“என்ன சொல்லிட்டு இருக்க நீ?” என எரிச்சலுடன் கேட்டான்.
“எல்லாரையும் யோசிச்சுதான் நீங்க முடிவெடுக்க முடியும். எந்த முடிவெடுத்தாலும் நீங்க தப்பானவர் ஆக மாட்டீங்கன்னு சொல்றேன். எனக்கு எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லைனு சொல்றேன்” என்றாள்.
“அப்படியா?” என நக்கல் சிரிப்போடு கேட்டான். அவள் ஆமாம் என அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
“சரி இப்படியே இரு, மாறிடாத” என சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டான்.
இங்கு வந்ததிலிருந்து அவர்களுக்குள் இருந்த இணக்கம் காணாமல் போயிருந்தது. நாளை விடியலில் நானும் அப்பாவும் உன் வீட்டிலிருப்போம் என இரவில் பிரவீணிடமிருந்து செய்தி வந்தது. மீராவுக்கும் சொன்னான்.
இத்தனை விரைவாகவா என உள்ளுக்குள் அழுதாலும் வெளியில் சாதாரணமாக தலையசைத்தாள் மீரா. அவன் முறைத்து வைத்தான். பேசிக் கொள்ளாமலே இரவு உணவை சாப்பிட்டு படுக்க சென்றனர்.
இரண்டு நாட்களாக அவளை அணைத்துக் கொண்டிருந்த பொழுதுகளை மௌனமாக நினைவு படுத்திய சோஃபாவில் சற்று நேரம் அமர்ந்திருந்தான் சஞ்சய்.
என்ன முயன்றும் பெருகி வரும் அழுகையை மீராவால் அடக்க முடியவில்லை.
நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விட்டாள் மீரா. அவள் நடமாடிக் கொண்டே இருக்க, சோஃபாவிலேயே உறங்கிப் போயிருந்த சஞ்சயும் எழுந்து கொண்டான்.
விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக கைப்பேசியில் சொன்னான் பிரவீண்.
அதற்கு முன் சஞ்சயும் மீராவும் தேநீர் பருகினார்கள்.
வாசல் கதவை திறந்து வைத்தான் சஞ்சய். மீராவின் அம்மா சுபாவும் கார்த்திகேயனும் அவர்களுடன் வருவார்கள் என சத்தியமாக இவர்கள் எதிர் பார்த்திருக்கவில்லை.
அம்மாவை காணவுமே தன்னை மீறிக் கொண்டு வெளியில் ஓடிச் சென்றாள் மீரா. பாவம் சுபா, மிரட்சியாக தெரிந்தார். ஆனாலும் மகளை அணைத்து கண் கலங்கினார். இந்த நேரத்தில் கார்த்திகேயன் உடனிருப்பதை மீரா சஞ்சய் இருவரும் தங்களுக்கு சாதகமாக நினைத்தனர்.
பிரவீண் தன் தம்பியை அணைத்து தலை முடி கலைத்து அன்பாக பேசினான். மகனை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றார் வீரராகவன்.
அம்மாவும் மகளும் ஒரு அறையில் இருந்தனர். ராஜசேகரன் வீடு தேடி வந்து சுபாவிடம் மன்னிப்பு கேட்டானாம். எம் எல் ஏ விடம் ராஜசேகரனை நன்றாக கவனிக்கும் படி சொல்லப் பட்டிருக்கிறதாம். இனி அவன் தொல்லை அறவே இல்லை என்பதை மகளிடம் பகிர்ந்தார் சுபா.
“நிஜமாவா ம்மா?” என வியப்பாக கேட்டாள் மீரா.
“ஆமாம்டி. ஸாரும் சொன்னாரு… உனக்கு பாதுகாப்பு வேணும்னு இங்க உள்ள தாதா உங்களுக்கு இந்த ஊர் சடங்கு ஏதோ பண்ணி வச்சாருன்னு. இவ்ளோ நாளா என்கிட்ட எதுவுமே சொல்லலை ஸார். நேத்து ஒரு நாளுல நம்ம கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு கிடைச்சிட்டுது. பாஸ்கரை முன்னாடி எப்பவோ நடந்த பிரச்சனைலதான் ராஜசேகர் போலீஸ்ல மாட்டி விட்ருக்கான். அதனால் அவனை வெளில எடுக்கிறது மட்டும் கொஞ்சம் தாமதம் ஆகும்னு சொன்னாங்க. இப்படி நல்லவங்க இருக்காங்களான்னு இன்னும் மலைப்பா இருக்குது எனக்கு” என்ற சுபா, குரலை தழைத்து, “நீ இந்த பையனை விட மாட்டேன்னு இவங்களுக்கு சந்தேகம், அதான் என்னையும் அழைச்சிட்டு வந்திருக்காங்க” என்றார்.
எண்ணி ஒரு மாதத்தில் மீராவை அயர்லாந்து அனுப்பி வைக்கிறார்களாம். எல்லா செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்வார்களாம்.
பெருமூச்சு விட்ட சுபா, மகளின் தலையை கோதி விட்டார். “நீயாவது என்கிட்ட பேசிட்டு இருந்திருக்கலாம். தனியாவே கஷ்ட பட்டியா?” எனக் கேட்டார்.
சஞ்சயிடம் இன்னும் ஒரு வார்த்தை மீரா பற்றி யாரும் கேட்டிருக்கவில்லை. ஒன்றுமே நடக்காதது போல இயல்பாக தம்பியிடம் பேசிக் கொண்டிருந்தான் பிரவீண். கார்த்திகேயனிடம் சிறு சங்கடம் தென்பட்டது.
சஞ்சய்க்கு பைத்தியம் பிடிக்காத குறைதான். என்ன பேச, என்ன சொல்ல என முன்பே முடிவு செய்து வைத்திருந்தான்தான். ஆனால் இப்போது எப்படி ஆரம்பிக்க என்றே அவனுக்கு தெரியவில்லை.
சஞ்சயின் அறையில் ஆண்கள் ரெஃப்ரெஷ் ஆகிக் கொண்டனர். நன்றாக விடியவும் ஐஸக் வந்து சேர்ந்தார். தம்பியிடம் கேட்டு வெளியிலிருந்து உணவு ஆர்டர் செய்தான் பிரவீண். மீராவும் சுபாவும் அறையில் இருந்த படியே சாப்பிட்டனர்.
சரியாக சாப்பிடாத தம்பியை கடிந்து ஒழுங்காக சாப்பிட வைத்தான் பிரவீண். பின் சுபாவை தனியாக அழைத்து ஏதோ பேசினான்.
ராஜசேகரனால் இனி மீராவுக்கு பிரச்சனை இல்லை என தம்பியிடம் மீரா பற்றிய பேச்சை துவங்கினான் பிரவீண்.
ஆண்கள் அனைவரும் ஹாலில் இருக்க, அறை வாயிலில் சுபா நிற்க, உள்ளே கட்டிலில் அமர்ந்திருந்தாள் மீரா.
மீராவை அயர்லாந்து அனுப்பி வைக்க போவதையும் சொன்னான் பிரவீண். அண்ணனை அதிர்ச்சியுடன் பார்த்த சஞ்சய், “ஏன் எனக்கும் அங்க வேலை ரெடி பண்ணியிருக்கியா ண்ணா?” எனக் கேட்டான்.
அப்பாவை பார்த்தான் பிரவீண். அவரிடம் சலனமே இல்லை.
தம்பியை பார்த்த பிரவீண், “நாம இன்னிக்கு நைட் ஊருக்கு போறோம்டா. அம்மா உன்னோடதான் டின்னர் சாப்பிடணும்னு சொல்லிட்டாங்க. நீ என்னோட வி ஆர் டி ஃபண்ட்ஸ்க்கு வா. நான் உன்னை ட்ரைன் பண்றேன். உன் ஃபிரெண்ட் ஹரீஸ்கிட்ட பேசினேன், ஒன் மன்த்ல ஃபாரின் டிரிப் பிளான் பண்ண போறானாம். நீயும் போய்ட்டு வா” என திக்காமல் திணறாமல் பேசினான்.
வி ஆர் டி என்பது அவர்களின் நிதி நிறுவனம்.
சஞ்சய் அப்பாவை முறைத்துப் பார்த்திருக்க, “சொல்ற படி கேளு சஞ்சய்” என்றார் கார்த்திகேயன்.
“எப்படி ஸார், வைஃபை விட்டுட்டு போன்னு சொன்னா மறுக்காம கேட்டுக்கணுமா?” என கோவத்தை அடக்கிக் கொண்டு கேட்டான் சஞ்சய்.
இதில் கார்த்திகேயனுக்கும் விருப்பம் இல்லைதான். சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லி உங்கள் முடிவு என்ன என அவர்களிடமே விடலாம் என்பதுதான் அவரின் நிலைப்பாடு. ஆனால் வீரராகவனின் வேண்டுகோளை அவரால் மீற முடியவில்லை.
பெரிய மகனுக்கு சுபாவை சுட்டிக் காண்பித்து பார்வையால் ஏதோ சொன்னார் வீரராகவன்.
“உங்க பொண்ணை அழைச்சிட்டு வாங்க மா” என்றான் பிரவீண்.
மீராவின் பாதுகாப்புக்காக அங்குள்ள சடங்கு எதையோ செய்து திருமணம் நடந்து விட்டதாக காண்பித்துக் கொண்டிருக்கிறான் சஞ்சய் என்றுதான் சுபாவுக்கு சொல்லப் பட்டிருந்தது. சஞ்சய் இப்போது பேசியதை கண்டிருந்தவர் குழம்பிப் போயிருந்தார்.
அவர்களிடம் கேள்வி கேட்கவோ எதிர்த்து பேசவோ எல்லாம் சுபாவுக்கு அறவே தைரியம் இல்லை. மகளை பார்த்து, வா என தலையாட்டினார். அம்மாவின் பக்கத்தில் வாயில் ஓரமாகவே நின்று கொண்டாள் மீரா.
“வாம்மா வந்து சொல்லு இவன்கிட்ட” என்றான் பிரவீண்.
அம்மாவை பார்த்தாள் மீரா. “நம்ம வீட்டுக்கு போயிடலாம் மீரா, அப்புறம் அங்கேருந்து வெளிநாட்டு வேலைக்கு போ. கிளம்பறோம்னு சொல்லு அந்த தம்பிகிட்ட” என்றார் சுபா.
கோவமாக எழுந்து நின்ற சஞ்சய், தன் அப்பாவை பார்த்து, “நீங்க அரசியல் கட்சிக்கு மட்டும் வியூகம் போட்டு தாங்கப்பா. எங்க வாழ்க்கைல விளையாட வேணாம்” என்றான்.