அறியாமல் தொலைந்தேனே -20

அத்தியாயம் -20

செவிலியர்களுக்கான தனியறையில் மீரா இருக்க, மதிய உணவு உண்ண வந்தாள் மினி. இன்சார்ஜ் என்பதால் மாலை நான்கு மணி வரை அவளுக்கு பணி இருக்கும்.

“சாம்பார் ரைஸ் சாப்பிடுறியா?” எனக் கேட்டாள் மினி. ஒரு வாய் வாங்கிக் கொண்டவள் போதும் என சொல்லி விட்டாள். இருவரும் அவரவர் தாய்மொழியில் பேசிக் கொள்வார்கள்.

இன்று மீராவுக்கென தனி நோயாளிகள் யாரும் இல்லை. அதிகமான செவிலியர்கள் இருந்ததால் மற்றவர்களுக்கு உதவ மட்டும் செய்திருக்க, ஹேண்ட் ஓவர் செய்யும் அவசியமின்றி முன்பே இங்கு வந்து விட்டாள். சற்று முன்புதான் ஐஸக் அழைத்து பேசியிருந்தார்.

சஞ்சயின் வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் உனக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்வார்கள், அவர்கள் சொல்வது போல நடந்து கொள், சஞ்சயை விட்டு விலகி விடு எனவும் சொல்லியிருந்தார்.

மீரா அமைதியாகத்தான் கேட்டுக் கொண்டாள்.

“அவங்க பெரிய இடம்மா, உன் பிரச்சனையை சரி பண்ணி தர தயாரா இருக்கிறப்போ அவங்க சொல்றத கேட்கிறதுதானே புத்திசாலித்தனம்?” என சொல்லியிருந்தார் ஐஸக். அவருக்கு இப்படி பேசவெல்லாம் மனமே இல்லை. சஞ்சயின் அப்பா சொல்வதை செய்யும் நிர்பந்தத்தில் இருந்தார் அவர்.

மீராவுக்கு எல்லாமே புரிகிறது. அழுகை எல்லாம் வரவில்லை அவளுக்கு. மனம் வெறுமையாக இருந்தது.

மீரா வழக்கமாக மருத்துவமனையிலிருந்து வெளியில் வரும் நேரத்தை கணக்கிட்டுத்தான் வீட்டிலிருந்து கிளம்பியிருந்தான் சஞ்சய். ஆகவே மீரா இன்னும் இங்கேயே இருந்தாள்.

“ஏன் டல் அடிக்கிற? நைட் சரியான தூக்கம் இல்லியா?” என கிண்டலாக கேட்டாள் மினி.

“ஹையோ சேச்சி! அப்படிலாம் இல்லை. சஞ்சயோட வீட்டுக்கு எங்க மேரேஜ் தெரிஞ்சு போச்சு” என சோகமாக சொன்னாள் மீரா.

“என்னிக்காவது தெரியதானே வேணும்?”

“ம்ம்… எனக்குத்தான் என்ன பண்ணுவாங்கனு பயமா இருக்கு. சஞ்சய் வீட்ல நான் நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு வசதி படைச்சவங்க”

“ஓ அப்போ கொஞ்சம் சிக்கல்தான். உனக்கும் சின்ன வயசு சஞ்சய்க்கும் சின்ன வயசு. வீட்ட எதிர்த்து இவ்ளோ அவசரமா மேரேஜ் செய்யணுமா, எவ்ளோ தூரம் இந்த ரிலேஷன்ஷிப் ஓடும்ன்னு அப்பவே நினைச்சேன் நான். என் ஃபிரெண்ட் அப்படித்தான் காலேஜ் படிக்கும் போதே லவ்வரோட ஓடிப் போனா. ஒரு மாசம் கழிச்சு ரெண்டு பேரையும் பிரிச்சிட்டாங்க.

இப்போ ரெண்டு பேரும் வேற வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழறாங்க. ஜாதி, மதம், அந்தஸ்து இதெல்லாம் லவ்ல இல்லைனா எனக்கு சிரிப்புதான் வரும். லவ் சக்ஸஸ் ஆகணும்னா இது எல்லாத்திலேயும் ஒத்து போகணும். இதெல்லாம் மாறவே மாறாது” என்றாள் மினி.

மீரா அமைதியாக, இறுக்கமாக இருந்தாள்.

“எது வந்தாலும் ஃபேஸ் பண்ணனும் மீரா. கனடா போக ட்ரை பண்ணிட்டு இருந்ததை ஏன் விட்ட நீ?” எனக் கேட்டாள் மினி.

“சஞ்சய் இங்க இருக்கும் போது நான் எப்படி கனடா போக முடியும் சேச்சி?”

“ஓ சஞ்சய் மேல அவ்ளோ நம்பிக்கையா?”

“நம்பிக்கைலாம் சின்ன வார்த்தை சேச்சி. அவர் எனக்கு பண்ணினதுக்கு நான் என்ன செய்தாலும் தகும். அவர் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சரிதான்”

“விட்டுட்டு போன்னு சொன்னா போய்டுவியா?” என மினி கேட்டதற்கு புன்னகைக்க மட்டும் செய்தாள்.

“சரியான காதல் பைத்தியம் நீ!” என உரிமையோடு திட்டினாள் மினி.

தான் வந்து விட்டதாக மீராவுக்கு கைப்பேசியில் தகவல் சொன்னான் சஞ்சய்.

“எனக்கு இந்த வீக்ல எப்ப வேணா லீவ் தேவைப்படலாம் சேச்சி”  விடுப்பு கொடுத்து விடுங்கள் என்ற கெஞ்சலோடு சொன்னாள் மீரா.

“அடிக்கடி உனக்கு ஃபேவர் பண்ண  முடியாது மீரா. ஆனா இந்த தடவ கண்டிப்பா லீவ் தரேன். ஷிப்ட் ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடியே மெசேஜ் பண்ணிடு” என்ற மினிக்கு நன்றி சொல்லி வெளியேறினாள் மீரா.

சஞ்சயின் தோற்றமே சொன்னது அவன் பெரும் மனக் குழப்பத்தில் இருக்கிறான் என. அவனை எது கேட்டும் சங்கட படுத்த விரும்பவில்லை மீரா. அவளாக ஏதும் கேட்காமல் போகவும் இவனும் எதுவும் சொல்லவில்லை.

அமைதியாக வீடு வந்து சேர்ந்தனர்.

சஞ்சய் காலை சாப்பாடே மிகவும் தாமதமாகத்தான் சாப்பிட்டிருந்தான். மீரா சொல்லியிருந்ததால் மதிய உணவு வாங்கி வைத்திருக்கவில்லை.

முன்னர் திட்டமிட்டப்படி மோர் குழம்பு, உருளைக்கிழங்கு வறுவல் என விரைவாக சமைத்து முடித்தாள் மீரா. அவனை சாப்பிட அழைக்க இப்போது வேண்டாம் என சொல்லி விட்டான்.

மீராவுக்கு நல்ல பசி என்பதால் அவள் மட்டும் தனியாக சாப்பிட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்.

எதுவுமே விசாரிக்காத அவள் மீது சஞ்சய்க்கு கோவமாக வந்தது. அவள் மாலைத் தேநீர் போட வரும் போதுதான், “சாப்பாடு போடு” எனக் கேட்டான்.

“இவ்ளோ நேரமாவா சாப்பிடாம இருப்பீங்க? என்ன சஞ்சய் இது?” என கடிந்து கொண்டாள்.

“நீ ஃபோன் பண்ணினப்போ ஏதோ கோவத்துல உன்கிட்ட பேசிட்டேன், அதுக்காக இப்போ நீ பாட்டுக்கும் படுக்க போயிட்ட” என குறையாக சொன்னான்.

“பசிக்கலன்னு சொன்னதால போனேன்”

“ம்ம்ம்… அப்போ பசியில்லைனா நேரம் ஆக ஆக பசி வரும்தானே? நான் எட்டி பார்த்தேன், நீ தூங்க கூட இல்லை, ஆனாலும் நான் சாப்பிடலைன்னு உனக்கு நினைப்புல இல்லைல?” என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொன்னான்.

அவளால் எதிலுமே கவனம் வைக்க முடியவில்லையே. தன் எதிர்கால வாழ்க்கை என்னாகும்? தங்களின் திருமணம் நிலைக்குமா? சஞ்சயை பிரிய நேருமோ? என அவளுள் என்னென்னவோ யோசனைகள்.

தன்னை நியாயப் படுத்திக் கொள்ளும் வகையில் விளக்கம் தராமல், “ஸாரி, நீங்க கூப்பிட்ருக்கலாம்தானே? வாங்க சாப்பிடுங்க” என்றவள் சூடாக ஆம்லெட்டும் போட்டுக் கொடுத்தாள்.

“டீயும் போட்ரு, ஹெட்டேக்கா இருக்கு” என சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்.

“சாப்பிடாம தலைவலி வந்திருக்கும். இப்போ சரியாகிடும்” என்றாள்.

“இது அந்த தலைவலி இல்லை. இங்க ஒருத்தி புதுசா வேற மாதிரி பிஹேவ் பண்றா, அந்த கடுப்புல வந்த தலைவலி” என்றான்.

தன்னைத்தான் சொல்கிறான் என புரிகிறது. மனதில் அவன் மீது அத்தனை அன்பிருக்கிறது. நடந்த திருமணத்தை ஏற்று அவனை கணவனாகத்தான் நினைக்கிறாள். ஆனால் உரிமையை சொல்லி நிலை நாட்டிக் கொள்ளும் இடத்தில் அவள் இல்லையே.

சந்தர்ப்ப வசத்தால் சஞ்சயின் முடிவுகள் மாற நேரிடலாம். எந்த வகையிலும் அவனுக்கு குற்ற உணர்வு வந்து விடக்கூடாது, சிறிதளவு கூட அவனது மனம் காயப் பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் அந்தப் பேச்சை வளர்க்கவில்லை.

சாப்பிட்டு முடித்தவனுக்கு தேநீர் கொடுத்தவள் தன்னுடையதை எடுத்துக் கொண்டு அறைப் பக்கம் திரும்பினாள்.

“என்ன மீரா உன் பிராப்லம்?” எனக் கேட்டான் சஞ்சய்.

“உங்கள்ட்ட எனக்கு எதுவுமே பிராப்லம் இல்லை சஞ்சய். என்னை பத்தி யோசிக்காதீங்க. நீங்க இங்க எவ்ளோ கஷ்ட பட்டீங்கன்னு எனக்கு தெரியும். ஒரு வேளை நமக்கு மேரேஜ் ஆகலைனா இந்நேரம் நீங்க சென்னைல உங்க அம்மா பக்கத்துல இருந்திருப்பீங்க” என்றாள்.