இமைகள் சிமிட்டாமல் தன் கடைக்குட்டி மகனை அழுத்தமாக பார்த்திருந்தார் வீரராகவன்.

“டேய் சஞ்சு! எல்லார் முன்னாடியும் இப்படி மரியாதை இல்லாம பேசலாமா அப்பாவை? வா வந்து உட்கார், சொல்ல வேண்டியதை அமைதியா சொல்லு” என்றான் பிரவீண்.

“நீ பேசாத ண்ணா. எப்படி… அப்பா வந்து அண்ணியை விட்டுட்டு வான்னா நீ கேட்டுப்பியா?” எனக் கேட்டான் சஞ்சய்.

தம்பியின் கை பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்த பிரவீண், “இன்னும் நீங்க ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஆகலன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்” என சின்னக் குரலில் சொன்னான்.

“என்ன… ரெஜிஸ்டர் ஆகலைனு சொல்றியா?” எனக் கேட்டான் சஞ்சய்.

“அதுவும்தான்” என்றான் பிரவீண்.

“அதுவும்னா வேற என்ன?” நிஜமாகவே சஞ்சய்க்கு புரியவில்லை.

 “நீங்க ரெண்டு பேரும் தனி தனி ரூம்லதான் ஸ்டே பண்ணிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டான் பிரவீண். சின்ன குரலில் என்றாலும் அங்குள்ளவர்களுக்கு புரியத்தான் செய்தது.

சபையில் வைத்து என்னடா பேச்சு இது என நெற்றியில் கை வைத்துக் கொண்டார் கார்த்திகேயன்.

சஞ்சய் கோவமாக மீராவை பார்க்க, அவளோ கண்டனமாக தன் அம்மாவை பார்த்தாள்.

சுபாவுக்கு இப்படியெல்லாம் பேச்சு வரும் என்று என்ன தெரியும்? பெண்ணை பெற்றவர் தன் மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்த பயத்தில் மகளிடமிருந்து அறிந்து கொண்டார். அதைப் பற்றி அவரிடமிருந்து  நயமாக விசாரித்து அறிந்து கொண்டான் பிரவீண்.

யாரிடமும் பேசாமல் கோவமாக வீட்டின் பின்பக்கம் சென்று விட்டான் சஞ்சய்.

“ஸார் இவங்க நிலைப்பாடு என்னன்னு கேட்கலாமே. ரொம்ப நெருக்கடி தர்றீங்க நீங்க” என வீரராகவனிடம் சொன்னார் கார்த்திகேயன்.

“உங்களுக்கு அப்படி தெரியுது கார்த்தி. ரெண்டு பேருக்குமே நல்லதுதான் நினைக்கிறேன் நான். சேர்ந்து வாழறதுக்கு அடிப்படையான விருப்பமே இல்லாம, சந்தர்ப்பத்தால ஏதோ சடங்குல பங்கெடுத்துக்கிட்டாங்க. நமக்கு பழக்கமே இல்லாத ஒரு சடங்கு முறைக்காக சேர்ந்து வாழுங்கன்னு சொல்ற அளவுக்கு நாம பிற்போக்குவாதிகள் இல்லையே?” எனக் கேட்டார் வீரராகவன்.

“விருப்பம் இல்லாமலா சஞ்சய் இப்படி நடந்துக்கிறான்?” என கேள்வி கேட்டார் கார்த்திகேயன்.

“என் மகனை அவன் பொறந்த டே ஒன்லேருந்து பார்க்கிறவன் நான். கருணைக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியல அவனுக்கு.  தெரிஞ்சுக்கிட்டு வான்னு விட முடியாது. இந்த பொண்ணு வாழ்க்கை பாழாகிடும்” என்றார் வீரராகவன்.

சுபா நெஞ்சில் கை வைத்து அதிர, மீராவும் கலக்கமாக பார்த்தாள்.

தம்பியை அழைத்து வரச் சென்றான் பிரவீண். தோளில் கை வைத்த அண்ணனிடம், “கைய எடுண்ணா” என கோவப் பட்டான் சஞ்சய்.

“கண்ணா டேய்… என்னடா உனக்கு நல்லதுதானே நாங்க செய்வோம்?” எனக் கேட்டான் பிரவீண்.

“நீ கொல்கத்தா வரும் போது நாங்க தனித்தனியா தூங்குறது உங்களுக்கு தெரியாதில்ல? ஒரு வேளை அப்படி இல்லைனா என்ன செய்யலாம்னு இருந்தீங்க?” தாடை இறுக கேட்டான் சஞ்சய்.

“எதிர்பாராம நடந்த  கல்யாணம்னு நல்லா தெரியும். அதை விட எங்க வீட்டு பிள்ளையை பத்தி எங்களுக்கு தெரியும். இருந்தாலும் உறுதி பண்ணிக்கத்தான் விசாரிச்சேன், போதுமா?” என்றான் பிரவீண்.

“வெட்கமா இல்லையா ண்ணா?” என சத்தமில்லாமல் சீறினான் சஞ்சய்.

பிரவீண் பாவமாக பார்க்க, “பரவாயில்ல நடந்தது கல்யாணம்னு தெரியுதே உனக்கு?” என்றான் சஞ்சய்.

இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்ற போதிலும் தம்பிக்கு அளவுக்கதிகமாக இடம் கொடுத்தே வளர்த்து விட்டான் பிரவீண். அண்ணனிடம் சஞ்சய்க்கு எந்த வரம்பும் எப்போதுமே இருந்ததில்லை. இப்போதும் தம்பியின் பேச்சில் அண்ணனுக்கு வருத்தமே தவிர கோவமில்லை.

“இதைப் பாரு! அந்த பொண்ணுக்கு வேணுங்கிறத செய்ய போறோம். கொஞ்ச நாள் போனா நீ பழைய படி ஆகிடுவ” என்ற பிரவீண், அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

சஞ்சயை அமர வைத்த பிரவீண், தன் அம்மாவுக்கு காணொளி அழைப்பு செய்து அவனிடம் கொடுத்தான்.

நேற்று போல கோவம் கொள்ளாமல் மகனிடம் தாஜாவாக பேசினார் தேவகி. நிறைய தவறான முடிவுகளால் நீ துன்ப பட்டிருக்கிறாய், அப்போது நாங்கள்தான் காப்பாற்றி வழி நடந்தினோம், இப்போதும் அதையேதான் செய்கிறோம் என்றார்.

இறுதியாக தன்னிடம் வரச் சொல்லி கண்ணீர் மல்க கேட்டார்.

அம்மாவை அப்படி பார்க்க மனம் பதறினாலும் மீராவையும் அழைத்துக் கொண்டு வருகிறேன் என உறுதியாக சொன்னான் சஞ்சய்.

தன் பேச்சை கேட்க மறுக்கிறான், தன் கண்ணீர் கூட அவனை வழிக்கு கொண்டு வரவில்லை என அம்மாவாக தேவகிக்கு பெருத்த ஏமாற்றம். அனைத்தும் மீராவின் பக்கம் திரும்பியது.

“எம்புள்ள கண்டிப்பா வருவான்டா என்கிட்ட”என்றவர் அழைப்பை துண்டித்தார்.

“உன்கிட்ட பேசி நேரத்தை விரயம் செய்ய முடியாது சஞ்சய். நைட் நாம கிளம்பறோம், இப்போ கார்த்தி ஸார் இவங்க ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போறார்” என அறிவித்தார் வீரராகவன்.

“யார் உதவியும் இல்லாம தனியா வாழு, தனியா முடிவு எடு, தப்பு செஞ்சாலும் அதிலிருந்து கத்துக்கன்னு நீங்கதானே ப்பா சொன்னீங்க?” சத்தமாக கேட்டான் சஞ்சய்.

“அதுக்காக கல்யாணம் வரை போவியா?” சத்தமில்லாமல் கோவப் பட்டார் வீரராகவன்.

“ஏன் போனா என்ன தப்பு?”

“நீ கஷ்ட படுவ சஞ்சய்,  அந்த பொண்ணையும் சேர்த்து கஷ்ட படுத்துவ”

“இருக்கட்டுமே. அம்மாவோட உங்க வாழ்க்கை ஆரம்பிச்சப்போ நீங்க கஷ்ட படலையா?”

“நாங்க வேற நீங்க வேற”

“நிஜம்தான். உங்களுக்கு இப்படி உங்க வீட்டு ஆளுங்ககிட்டருந்து பிரச்சனை வரலை”

“சஞ்சய்!”

“மீரா இல்லாம நம்ம வீட்டுக்கு வர மாட்டேன்”

“உன் அம்மாக்கு என்னடா பதில் சொல்ல நான்?”

“நீங்க என்ன வேணா பதில் சொல்லுங்க. நான் நம்பியிருந்த என் அம்மா என்னை ஏமாத்திட்டாங்கன்னு நான் சொன்னதா அவங்கள்ட்ட சொல்லுங்க” என சஞ்சய் சொல்ல, கோவத்தில் எழுந்து விட்டார் வீரராகவன்.

அவருக்கு எப்போதாவது இப்படி கட்டுக்கடங்காமல் கோவம் வரும். அப்போது அவரின் செயல்களும் பேச்சுக்களும் கூட அவரின் கட்டுப்பாட்டில் இருக்காது. இப்போதும் அப்படியானதொரு கோவம்.

“கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்தற அளவுக்கு உன்கிட்ட திறமை இருக்காடா ராஸ்கல்? அந்த பொண்ணோட குடும்பத்தை அந்த பொண்ணுதான் பார்க்கணும். நீ கல்யாணம் பண்ணியிருக்கேன்னா அந்த குடும்பத்தோட பொறுப்பும் உனக்குத்தான். முதல்ல உனக்கு தேவையானதை உன்னால பார்த்து கிழிச்சிட முடியுமா? உன் சம்பளம் என்னடா இப்போ? தினம் மூனு வேளை சோறு போடுவியா உன்னை நம்பி வாழ வந்த பொண்ணுக்கு?

உன்னால சமாளிக்க முடியாது, திண்டாடி போயிடுவ. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாம நிக்கும் போது அந்த வாழ்க்கையை தொடர்ந்து வாழுவியாடா நீ? இந்த பொண்ண அம்போன்னு விட்டுட்டு ஓடி போயிடுவ. அந்த பாவமெல்லாம் வேணாம்னுதான் நல்லது சொல்றேன் நான். உனக்கு புரியல.