ஈஸ்வரனுக்கும், மகள் தன்னை பேசியது ஒரு புறம், இத்தனை வருடங்களாக பெற்ற மகளை ஒதுக்கி வைத்து அவர் எதை சாதித்தார் என்பதை மெல்ல யோசிக்க தொடங்கினார். காரணம் எந்த மகளை அவர் பெரிதாக நம்பி அளவுக்கு மீறி பாசம் வைத்தாரோ, செல்வகுமாரி, கணவன் ஆகாஷை அவன் குடும்பத்தில் இருந்து வேரோடு பிடுங்கி வெளிநாட்டிற்கு சென்று விட்டாள். அங்கேயே குடியுரிமை பெற்று தாயகம் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.

ஈஸ்வரனுக்கு, உடல்நிலை முடியாமல் மைல்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் சேர்த்து இருந்த போது கூட செல்வகுமாரி தந்தையை வந்து பார்க்கவில்லை. எந்த மகளை பார்த்தால் போற காரியம் விளங்காது என, பட்டம் சூட்டினாரோ அந்த மகள் தான், இரவு பகலாக தந்தையை வந்து பார்த்துக் கொண்டது. முதலும் கடைசியுமாக அந்த மழை இரவில் தான் ஐஸ்வர்ய நந்தினி தந்தையை எதிர்த்து பேசியது. அதற்குப் பிறகு அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே அவள் மறந்து விட்டாள்.

மாமனாரின் மாற்றம் கண்டு இப்போதெல்லாம் ஆதி அவரை கேலி செய்வதை அளவாக குறைத்து விட்டான். அதைவிட முக்கியமான ஒன்று அவனது கேலிகளை இலகுவாக கடந்து செல்ல ஈஸ்வரன் கற்றுக் கொண்டார். குழலி, தன்னுடைய தவறை உணராமல் கார்த்தியும் தன்னை ஒதுக்கி விட்டான் என எண்ணினாள். அவர்களது திருமண பேச்சு முடிவுற்றது. குழலிக்கு எப்படியோ ஆனால் அவளை உண்மையாக நேசித்த கார்த்திக்கு அந்த பிரிவு மரண வலியை கொடுத்தது.

சும்மா கிடந்த சங்கை ஊதி கிடைத்தது போல மகன் வாழ்வை தானே வீணாக்கி விட்டோமே என குற்ற உணர்ச்சியில் மேலும் குறுகிப் போனார் ஈஸ்வரன். வேறு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் முடித்து வைப்பதாக ஈஸ்வரன் கூற, கார்த்தி அடியோடு மறுத்து விட்டான். ஆதி கூட கார்த்தியிடம் பேசிப் பார்த்தான்.அதற்கு கார்த்தி சொன்ன பதில்

” இல்ல மாப்ள.. குழலி எப்படியோ ஆனா நான் அவ மேல வச்ச லவ் உண்மை. என்னைக்காவது ஒரு நாள் அவளுக்கே இது புரியும். அப்போ அவ என்னை தேடி வரும் போது அவளுக்காக நான் வெயிட் பண்ணனும்.  அவ புரிஞ்சிக்கவே இல்லனா வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி எப்போ அவ சந்தோஷமா இருக்காளோ அப்போ நான் வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன். ” சில நேரங்களில் வாழ்க்கை இப்படித்தான். சுலபமாக அனைத்தும் நமக்கு கிடைத்துவிடும்.

கஷ்டமே படாமல் கிடைக்கும் நல்லதிற்கு இங்கு மதிப்பு ஏது? நாமே புறக்கணித்து கேவலப்படுத்தி அடித்து துரத்தி, படாத கஷ்டமெல்லாம் பட்டு, மீண்டும் அந்த நல்லதை தேடி ஏங்கி வரும் போது, அது நமக்காக காத்திருப்பதில்லை. இங்கே குழலி, ஆதியை தவற விட்டு விட்டாள். அவனை விட நல்லவனாக இருக்கும் கார்த்தி அவளுக்காக காத்திருக்கிறான்.

ஒரு வழியாக அவனின் காத்திருப்புக்கு முடிவு வந்தது. குழலி மெல்ல மெல்ல தன் தப்பை உணர ஆரம்பித்தாள். தவறை அவள் உணரும் நேரம் வார்த்தைக்கு பதிலாக கண்ணீர் மட்டுமே அங்கே மிஞ்சும். ஒரு மாத காலமாக கார்த்தியை நேரில் பார்ப்பதும் போனில் அழைத்து அவனிடம் பேச முடியாமல் திண்டாடுவதுமாக இருக்கிறாள். கார்த்திக்கு அவளின் மாற்றம் புரிந்தாலும் வேண்டுமென்றே அவளைப் புறக்கணித்தான். எந்த அளவிற்கு அவள் மாறி இருக்கிறாள் என்பதை அவன் பரிசோதிக்கிறான். இன்று விழா முடிந்ததும் அவளை நேரில் சென்று சந்திக்க போகிறான். அதுவரை இன்னும் கொஞ்ச நேரம் அவளை தவிப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

நல்ல நேரம் நெருங்கிவிட, ஐஸ்வர்ய நந்தினி ஆதித்த கரிகாலன் இருவரும் தாங்கள் தேர்ந்தெடுத்த பெயரை மகனுக்கு சூட்டினார்கள்.

“பிரபஞ்ச ஆற்றல்” குழந்தை அச்சு அசலாக ஐஸ்வர்ய நந்தினியை உரித்து வைத்திருந்தது.அமுதனுக்கு பேரனை பார்த்து ஒரே பூரிப்பு. நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஆன்மீக சுற்றுலா முடிந்து வந்த அவர் கேள்விப்பட்டு, சற்று வருத்தப்பட்டாலும்  அனைத்தும் நல்லதுக்கு என்பதால் மனதை தேற்றிக்கொண்டார். அடுத்த ஓர் இரண்டு மாதத்தில் ஐசு கர்ப்பம் தரித்ததும்  தன் வீட்டிற்கு வாரிசு வரப்போவது எண்ணி அமுதனுக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.

ஒரு வழியாக விழா முடிந்து வந்த உறவுகள் அனைத்தும் வீடு செல்ல, ஈஸ்வரன் குடும்பம் மட்டும் இரவு வரை அங்கே தங்கி இருந்து சென்றார்கள். கார்த்தி மாலையே கிளம்பி விட்டான் குழலியை காண. குழலி கார்த்தி நெஞ்சில் படுத்து, அழுது கொண்டே இருக்கிறாள். கார்த்தியே ஒரு கட்டத்தில் யோசிக்க ஆரம்பித்து விட்டான். இவள் கண்களுக்குள் கடல் இருக்கிறதா என?

இரவு உணவு முடிந்த அமுதன் மகிழ்ச்சியோடு படுத்து விட, குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு, இலகுவான இரவு உடையில் கண்ணாடி முன்பு நின்று கொண்டிருந்தாள் ஐஸ்வர்ய நந்தினி. அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான் ஆதித்த கரிகாலன். இம்மாதிரி அவன் அவளை பின்னிருந்து அணைத்துக் கொள்வது இயல்பான விஷயம் இல்லை.

எப்போதாவது அவன் நினைத்தால் மட்டுமே இந்த அதிசயம் நடக்கும். கண்ணாடியில் இருவரின் பிம்பமும் தெரிந்தது. இன்னும் முகம் முழுவதும் பிக்மென்டேஷன் எனும் முகப்பருக்கள் ஐஸ்வர்ய நந்தினிக்கு நிறைந்திருந்தது.ஆதியின் முகம் அவள் முகத்தோடு இளைந்து மெல்ல உதடு குவித்து, அவளது முகப்பரு மீது பட்டும் படாமல் உதடு வைத்தான்..

“ஐஸ்”

“ம்ம்ம்”

” நீ கண்ட கிரீம் எல்லாம் போட்டு இப்போ பிம்பிள்ஸ் கொஞ்சம் தான் இருக்கு. எனக்கு இது சுத்தமா புடிக்கல. முகம் முழுக்க பிம்பிள்ஸ் நிறைஞ்சிருந்த அந்த ஐஸ் தான் எனக்கு பிடிக்கும்.”

” அப்போ என்ன உங்களுக்கு பிடிக்கல”

” ஆமா புடிக்கல.. எதுக்குடி கண்ட கிரீம் எல்லாம் போட்டு முகத்தை வீணாக்குற”

” அப்பதான் பிம்பிள்ஸ் போகும்”

” அது போகவே வேணாம். எல்லாருக்கும் ஒரு ஐகோன் இருக்கும். என் ஐஸ்வோட ஐகோன் இந்த பிம்பிள்ஸ் தான்.” அவள் சிரித்துக் கொண்டே அவன் முகத்தை பார்க்கும் படி திரும்பி நின்றாள்.

கண்களில் காதல் வலிய ” ஐ லவ் யூ”என்றாள்.

அவனோ அவள் பிம்பிள்ஸ் முத்தம் வைத்தான்.

ஐ லவ் யூ என்றாள்.

மீண்டும் ஒரு முத்தம்.

மீண்டும் ஐ லவ் யூ.

மீண்டும் ஒரு முத்தம்.

மீண்டும் மீண்டும் ஐ லவ் யூ.

மீண்டும் மீண்டும் ஒரு முத்தம்.

முத்தச் சத்தம் அந்த அறை முழுவதும் நிறைந்திருக்க

“ஐஸ், இப்போ பண்ணா  பிரச்சனை இல்லையே?”

மீண்டும் “ஐ லவ் யூ”

அவளது இதழில் ஆழமாக முத்தமிட்டவன் அப்படியே தூக்கிக் கொண்டு படுக்கைக்கு சென்றான்.அதற்குள் அவனது மகனுக்கு மூக்கு வியர்த்து விட, குழந்தை சிணுங்கி அழுந்தது. ஐசு ஆதியை தள்ளிவிட்டு குழந்தையை நோக்கிச் செல்ல அவளை ஏக்கமாய் பார்த்தான் ஆதி. குழந்தையை தூக்கி ஐசு சமாதானம் செய்ய அதற்கு மேல் படுத்திருக்காமல் எழுந்து வந்தவன், மீண்டும் ஐஸ்வர்ய நந்தினி பின்னிலிருந்து அணைத்துக் கொண்டான்.

இப்போது முன் கண்ணாடி கையில் குழந்தையோடு ஐஸ்வர்ய நந்தினி நின்றிருக்க அவளைப் பின்னோடு அணைத்து முகப்பரு மீது முத்தமிட்டான் ஆதித்த கரிகாலன். ஐஸ்வர்ய நந்தினி கண்ணாடியில் தெரியும் கணவனின் பிம்பத்தை பார்த்துக் கொண்டே மகனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

முகத்தின்

அழகை தேடும்

மூடர்கள் அறியார்கள்

என்னவள் அகத்தின்

மஹாராணி..

சுபம்..