உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் – சசிரேகா

முன்னுரை

ஆத்மார்த்தமான காதல் என பலரும் சொல்லி தங்களின் காதலை பெருமைப்படுத்துவார்கள் ஆனால்  இங்கு  ஒருவன் ஆத்மாவுடனே காதல்  புரிகிறான் தன் காதலுக்காக அவன் என்னென்ன செய்கிறான்  என்பதே இக்கதையாகும்.

 

பாகம் -1

ஏற்காடு

”விக்ராந்த் என்ன முடிவு எடுத்திருக்க” என ராகுல் கேட்க அதற்கு விக்ராந்தோ

”ஒரே முடிவுதான், அதைதான் அன்னிக்கே சொல்லிட்டேனே அடிக்கடி முடிவுகளை மாத்தற பழக்கம் எனக்குக் கிடையாது நண்பா” என்றான்,

இவர்கள் இருவரும் ஒரு பார்ட்டி ஹாலில் அவர்களின் தோழியின் பிறந்த நாளுக்காக வந்திருந்தார்கள்.

”நீ செய்றது அநியாயம், கொஞ்சம் யோசிச்சிப் பாரு, இது அவசியம் தேவையா”

”எனக்குத் தேவைதான்”

”அப்படி என்ன அந்த இடத்து மேல அவ்ளோ விருப்பம் உனக்கு”

”அது எங்க பூர்வீக சொத்து, நடுவில அது கைநழுவி போயிடுச்சி, இப்பதான் திரும்ப கிடைச்சிருக்கு, அதை மறுபடியும் என்னால இழக்க முடியாது”

”ஆனா அந்த இடத்தை பத்தி மக்கள் பேசிக்கறது உன் காதுல விழுதா இல்லையா”

”அதையெல்லாம் நான் நம்பறதாயில்லை” என விக்ராந்த் சொல்லும் போதே கீர்த்தி வந்தாள்

”ஏய் விக்ராந்த், தாங்க்யூ ஸோ மச், நீ வருவேன்னு நான் நினைச்சேப் பார்க்கலை, எனக்காகவே அப்ராட்ல இருந்து வந்திருக்க, தாங்யூ” என சொல்லி அவனை கட்டியணைக்க அவனும் ஒரு நொடி அவளை அணைத்து பின் அவளை தள்ளி நிப்பாட்டியவன்

”இட்ஸ் ஓகே, போ போய் உன் பர்த்டேவை என்ஜாய் பண்ணு, நான் கிளம்பறேன்” என விக்ராந்த் சொல்ல அதற்கு அவளோ

”என்ன கிளம்பறியா, சொல்லப்போனா நீ வந்ததுக்காகதான் இந்த பார்ட்டியையே நான் அரேன்ஜ்டு பண்ணேன் தெரியுமா, ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் என்கூட இரு ப்ளீஸ்” என கெஞ்ச அவனோ

”இல்லை இப்பவே ரொம்ப நேரமாயிடுச்சி” என விக்ராந்த் சொல்ல அவள் கேட்கவில்லை

அவனது கையை பற்றி இழுத்துக் கொண்டு சென்று அவனுடன் நடனமாட ஆரம்பிக்க விக்ராந்தோ ராகுலைப் பார்த்து என்னடா இது என்பது போல் சைகை செய்ய ராகுலோ சிரிப்புடன் என்ஜாய் என சைகையில் சொல்ல தலையில் அடித்துக் கொண்ட விக்ராந்த் பேருக்கு அவளுடன் அப்படி இப்படி என நடனமாடிவிட்டு

”ஓகே கீர்த்தி, எனக்கு டைம் இல்லை, இப்பவே டயர்டா இருக்கு நான் கிளம்பனும் பை பை”

”என்னப்பா அதுக்குள்ள கிளம்பனுமா” என வருந்தினாள் கீர்த்தி

”உனக்காக இங்க நிறைய பேர் வந்திருக்காங்க, அவங்களோட நீ பார்ட்டியை கன்டினியூ பண்ணு, இப்ப நான் கிளம்பறேன்” என சொல்லியவன் ராகுலைப் பார்த்து வா என்பது போல் கையை அசைக்க அவனும் விக்ராந்துடன் இணைந்துக் கொள்ள கீர்த்தியோ

”ராகுல் நீயும் கிளம்பறியா”

”ஆமாம்”

”இது அநியாயம்”

”இவ்ளோ நேரம் நாங்க இங்க இருந்ததே பெரிசு”

”என்னை விட அப்படியென்ன வேலை உங்களுக்கு”

”முக்கியமான வேலை அதான்”

”அப்படி என்ன வேலை என்கிட்ட சொல்லக்கூடாதா”

”சொல்லக்கூடாதுன்னு எல்லாம் இல்லை, விக்ராந்த் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு காட்டேஜ் வாங்கினான்ல“

”ஆமாம்”

”அந்த இடத்தை போய் பார்க்கனும் அவ்ளோதான்” என இயல்பாகச் சொல்ல அதற்கு கீர்த்தி விக்ராந்திடம்

“அந்த இடமா சொல்ல சொல்லக் கேட்காம அந்த இடத்தை போய் வாங்கியிருக்க, அது எவ்ளோ பயங்கரமான இடம் தெரியுமா” என பயமுறுத்தும் தோரணையில் பேசி வைத்தாள் அதைக்கேட்ட ராகுலோ

”என்ன உளர்ற” என்றான்

”நான் உளறல, அந்த இடத்தில ஏகப்பட்ட அமானுஷ்யங்கள் இருக்கு, ஊர் மக்கள் சொல்லி நான் கேட்டிருக்கேன், பேய்கள் இருக்காம்” என பயத்துடன் சொல்ல விக்ராந்த் பயப்படுவது போல நடித்து பின் கலகலவென சிரிக்க ராகுலோ

”கீர்த்தி இந்த விசயம்லாம் அவனுக்கு முன்னாடியே தெரியும், தெரிஞ்சேதான் அந்த இடத்தை வாங்கி வைச்சிருக்கான்”

”உனக்கு என்ன மென்டலா விக்ராந்த், தெரிஞ்சே யாராவது அந்த பேய் வீட்டை வாங்குவாங்களா” என சொல்ல அதற்கு விக்ராந்தோ அவளிடம்

”லிஸன் கீர்த்தி, நான் ஒண்ணும் மென்டல் இல்லை, அந்த வீடு எங்களுக்கு சொந்தமானது, பூர்வீக சொத்து நடுவில அது கைநழுவி போயிடுச்சி, இப்ப விலைக்கு வரவும் வாங்கிட்டேன், சொல்லப்போனா விலை குறைவா அந்த இடம் அமையும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கலை தெரியுமா”

”அந்த வீட்ல பல மர்மங்கள் இருக்குடா, நிறைய பேர் இறந்துப் போயிருக்காங்க, அந்த இடத்தை சுத்தி யாரும் நடமாடமாட்டாங்க, அந்த வீட்டுக்குள்ள நிறைய பேய்கள் இருக்கு, யாராவது உள்ளப் போனா அந்த பேய்கள் தன்னோட பசிக்காக வர்றவங்களை சாப்பிட்டுடுமாம்” என கீர்த்தி பயத்துடன் சொல்ல

”அப்படியா, பேயால சாப்பிட முடியுமா, அதையும் பார்க்கிறேன், இன்னிக்கு நானும் ராகுலும் அங்க போறோம், எங்களை அந்த பேய் சாப்பிடுதான்னு பார்க்கறோம்”

”விளையாடாதீங்க”

”நாங்க விளையாடலை இப்ப நாங்க கிளம்பறோம்”

”நானும் வரேன்” என்றாள் கீர்த்தி

”எதுக்கு பேய்க்கு நீ டின்னர் ஆகப் போறியா” என ராகுல் சொல்லி சிரிக்க கீர்த்தியோ எரிச்சலானாள்

”கமான் ராகுல், உங்களுக்கு ஏதாவது ஆச்சின்னா காப்பாத்த யாராவது ஒருத்தர் வேணும்ல”

”அடடே நீயே பயத்தில நடுங்கற, நீ எங்களை காப்பாத்தப் போறியா, ஸில்லி  கேர்ள் போ போய் உன் பர்த்டேவை கொண்டாடு”

”கரெக்ட் கீர்த்தி, பர்த்டே அன்னிக்கே உனக்கு டெத்டே வந்துடப் போகுது, எங்களைப் பத்தி நீ கவலைப்படாத, நாங்க நாளைக்கு வந்து உன்னைப் பார்க்கிறோம்” என விக்ராந்த் சொல்ல

”என்னவோ போங்க ஆனா ஏதாவதுன்னா கண்டிப்பா எனக்கு தகவல் சொல்லுங்க, நான் உங்களுக்கு உதவி செய்ய ஆளுங்களோட வரேன்” என்றாள் கீர்த்தி அதற்கு விக்ராந்த்

”அதுக்கெல்லாம் அவசியம் இருக்காது, ஓகே பர்த்டே பேபி என்ஜாய் பை பை” என சொல்லிவிட்டு விக்ராந்த் ராகுலுடன் பார்ட்டியை விட்டு வெளியேறினான்.

வெளியே பார்க்கிங் ஏரியாவில் இருந்த அவனது விலையான காரில் ஏறியவன் ராகுலைப் பார்த்து

”ராகுல் உனக்கு பயமா இருந்தா நீ என்கூட வரவேணாம்”

”எனக்கு எந்த பயமும் இல்லை, மக்கள் ஏதோ புரளி கிளப்பறாங்க அவ்ளோதான், நீயிருக்கறப்ப எனக்கென்ன ஆபத்து வந்துடப்போகுது, நீ என்னை காப்பாத்த மாட்டியா நண்பா“

”அந்தளவுக்கு சீன் அங்க இருக்காது கிளம்பலாமா“

”ஓ எஸ்” என ராகுல் உற்சாகமாகச் சொல்ல விக்ராந்தும் உற்சாகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான்.

ஏற்காட்டிற்க்குள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மண்பாதையில் விக்ராந்தின் கார் சென்றுக் கொண்டிருந்தது

பாதை சரியில்லாத காரணத்தால் வண்டி குலுங்கியபடியே செல்ல இருவருமே கஷ்டப்பட்டார்கள்

”விக்ராந்த் முதல்ல இந்த ரோடை சரியாக்கனும், வண்டியில உட்கார முடியலை, பார்ட்டியில குடிச்ச சரக்கெல்லாம் தொண்டைக்கு வருதுடா” என்றான் ராகுல்

”டேய் டேய் வாந்தி எடுத்துடாதடா, நான் வேணும்னா வண்டியை ஓரம் கட்டறேன் வெயிட்” என சொல்லிவிட்டு வண்டியை ஓரம் கட்டி நிப்பாட்ட ராகுல் வண்டியை விட்டு இறங்கி ஓரிடத்தில் நின்று வாந்தி எடுக்கலானான்.

விக்ராந்தோ காத்தாட அந்த பாதையையும் சுற்றியிருந்த பகுதியையும் வேடிக்கைப் பார்த்தபடியே சிகரெட் ஒன்றை பற்ற வைத்து புகைத்துக் கொண்டிருந்தான், இன்னும் சிறிது தூரம் சென்றால் அவன் வாங்கிய காட்டேஜ் வரும், அங்குதான் அமானுஷ்யமான விசயங்கள் இருப்பதாக வதந்தி, அந்த வதந்தியை பொய்யாக்கவே கிளம்பி வந்தான், அப்படி அங்கு ஏதும் இல்லையென்றால் அடிக்கடி அந்த காட்டேஜ்க்கு வந்து இளைப்பாறலாம், என்ன ஆனாலும் சரி பூர்வீக சொத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது, அந்த காட்டேஜ் சுற்றியுள்ள இடங்கள் கூட அதற்கு சொந்தமானது, சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அந்த சொத்து இப்போது விக்ராந்த் கையில் உள்ளது.

ராகுலோ வாந்தி எடுத்து முடித்து விக்ராந்திடம் வந்தான்

”இன்னும் எவ்ளோ தூரம்டா” என சோர்ந்துப் போய் கேட்க விக்ராந்தோ தூரத்தில் ஒரு இடத்தை கைகாட்டி

”அதுதான் நம்ம காட்டேஜ்” என காட்ட ராகுலும் பார்த்தான், சற்று பயங்காரமாக இருந்தது

”என்னடா இது பகல் வேளையில கூட இப்படி அமைதியா இருக்கு, ஒருவேளை கீர்த்தி சொன்னது போல அந்த காட்டேஜ்ல அமானுஷ்யங்கள் இருக்குமா என்ன“

”சே சே இருக்காது, ஊருக்கு ஒதுக்குப்புறமா தன்னந்தனியா இப்படி ஒரு வீடு இருக்கறதால மக்கள் அப்படி நினைக்கறாங்க, இன்னும் சொல்லனும்னா தப்பான வேலை செய்றவங்களுக்கு இந்த மாதிரி இடங்கள் ரொம்ப பிடிக்கும், ஏன்னா அவங்களை யாராலயும் பிடிக்க முடியாதுல்ல, அதோட காட்டேஜூம் சரி அதை சுத்தியிருக்கற இடமும் சரி எவ்ளோ பரப்பளவு தெரியுமா, சும்மா விடுவாங்களா மக்கள், அதை இதை சொல்லி அவங்களே பயன்படுத்த நினைக்கறாங்க போல, வேற ஒண்ணும் இல்லை“

”ரொம்ப வருஷம் கழிச்சி வந்திருக்க, காட்டேஜ் சுத்தமா இருக்குமா”

”காட்டேஜ் சுத்தம் செய்ய ஆட்களை அனுப்பி வைச்சேன், அவங்களும் சுத்தம் செய்துட்டாங்க ஒரு பிரச்சனையும் இல்லை“

”அட பரவாயில்லையே சுத்தம் செய்யப் போன ஆட்களை பேய்கள் எதுவும் செய்யலை போல, அதுவே போதுமே மக்கள் சொல்றது எல்லாம் வதந்தின்னு நிரூபிக்க”

”அவசரப்படாத ராகுல், சுத்தம் செய்ய 4 பேர் போனாங்க அதுல 3 பேர் என்ன ஆனாங்கன்னு தெரியலை, ஒருத்தன் மட்டும்தான் வேலை முடிஞ்சதுன்னு சொன்னான், அப்ப அவனைப் பார்க்கனுமே ஏதோ பைத்தியக்காரன் போல இருந்தான், நான்கூட விசாரிச்சேன் நீ ஏன் இப்படியிருக்கன்னு, அதுக்கு அவன் சொன்னான், அந்த இடத்தில என்னமோ இருக்கு ஆபத்து ஆபத்துன்னு மட்டும் சொல்லிட்டு ஓடிப்போயிட்டான்”

”என்னடா சொல்ற நிஜமாவா”

”ஆமாம்”

”அவன் சொல்றது உண்மையா இருக்குமா” என சற்று பீதியுடனே கேட்டான் ராகுல்

”வாய்ப்பில்லை, ஏன்னா சுத்தம் செய்ய அந்த ஏரியால இருக்கற ஆளை பிடிச்சேன், ஒருவேளை இந்த புரளிகளை கேட்டு பயத்தில இருந்திருப்பான், எதையாவது பார்த்து அவனுக்கு அவனே பயந்திருப்பான் அவ்ளோதான்”

”அப்ப மீதி 3 பேரு என்ன ஆனாங்க”

”அவங்களுக்கும் ஒண்ணும் ஆயிருக்காது ராகுல், வேணும்னே நம்மளை விரட்டப் பார்க்கறாங்க, நீ ரிலாக்ஸா இரு, போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு ஒரு நாள் நைட் தங்கிட்டு வந்துடலாம் ஓகேவா” என சொல்ல ராகுலும் ஒருவாறாக சரியென்றான்.

மீண்டும் காரில் பயணம், வழி முழுவதும் போக போக மோசமாகிக் கொண்டே இருந்தது, காட்டேஜ் சுற்றியிருந்த இடத்திற்கு வேலி அமைத்திருந்தார்கள், அதில் இரும்பு கேட் வேறு, கேட் முன் வண்டி நின்றதும் ராகுல் வண்டியை விட்டு இறங்கி கஷ்டப்பட்டு கேட்டை திறந்துவிட்டான்.

”விக்ராந்த் கேட் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குடா திறக்கவே கஷ்டமாயிருக்கு”  என சொல்லிக் கொண்டிருக்க வண்டி உள்ளே நுழைய மீண்டும் ராகுலே கேட்டை மூடிவிட்டு வண்டியில் ஏறினான்.