Epi -2

“பாஸ்! என்னாச்சு?” என அரக்கப்பரக்க சத்யமூர்த்தியின் பின்னால் ஓடினான், அவனது காரியதரிசி கதிர்.

“ஹாஸ்பிடல் போகணும். இன்னிக்கி எனக்கு இருக்கிற எல்லா ஒர்க் ஸ்கெட்யூலையும் கேன்சல் பண்ணிடு!” என்றுவிட்டு, வேகமாக கார் ஏறியிருந்தான்.

வேகமாக கிளம்பும் காரைப் பெருமூச்சுடன் பார்த்தவாறு நின்றிருந்தான் கதிர்.

சத்யமூர்த்திக்கு ஒவ்வொரு நொடியும் யுகமாக இருந்தது. சத்யமூர்த்தியின் தொழில் சாம்ராஜ்யத்தில் அவனை வெல்ல யாருமே இல்லை; ஆனால், தனிப்பட்ட வாழ்க்கை? அவனது குடும்பம் என்று பார்த்தால், முழுக்க முழுக்க கறுப்புப் பக்கங்கள் தான்.

ஆமாம், சத்யமூர்த்தியின் உலகமே அவனுடைய தம்பி விஷ்வா தான். கலாவதிக்கு இரண்டு மகன்கள்: மூத்தவன் சத்யமூர்த்தி, இரண்டாம் மகன் விஸ்வமூர்த்தி. அப்போ விவான்?

சத்யமூர்த்திக்கு எல்லாமே தனது அன்னை மற்றும் தம்பி இருவரும் தான். ஆனால், அந்த விஷ்வா இன்று ஐந்து வருடங்களாகக் கோமா நிலையில் இருக்கிறான். ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் அபாய கட்டத்தில் இருந்து கோமாவுக்குச் சென்றவன், விபத்து நடந்த நாளில் இருந்து இன்று வரை, சத்யமூர்த்தியின் இதயம் கனத்த கல்லாகத்தான் இருக்கிறது.

சத்யமூர்த்தியின் உடைந்த மனதுக்கு ஆறுதல் கொடுக்கக் கூட ஆள் இல்லை, அந்த மிகப்பெரிய பங்களாவில். ஆறுதல் சொல்லும் நிலையில் இருக்கும் சத்யமூர்த்தியின் தாயார் கலாவதி, வயது மூப்பு, கூடவே இரத்த அழுத்தம் (Blood Pressure) மற்றும் சர்க்கரை நோய் (Sugar) என நோய்களின் நடுவில், தனது கோமாவுக்குச் சென்ற மகனை நினைத்து நொடிந்து போனவர், இப்பொழுது சமீபமாகப் பேரனைப் பார்த்துக் கொள்கிறார். கலாவதிக்கு போகப் போக உடல் குன்றியது. மருத்துவப் பரிசோதனையில் கலாவதியின் உடல்நிலை மேலும் மோசமான செய்தி, சத்யமூர்த்தியின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது.

எத்தனை கோடி ரூபாய் சம்பாதித்துக் குவித்து வைத்தாலும், நிம்மதியும் சந்தோஷமும் என்பது விஷ்வ பவனத்திற்கு இல்லை. இவ்வாறான பல்வேறு சிந்தனையில் அவனது எண்ணங்கள் சுழன்று கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து கார் நின்றது.

மெல்ல கண் விழித்தான். “சார், ஹாஸ்பிடல் வந்திடுச்சுங்க,” என்று பணியாள் கூற, கவலை முகத்தையும் சோர்ந்த உணர்வையும் மூட்டை கட்டி மறைத்தவன், முகத்தில் கம்பீர வெளிப்பாட்டுடன், “I will do it!!” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு இறங்கினான்.

‘கண்டிப்பா விவான், உன்னால முடியும்,’ எனத் தனது வீட்டு வாரிசைப் பற்றி நினைத்துக்கொண்டு உற்சாகத்துடன் சென்றான். அந்த மிகப்பெரிய வீட்டுக்கும், சத்யமூர்த்தி சம்பாதிக்கும் அனைத்துச் சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு விவான் மட்டுமே. அப்போ விவான் சத்யமூர்த்தியின் மகனா? இல்லை, விஷ்வமூர்த்தியின் மகன். சத்யமூர்த்திக்கு விவான் மீது அளவுகடந்த பாசம் உண்டு; ஆனால், அவனது பணிச்சுமை அந்தப் பாசத்தை வெளிக்காட்டவோ, மகனுடன் நேரம் செலவழிக்கவோ விடுவதில்லை.

அதன் விளைவு, மிக மோசமானது. விவான், யூடியூப் ரைம்ஸ்களுக்கு அடிமையாகி, யாருடனும் பேச மறுத்து, பிடிவாதமான (Adamant) குழந்தையாக மாறிப்போனான். குழந்தையிடம் எது கேட்டாலும் சைகையில் தான் பதில் கொடுப்பான்; சில சமயம் ம்ம், இல்ல, No, Yes — இந்த வார்த்தைகள் மட்டுமே அவனுக்குத் தெரியும். ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் ‘Little Steps’ மற்றும் ‘விஷ்வா விகாஸ்’ பள்ளிக்கு வந்து படிக்க நீ, நான் எனப் போட்டி போட்டுக் கொண்டு பெற்றோர்கள் சேர்க்க, அந்த மொத்த சாம்ராஜ்யத்துக்கும் சொந்தக்கார வாரிசுக்கு பேச முடியவில்லை என்பதே அந்தோ பரிதாபம் என்பதை விடக் கர்மா.

விவான் எதை கேட்டாலும் ஒரே பதில் தான்; இதற்கெல்லாம் காரணம், ஒருவகையில் சத்யமூர்த்தியும் தான். அந்தக்குற்றவுணர்வு, கோபமாக வெளிப்பட்டது. அலுவலகப் பணியாளர்களை மிரட்டுவதிலும், இன்னும் அதிகப் பள்ளிகளை உருவாக்குவதிலும் அவன் அந்தக் கோபத்தை வடிகட்டினான்.

குழந்தைகள் நல மருத்துவரின் அறைக்கு எதிரில் கலாவதி மற்றும் விவான் இருவரும் இருந்தார்கள். விவான், சத்யமூர்த்தியைப் பார்த்ததும் வேகமாக அருகில் சென்று அவனது சட்டைப் பாக்கெட்டில் இருந்து போனை எடுக்கச் செல்ல, “விவான்!” என அதட்டல் குரலில் அழைக்க, சத்யமூர்த்தியின் முழங்காலைப் பிடித்துக்கொண்டு, தன் தந்தையையே நிமிர்ந்து பார்க்காமல், கையில் இருந்த பொம்மையை வைத்துக் கோபமாகத் தரையில் தட்டிக் கொண்டிருந்தான். அவன் ஒரு பிடிவாதத்தின் உருவம்.

மருத்துவர் அனைத்து விதமான பரிசோதனை முடிவுகளையும் புரட்டிப் பார்த்துவிட்டு, மெல்ல கலாவதியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.

“டாக்டர், என்னோட பேரன் எப்போ பேசுவான்? எதுவும் பிரச்னை இல்லை தானே?” என பதட்டத்துடன் கலாவதி கேட்க…

“விவான் ஒரு அழகான, புத்திசாலி பையன். ஆனால், இந்தப் பிடிவாதம், அண்ட் அவன் பேசாமல் இருக்கக் காரணம் அவனைச் சுத்தி இருக்கிற என்விரான்மென்ட் (Environment) தான். அது அவனுக்குப் பாதுகாப்பானது இல்லை.”

“What nonsense are you talking?” எனப் பொங்கிக்கொண்டு எழுந்தான் சத்யமூர்த்தி.

மருத்துவர் பெரிய மூச்சுடன் கலாவதியைப் பார்க்க, சத்யமூர்த்தி அடங்குவதாக இல்லை. “என்ன பேசிட்டு இருக்கீங்க? நான் யாருன்னு தெரியுமா? என்ன என்விரான்மென்ட் சரியில்லை? உங்களுக்கு என்ன தெரியும்?” என அடுக்கடுக்காகப் பேசிக்கொண்டே சென்றான்.

மருத்துவர் பொறுமையாக, “மிஸ்டர் சத்யமூர்த்தி, உங்களுக்கு அதிக வேலை இருக்கிறதால விவான் கூடப் பேச யாருமே இல்லை. ஒரு குழந்தை தன்னோட தாய், தந்தை, அப்புறம் தாத்தா, பாட்டி கூட இருக்கும் போது தான் பேசக் கத்துக்கும். ஆனால், விவான் விஷயத்துல என்ன நடந்திருக்கு தெரியுமா? உங்க குழந்தையைக் கார்ட்டூன் ரைம்ஸ் வசியப்படுத்தி வச்சிருக்கு. ஹைப்பர் ஸ்டிமுலேஷன் (Hyper stimulation), அதாவது மூளைக்கு அதிகப்படியான தூண்டுதல் கொடுக்குது. அதுக்குக் காரணம் அட்டென்ஷன் ஸ்பான் (Attention span). இது குழந்தையை அடிக்ட் (Addict) பண்ணிடுச்சு. விவானுக்கு எந்த வார்த்தைகளையும் உச்சரிக்கத் தெரியலை. இதுக்கு எல்லாம் காரணம் மொபைல், சோசியல் மீடியா தான். இப்போ அவன் வித்ராயல் சிம்டம்ஸ்ல (Withdrawal symptoms) அஃபெக்ட் ஆகி இருக்கான்,” என்றார்.

கலாவதி கண்களில் நீர் கொட்ட, “என் பேரனுக்கு உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே டாக்டர்?” என்று பதட்டத்துடன் கேட்டார்.

மருத்துவர் சத்யமூர்த்தியை ஏறிட்டுப் பார்க்க, “அம்மா, நீங்க கொஞ்சம் வெளியே இருங்க; நான் பேசிட்டு வாரேன்,” என்று அவரை வெளியே அனுப்பி வைத்தான்.

விவான், சத்யமூர்த்தியின் காலை இன்னும் கட்டிக்கொண்டே இருந்தானே தவிர நகரவில்லை.

“இப்போ என்ன பண்றது, டாக்டர்?” என்று புருவம் சுருக்கிக் கேட்டான்.

அவனை நிதானமாகப் பார்த்த மருத்துவரோ, விவானுக்கு ஒரு சாக்லேட் கொடுத்தபடி, “விவானுக்கு இப்போ ஸ்பீச் தெரபிஸ்ட் அண்ட் கேர் டேக்கர் (Speech Therapist and Care Taker), அதாவது பேச்சுப் பயிற்சியாளர், பராமரிப்பாளர் தேவை. அவங்க உங்க வீட்டிலேயே தங்கி, 24/7 அவன் கூட இன்டராக்ட் (Interact) பண்ணிக்கிட்டே இருக்கணும். பேச ட்ரெய்னிங் கொடுக்கணும்; அது மட்டும்தான் சொல்யூஷன் (Solution),” என்றார்.

சத்யமூர்த்தியின் ஈகோ புண்பட்டது. தன் மகனுக்குப் பேச்சுப் பயிற்சி கொடுக்க, யாரோ ஒரு வெளிநபர் தன் வீட்டிற்குள் வர வேண்டுமா? என்று நினைத்தவன், சட்டென்று, “நான் என் பையனை ஸ்கூலில் சேர்த்துறேன்; என்னோட ஸ்கூல் இருக்கு. அவன் சீக்கிரம் பேசிடுவான். ஏபிசிடி (ABCD) சொல்லிக் கொடுக்க அவனுக்கு பெஸ்ட் டீச்சர்ஸ் (Best teachers) அப்பாயிண்ட்மென்ட் பண்றேன்,” என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.

“கண்டிப்பா பேச மாட்டான்,” என்று உறுதியாகக் கூறினார் மருத்துவர்.

சத்யமூர்த்தி கோபத்துடன் திரும்பிப் பார்க்க, மருத்துவர் நிதான பார்வையுடன், “விவானுக்குத் தேவை அரவணைப்பும் தமிழும் தான். தமிழ் எழுத்துக்கள் தான் உச்சரிப்புக்கு நல்ல பயிற்சி. ளகரம், ழகரம் — இப்படித் தமிழில் இருக்கிற 247 எழுத்துக்கள் உச்சரிப்புத் தான் அவன் பேச உதவும். அது தமிழ் வழிப் பள்ளிகள் பெட்டர் (Better), அரசுப் பள்ளியில் கூடச் சேர்க்கலாம்,” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க…

“நான் என்னோட ஸ்கூலில் பிராக்டிஸ் பண்ணிக்குவேன். உங்க அட்வைஸ்க்கு ரொம்ப தேங்க்ஸ்,” எனச் சொல்லிவிட்டு, விவானைத் தூக்கிக்கொண்டு வெளியேறினான்.

அதே நேரம், மருத்துவர் சாவித்ரிக்கு அழைத்தார். அரக்கப்பரக்க பெரும் ஆவலுடன் உள்ளே நுழைந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது; சுற்றிலும் விவானைத் தேடினாள்.

“சாவித்ரி…” என மருத்துவர் அழைக்க, “டாக்டர், என்னாச்சு? எல்லாமே ஓகே தானே?” என கைகளைப் பிசைந்து கொண்டு வந்தாள்.

“இல்லைம்மா, அந்தச் சத்யமூர்த்தி சாதாரண ஆள் இல்லையே; திமிருக்கே திமிர் பிடிச்சவர். அவரோட ஸ்கூலில் விவானைப் பேச வைக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டார்,” என்றார்.

சாவித்ரிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை; மௌனமாக அதே இடத்தில் நின்றாள். அதை விட ஒவ்வொரு நொடியும் உள்ளம் கனத்துப் போனது. வேதனை ஒரு பக்கம் பரவ, அதை விட மோசமாகப் பழி வாங்க வேண்டும் என்ற தீ பரவிக் கொண்டிருந்தது.

“சாவித்ரி…” என மருத்துவர் மீண்டும் அழைக்க, “டாக்டர்!” என்று சுயநினைவுக்கு வந்தாள்.

“நீ ஃபீல் பண்ணாதேம்மா! எல்லாம் நல்லதுக்குத் தான் நடக்கும். கண்டிப்பா அவர் இங்கே வந்துதான் ஆகணும்,” என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

சாவித்ரி பெருமூச்சுடன் அங்கிருந்து கிளம்பினாள். அவள் இந்த நான்கு வருடங்கள் காத்திருந்தது இந்த நொடிக்குத் தானே! எப்படியாவது விவானின் அருகில் செல்ல வேண்டும் எனத் தவமிருந்து தானே, அதற்கான வாய்ப்புக்காக அலைந்தாள்! விவானை அள்ளி அணைக்கும் நொடிக்காகத் தானே துடித்துக் கொண்டிருந்தாள்! ஆனால், அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்துத் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டிருந்தான் சத்யமூர்த்தி.

அப்போ சாவித்ரி தான் விவானோட அம்மாவா?

பார்ப்போம்…

 * தொடரும்.