல்வது போல் அவள் விட்ட வார்த்தைகள் அவனை உசுப்பி விட்டுவிட்டது. கொஞ்சம் நிதானம் இருந்திருக்கலாம் அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.
“சமு.” மீண்டும் அழைத்துப் பார்த்து தோல்வியை ஒத்துக்கொண்டவன் அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் முகம் கழுவி வெளியேறிவிட்டான்.
கதவைத் திறந்து அவன் வெளியேறுவதை உணர்ந்த சமுத்திராவின் உடல் இறுக்கத்திற்கு விடை கொடுத்து தொய்ந்தது. கண்களை இறுக மூடி, விரல்களை மடித்துக்கொண்டாள். கணவனின் நொடி நேரக் கோவமும் பேச்சும் அவளை பாதித்திருக்க, சில நாட்களாக இருந்த இனிமை தொலைந்தது போலானது.
சமையலறையிலிந்த பத்மாவை கண்டுகொள்ளாமல் பின்பக்கம் சென்றுவிட்டான் மகிழ்நன். எங்கோ தவறுகிறோம் எப்படி சரி செய்ய என்ற யோசனையில் நேரம் போனதே தெரியவில்லை. வீட்டின் சிறிய தோட்டத்து செடிகளை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தவன் முதுகில் பொளீரென்று ஒரு அடி விழவும் துள்ளித் திரும்ப, புருவம் உயர்த்தி கேள்வியாய் பார்த்தான் செழியன்.
“இப்படியா அடிப்ப? வலிக்குதுடா.” முகம் சுருக்கி இவன் முதுகைத் தேய்க்க, அவன் கையில் காபி டம்ளரை வைத்தான் செழியன்.
“ரொம்பத்தான் அக்கறை.”
“இருக்காதா பின்ன. அம்மாவும் பொண்டாட்டியும் அடிச்சிக்கிட்டாலும் நம்மளை கவனிக்குறதுல குறை இருக்காது.”
என்ன சொல்கிறான் என்று அண்ணன்காரனைப் பார்க்க,
“எழுந்ததுமே சுப்பிரபாதம் மாதிரி நடந்ததை அம்மா சொல்லியாச்சு. சமுத்திராவும் காபி போட்டு தானே வராம நீ இங்க இருக்கேன்னு சொல்லி என்கிட்ட குடுக்க சொல்லி அனுப்புச்சி. டூ இண்டூ டூ டுட்டூடூடா…” கேலியாய் அவன் இதழ் வளைக்க, முகம் திருப்பினான் மகிழ்நன்.
“மதி வேலைக்கு ஆள் வைக்கணும்னு சொன்னப்போவும் இதேதான் ஆச்சு.”
இது எப்போ என்று மகிழ்நன் பார்க்க, “நீ வெளியூர்ல வேலை பார்த்துட்டு இருந்தப்போ. நானும் இப்படிதான் போய் கேட்டேன். கல்யாணம் ஆனதும் மாறிட்டேன்னு எல்லாம் அம்மா பேசிட்டாங்க. அப்போ அம்மாவை கஷ்டப்படுத்துறோம்னு எனக்கும் ஒரு கில்ட், அவங்க விருப்பப்படி இருக்கட்டும்னு விட்டுட்டேன்.”
இப்போதும் மகிழ்நன் அமைதியாகவே இருக்க,
“என்னடா? வீடுன்னா அப்படிதான் இருக்கும். சமு சொல்லவும் நேரா அம்மாகிட்ட போய் நிக்காம நீயா கேக்குற மாதிரி கேட்டு நாசுக்கா ஹாண்டில் பண்ணியிருக்கலாம். மருமகளுங்க சொல்றதை விட மகன் சொன்னா இந்த அம்மாக்களை ஈஸியா சமாளிச்சிடலாம்.” என்றவன் மகிழ்நனின் பார்வை மாற்றத்தை கவனித்து,
“என்ன பார்வை. மாப்பிள்ளை அவர்தான் போட்டிருக்கிற சட்டை என்னோடதுங்குற மாதிரி குரல் நம்மளோடது ஆனா முடிவு வீட்டுக்காரம்மாவோடதா இருக்கணும். அப்போதான் சமாளிக்க முடியும். வேற வழியில்லை ராசா…” என யோசனையும் கொடுத்தான்.
ம் கொட்டிக்கொண்ட மகிழ்நனுக்குள் வேறு யோசனை. எதுவும் சொல்லாது காபி பருகிவிட்டு உள்ளே செல்ல, தோள் குலுக்கிக்கொண்டான் செழியன்.
சமையலறையில் மூன்று பெண்களும் அமைதியாக தத்தம் வேலையில் ஈடுபட்டிருப்பதை கவனித்துக்கொண்டே அறைக்குச் சென்ற மகிழ்நன் மகளைப் பார்க்க, இன்னும் உறக்கத்தில் இருந்தாள் உமையாள். வங்கிக்கு செல்ல இன்னும் நேரமிருந்தாலும் வீட்டில் என்னவோ போலிருக்க, அப்போதே குளித்து கிளம்பிவிட்டான். இடையே உமையாள் சிணுங்கவும் அறைக்கு வந்து தூக்கிய சமுத்திரா கணவன் நேரமே கிளம்புவதைக் கண்டு புருவம் சுருக்கினாள்.
“கிளம்புறேன் சமு.” அவள் தன்னைப் பார்க்கிறாள் என்று தெரிந்து பதில் கொடுத்தான்.
அதுவரை கணவனைப் பார்த்திருந்தவள் பட்டென திரும்பிக்கொண்டாள். என்ன இந்நேரமே கிளம்புகிறான் என்ற கேள்வி எழுந்தாலும் கேட்கவில்லை. பெருமூச்சுடன் மகளின் தலையை வாஞ்சையாக வருடிவிட்டு கிளம்ப எத்தனித்தவன் திரும்பி வந்து இருவரையும் மிருதுவாக அணைத்து விடுவித்து வெளியேறினான்.
“என்ன இன்னைக்கு சீக்கிரமே கிளம்பிட்ட?” கந்தவேல் ஆச்சர்யமாகக் கேட்க, வேலை இருக்கிறது என்று முணுமுணுத்து உண்ண அமர வேகமாக வந்து பரிமாறினார் பத்மா.
யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சாப்பிட்டு எழுந்தவன் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான். வீட்டிலிருந்து கடைசியாக கிளம்புபவன் அன்று முதல் ஆளாக கிளம்பியிருக்க, பத்மாவின் புண்ணியத்தில் அனைவருக்குமே காலை நடந்தது தெரிந்திருந்தமையால் குடும்பத்தினர் முகத்தில் யோசனை ரேகைகள். ஆனாலும் பேசிக்கொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டனர்.
மாலை மகிழ்நன் வீடு வந்த பின்னும் அமைதியாக இருக்க, சமுத்திராவுக்கு அவனை நெருங்கி சமாதானம் செய்ய ஆசை, அறிவோ விலகி நில் என்று அறிவுறுத்தியது. கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடினாள். அவன் பார்க்காத போது பார்ப்பது, பார்க்கும் போது விலகுவது என்று இருக்க, அவனின் தேவைகளுக்கு என்று கூட மனைவி அருகில் தேவைப்படவில்லை. பலகாரம், காபி, தண்ணீர், உணவு என பொதுவானது அனைத்தும் பத்மா செய்துவிட, இரவு அறைக்கு வந்ததும் கிடைத்த தனிமையில் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர். அவனிடம் பேச உந்தும் மனதினைக் கட்டுப்படுத்தி அவள் படுக்கப்போக,
“சமு.” அவனே அழைக்கவும் எழுந்துவிட்டாள் சமுத்திரா.
“ஏங்க?”
“நான் என்னனு கேட்டிருக்கணும்.” நாள் முழுக்க யோசித்திருப்பான் போல.
“என்ன?”
“என்ன பிரச்சனைன்னு நான் நின்னு கேட்டிருக்கணும். நீ அப்படி பேசவும் எப்படி அப்படி சொல்லலாம்னு பட்டுனு கோவம் வந்துடுச்சு. இப்போ சொல்லு என்னாச்சு?” காலை கேட்க வேண்டிய கேள்வியை இரவு கேட்டாலும் கேட்டுவிட்டதே மகிழ்வுதான். எனினும் செல்லமாக முறைத்தாள் சமுத்திரா.
அந்த செல்ல முறைப்பை தீவிரம் என எடுத்துக்கொண்டவனோ, “சொதப்புறேன்ல?” பெருமூச்செடுத்தவன் கட்டிலில் அமர்ந்து அதன் தலைமாட்டில் தலை சாய்த்தான்.
“ஆடிட் பேப்பர்ஸ் கூட ஈஸியா டேலி பண்ணிடலாம். இந்த வீட்டு விஷயம் ரொம்ப காம்ப்ளிகேட்டட். அம்மா, நீ, அண்ணி யாரும் சங்கடப்பட்டுடக்கூடாது. எல்லாம் சரியா நடக்கணும், எல்லாருக்கும் புடிச்ச மாதிரி நடக்கணும். கொஞ்சம் கஷ்டம்தான்.” என்றவனை விழி அகற்றாது பார்த்த வண்ணம் அமர்ந்துகொண்டாள் சமுத்திரா. அவ்வப்போது மகளின் புறமும் கவனம் சென்றுவந்தது.
“யார் மனசும் நோகக்கூடாது ஆனா சொல்ல நினைக்குறதை சரியா சொல்லிடனும். அதை மத்தவங்க ஏத்துக்கிட்டா பிரச்சனை இல்லை, அப்படி இல்லைனா அதையும் சண்டையா மாறிடாம சமாளிக்கணும். இடையில நமக்குள்ளையும் பூசல் வந்துடக்கூடாது, ஹப்பா…” என்னவோ அன்றுதான் குடும்ப வாழ்வுக்குள் அடியெடுத்து வைத்தது போல் அத்தனை அயர்வாய் இருந்தது.
“இப்போல்லாம் அடிக்கடி நீ என்கிட்ட கோச்சிக்கிற.” சலுகையாய் சலித்துக்கொண்டான்.
“நீங்க கோச்சிக்கவே இல்லை பாருங்க.” முணுமுணுத்தாள் சமுத்திரா.
நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தவள் பார்வையை விலக்கிக்கொள்ள, நெருங்கி வந்து அவள் கன்னம் பற்றி தன்னை பார்க்க வைத்தான் மகிழ்நன். உச்சு கொட்டிய சமுத்திரா உட்புறம் நகர்ந்தமர்ந்து மகளுக்கு விளையாட்டுப் பொருட்களை எடுத்துப் போட்டவண்ணம் காலை பத்மாவுடன் நடந்த பேச்சுவார்த்தையை பகிர்ந்துகொண்டாள்.