அறியாமல் தொலைந்தேனே -18

அத்தியாயம் -18

அதிகாலை மூன்று மணிக்கு மீராவுக்கு விழிப்பு தட்டியது. சஞ்சய் மீது படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறோம் என புரிந்து அதிர்ச்சியும் வெட்கமுமாக எழுந்து நின்றாள். அவனையும் எழுப்பி அறைக்குள் போக சொல்லலாமா எனதான் நினைத்தாள். 

எங்கே உறக்கம் கலைந்தால் மீண்டும் உறங்க சிரம படுவானோ என நினைத்து எழுப்பாமல் விட்டாள். தலையணை எடுத்து வந்து அவனுக்கு வைத்து விட்டவளுக்கும் அவனை விட்டுச் செல்ல மனமில்லை. 

தரையிலேயே படுக்கை விரிப்பு ஒன்றை விரித்து படுத்து விட்டாள். 

காலையில் குக்கரின் விசில் சத்தத்தில் விழித்துக் கொண்டான் சஞ்சய். சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தான். லேசாக கழுத்துப் பக்கம் வலிப்பது போலிருந்தது. புன்னகை செய்து கொண்டே சமையலறையை எட்டிப் பார்த்தான். 

மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் மீரா. 

“இன்னிக்கு மதியானம்தானே நீ போகணும், பொறுமையா சமைக்கலாமே மீரா?” எனக் கேட்டான். 

“எந்திரிச்சீட்டீங்களா? நீங்க படுத்திருந்த விதமே சரியில்லை. எங்கேயும் புடிச்சுக்கலையே?” எனக் கேட்டாள். 

“நான் ஒன்னு கேட்டா நீ வேற ஒன்னு கேளு” என்றவன் தன் நெஞ்சத்தை சுட்டிக் காண்பித்து, “கொஞ்சமா இங்கதான் பிடிச்சுகிச்சு. மீரான்னு ஒருத்தி என்னை தனியா விட்டுட்டு போயிட்டா” என்றான். 

“பாதில நான் எந்திரிக்கலைனா இந்நேரத்துக்கு நசுங்கி போயிருப்பீங்க?” என்றாள். 

“அதெல்லாம் இல்லை, நீ வேணா இன்னிக்கு  ஃஹோல் நைட் எம்மேல படுத்து பாரு” என்றான். 

“பிரஷ் பண்ணிட்டு வந்தா டீ கிடைக்கும்” என பேச்சை மாற்றினாள். 

“பிரஷ் பண்றது ஷேவ் பண்றது ஆபிஸ் போறது இதையெல்லாம் எவன் கண்டுபிடிச்சான் மீரா. காட்டுவாசிதான் நல்லா என்ஜாய் பண்ணி வாழ்ந்திருக்கான். எவல்யூஷன்னு சொல்லி லைஃபை ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணி வச்சிட்டாய்ங்க” 

“ம்ம்… நாம வேணும்னா ஏதாவது காட்டுக்கு போயிடலாமா?” என அவள் கேட்க, இரண்டு தோள்களையும் உயர்த்தி, “நான் ரெடிதான்” என்றான். 

“பேசிட்டே நிக்காம கிளம்புங்க” என்றாள். 

“ஹேய் இப்படிலாம் அரட்டி மிரட்ட கூடாது. எங்கம்மா எப்பவும் கண்ணு தங்கம் ராஜா இப்படி சொல்லித்தான் என்னை கிளப்புவாங்க. கொஞ்சம் சவுண்ட் ஜாஸ்தி ஆனாலும் போக மாட்டேன்னு சொல்லிடுவேன்”

“என்ன?” என அவள் முறைத்துக் கொண்டே கேட்டாள். 

அவளின் கோவத்தை ரசித்துக் கொண்டே, “ஓகேவா நீ?” என விசாரித்தான். 

நேற்று நடந்ததை எளிதில் மறக்க முடியுமா என்ன? ஆனாலும் ஒதுக்கி வைத்திருந்தாள். சஞ்சய்க்கு மதிய உணவும் செய்து கொடுக்க வேண்டும் என்பதாலேயே சீக்கிரம் எழுந்தும் விட்டாள். 

“நான் நல்லாருக்கேன் சஞ்சய்” என்றாள். அந்தக் குரலில் என்ன உணர்ந்தானோ, “ஸாரி மீரா, நான் உன் கூட இருந்தும் உனக்கு அப்படி ஆக விட்டுட்டேன்” என வருத்தமாக சொன்னான். 

“நீங்க என்ன பண்ணுவீங்க? அதை விட்ருவோம் சஞ்சய். நிஜமா நான் ஓகே” என்றாள்.

அப்படியெல்லாம் உடனடியாக அந்த சம்பவத்திலிருந்து வெளிவர இயலாது என சஞ்சய்க்கு தெரியாதா என்ன? அதைப் பற்றி பேச வேண்டாம், முடிந்த அளவு அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டே குளியலறை சென்றான். 

சஞ்சய் தேநீர் பருகிக் கொண்டிருக்க அழைப்பு மணி ஒலித்தது. ஐஸக்தான் வந்திருந்தார். உள்ளே அழைத்து அவருக்கும் தேநீர் கொடுக்க சொன்னான் சஞ்சய். 

ஐஸக்கிடம் நலம் விசாரித்த மீரா சமையலறை சென்று விட்டாள். 

“என்ன தம்பி நிஜ புருஷன் பொண்டாட்டியாட்டம் இருக்கீங்க?” என அதிர்ச்சியாக கேட்டார் ஐஸக். 

“அங்கிள்! நாங்க நிஜ ஹஸ்பண்ட்  அண்ட் வைஃப்தான். மீராகிட்ட இப்படி பேசாதீங்க, வருத்த படுவா” என்றான். 

அவர் யோசனையாக அவனை பார்த்தார். 

“கல்யாணம்லாம் விளையாட்டு இல்லைல அங்கிள்? அப்புறம் நீங்க சொல்லுங்க, உங்க பிரதர் இன் லா எப்படி இருக்கார்?” என்றான். 

ஐஸக்கும் விவரம் சொன்னார். இப்போது பரவாயில்லையாம் அவருக்கு. மீரா கொடுத்த தேநீரை பருகியவர் தன் வேலையை பார்க்க சென்று விட்டார். 

பழைய கைப்பேசியையே கடையில் கொடுத்து சரி செய்து வைத்திருந்தார் ஐஸக். இரண்டு தினங்களுக்கு முன்பு வீரராகவன் அழைத்து பேசியிருந்தார். சஞ்சய் வீட்டினருடன் பேசிக் கொண்டிருந்தாலும் எல்லாம் சரியாக போகிறதா என இவர் மூலமாகவும் அறிய நினைத்து பேசியிருந்தார். 

இரண்டு மூன்று நாட்களில் கொல்கத்தா செல்வேன் என்ற ஐஸக் மச்சானுக்கு முடியாமல் போனதையும் கைப்பேசி வாங்கிக் கொள்ள சொல்லி வீரராகவன் கொடுத்த பணத்தை மருத்துவ செலவுக்கு உபயோகித்து விட்டதையும் கூட சொன்னார். 

ஐஸக்கின் மச்சானுக்கு என்ன எனக் கேட்ட வீரராகவன், அவரது வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றுக் கொண்டார். கைப்பேசி வாங்க முன்பு கொடுத்த அளவிலான தொகை அனுப்புவார் எனதான் நினைத்திருந்தார் ஐஸக். அவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனுப்பியிருந்தார் வீரராகவன். 

மச்சானுக்கு முழு வைத்தியத்திற்கும் பணம் செலுத்தி, புதிய கைப்பேசிக்கான பணத்தை பத்திர படுத்திக் கொண்டுதான் இங்கு திரும்பியிருக்கிறார் ஐஸக்.  

இப்போது சஞ்சயின் திருமணத்தை பற்றி வீரராகவனுக்கு சொல்வதா கூடாதா என குழம்பினார். 

முடிவெடுக்க முடியாத போது அதை தள்ளிப் போடுவது சிறந்தது என எண்ணி தற்காலிகமாக அந்த விஷயத்தை ஒதுக்கி வைத்து விட்டார். 

தாமதமாக கிளம்பி பின்னர் பைக்கில் பறந்து செல்வான் என்பதாலேயே முன்னேரமாகவே சஞ்சயை அலுவலகம் புறப்பட செய்து விட்டாள் மீரா. 

சஞ்சய் பைக்கை எடுத்துக் கொண்டு காம்பவுண்ட் வெளியே வர, மீரா மதிய உணவு இருந்த பையை வண்டியில் மாட்டி விட்டு, “மெதுவா போகணும்!” என கண்டிப்போடு சொன்னாள். 

“டிராஃபிக்ல நான் நினைச்சாலும் ஸ்பீடா போக முடியாது மீரா” என்றான் சஞ்சய். 

“டிராஃபிக் பத்தியே பேச வேணாம். எப்பவுமே நிதானமா போகணும்” 

“டன்!” என சொல்லி புறப்பட்டவன் ஐஸக்கை கடக்கும் போது அவரிடமும் தலையசைத்து விடை பெற்றுக் கொண்டே சென்றான். 

இருவரையும் பார்க்க ஐஸக்கிற்கு நிறைவாக இருந்தது. தானாக வீரராகவனுக்கு அழைக்க வேண்டாம், அவர் அழைக்கும் போது அப்போது தோன்றுவதை செய்யலாம் என விட்டு விட்டார் ஐஸக். 

ஆனால் மாலையே அவருக்கு அழைத்து பேசும் சூழல் உருவாகும் என்பதை  எதிர்பார்த்திருக்கவில்லை ஐஸக். 

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய சஞ்சய் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டான். பைரவ் தாதாவை பாருங்கள் என ஐஸக்கிடம் சொல்லி விட்டுத்தான் சென்றான் சஞ்சய். அவனுக்கு பயமில்லை, ஆனால் மீராவை நினைத்து கவலை கொண்டான். 

இந்த முறை சிக்கலாகி விட்டது. பைரவ்வால் ஏதும் செய்ய முடியவில்லை. 

சஞ்சய் லிஃப்டில் வைத்து தாக்கியவன் மந்திரியின் அக்கா மகன். வலுவாக கேமரா ஆதாரம் வேறு. 

பணி முடித்து சஞ்சய்க்கு அழைத்தாள் மீரா. அழைப்பு செல்லவில்லை எனவும் பேருந்திலேயே வீட்டுக்கு வந்து விட்டாள். இவளுக்காகத்தான் காத்திருந்தார் ஐஸக். 

மீராவிடம் எல்லாம் சொல்லி, தாதாவால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை எனவும் தளர்ந்து போய் விட்டாள் அவள். 

“நம்ம தம்பி அந்த பயலை போட்டு அடிச்ச வீடியோவை போரோ பாபுவும் பார்த்திருப்பார் போல. ஏன் இப்படின்னு அவரும் கோவ பட்டார். ‘இவனை காப்பாத்திட்டு இருக்கிறதுதான் என் வேலைன்னு நினைச்சிட்டானா, ஜெயில்ல இருந்து திமிரை குறைச்சுகிட்டு வரட்டும்’னு சொல்லிட்டாரு மா” என அவர் சொல்ல மீராவுக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை. 

“ஐயைய அழுவாதம்மா” என சங்கட பட்டார் ஐஸக். 

“சஞ்சய்க்கு என்னாலதான் எப்பவும் பிரச்சனை” என சொல்லிக் கொண்டே கண்களை துடைத்துக் கொண்டாள். 

“நீயா சஞ்சய் தம்பியை சண்டைக்கு போவ சொன்ன? தெரியாத ஊருல கொஞ்சம் பதிவுசா இருக்க வேணாமா?” எனக் கேட்டார் ஐஸக். 

“ஐயோ அங்கிள், சஞ்சய் அடிச்சவன் நல்லவன் கிடையாது. வெளில சொல்ல முடியாத படி என்கிட்ட மோசமா நடந்துகிட்டான் அவன். அப்போ சஞ்சய்க்கு கோவம் வராதா?” என ஐஸக்கிடம் கோவமாக கேட்டாள். 

ஐஸக்கிற்கு என்னவோ போலாகி விட்டது. ‘பாவம் ரெண்டும் இங்க வந்து படாத பாடு படுதுங்க’ என நினைத்துக் கொண்டார். 

“ஸாரி அங்கிள். உங்கள்ட்ட சத்தமா பேசியிருக்க கூடாது” என்றாள். 

“விடும்மா விடும்மா. உரிமைலதானே பேசின. இப்போ என்ன செய்யன்னுதான் தெரியலை. மால் இருந்த இடத்துல உள்ள ஸ்டேஷன்லதானே கேஸ் கொடுத்திருக்கணும்? இங்க இந்த சௌரப் எதுக்கு அழைச்சிட்டு போய் அவனோட ஸ்டேஷன்ல வச்சிருக்கான்?” என்றார். 

“அந்த இன்ஸ்பெக்டர் அன்னிக்கு என்னை பார்த்த பார்வையே சரி கிடையாது. நைட்டெல்லாம் சஞ்சய் அங்க இருக்க வேணாம். இப்பவே அழைச்சிட்டு வந்திடனும். நான் பைரவ் ஸார்கிட்ட பேசுறேன், கொஞ்சம் துணைக்கு வர்றீங்களா அங்கிள்?” 

“சஞ்சய் தம்பிக்கு ஏதும் ஆக கூடாதுன்னு உன்னை போலவே நினைக்கிறவன்மா நானும். சஞ்சய் தம்பிக்காக எது செய்யவும் கடமை பட்டிருக்கேன். ஹ்ம்ம்… போரோ பாபுகிட்ட இன்னொரு தடவ பேசிப் பார்க்கலாம்” என அவரும் சொல்ல, உடனே மீராவும் புறப்பட்டாள்.