சுந்தரம் வீட்டின் நடுகூடம் சொந்தபந்தங்களால் நிரம்பி இருந்தது. தேவிகா பெண்களுடன் கீழே அமர்ந்திருக்க, மற்றொரு புறம் ஜமுக்காளம் விரித்து தாம்பூலங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி ஊர் பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
பெண்கள்  அமர்ந்திருந்த இடத்திற்கு பின்னால் சுவரை ஒட்டி சில நாற்காலிகள் இருக்க, அதில் ருத்ரன், ருத்ரனின் மாமா மற்றும் இன்னும் சில முக்கியம் சொந்தங்கள் அமர்ந்திருந்தார்கள். சர்வேஷ் அவனின் புகைப்படக் கருவியுடன் நடைபெறும் நிகழ்வுகளை படமாக்கிக் கொண்டிருந்தான்.
ஊர் பெரியவர் ஒருவர் நிச்சய நிகழ்வை ஆரம்பித்து வைக்க, அதனை தொடர்ந்து சில சம்பிரதாயங்கள் செய்யப்பட்டது. அதுகே ருத்ரனுக்கு இருப்புகொள்ளவில்லை. அவனும் மொழி வரும் பாதையில் கண்களை வைத்திருக்க அவன் அருகில் வந்த நிலன், “ப்ரோ! நீங்க என்ன டிரை பண்ணினாலும் தேனுவ உங்க கண்ணுல காட்ட மாட்டாளாம்.  மை மிச்செஸ் சொல்லிருக்கா…. ரொம்ப எட்டி பாக்காதீங்க” என்று வம்பு வளர்த்தான்.
“ஓ! காட்டாம எங்க போக போறாங்க”

“அதுக்கு வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன்”

அவனை திரும்பி பார்த்த ருத்ரன் சட்டென எழுந்துவிட்டான். அதில் நிலன் பதறி, “அச்சச்சோ… உட்காருங்க ப்ரோ ” என்று அவனை மீண்டும் உட்கார வைக்க முனைய.
“இருக்கட்டும், நான் நிக்கிறேன்” என்றவன் மெதுவாக நகர்ந்து தேன்மொழி அறை வாசல் எதிரில் நின்றான்.
அவனை கண்ட தேவிகா, என்னவென்று கண்களால் விசாரிக்க. அவன் தலையசைத்து ஒன்றுமில்லை என்றான்.  அதன் பின் அவர்  அங்கே சபை பேச்சில் கவனம் பதிக்க. தட்டை மாற்றிக் கொண்டார்கள் இரு குடும்பமும். நிச்சியம் தாம்பூலம் மாற்றி பெண்ணை உறுதி செய்துவிட்டார்கள்.
“கண்மணி இந்த சேலையை மாத்தி, தேன்மொழியை கூட்டிட்டு வா. மோதிரம் வாங்கிருக்கேன். ரெண்டு பேரும் போட்டுக்கட்டும்” என்று சொன்னார் தேவிகா.
சரியென்றவள் தேன்மொழி இருந்த அறைக்குச் செல்ல, தேவிகா மகனின் முகம் பார்த்தார். அவன் தானே மோதிரம் வாங்க சொல்லியிருந்தான். இவர்கள் வழக்கபடி மோதிரம் மாற்றிக்கொள்ளும் பழக்கம் எல்லாம் இல்லை.
பூ வைத்து உறுதி செய்தபின், நிச்சயத்திற்கு பெண்ணிற்கு அவர்களால் முடிந்த அளவில் ஒரு தங்க சங்கலி போட்டுவிடுவார்கள். ருத்ரன் தான் மோதிரம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்க, இப்போது அது தானே வழக்கமாக இருக்கின்றது என்று அவரும் சம்மதம் சொல்லியிருந்தார். அதுபோக இளவட்டங்கள் அவர்களுக்கு என்று கேக் ஆர்டர் செய்து வாங்கியிருந்தார்கள்.
சர்வேஷ் மெல்ல அண்ணனின் பக்கம் வந்தவன், “என்ன அண்ணா ஆன் ஸ்பாட்ல இருக்க போல” என்று கிண்டல் பேச, “டேய்!” என்றான் ருத்ரன். அவ்ளோ தான் சர்வேஷ் மீண்டும் புகைப்படம் எடுப்பதில் கவனத்தை வைத்தான்.
மறுபுறம் நிலன் அவனருகில் வந்தவன், “ப்ரோ பலே ஆளு தான் நீங்க. கண் பார்வையிலே எல்லோரையும் அடக்குறீங்க. உங்க பாச்சா எவ்ளோ தூரம் ஒர்க் ஆகுதுனு பார்ப்போம்” என்றான்.
“என்ன ப்ரோ! நீங்க செமயா அடி வாங்கியிருப்பீங்க போலயே?” என்று ருத்ரனும் கிண்டல் போல கேட்க,
“பின்ன… கொஞ்சநஞ்சம் இல்ல. உங்க வுட்பி இருக்காங்களே! என்னைய ஒரு வழி பண்ணிட்டாங்க. கனியை என் கண்ணுல காட்டவே இல்லை” என்று அவனின் திருமணத்தில் நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டான். அவனின் தோளில் கைப்போட்ட ருத்ரன், “நீங்க சொன்னது கரெக்ட் தான். அவ கொஞ்சம் கறாரான ஆளு” என்று ஆமோதித்தான்.
“ஓஹ்! அப்போ நீங்க பிரிப்பேர்ட்டா தான் இருக்கீங்க” என்று கேட்க,
மென்னகை புரிந்தான் ருத்ரன். தேன்மொழியின் அறை கதவு திறக்கப்பட, ருத்ரன் அவளுக்காக தேர்ந்தெடுத்த வண்ணமான வெந்தய நிற மென்பட்டில், மிதமான அலங்காரத்தில், தலை நிறைய பூவுடன் வெளியே வர,
“அண்ணி இதர் தேக்கோ” என்ற சர்வேஷின் அழைப்பில் அவனை பார்க்க தலை நிமிர்ந்தாள். அவன் அருகில் நின்றிருந்த ருத்திரனும் அவள் விழிகளில் விழ, சரியாக அந்நேரம் இளசுகள் ஏற்பாடு செய்திருந்த ஒலிவாங்கியில்,
“விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே!” என்ற பாடல் ஒலித்தது, அனைவரும் “லவ் அண்ட் லவ் ஒன்லி!” என்று கத்த, அவனை பார்த்திருந்த தேன்மொழியின் விழிகள் நொடியில் சிரித்து, கீழ் நோக்க, அவனோ மூச்சை உள்ளிழுத்து தலை கோதினான்.
அவன் அருகில் நின்றிருந்த சர்வேஷ் எப்போது விலகினான் என்று தெரியவில்லை. தன் அண்ணனின் முகபாவனைகளை அத்தனையும் அழகாய் படமாக்கியிருந்தான்.
அதற்குள் அங்கிருந்த பெரியவர், “அட! என்ன விளையாட்டு இது… கொஞ்சம் அமைதியா இருங்க” என்று சொல்ல, மீண்டும் அங்கே அமைதி நிலவியது. பாட்டு சத்தமும் நிறுத்தப்பட்டது. தேன்மொழி நடுவில் வந்து அனைவருக்கும் வணக்கம் வைக்க, “ருத்ரா வாப்பா” என்று அவனை அழைத்தார் வெங்கடேசன்.
ருத்ரன் முன்னே செல்ல, அவனுக்கு வழிவிட்டனர். அவன் அருகே வந்ததும், தேவிகா தேன்மொழியின் கழுத்தில் அவர் வாங்கியிருந்த ஒரு டாலர் செயின் போட்டுவிட்டு, அவள் தலையில் மேலும் ஒரு முழம் பூவை வைத்துவிட்டார். அவள் அருகிலிருந்த கனியிடம் மோதிர டப்பாவை கொடுத்து எடுத்துக் கொடுக்க சொல்லி விலகி நின்றார்.
“அண்ணா கொஞ்சம் கிட்ட நில்லு. அண்ணி இங்க பாருங்க.” என்று சர்வேஷ் இருவரையும் ஜோடியாக படமெடுக்க, இருவரின் தோள்களும் உரசிக் கொண்டது.
“கனி எடுத்து கொடுமா” என்று தேவிகா சொல்ல, டப்பாவை திறந்தவள், தன் கைகளில் மோதிரத்தை எடுத்து, கொடுக்க நீட்டி , பின் மீண்டும் பின்னே இழுத்துக்கொண்டவள், “மிலிட்டரி மச்சான்… நீங்க ப்ரொபோஸ் பண்ணுங்க. அப்ப தான் என் அக்கா மோதிரம் போட்டு விடும்” என்று ஆரம்பிக்க,
“ஆமா  ப்ரொபோஸ் பண்ணுங்க”
“அண்ணா ப்ரொபோஸ் பண்ணுங்க” என்று இளசுகளும் சேர்ந்துகொள்ள, இந்தமுறை அவர்களை அடக்க முடியவில்லை பெரியவர்களால்.
“ப்ரோபோசா!!” என்று முணுமுணுத்த ருத்ரன் அவனது பேண்ட் பாக்கெட்டினுள் கைகளை விட,
“மச்சான் சீக்கிரம்… நீங்க லேட் பண்ணா, எங்க அக்காவும் எஸ் சொல்ல லேட் பண்ணுவா” என்று மீண்டும் ஆரம்பித்தாள் கனி,
“ப்ரோ! பிக் அப் லைன் எதுவும் வேணுமா?” என்று நிலன் உதவிக்கு வர, வேணாம் என்பதாக தலை அசைத்தவன், தேனின் கைகளை பிடிக்க, கத்திக்கொண்டிருந்த இளசுகள் அமைதியாகிவிட ருத்ரன் என்ன சொல்வான் என்று தான் அனைவரும் கவனித்தார்கள்.
அவளின் கைகளை குனிந்து பிடித்து மேலே ஏந்தியவன், “அழகியே!” என்றழைத்தான் ஆழ்ந்த குரலில், அவனின் அழைப்பில் இமைகள் மேலே விரிந்து அவனின் கண் நோக்கினாள். அவள் பார்வை அவனுள் சிலிர்ப்பை கொடுக்க, இதழ்கள் விரிய, “மேரி மீ!!!” என்றான்.
அவன் கூறிய விதத்தில் இவளுக்கும் புன்னகை அரும்ப, அவனையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள். அவளின் பார்வையில் ஊடுருவியவன், அவனின் இன்னொரு கைக்கொண்டு அவளின் கையில் ஒரு கை சங்கிலியை அணிவித்து அதில் தொங்கிக்கொண்டிருந்த இரு இதயங்களை சுண்டிவிட்டு அவளை பார்க்க, அவளின் பார்வை மோதிக்கொண்டிருந்த இதயங்களில் பதிந்தது.
சுற்றியிருந்த இளசுகள், “வாவ்!!” என்றும், “கலக்கிட்டீங்க!!” என்றும் கைதட்டலும், விசிலும் என்று ஆர்பரித்தார்கள்.
“இப்ப மோதிரம் போடலாமா?” என்று ருத்ரன் கனியிடம் கேட்க,
அவள் வேறு பேச்சின்றி மோதிரத்தை தேனிடம் கொடுக்க, அவனின் விரலில் அணிவித்தாள். அதே போல அவனும் அணிவித்து, அவளின் கையை உயர்த்தி, மணிக்கட்டில் இதழ் பதித்து விடுவித்தான்.
தேவிகா, “ருத்ரா, தேனு பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க” என்றார்.
தேனின் தோளில் கை போட்டு தன்னுடன் இன்னும் நெருக்கி நிறுத்திக் கொண்டவன், அங்கு வந்த ஒவ்வொரு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிகளைப் பெற்று கொண்டார்கள்.
சர்வேஷ் அனைத்தையும் அவனது கருவியில் நினைவுகளாக படம் பிடித்திருந்தான். அவனுடன் வேலை செய்யும் ஆட்களையும் இதற்காகவே வர வைத்திருந்தான். இங்கே நிகழ்ந்தவை அனைத்தும் வருங்காலத்திற்காக சேமிக்கப்பட்டுவிட்டது.
இப்போது புதிய தம்பதிகளாக நின்ற தேன்மொழியையும் ருத்ரனையும் அனைவரும் வாழ்த்தி, பின் அவர்களுக்காக ஆர்டர் செய்திருந்த கேக் கொண்டு வரப்பட, அதனை இருவரும் சேர்ந்து வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டார்கள்.
இப்படியாக இருவருக்குமான அனைத்து நிகழ்வுகளிலும் ருத்ரன் இயல்பாய், உரிமையாய் தேன்மொழியை அணைத்து, கை பிடித்து, கைகோர்த்து, காதோரம் முடியை சீர் செய்து என்று அவளிடம் அவனின் நெருக்கங்களை கூட்டினான்.
அவனின் நெருக்கத்தில் சற்று திணற, அவன் அவளுக்கு மட்டும் கேட்டும் குரலில், “என்னாச்சு?” என்று கேட்டான்.
அவள் ஒன்றுமில்லை என்று சொல்ல, “ரிலாக்ஸ். அழகா இருக்க. எதுவும் வேணுமா?” என்று அவ்வபொழுது அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.
இருவரையும் ஒன்றாக சாப்பிட அமர வைக்க, அங்கே கிண்டல், கேலி மீண்டும் ஊட்டி விடும் படலம் என்று இன்ப அவஸ்தைகள் தொடர்ந்து.  உண்டு முடித்து, ஊர்க்காரர்கள் கிளம்பியிருக்க, இப்போது சொந்தங்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
இளவட்டங்கள் சுற்றி அமர்ந்து இவர்களின் காதல் கதை சொல்ல சொல்லி கேட்டுக்கொண்டிருக்க, ருத்ரனின் கைபேசி இசைத்தது. அதனை எடுத்துப்பார்த்தவன், “மொழி!” என்றான் அவளின் காதருகில். அதில் மயிர்கூச்சம் பிறக்க, கண்களை மட்டும் அவன்புறம் திருப்பினாள்.
“வந்துடுறேன்” என்று அவளின் தோள் பிடித்து சொல்லிச்சென்றான்.
“க்கும்… க்கும்…” என்று அதனைகண்ட உறவுகள் செருமி சிரிக்க, தேன்மொழிக்கு பேச்சே வரவில்லை. “இந்த அத்தான் இருக்காங்களே! எப்பவும் நம்மள கோர்த்துவிட்டுட்டு போறது” என்று அவனை செல்லமாய்க் கடிந்து கொண்டாள்.
பேச்சுக்கள் நீண்டு, சிறிது நேரம் சென்று தேவிகா அங்கு வந்தவர், தேனிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.
அவர் வாசலுக்கு வர, அலைபேசியில் பேசி முடித்து உள்ளே வந்த ருத்ரனை பிடித்து நிறுத்திவிட்டார்.
“டேய்! கிளம்பலாம் வா… உள்ள எங்க போற?” என்று அவன் கைபிடித்து நிறுத்தினார்.
“கிளம்பவா? ம்மா….” என்று ருத்ரன் இழுக்க,
“டேய்! போதும் டா… நாலு மணி ஆச்சு. வா… அங்கு வந்து போன்ல பேசிக்கோ” என்று அவனை கையோடு இழுக்க, திரும்பி தேனை தான் பார்த்தான் ருத்ரன்.
அவளோ அடக்கப்பட்ட சிரிப்புடன் கேலியாக அவனை பார்க்க, கண் சுருக்கியவன், “போன் பண்றேன்”  என்று இதழசைத்துச் சென்றான்.
சிரிப்புடன் தனத்தறைக்குச் சென்றவள், சாதாரண உடைக்கு மாறியிருந்தாள்.
அங்கே ருத்ரன் கண்மணி வீட்டிற்குள் நுழைந்ததும், “மா… நான் ஆறு மணிக்கு கிளம்பனும்” என்க,
“ருத்ரா! என்னடா?” என்று அதிர்ந்தார் தேவிகா.
“தேவி!!” என்று வெங்கடேசனின் குரலில் மீண்டும் சகஜமாக, “இன்னைக்கே கிளம்பணுமா?” என்று பாவமாய்க் கேட்டார்.
அவரை இறுக்கி அணைத்துக்கொண்டவன், “ஆமா மா… சூடா டீ கொடேன்” என்று கேட்டு, தனது உடமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
இது வழக்கமாக நடைபெறும் ஒன்று. எப்போதும் கிளம்புவதை அதிரடியாக தான் அறிவிப்பான் ருத்ரன். அன்னையின் சோக முகத்தை காண அவன்  எப்போதும் விரும்பியதில்லை. ஆகவே திடீரெண்டு சொல்லிவிட்டு அவரை டீ போட சொல்லிவிட்டு தயாராகிவிடுவான். இன்றும் அப்படியே கிளம்பி நிற்க, அன்னை கொடுத்த டீயை அருந்திக்கொண்டே, “சர்வா பிக்ஸ் காட்டு டா!!”
“இதோ அண்ணா…” என்று சிலவற்றை தன் புகைப்படக்கருவியில் காட்ட, “நல்லாயிருக்கு, இந்த ஹார்ட் டிஸ்க்ல காபி பண்ணி கொடு. எல்லாத்தையும்” என்று சொல்லி அவனிடம் தன்னுடைய வன்தட்டை கொடுத்தான்.
பின் அவனின் கைபேசியை எடுத்தவன் மொழிக்கு அழைப்பு விடுத்து, “மாடிக்கு வா சீக்கிரம்!” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டான்.