“இது… காயத்திரி தேவி!” என்று அவளது மனம் அடித்துக் கூறியது.
ஆர்வம் அதிகரிக்க, ருத்ரா அந்த ஓவியத்தை இன்னும் நெருங்கிச் சென்றாள். அதில் வரையப்பட்டிருந்த ஒவ்வொரு நுணுக்கமான விவரத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். அவளது விரல்கள் ஓவியத்தின் மீது மெதுவாகப் படர்ந்த அந்த நொடி…
அதில் இருந்த காட்சிகள் உயிர்பெற்று, அவளது கண்முன்னே விரியத் தொடங்கின.
மலையின் உச்சியில் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது படைவீட்டுக் கோட்டை. கோட்டையைச் சுற்றிலும் ஆழமான அகழிகளும், மலைகள் பாதுகாப்பு அரண்களாகவும் அமைந்திருக்க, பன்னிரண்டு அடி உயரத்தில் எழுப்பப்பட்டிருந்த பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்கள் அதன் கம்பீரத்தைப் பறைசாற்றி நின்றன. கோட்டை மதில் சுவர்களைச் சுற்றிலும் ஆங்காங்கே பாதுகாப்புக் காவலர்கள் காத்து நின்றனர். கோட்டையின் உச்சியில் காளைச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, பலத்த காற்றில் கம்பீரமாக அசைந்துகொண்டிருந்தது.
அழகிய வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்த பெண் சிலைகள் கோட்டையின் நுழைவாயிலை அலங்கரித்திருந்தன.
அதே நேரத்தில், தன் அறையின் ஜன்னல் வழியே நெடுந்துயர்ந்து வளர்ந்த மரங்களுக்கு இடையே சூரிய வெளிச்சம் தனது முகத்தில் படர்வதையும், இலைகளின் சரசரவென்ற சத்தத்தையும் உணர்ந்த காயத்திரி தேவி, தன் காதுகளைக் கூர்மையாக்கினாள். திடீரென… காற்றைக் கிழித்துக்கொண்டு மரங்களுக்கு நடுவிலிருந்து வந்த ஓர் அம்பு, அவளது நெஞ்சை நோக்கிப் பாய்ந்தது.
அடுத்த நொடியே மூளை வேகமாகச் செயல்பட, அருகில் வைக்கப்பட்டிருந்த வில்லை நொடிப்பொழுதில் எடுத்து கையில் ஏந்தினாள். ஒரு அம்பை உருவி, நாணை வளைத்து, அது வந்த திசைக்கு எதிராகத் துல்லியமாகக் குறிவைத்து எய்தாள்.
அம்பு பாய்ந்த வேகத்தில்… மறைவில் இருந்த எதிரியின் மார்பைத் துளைத்திருக்க, மரத்திலிருந்து கீழே நிலைகுலைந்து “தொப்” பென்று தரையில் விழுந்தான்.
சுற்றிலும் வேறு யாரேனும் மரங்களுக்கு நடுவே மறைந்திருக்கிறார்களா என்று காயத்திரி தேவி கூர்ந்து கவனித்தாள். யாரும் தென்படவில்லை.
‘இவனுடன் வந்தவர்கள் தப்பியோடியிருக்க வேண்டும்… இல்லை என்றால் காட்டுக்குள் எங்காவது மறைந்திருக்கலாம்…’ என்று மனதில் கணித்தவள், தன் அறையை விட்டு வெளியேறினாள்.
தன்னுடன் சில காவலர்களை அழைத்துக்கொண்டு, எதிரி அம்பு எய்திய திசையை நோக்கிக் கோட்டையை விட்டு வெளியேறினாள். சிறிது தூரம் சென்றதும், நெடுந்துயர்ந்து வளர்ந்த மரங்களுக்கு நடுவே, அம்பு துளைத்த நிலையில் இரத்தம் தரையில் வழிய மல்லாந்து கிடந்தான் அந்த எதிரி வீரன்.
வேறு யாரேனும் வீரர்கள் மறைந்திருக்கிறார்களா என்று இளவரசி சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். அவளைச் சுற்றிலும் காவலர்கள் அரணாக நின்றுகொண்டனர்.
இறந்து கிடந்த எதிராளி இருந்த இடத்திற்கு அருகிலிருந்த மரங்களைச் சோதித்தாள். புதிதாக இரண்டு மூன்று மரக்கிளைகள் முறிந்து ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருந்தன.
‘இவனது கூட்டாளிகள் தப்பித்துச் சென்றுவிட்டார்கள்’ என்று மனதில் நினைத்தவள்,“இவனது உடமைகளைப் பரிசோதனை செய்யுங்கள். நான் வந்துவிடுகிறேன்” என்று காவலர்களிடம் கூறினாள்.
“இளவரசியாரே, தங்களைத் தனியாக எங்கும் அனுப்பக்கூடாது என்று அரசர் கட்டளையிட்டிருக்கிறார்” என்று தயங்கியபடி அக்கூட்டத்தின் தலைவன் கூறினான்.
அவ்வாறு கூறியவனைப் பார்த்து முறைத்தவள், “தந்தையிடம் நான் பேசிக்கொள்கிறேன். நீங்கள் இங்கேயே இருங்கள்” என்றுவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றாள்.
காவலர்கள் சூழ்ந்து அவளது வழியைத் தடுத்து நின்றனர்.
“இப்பொழுது வழிவிடுகிறீர்களா? இல்லையா?” என்று இளவரசி அதிகாரமாகக் கேட்டாள்.
அனைவரின் முகத்திலும் பீதி தெரிந்தது. காவலர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
இவர்களிடம் பேசிக்கொண்டிருக்க இது நேரமில்லை என்று நினைத்தவள், தப்பியோடியவர்களைப் பிடிக்கும் நோக்கில் காவலர்களின் கவனத்தைத் திசைதிருப்பி அங்கிருந்து தப்பி மலையிலிருந்து கீழிறங்கத் தொடங்கினாள். தன்னைச் சுற்றிலும் எப்பொழுதும் காவலர்கள் அரணாக இருப்பது காயத்திரி தேவிக்குத் துளியும் விருப்பமில்லை. சுதந்திரப் பறவையாகத் திரிய ஆசைப்படுபவள், அவளது தந்தை தன்னைக் கூண்டிற்குள் அடைத்து வைத்துப் பாதுகாப்பது மிகுந்த சலிப்பைக் கொடுத்தது.
சிறிது தூரம் வேகமாக ஓடியவள், காட்டின் நடுவே நின்று மூச்சை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பின்னர் அருகிலிருந்த மரத்தின் கிளைகளைப் பற்றிக்கொண்டு வேகமாக மேலே ஏறத் தொடங்கினாள். சிறிது உயரத்திற்குச் சென்றதும், சுற்றிலும் மரங்களுக்கு நடுவே கூர்ந்து கவனித்தாள். புதர் ஒன்றிற்கு வெளியே வாளின் முனை ஒன்று நீட்டிக்கொண்டிருக்க, எதிரியின் இருப்பிடத்தைக் கண்டுகொண்டாள்.
ஒரு நொடியும் தாமதிக்காமல் வில்லை எடுத்தாள். இரண்டு அம்புகளை உருவி, இருவரையும் துல்லியமாகக் குறிவைத்து அடுத்தடுத்து எய்தாள். அம்புகள் பாய்ந்த வேகத்தில் இலைகளைக் கிழித்துக்கொண்டு செல்ல, இருவரின் மார்பிலும் தைக்கப்பட்டு, அவர்கள் நிலைகுலைந்து தரையில் விழுந்தனர்.
அதே நேரத்தில், மரங்களுக்கு இடையே மறைந்து நின்றுகொண்டிருந்த இன்னொரு வீரனையும் காயத்திரி கவனித்தாள். அவன் தப்பியோடுவதற்குள், உயிரோடு பிடிக்கும் நோக்கில் அவனது கால்களை நோக்கி ஓர் அம்பை எய்தாள்.
காலில் அம்பு பாய்ந்ததும், “ஆ! ஆ!” வென்று வலியால் அலறியபடி கீழே விழுந்தான் அந்த வீரன்.
இரு காவலர்கள் விரைந்து சென்று அவனை உயிருடன் பிடிக்க முயன்றனர். ஆனால்… அவர்கள் அருகில் செல்வதற்குள், தன்னிடம் மறைத்து வைத்திருந்த விஷக்குப்பியை எடுத்து, தன் உயிரை மாய்த்துக்கொண்டான் அந்த வீரன்.
மரத்திலிருந்து கீழே இறங்கிய காயத்திரி தேவி, காவலர்கள் அவளைப் பின்தொடர்ந்து வந்திருந்ததைப் பார்த்தாள்.
“இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்ததா?” என்று அதிகாரம் நிறைந்த குரலில் கேட்டாள்.
“இல்லை, இளவரசியாரே…” என்று காவலர்கள் தலைகுனிந்தபடி பதிலளித்தனர்.
இறந்து கிடந்த எதிரி வீரர்களிடம் ஏதேனும் அடையாளம் கிடைக்கிறதா என்று வீரர்கள் தேடிப் பார்த்தனர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை என்பதைத் தங்கள் சைகையின் மூலம் தெரிவித்தனர்.
“சுற்றிலும் வேறு எதிரிகள் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடுங்கள். இவர்களிடம் உள்ள பொருள்களைப் பத்திரப்படுத்தி வையுங்கள்” என்று கட்டளையிட்டுவிட்டு, காயத்திரி தேவியும் மற்றொரு பக்கமாகச் சென்று எதிரிகளின் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என்று தேடத் தொடங்கினாள்.
நீண்ட நேரம் தேடியும் யாரும் தென்படவில்லை. வேறு எதிரிகள் யாரும் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டவள், மலையிலிருந்து கீழ்நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
கோட்டையை விட்டு வெகுதூரம் வந்திருந்தாள்.
‘இனி இங்கு வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை…’ என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, எதிரே ஓர் அம்மன் கோவில் அவளது பார்வையில் தென்பட்டது.
அம்மனைத் தரிசித்துவிட்டுச் செல்லலாம் என்று எண்ணியவள், கோவிலை நோக்கி நடந்தாள். பழங்காலக் கற்களால் மிகப் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருந்தது அந்தக் கோவில். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான தூண்கள், கட்டிடத்தின் முழு எடையையும் தாங்கியபடி கம்பீரமாக நின்றன.
தூண்கள் முழுவதும் செதுக்கப்பட்டிருந்த நுணுக்கமான சிற்பங்கள், அந்தக் காலத்து கலைஞர்களின் திறமையைப் பறைசாற்றின. அவற்றைக் கடந்து கருவறையை நோக்கி நடந்தாள் காயத்திரி.
கோவில் ஆளரவமின்றி வெறுமையாகக் காட்சியளித்துக்கொண்டிருந்தது. ஆனால்… கருவறைக்கு முன்பாக ஓர் இளைஞன் மட்டும் நின்றுகொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும் காயத்திரி எச்சரிக்கையடைந்தாள். மெதுவாகத் தன் குறுவாளை உருவிக்கொண்டு, அவனை நோக்கிச் சில அடிகள் முன்னேறினாள்.
அவளது வருகையை அறியாத அந்த இளைஞன், அம்மனை நோக்கிக் கண்களை மூடியபடி மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தான்.
காயத்திரி அவனை உற்றுப் பார்த்தாள்.
ராஜகம்பீரமான தோற்றம் கொண்ட முகம். கட்டுமஸ்தான உடலமைப்பு. பல போர்களைக் கண்டவன் என்பதைப் பறைசாற்றும் அளவுக்கு வலிமை நிறைந்த கரங்கள். பெண்களைப் போல் நீண்டு வளர்ந்திருந்த தலைமுடியைப் பின்னால் அழகிய குடுமியாக முடிந்திருந்தான். அதற்கு மேலும் கம்பீரம் சேர்த்தது அவனது அடர்ந்த மீசை. காதில் சிறிய கடுக்கண் ஒன்றை அணிந்திருந்தான். ஆனால், அவனது தோற்றத்திற்குச் சற்றும் பொருந்தாத பருத்தி ஆடையை அணிந்திருந்தான். அவனைப் பார்ப்பதற்கு ஏழ்மையானவன் போலவே தோன்றியது.வேண்டுதலை முடித்துக்கொண்டு அவன் கண்களைத் திறந்தான்.
அடுத்த நொடியே… தன்னையே கூர்ந்து நோக்கியபடி, அருகில் குறுவாளுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணைக் கண்டு திடுக்கிட்டான்.
அதுவும் அடுத்த நொடியே தன் உயிரைப் பறித்துவிடுவாள் என்பதைப் போல குறுவாளை ஏந்தியிருந்தாள். அப்படிப்பட்ட நிலையில் யார்தான் அஞ்சாமல் இருப்பார்கள்? ஆனால், அவனை ஆராய்ந்துகொண்டிருந்த காயத்திரியின் பார்வை, அவனது கண்களுடன் சந்தித்த அந்த நொடியிலேயே அப்படியே நின்றுவிட்டது.
அந்தக் கண்களில் ஏதோ ஒன்று இருந்தது. அவளால் அதிலிருந்து தன் பார்வையை விலக்கிக்கொள்ள முடியவில்லை.
அந்த ஒரே நொடியில்… அவளது மனம் அவனிடம் பறிபோயிருந்தது. அதே நேரத்தில், எதிரில் நின்றிருந்தவனும் அவளைக் கூர்ந்து நோக்கினான்.
கார்மேகம் போன்ற கூந்தலைச் சுருட்டி, கழுத்துக்குக் கீழே சற்று தளர்வாக அழகிய கொண்டை போட்டிருந்தாள். அந்தக் கொண்டையிலிருந்து விலகியிருந்த இரு முடிக்கற்றைகள், அவளது கன்னத்தை மென்மையாக வருடிக்கொண்டிருந்தன. எந்த ஆணையும் கவர்ந்திழுக்கும் மான் விழிகள் அவனது பார்வையைத் தன் பக்கம் இழுத்தன.
உடலோடு ஒட்டிய மென்பட்டு ஆடை, மலரைப் போல மென்மையாக அவளது மேனியைத் தழுவியிருந்தது.
தோளில் வில்லை குறுக்காக மாட்டியிருந்தாள். வலது கையில் இருந்த குறுவாள், எதிரில் நிற்பவனின் உயிரைப் பறிக்கத் தயாராக இருப்பதைப் போல மின்னியது.
அவளது தோற்றத்தை முழுமையாக உள்வாங்கியவன், மீண்டும் அவளது கண்களை ஏறெடுத்துப் பார்த்தான்.
இருவரின் கண்களும் மீண்டும் சந்தித்துக்கொண்டன.
அந்தச் சில நொடிகளில்… அவர்களின் மனங்கள் பல யூகங்களையும் தாண்டி, ஏதோ ஒரு காரணத்தால் மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டும் என்று ஏங்கத் தொடங்கியிருந்தன.
சில நொடிகளுக்குப் பிறகு அவனது கண்களிலிருந்து தன் பார்வையை விலக்கிக்கொண்ட காயத்திரி, தன் அதிகாரத்தை மீட்டுக்கொண்டாள்.
“யார் நீ? யாருடைய அனுமதியோடு இந்தக் கோவிலுக்குள் நுழைந்தாய்?” என்று ஆவேசமாகக் கேட்டாள்.
அவளது ஆடையையும் கம்பீரத்தையும் வைத்தே, இவள் சாதாரணப் பெண் அல்ல என்பதையும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதையும் விக்கிரமன் புரிந்துகொண்டான்.
“உங்களுடைய குறுவாளின் பிடியைத் தளர்த்துங்கள், இளவரசியாரே. நான் ஓர் அகதி. என் குடும்பத்தைப் போர்க்களத்தில் இழந்துவிட்டு, தங்களுடைய ராஜ்யத்தை நாடி வந்தேன். வழியில் இந்தக் கோவிலைக் கண்டதும், அம்மனைத் தரிசிக்க வந்தேன். இங்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது எனக்குத் தெரியாது. இளவரசியாரே, என்னைத் தயவுகூர்ந்து மன்னித்துவிடுங்கள்” என்று இருகரம் கூப்பிப் பணிவுடன் வேண்டினான்.
“இந்தக் கோவில் அரச குடும்பத்திற்குச் சொந்தமானது. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இங்கு வர அனுமதி உண்டு. இனி இவ்விடத்திற்கு வராதீர்கள்” என்று அவளது இதழ்கள் கடுமையாகக் கூறின. ஆனால்…
ஏனோ அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் அவளது மனம் வேறொன்றை விரும்பியது. அந்த வாலிபனை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல், அவளுக்குள்ளே மெல்ல எழுந்திருந்தது.
“கோவிலைப் பற்றி தெரியாமல் உள்ளே நுழைந்துவிட்டேன், இளவரசியாரே. என்னை மன்னித்து, இவ்விடத்தை விட்டு செல்ல அனுமதி தாருங்கள்” என்று மீண்டும் பணிவுடன் கேட்டான்.
அதற்கு மறுமொழியாக காயத்திரி தலையசைத்து, “ம்…” என்று அனுமதி வழங்கினாள்.
அவளை ஒரு கணம் பார்த்துக்கொண்டிருந்த விக்கிரமன், உதட்டில் மெல்லிய புன்னகையுடன் அங்கிருந்து வெளியேறினான்.
அவன் செல்லும் பாதையை காயத்திரியின் கண்கள் சில நொடிகள் பின்தொடர்ந்தன. பின்னர் தன்னைச் சுதாரித்துக்கொண்டவள், அம்மனைத் தரிசித்துவிட்டு கோவிலைச் சுற்றி வந்தாள்.
ஒரு மூலையில், செடிகளுக்கு நடுவே மறைக்கப்பட்டிருந்த ஒற்றையடிப் பாதை அவளது பார்வையில் பட்டது.
அந்தப் பாதையில் நடக்கத் தொடங்கியவள், சிறிது தூரம் சென்றதும் மேலே ஏறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கற்சிற்பப் படிக்கட்டுகளை அடைந்தாள்.
அவற்றில் வேகமாக ஏறியவள், சிறிது நேரத்திலேயே மீண்டும் கோட்டை வாசலை அடைந்தாள்.
நான்கு காவலர்களும் சற்று தொலைவில் அவளுக்காகக் காத்திருந்தனர்.
இளவரசி காயத்திரி தேவியைக் கண்டதும், அவர்கள் அவளை நோக்கி விரைந்து வந்தனர்.
“வேறு எதிரி வீரர்கள் யாரும் கண்ணில் தென்பட்டனரா?” என்று கேட்டாள்.
“இல்லை, இளவரசியாரே.”
“உடமைகளில் எதுவும் சந்தேகப்படும்படி இருந்ததா?”
“நீங்கள் கூறியபடி உடமைகளைப் பரிசோதித்தோம், இளவரசியாரே. அதில் இது கிடைத்தது” என்று உயிரிழந்த எதிரி வீரனிடம் கிடைத்திருந்த ஒரு சிறிய விஷக்குப்பியை அவளிடம் நீட்டினர்.
அதை வாங்கிய காயத்திரி, சில நொடிகள் கூர்ந்து கவனித்தாள்.
அது நீல நிற பாரசீகக் கண்ணாடியால் செய்யப்பட்ட சிறிய குப்பி. அதன் மேற்பரப்பில் மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டிருந்த சில எழுத்துக்கள் அவளது பார்வையில் பட்டன.
அந்த எழுத்துக்களைக் கண்ட அடுத்த நொடியே… காயத்திரி தேவியின் முகம் சட்டென்று இருளடைந்தது. நெற்றியில் வியர்வைத் துளிகள் மின்னின. ராஜ்யத்திற்கு பேராபத்து என்று அவளது மூளை எச்சரிக்கத் தொடங்கியது.