” பேச்சுக்கு கூட எந்த ஒரு அப்பா வாயில இருந்தும் இந்த மாதிரி வார்த்தை வராது. என் புருஷன பத்தி இன்னும் ஒரு வார்த்தை நீங்க தப்பா பேசினா பெத்த அப்பன்னு கூட பாக்க மாட்டேன். வீணா அவமானப்பட்டு போயிடாதீங்க. உங்க வழிய பாத்துட்டு போங்க” காதை செவிடாக்கும் இடிககு கூட ஈஸ்வரன் அசராமல் மகளையே அசந்து போய் பார்த்தார். அவரால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை ஐஸ்வர்ய நந்தினி அவரை இம்மாதிரி பேசுவாள் என.

திக்பிரம்மை  பிடித்தது போல அவர் நின்று கொண்டிருக்க அவரைக் கடந்து ஐசு போயே விட்டாள். ஈஸ்வரன் பதறி, ஆதிக்கு அழைத்தார். அவரது அழைப்பை பார்த்துக் கொண்டே இருந்தானே தவிர ஏற்கவில்லை. ஐசு எந்த பக்கம் போனாலும் அந்த பக்கம் போய் பார்த்தார் ஈஸ்வரன். அதற்குள் அவள் எந்த சந்தில் புகுந்து எங்கே சென்றாள் என தெரியவில்லை. மகளுக்கும் மருமகனுக்கும் பிரச்சனை என்று புரிந்தது. வேகமாக ஆதி வீட்டிற்கு சென்றார்.

காவலாளியின் மூலம் நடந்ததை அறிந்து கொண்டார். அப்போதும் உள்ளே நடந்த விஷயம் என்னவென்று அவருக்கு புரியவில்லை. முதன்முறையாக மகளை நினைத்து கவலை கொண்டார். ஐஸ்வர்ய நந்தினி பற்றி அவர் மனம் பதறியது. அவளுக்கு என்ன ஆயிற்று இந்த மழையில் எங்கே சென்றால் என ஒன்றும் புரியவில்லை. காரை எடுத்துக்கொண்டு எங்கெங்கோ சுற்றி தேடத் தொடங்கினார் ஈஸ்வரன்.

ஊரே மழையில் வீட்டிற்குள் முடங்கி இருக்க, ஆள் இல்லாத குறுக்கு சாலையில் நடந்து கொண்டிருந்தாள் ஐசு. தெரு நாய்கள் மழைக்கு மறைவிடமான இடத்திலிருந்து அவளைப் பார்த்து குறைத்தன. மற்ற நாளாக இருந்திருந்தால் இந்நேரம் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடிருப்பாள். இன்று அதையெல்லாம் பார்க்கும் நிலையில் அவள் இல்லை.

பயங்கரமான இடி. மின்னல் பயத்தை உண்டு பண்ணியது. மழையின் தாக்கத்தால் தலை வலிக்க ஆரம்பித்தது.கால்கள் தடுமாறி ஐசு கீழே விழுந்த நேரம் அவள் முன்பு கார் வந்து நின்றது. ஈஸ்வரனை எதிர்பார்த்து ஐசு எழ முயல அவளைக் குழந்தையை தூக்குவதை போல தூக்கி கார் சீட்டில் அமர வைத்தான் ஆதி. அவனை எதிர்த்து கூட அவளால் பேச முடியவில்லை. கையோடு கொண்டு வந்திருந்த துண்டால் அவளை துவட்டி, ஜேகேட்டை அவள் மேல் போட்டு விட்டான்.உடம்பில் உள்ள சக்தி எல்லாம் வடிந்து சீட்டில் மயங்கி விழுந்தாள் ஐஸ்வர்ய நந்தினி.

விடிய காலை மணி நான்கு இருக்கும். மெல்ல கண் விழித்தாள் ஐசு. அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் ஆதித்த கரிகாலன். அவனைப் பார்த்ததும் முதல் நாள் நடந்த அனைத்தும் சரசரவென நினைவுக்கு வந்தது  ஐசுவுக்கு. மழையில் நனைந்த உடலால்  வேகமாக அங்கிருந்து எழ முடியவில்லை. பொட்டு உறக்கம் இல்லாமல் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆதி அவள் எழுந்ததும் மெல்ல அவள் அருகே வந்து அமர்ந்தான்.

” உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க”

” நீ உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க? தாலி புடுங்கிட்டு கட்டுன பொண்டாட்டின்னு கூட பாக்காம மழைல துரத்தி விட்ட நீ, என்ன மயிருக்கு திரும்ப வந்த”

” உனக்கு கோபமால்லாம் பேச தெரியுமா” ஐசுவுக்கு முதல் முறையாக அவனைப் பார்த்து பயம் வந்தது. அவள் படித்த சைக்கோ கதைகள் அனைத்தும் நினைப்புக்கு வந்தது. ஒருவரின் கண்ணீர் சைக்கோக்கு மட்டும் இன்பமாக இருக்கும். எழ முயற்சி செய்தாள் ஐசு. கால்கள் மடிந்து விழுந்தன.

” ஐஸ்வர்ய நந்தினி.. ஆதித்த கரிகாலன  விட்டுட்டு போறது அவ்வளவு ஈஸியா நினைச்சியா?”

ஐசு அவனைப் பார்த்து விரக்தியாக சிரித்தாள். ” என் ஒட்டு மொத்த நம்பிக்கைய கொன்னுட்ட. என்ன துரத்தி விட்டுட்ட. திரும்ப நீயே கூட்டிட்டு வந்து கதை பேசிட்டு இருக்க. அடுத்து என்ன என்ன கொல்லப் போறியா? இந்த வீணா போன உலகத்துல வாழ்றதுக்கு பதிலா சாவரதே மேல் தான். “

“ப்ப்பா எவ்ளோ எமோஷனல் டயலாக். இப்படியேதான் பொண்ணுங்க காலம் ஓட்டுறீங்க எமோஷனலா பேசி பேசி பசங்க மனச கரைச்சு.. ம்ம்ம் நோட் பேட்” அவளை கிண்டலடித்தவன் சத்தம் போட்டு சிரிக்க ஐசு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

சில வினாடிகள் ஆதியின் சிரிப்பு சத்தம் மட்டுமே அந்த அறையை ஆக்கிரமித்தது. சட்டென்று அவளைப் பிடித்து  அமர வைத்தவன் அவள் பயந்த விழிகளை பார்த்துக் கொண்டே, இதுவரை கையில் மறைத்து வைத்திருந்த தாலியை அவள் கழுத்தில் கட்டினான். ஐசுக்கு எதுவுமே புரியவில்லை. நினைத்தால் கட்டுவதற்கும் நினைத்தால் அவிழ்த்து வீசுவதற்கும் தாலி என்ன விளையாட்டு கயிறா?

” என்ன ஐஸ் அப்படி பார்க்கிற? என் ஜாதகப்படி எனக்கு ரெண்டு கல்யாணம். ஒன்னு உனக்கு தாலி கட்டிட்டேன். ரெண்டாவது தாலி குழலி கழுத்துல கட்டிருவேன்னு தானே நீ பயந்த. அதுக்கு அவசியமே இல்ல பொண்டாட்டி. பிரம்ம முகூர்த்தத்தில உன் கழுத்துல ரெண்டாவது தாலி கட்டி இருக்கேன். இன்னைக்கு சுப முகூர்த்தம் வேற. ” ஐசுவுக்கு அவன் பேசுவது எதுவுமே புரியவில்லை. சொல்லாத விஷயங்கள் எல்லாம் அவனுக்கு எப்படி தெரிந்தது?

” நீ சொல்லாம எப்படி இதெல்லாம் எனக்கு தெரியும்னு பாக்குறியா? நீ அங்க இருந்து கிளம்பி என்கிட்ட சொல்லாம கொள்ளாம வீட்டுக்கு வந்துட்ட? நான் டான்ஸ் ஸ்கூல் போய் பார்த்தேன். நீ இல்ல. உன்ன தேடி பார்த்தேன். உனக்கு போன் பண்ணேன். எதுக்குமே ஆன்சர் இல்லை. கடைசியா உன் அம்மாவுக்கு போன் பண்ணி பார்த்தேன். அவங்க நடந்தது எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாங்க. அப்பவே நெனச்சேன் நீ ஏதாச்சும் ஒரு பூதத்தை கிளப்புவேனு.

நான் நெனச்ச மாதிரியே, நீ கெளப்பிட்ட. நீ என்கிட்ட கேட்ட கேள்வி எல்லாத்தையும் யோசிச்சு பாரு. அத்தனை கேள்விக்கும் முக்கியமான பிரச்சனை என்ன தெரியுமா சந்தேகம்? உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் ஐஸ். உட்கார வச்சு பேசி சமாதானப்படுத்துறது எல்லாம் எனக்கு பிடிக்காது. ஒரே ஒரு தண்டனை வாழ்க்கை முழுக்க வாயே திறக்க கூடாது. சந்தேகம் ஒரு நோய் மாதிரி. அந்த சந்தேகம் உனக்கு வந்துருச்சு. சீதை மாதிரி நான் நெருப்புல இறங்கி நின்னா கூட நீ என்ன நம்ப மாட்ட.

உன்ன நம்ப வைக்க தான் இவ்வளவும் செஞ்சேன். உன்ன வீட்டிலிருந்து வெளியே துரத்தி நீ என்ன பண்றன்னு பார்த்தேன். உன்ன ஃபாலோ பண்ணிட்டு பின்னாடியே வந்தேன்.உன் அப்பா கிட்ட நீ பேசினத நான் தூரத்தில இருந்து கவனிச்சுட்டு தான் இருந்தேன். நீ பேசுனது எனக்கு சரியா புரியல.ஆனா உன்னோட ரியாக்சன் பாக்கும்போது இத்தன வருஷத்துக்கும் சேர்த்து உங்க அப்பாவுக்கு நீ பதிலடி கொடுத்திருக்கேன்னு புரிஞ்சுகிட்டேன்.