அருணாச்சலம் தூக்கி எறிந்த வேகத்தில் அந்த அழகான பீங்கான் கப் சுவரில் பட்டு சில்லுச்சில்லாக நொறுங்கி தரையில் விழுந்தது. பார்த்துப் பார்த்து குமரனுக்காக துளசி போட்ட தேனீர் சுவரை அலங்கோலமாக்கியபடி வடிந்து கொண்டிருந்தது.
“ராஸ்கல், எவ்வளவு திமிர் இருந்தா வீட்டுக்கு வருவான். எல்லாம் உன்னால தான் டி.” இனி என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில் நின்றிருந்த தங்கையின் முகவாயைப் பற்றி கோபமாக தள்ளியவன், கைகளை ஆங்காரமாக வீசியபடி ஹாலை நோக்கி நகர்ந்தான்.
“அருண், வீட்டுக்கு எதிரியே வந்தாக்கூட அவமானப்படுத்தி அனுப்பிடக்கூடாது. வந்துருக்குறது நம்ம குமரன். வீடு கிரகப்பிரவேசத்துக்கு எங்களைக் கூப்பிட வந்திருக்கான், இப்போ கிளம்பிடுவான். தயவுசெய்து நீ அவனை எதுவும் சொல்லிடாத.” மகனின் கையைப் பிடித்து பின்னுக்கு இழுத்தபடியே கெஞ்சினார் சுலோச்சனா.
“எதே…வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு கூப்பிட வந்தானா? அந்த பரதேசி கூப்பிட்டா, நீங்க போய்டுவீங்களோ?” தாயின் கையை முரட்டுத்தனமாக உதறியபடியே ஹாலுக்கு சென்றான்.
ஹாலில் உக்கார்ந்திருந்த இருவரின் கண்களிலிருந்தும் வீட்டுக்குள் நடந்தவை எதுவும் தப்பவில்லை. பிரச்சினை என்றதும் பதட்டத்தோடு காவேரி எழும்ப, “எதுக்கு டென்ஷன் ஆகுற? உக்காரு.” என்று அவளை அமைதிப்படுத்தி உட்கார வைத்திருந்தான் குமரன்.
“ஏய்… யாரு வீட்டுல வந்து யாரு உக்காந்திருக்கிறது? வீட்டைவிட்டு வெளியப் போடா.” கழுத்தெலும்பு புடைக்க குமரனுக்கு முன்னே வந்து நின்று கத்தினான் அருணாச்சலம்.
“எதுக்கு இப்போ என்னைப் பாத்து பயப்படுற அருண்? உன் தங்கச்சியை பொண்ணு கேட்டுருவேன்னா? பயப்படாத, எனக்கு இப்போ அந்த ஐடியா எதுவும் இல்ல.” நிதானமாக காலுக்கு மேல் காலை தூக்கிப் போட்டுகொண்டே பேசிய குமரனின் இதழ்கள் கேலியாக வளைந்தன.
“எதே…இப்போ ஐடியா இல்லையா? அப்போ ஐடியா வந்தா கேப்பியோ?” வார்த்தைகள் ஜெட் வேகத்தில் தெறித்து வந்து விழுந்தது அருணாச்சலத்திடமிருந்து.
“ஏன்? கேட்டா என்ன பண்ணுவ?” சவாலாக புருவத்தை உயர்த்தினான் குமரன்.
“கேளு… கேட்டுப்பாரு. அப்போ தெரியும் இந்த அருண் என்ன பண்ணுறான்னு.” குமரனின் பேச்சும் செய்கையும் வெறியேற்ற வலதுகை முஷ்டியை மடக்கி காற்றில் ஓங்கி குத்தினான் அருண்.
சற்றும் யோசிக்கவில்லை குமரன். இருக்கையிலிருந்து எழும்பியவன், சுலோச்சனாவுக்கு அருகே வந்து அவர் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு, “காவேரி ம்மா, உங்க மூத்த பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக்குடுங்க.” கேட்டே விட்டான்.
இப்படி குமரன் கேட்டுவிடுவான் என்று கற்பனைக்கூட செய்திராத சுலோச்சனா நிலைகுலைந்து போனார் என்று தான் சொல்ல வேண்டும். சற்று முன்னர் முடிந்ததை தொடங்க முடியுமா என்று பேதலித்த மனம், இப்போது பதில் சொல்ல முடியாமல் திணறியது.
என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் மகனின் முகத்தை முகத்தை பார்த்தபடி அவர் நிற்க, எனக்கு பதில் சொல் என்பது போல பிடித்த அவர் கைகளை விடாமலேயே நின்றிருந்தான் குமரன்.
“எதுக்கு பயப்படுறீங்க ம்மா? சரின்னு சொல்லுங்க.” தாயின் மனதை நொடியில் படித்திருந்த இளையவள் காவேரி தான் குரல் கொடுத்தது.
அவன் கையை எட்டிப்பிடித்து தடுத்து நிறுத்தியிருந்த குமரன், “ஏற்கனவே காவேரியை நீ அடிச்சியா?” என்றான் பற்களைக் கடித்தபடி. அவன் பார்வையோ எதிரில் நின்றிருந்த காவேரியை அதிருப்தியாக பார்த்து வைத்தது.
தன் கையைப்பிடித்து குமரன் தடுத்ததை அவமானமாகக் கருதிய அருண், “ஆமான்னு சொன்னா என்னடா செய்ய முடியும் உன்னால?” நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஆங்காரமாக கேட்டான்.
“ம்ம்… உன் மூஞ்சு மொகரையெல்லாம், நான் பேத்துடுவேன்.” கண் இமைக்கும் நேரத்திற்குள் அருணாச்சலத்தின் சட்டையை கொத்தாக பற்றி தன்னருகே இழுத்திருந்த குமரன், நேருக்கு நேராக அவன் கண்களைப் பார்த்தபடி சொன்னான். இருவரின் பார்வையும் கூர்மையான கத்தி முனைகள் போல ஒன்றோடொன்று உரசிக்கொண்டன.
குமரன் தன் கையைப் பிடித்து தடுத்ததையே அவமானமாக கருதியவன், சட்டையைக் கொத்தாக பிடித்து இழுத்தால் விட்டு விடுவானா என்ன?
“டேய்… என் வீட்டுல வந்து எம்மேலயே கை வைப்பியாடா நீ? உன்ன… என்ன செய்யிறேன் பாரு.” குமரனின் நெஞ்சில் கை வைத்து தள்ளி தன் சட்டையை விடுவித்துக் கொண்டவனின் கண்கள் அவசர அவசரமாக ஹாலை அலசியது.
அவன் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும் மேஜைமீது சிறிய தங்கை உபயோகப்படுத்திவிட்டு வைத்திருந்த ஸ்கிப்பிங் கயிறு கண்களில் விழுந்தது. பாய்ந்து சென்று அதைக் கையிலெடுத்தவன், அடிப்பதற்கு ஏதுவாக கயிற்றின் நுனிப்பகுதியைக் கையில் சுற்றியபடியே,
“வாடா… இப்போ வாடா, வந்து என் சட்டையில கை வை பாக்கலாம்.” என்றபடியே குமரனை நோக்கி நகர்ந்தான்.
சட்டென்று சூழ்நிலை மிகவும் கடுமையானதாக மாறிப்போக, பெண்கள் மூவரும் பதறிப்போனார்கள்.
“அருண்… படிச்சவன் தானே நீ? எதுக்கு இப்பிடி அநாகரீகமா நடந்துக்கற? அவன் என்ன கொலையா பண்ணிட்டான்? உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க நேர்மையா கேட்கத்தானே செய்யுறான். முடியும் முடியாதுன்னு சொல்லுறதை விட்டுட்டு இது என்ன காட்டுமிராண்டி போல. கீழப்போடு அதை.” வாழ்க்கையில் முதன்முறையாக மகனை அழுத்தம் திருத்தமாக கண்டித்திருந்தார் சுலோச்சனா.
“இவனுக்கு எங்கிட்ட பொண்ணு கேக்கவே தகுதி இல்லைன்னு சொல்லுறேன், இதுல அவனுக்கு நான் பதில் வேற சொல்லணுமோ? ஒரு வீட்டை கட்டிட்டா என்னவோ பெரிய புடுங்கின்னு நினைப்பு. நீங்க சொன்ன மாதிரி நான் காட்டுமிராண்டி ஆகுறதுக்கு முன்னாடி அவனை மூடிகிட்டு வெளியப் போகச் சொல்லுங்க.” ஆணவத்தின் உச்சியில் நின்று கொண்டு தாயிடம் இரைந்தான்.
“இல்ல அருண், நான் துளசியை குமரனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” பளீரென்று சொல்லிவிட்டார் சுலோச்சனா.
இதுவரையிலும் மகனை எதிர்த்துக்கொண்டு முடிவு எதையும் எடுத்து பழகியிராத அந்த பெண்மணியின் மனதில், மகனைக் குறித்த பயம் இருக்கத்தான் செய்தது. ஆனால் மகளின் வாழ்க்கை, துணிந்து அவரை முடிவு எடுக்க தூண்டியிருந்தது.
“என்ன சொன்னீங்க? என்ன சொன்னீங்க? முடிவெடுத்துட்டீங்களா? அதெப்படி நீங்களே எடுக்க முடியும்? அப்புறம் இந்த வீட்டுல ஆம்பிள்ளைன்னு நான் எதுக்கு இருக்குறேன்? என்னோட சம்மதம் இல்லாம நீங்க எந்த முடிவும் எடுக்க முடியாது. அதை மொதல்ல ஞாபகம் வச்சிக்கோங்க.” இப்போது வரிந்துகட்டிக்கொண்டு தாயிடம் சண்டைக்கு வந்தான் அருண்.
‘என் மகள் வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை என்னைத்தவிர வேறு யாருக்கு உண்டு.’ அந்த பெண்மணியால் இப்படி திரும்ப கேட்டிருக்க முடியும். ஆனால் வார்த்தைகளால் மகனை அலட்சியப்படுத்த முயலாமல்,
“கொஞ்சம் அமைதியா இரு அருண். நாம உக்காந்து பேசலாம்.” என்று சமாதானப்படுத்த முயன்றவர்,
“குமரன், நீ உன் பெரியப்பா குடும்பத்தை கூட்டிட்டு வா ப்பா. நாம கல்யாணத்தை பேசி முடிவு பண்ணிடலாம்.” எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காமல் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்தார்.
தாயின் வார்த்தைகளில் அவர் மகனுக்கு உடம்பெல்லாம் திகுதிகுவென எரிந்தது.
“ச்சீ…நம்ம வீட்டுல வேலை செய்த வேலைக்காரன் குடும்பத்தோட சம்மந்தம் வச்சிக்கிறேன்னு சொல்லுறீங்களே, உங்களுக்கு அசிங்கமா இல்ல?” வார்த்தைகளை விஷமாக கக்கியதோடு முகத்தை அசூசையாக சுருக்க வேறு செய்தான்.
“மறுபடியும் மறுபடியும் வார்த்தைகளை விடாத அருண். துளசியை குமரனுக்கு கல்யாணம் செய்து குடுக்கிறதா முடிவு பண்ணிட்டேன். இனிமே இதுல இருந்து நான் பின்வாங்குறதா இல்லை.” உறுதியாகச் சொன்னார்.
“நீங்க சொன்னா, நான் ஒத்துக்கணுமா? என்னை மீறி இந்த கல்யாணம் எப்படி நடங்குதுன்னு நானும் பாக்குறேன்.” தாயிடம் சவால் விட்டவன்,
“ஏய், என் சம்மதம் இல்லாம நீ இவனை கல்யாணம் பண்ணிக்குவியா?” நடப்பது அனைத்தும் கனவா நனவா என்று பிரித்தறிய முடியாத நிலையில் நின்றிருந்த துளசியிடம் கண்களை உருட்டியபடி அதட்டினான்.
“அண்ணா, எனக்கு குமரனை ரொம்ப பிடிக்கும். நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன். நீயும் பெர்மிஷன் குடு, ப்ளீஸ்…” கண்களில் நீர் நிரம்ப தமையனிடம் கெஞ்சினாள் துளசி.
ஆரம்பத்தில் அத்தை மகன் அரவிந்தனோடு நடக்க இருந்த திருமணத்தை அரவிந்தனைக்கொண்டே நிறுத்தியிருந்தவள் தான் துளசி. அதன் பிறகு தன் காதலுக்காக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டதில்லை. உண்மையைச் சொன்னால் அதற்கான சூழ்நிலை அவளுக்கு அமையவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்போதோ குமரனோடு திருமணத்திற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்க, அதை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை அவள். எனவே அண்ணனிடம் துணிந்து தனது மனதை சொல்லிவிட்டாள்.
அதட்டினால் தங்கை பயந்து பின்வாங்கிவிடுவாள் என்ற அருணாச்சலத்தின் கணக்கு தப்பாகிப் போனது. அதனால் அடுத்தகட்ட தாக்குதலுக்கு பிரம்மாஸ்திரமாக அப்பாவின் பெயரை கையிலெடுத்தான்.
“அப்போ, அப்பா வார்த்தைக்கு இந்த வீட்டுல மதிப்பு இல்லைல்ல, அவர் போனதும் உங்க எல்லாருக்கும் குளிர் விட்டுப்போச்சு இல்ல. என்னையும் அவர் போன இடத்துக்கே அனுப்பி வச்சிட்டு உங்க இஷ்டத்துக்கு ஆடுங்க.” கிட்டத்தட்ட மிரட்டினான்.
அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அந்த வார்த்தைகள் தாயையும் மூத்த தங்கையும் சிறிது ஆட்டம் காணத்தான் வைத்தது.
“என்ன பேச்சு பேசுற அருண்? அப்பா இப்போ இருந்திருந்தா குமரனை கண்டிப்பா மருமகனா ஏத்துகிட்டு இருப்பாங்க. நீயும் நடந்ததை எல்லாம் மறந்துட்டு தங்கச்சி கல்யாணத்தை எடுத்து செய்யணும். அதைவிட்டுட்டு இப்படியெல்லாம் பேசாத.” சுலோச்சனாவின் குரல் லேசாக தழுதழுத்தது.
நினைத்ததை நடத்திக்கொள்ள மகன் உணர்வுப் பூர்வமாக தங்களை நெருக்குகிறான் என்பது புரியத்தான் செய்தது அந்த பெண்மணிக்கு. என்றாலும் ஒரு தாயாக மகனின் வார்த்தைகள் தந்த வலியை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அவர்களின் பேச்சுக்கு நடுவே குறுக்கிடாமல், கைகளை கட்டிக்கொண்டு நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் குமரன். “பரவாயில்ல டா, உனக்கு மூனு மாசம் டைம் தரேன். அதுக்குள்ள உன் தங்கச்சிக்கு நீ கல்யாணத்தை முடிச்சிட்டா, நான் ஒதுங்கிடுறேன்.” அமைதியை கைவிட்டுவிட்டு காட்சிக்குள் நுழைந்தான் குமரன்.
“குமரன்… எதுக்கு இந்த வேண்டாத வேலை.” பதறிப்போனார் சுலோச்சனா. காவேரியும் ஏன் இப்படி என்பதுபோல குமரனை பார்க்க, துளசியோ அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
ஆனால் அருணாச்சலமோ, “நீ என்னடா எனக்கு டைம் தர்றது? நான் உனக்கு டைம் தரேன், எண்ணி மூனே நாளுக்குள்ள மறுபடியும் இந்த ஊரைவிட்டே நீ ஓடிப்போயிடு. இல்லைன்னா…” வார்த்தையை முடிக்காமல் ஒற்றை விரலை அசைத்து குமரனை எச்சரித்தான்.
“இவ்வளவு சொல்லுறான். அவனுக்கும் ஒரு சான்ஸ் குடுப்போம் ம்மா. ஆறேழு வருஷத்துல செய்யாததை இந்த மூனு மாசத்துலயாவது செய்து முடிக்கிறானா பாப்போம்.” சுலோச்சனாவிற்கு பதில் சொன்ன குமரனின் குரல் அப்பட்டமாக அருணை கேலி செய்தது.
“உன்னைப்போல அடுத்தவனுக்கு வேலைப்பாத்து தான் சாப்பிடணுங்குற பரம்பரையில நான் பிறக்கலைடா. அடுத்தவங்களுக்கு வேலை கொடுக்குற பரம்பரையில பிறந்தவன்.” கை மீசையை முறுக்கிவிட, பீத்தல் பீதாம்பரமாக மாறிப்போனான் அருணாச்சலம்.
“இத்தனை வருஷத்துல தொரை எத்தனை பேருக்கு வேலை கொடுத்துருக்காரோ தெரியலையே… அதையெல்லாம் சாவகாசமா இன்னொரு நாள் கேட்டு தெரிஞ்சுக்கிறேன். இப்போ எனக்கு வேலை இருக்கு, நான் கிளம்புறேன்.” தனக்குத்தானே பேசிக்கொள்வதுபோல சத்தமாகவே சொன்ன குமரன்,
“கண்டிப்பா நீங்க கிரகப்பிரவேசத்துக்கு வந்துடுங்க ம்மா. நீ கூட வந்துடு அருண். இவ்வளவு தூரம் வந்துட்டு நம்மளை இன்வைட் பண்ணாமப் போறானேன்னு நினைச்சுக்காத.”
“அப்புறம், நான் போன பிறகு இங்க இருக்குற யார் மேலயாவது கை வச்சன்னு தெரிஞ்சுது, இந்த குமரனோட இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டியிருக்கும்.” என்று எச்சரிக்கையும் செய்தான்.
“அப்பிடி ஏதாவது நடந்தா எனக்கு போன் பண்ணிச்சொல்லு காவேரி. நான் உடனே வந்து நிப்பேன், என் போன் நம்பரை குறிச்சுக்கோ” என்றவன் நம்பரைச் சொல்லத் தொடங்க, “இருங்க ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துட்டு வரேன்” என்றாள் காவேரி.