“ப்பா, இந்த அலையன்ஸ் நமக்கு செட்டாகாது ப்பா. வேணாம்..” என்கையில், கண்ணதாசன் முகத்தினில் அப்படியொன்றும் இயல்பான பாவனை இல்லைதான். சொல்லப்போனால் அவனது குரல் கூட, உறுதியாய் எல்லாம் ஒலிக்கவில்லை.
விநாயகமோ, மகன் அப்பெண்ணின் புகைப்படத்தைக் கூட பார்க்காது, வேண்டாம் என்று சொல்லவும், அவனிடமே “பொண்ணு போட்டோ கூட பார்க்காம, வேணாம்னு சொன்னா எப்படி கண்ணா?” என்றார்.
“இந்த பொண்ணோட டீடைல்ஸ், மேட்ரிமோனில இருக்குப்பா. நான் ஆல்ரடி பார்த்துட்டேன்..” என்றவனின் குரல் அடர்ந்து ஒலித்தது.
“அப்படியா நீ பார்த்தியா கண்ணா? பொண்ணு எப்படி இருப்பா? போட்டோ காட்டு..” என்று இடைபுகுந்தார் மகா.
“அட.. அன்னிக்கு அக்காங்க மேட்ரிமோனி பார்த்தப்போ, சில பொண்ணுங்க விபரமெல்லாம் காட்டுனாங்க தானே. அதெல்லாம் நீயுந்தான் பார்த்துட்டு இருந்த. ஆனா இந்தப்பொண்ணு பத்தி ஒண்ணுமே சொல்லல..” என்று மகா பேச, விநாயகமோ மகனின் முகத்தினை இன்னும் கூர்ந்து கவனித்தார்.
ஆண் மனது ஆணுக்குத்தானே தெரியும்..
“பார்த்தேன்.. பூர்வீகம் காரைக்குடின்னு போடவும், விபரம் என்னன்னு படிச்சேன். கவிதாஞ்சலி படிச்சதே ஐஐடி சென்னைல. வேலைப் பாக்குறது பெங்களூருல. முதல் அஞ்சு இடத்துல இருக்க ஒரு பெரிய கன்சர்ன்ல. சம்பளம் என்னைவிட ரொம்பவே அதிகம்.. சோ, இது நமக்கு செட்டாகாது..” எனவும்,
மகா “ஓ!” என்று சொன்னாலும், உள்ளுக்குள்ளே சிறு நிம்மதி.
பொதுவாகவே அவருக்கு விநாயகம் பக்கத்து உறவுகள் மீது அப்படியொன்றும் அபிப்ராயம் இல்லை. கவிதாஞ்சலி எதோ ஒருவகையில் விநாயகத்திற்கு தூரத்திற்கும், ஒரு சுற்று வட்டம் போட்ட உறவாய் வரும் முறைதான். அதிலும் விநாயகத்தின் நண்பர் சிவாவை, எப்போதுமே மகாவிற்கு பிடிக்காது.
இதில், இதைவேறு அவர்தான் வந்து சொன்னார் என்றதும், கேட்டதுமே லேசாய் முகத்தை சுளித்தார் தான். ஆனாலும் நல்ல இடம் என்று விநாயகம் சொல்லவும், மகனே பதில் சொல்லட்டும் என்று இருக்க, இப்போது இத்தனை சங்கதிகளை சொல்லி, கண்ணதாசன் இதை வேண்டாம் என்று சொல்ல, அப்பாடி என்கிற ஆசுவாசம் உள்ளுக்குளே அவருக்கு.
ஆனால் விநாயகமோ “நீ சொல்றது சரிதான். சரி பொண்ணு போட்டோவாது காட்டு. எப்படி இருக்குன்னு பார்ப்போம்…” என்று கேட்க, மகனோ அவனது அலைபேசியில் இருந்த கவிதாஞ்சலியின் புகைப்படத்தை எடுத்துக்காட்டினான்.
மேட்ரிமோனிக்குள் சென்று, படத்தை எடுத்துக்காட்டுவானோ என்று அப்பா எதிர்பார்க்க, அவனோ அவனது அலைபேசி கேலரியில் இருந்து எடுத்துக்காட்ட ‘ஓஹோ..!’ என்று நாடியைத் தேய்த்துக்கொண்டார் விநாயகம்.
மகா வேகமாய் கண்ணதாசனின் அலைபேசியை வாங்கி, கவிதாஞ்சலியின் படத்தினைப் பார்க்க, பார்த்ததும் அழகி என்று சொல்லக்கூடியவள் தானே. இருந்தும் மகன் வேணாம் என்கையில், கொஞ்சம் சுதாரித்து “நல்லாத்தான் இருக்கு பொண்ணு. ஆனா என்ன கண்ணனுக்கு வேணாம்னா, நம்ம வேற பாப்போம் மாமா..” என்று முடிக்க, அடுத்து அலைபேசி விநாயகத்திடம் சென்றது.
படத்தைப் பார்த்ததுமே “இந்த பொண்ணுக்கு என்னடா குறைச்சல்?” என்று மகனைப் பார்க்க,
“எதுவுமே குறைவில்லப்பா.. ஆனா அவங்க எல்லாம் ரொம்பவே ஹை கிளாஸ்.. நம்மளோட லைப் ஸ்டைல்க்கு ஒத்து வராது.” என்றான் பிசிறில்லாமல்.
“ஆமா மாமா. அதுவும் பொண்ணு பெங்களூருல வேலை செய்யுது..” என்று மகா என்னவோ சொல்ல வர,
“ம்மா..” என்றவனின் பார்வை அவர்மீது அழுத்தமாய் விழ,
“என்ன கண்ணா?!” என்றார், மகன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாமல்.
“நான் வேணும் சொன்னாலும், வேணாம்னு சொன்னாலும், ஒருத்தரைப்பத்தி சரியா கூட தெரியாம, அவங்க மேல கருத்து சொல்றது தப்பு…” என்று கண்ணதாசன் ஆணித்தரமாய் பேச, விநாயகம் மகனது மனதை முற்றும் முடிவுமாய் கண்டுவிட்டார்.
மகனுக்கு இப்பெண்ணை பிடித்திருக்கிறது. ஆனாலும் வித்தியாச வேறுபாடுகள் கண்டு, வாழ்வு முறைகளை மனதில் நிறுத்தி, வேண்டாம் என்கிறான். மகனை தாங்கள் நல்லவிதமாய் வளர்த்திருக்கிறோம் என்று அப்பாவாய் பெருமைகொண்டார் அந்நேரம். அவன் இடத்தில் யாராய் இருந்தாலும் இதனை சிந்திக்கவே செய்வர் தானே.
ஆனாலும் அப்பெண்ணை ஒரு வார்த்தை சொல்லக் கூட அனுமதிக்காத மகனின் பேச்சு, அவரை இன்னும் ஆழமாய் சிந்திக்க வைக்க,
விநாயகமோ “கல்யாணத்துக்கு அப்புறம், இந்த பொண்ணு வேலையை விட்டாலும் விற்றுமாம். இல்லைன்னா, எங்க அமையுதோ, அங்க இடத்துக்கு ஏத்தது போல வேலை தேடிக்குமாம்..“ என,
“யாரு?! அந்த சிவா சொன்னாப்டியா? அந்தாளு வாய்ல வர்றது அத்தனையும் பொய். பொண்ணு வீடு நல்ல வசதி, எப்படியாவது முடிச்சுக் குடுத்தா நல்ல காசு பார்க்கலாம்னு கண்டதையும் சொல்லிருப்பாப்டி. சம்பளமே லச்சத்துக்கு மேல வாங்குற ஒருத்தி, கல்யாணம் பண்ணிட்டு வேலையை விட்டுட்டு வந்து, இங்க உக்காருவாளா? “ என்று மகாலட்சுமி ஆரம்பித்துவிட்டார்.
கண்ணாதாசனுக்கோ, அப்பா கவிதாஞ்சலியையே வரனாய் கொண்டு வந்தது ஒருபக்கம் சந்தோசமாகவும் இருந்தது. இன்னொரு புறம், மனம் அவளின்பால் சலனப்பட்டும் கூட, தான் வேண்டாம் என்று சொல்லும் சூழலில் இருப்பது கண்டு, சுனங்கியும் போனது.
அவனளவில் அவனுக்கு எல்லாமே நிறைவு தான். ஆனால் அவளோடு ஒப்பிடுகையில், படிப்பையும், பர்ஷ்னாலிட்டியை தவிர, மற்றது எல்லாமே குறைவு தானே.
மகனது பேச்சிற்கும், மனைவியினது பேச்சிற்கும் விநாயகம் உடனே எதிர்வினை ஆற்றவில்லை. சிவா சொன்னதற்காக மட்டும், இதனை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது இல்லையா. விசாரிப்போம், பின் முடிவு செய்வோம் என்று எண்ணியவர் “சரி பாப்போம்..” என்று எழுந்துகொண்டார்.
மகாவிற்கு இப்போது இன்னும் பெறும் நிம்மதி. எங்கே இதனை மேற்கொண்டு பார்க்கலாம் என்று கணவர் சொல்வாரோ என்று. அவரைப் பொருத்தமட்டில், அவருக்கு சம்பந்தியாய் வரும் ஆட்கள், இவர்களோடு இவர்களுக்கு இணையாய் பழகும் ஆட்களாய் இருக்கவேண்டும்.
இங்கே பார்த்தால், பாஸ்கரும் தாரணியும் உயர் பதவியில் இருக்கிறார்கள். அவர்களின் படிப்பு, சம்பாத்தியம் எல்லாமே அவர்களை தூர தள்ளி வைக்கவே எண்ணியது மகாவிற்கு. அடுத்ததோ அண்ணனுக்கு காதல் திருமணம். இதெல்லாம் நமக்கு ஒத்துவராது என்று முடிவே செய்துவிட்டார்.
ஆனால் விநாயகமோ, வீட்டினர் தெரியாமல் கண்ணதாசனுக்கும், கவிதாஞ்சலிக்கும் ஜாதகப்பொருத்தம் பார்த்தார். இருவருக்குமே அனைத்தும் நன்றாய் இருந்தது. என்ன திருமணத்தை மட்டும் ஒரு வருடம் தாண்டி வைக்கச் சொன்னார் ஜோசியர்.
அதை விநாயகம் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. ஜாதகம் சரி என்றானதும், அடுத்து ஊரினில், அவர் பக்கத்து சொந்த பந்தத்தில் அரசல் புரசலாய் விசாரித்துப் பார்க்க, அனைவருமே பாஸ்கர் பற்றியும், தாரணி பற்றியும் நல்லவிதமாய் தான் சொன்னார்கள்.
அத்தனை ஏன் விநாயகத்தின் சொந்த சித்தப்பா மகன் குமரன் கூட “எனக்கு பாஸ்கர் மச்சான, தனிப்பட்ட முறைல நல்லா தெரியும் ண்ணே. பந்தா பதவிசு இல்லாத ஆளுங்க. அத்தனை வசதி இருக்கு. ஆனா பழகுறது எளிமையா பழகுவாங்க. அந்தக்காவும் அப்படித்தான். நிறைகுடம் தளும்பாதுங்குற மாதிரி தான் இருப்பாங்க. நல்ல குடும்பம் நல்ல ஆளுங்க. அந்த பிள்ளைகளும் அப்படித்தான்.
பையனுக்கு லவ் மேரேஜ். சென்னைல வச்சாட்டாங்க. கல்யாணம் பண்ணி தனியாவும் வச்சுட்டாங்க. இப்போ பொண்ண, தெரிஞ்ச இடத்துல குடுத்தா சந்தோசம்னு நினைக்கிறாங்க. பாஸ்கர் மச்சான் குடும்பத்தோட இப்போ ஊர்ல தானே இருக்காரு.. நாளைக்கு கல்யாணத்துக்கு வருவாங்க.. ” என்று சொல்ல,
“அப்படியா குமரா.. பொண்ணு எப்படி?!” என்று கேட்டார் அடுத்து.
“அது தங்கம் ண்ணே. இன்னிக்கு காலைல தான் பொன்னம்மா பாட்டி வீட்டுக்கு போயிருந்தேன்.. மகன், மருமக , மகன்னு எல்லாரையும் கூட்டி வச்சு தாரணி அக்கா அறிமுகம் செஞ்சு வச்சாங்க. பொண்ணு ஹீரோயின் கணக்கா இருக்கு.. பேசி பாரு.. நம்ம கண்ணனுக்கு என்ன குறைச்சல்..” என்று உரிமையாய் சொன்னார் குமரன்.
“எல்லாம் சரிதான் குமரா. அந்த பொண்ணு பெரிய வேலை, சம்பளம் அதிகம்னு ஒரு யோசனை..” என,
“அட அதெல்லாம் இந்த காலத்துல பார்த்தா முடியுமா? எல்லாம் பொருந்தி வருதா, கட்டிக்க போற ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கான்னு பார்க்கணும். அதுக்கப்புறம் அவங்க வாழ்கையை பத்தி அவங்க முடிவு பண்ணட்டும்..” என, இதுவும் சரியாய் தான் இருந்தது விநாயகத்திற்கு.
“ம்ம் சரிப்பா.. பாப்போம்..” என்று முடித்துக்கொண்டார்.
ஆனால் மனதோ, ஏன் முயன்று பார்க்கக் கூடாது என்று யோசித்தது. முயற்சியே செய்யாமல், வேண்டாம் என்று ஒதுங்கிப் போவதில் என்ன இருக்கப் போகிறது என்று நினைத்தவர், அன்றைய இரவில் மனைவி மற்றும் மகனிடம் மனதில் இருப்பதைப் பகிர, கண்ணதாசனோ “ப்பா..!” என்று கொஞ்சம் அதிர்ச்சியாய் பார்த்தான்.
இருவருக்கும் ஜாதகம் பொருந்தி வருகிறது என்பதனைக் கேட்கவுமே, அடி நெஞ்சில் ஒரு மெல்லிய தித்திப்பை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது. எங்கோ ஒரு இடுக்கினில் ஒரு சிறு ஆசுவாசம் எட்டிப்பார்ப்பது போலவும் இருந்தத் . இருந்தும் என்ன செய்ய?!