“அதான்.. அந்த ஆசை இப்போ இல்லையா. தம்பிக்கு கல்யாணத்துக்கு பாக்குறாங்க சரிதான். ஆனா தம்பிக்கு பண்ணனும்னு வர்றப்போ, அப்போ என்னை அப்படியே விட்டுடுவாங்களா?” என்று விதாண்டாவாதம் பேசினாள் தனா.
ஓரளவுக்கு மேலே அங்கே எதுவும் பேசி முடிவெடுக்க முடியாமல், கடைசியில் அனைவரும் கிளம்பி இங்கே வரவேண்டியதாகிவிட, விநாயகமோ ஒருமாதிரி இறுக்கமாய் உணர்ந்தார். மனைவி மகளிடம் சொன்னதில் தவறில்லை. ஆனால் நாசூக்காய் சொல்லியிருந்தால் விசயமே இத்தனை தூரம் வந்திருக்காது.
இப்போது இவர்களே செய்கிறேன் என்றாலும், அது கட்டாயத்தின் பேரில் செய்ததாய் இருக்கும். செய்யவில்லை என்றாலும், மகள் மனது சங்கடப்பட்டு போகும்.
செய்பவன், என்றுமே செய்துகொண்டே இருந்தால் அவன் நல்லவன். சூழல் காரணம் வைத்து, கொஞ்சம் மாறினால், அவன் சுயநலவாதி. உலகத்தின் நியதி இதுதானே.
தனாவோ வந்ததில் இருந்து பேசிக்கொண்டே தான் இருந்தாள். இரு பாட்டிக்களும் “சும்மா இரு..” என்று சொல்லி சொல்லி பார்த்து, கடைசியில் “என்னவோ பண்ணிக்கோ..” என்று விட்டுவிட்டார்கள்.
சபரியும், சுபாஷும் “மாமா நாங்களே பண்றோம்..” என்று சொல்ல,
தாத்தாக்கள் இருவரும் கூட “நாங்க பண்றது தான் முறை மாப்ள..“ என்றவர்கள் “வர்ற வாரம், நம்ம சொக்கன் வீடு கல்யாணம் முடியவும், மொட்டை வச்சுக்கலாம்..” என, விநாயகம் எதுவுமே பேசவில்லை சரி என்று மட்டும் தலையை ஆட்டிக்கொண்டார்.
அதற்குள் வராவும், மகாவும் சேர்ந்து அனைவருக்கும் இட்லி சுட்டு எடுத்து வைத்துவிட, தனா புலம்பிக்கொண்டே சென்று அம்மாவிடம் நின்றவள் “ம்மா..” என்று கண்ணை கசக்க,
“என்ன டி?!” என்றார் கசந்த குரலில்.
“எப்படி பெருசுங்க அவங்களே பண்றோம்னு சொல்லிட்டாங்களா?!” என்று இரு புருவத்தையும் உயர்த்தி, லேசாய் சிரிக்க,
“ஏய் நாயே.. இவ்வளோ நேரமா நடிச்சியா டி?!” என்று வரா நம்பாது கேட்க,
“ம்ம்ச் ம்ம்ச்..” என்று உதட்டினை அசைத்தவள், “அம்மா சொல்லவும் எனக்கும் டக்குன்னு ஒருமாதிரி இருந்தது தான். ஆனா நான் விநாயகம் பொண்ணு. பெருசுங்க எல்லாம், அப்பா தலையில் எத்தனை மொளகா அரைக்கிறாங்கன்னு எனக்குத் தெரியாதா என்ன?” என்று கேட்க,
வராவோ “தனா.. நான் கூட இதெல்லாம் நிஜம்னு நினைச்சேன் டி..” என்றாள்.
“இப்போ அம்மா இப்படி சொல்லிட்டாங்க. நம்மலே செய்யலாம்னு சொல்லிருந்தா, ஆளாளுக்கு பேசிருப்பாங்களா. இப்போ என்னாச்சு என்னை சரி கட்டுறேன்னு, அவங்களே செய்றதா வந்துட்டாங்களா. மூணாவது மொட்டைக்கு திருப்பதிக்கு கூட்டிட்டு போகணும்னு இருக்கோம்னு சொல்லிட்டாங்களா, இதெல்லாம் செய்யலைன்னா நம்ம கேப்போம் தானே..” என்று சொல்லி இருக்க,
மகாலட்சுமியோ வாயடைத்து போய் நின்றிருந்தாள். பெரியவள் மனதில் என்ன இருக்கிறது, எதைக்கொண்டு அவள் பேசுகிறாள் என்பதனையே கண்டறிய முடியாது. இப்போது இளையவளோ இப்படி செய்து வைத்திருக்க, தன் பிள்ளைகளா இவர்கள் என்று இருந்தது அவருக்கு.
“ம்மா ரொம்ப யோசிக்காத. இவங்களை எல்லாம் இப்படி டீல் பண்ணாதான் சரி..” என்று தனா பேச,
“ஏன் டி?!” என்றார் ஒருமாதிரி அயர்வாய்.
“பின்ன? காலத்துக்கும் நீங்களே செஞ்சிட்டு இருப்பீங்களா? தம்பிக்குன்னு ஒரு வாழ்க்கை அமையப் போகுது.. அதை மட்டும் இப்போ மனசுல வைங்க..” என,
“இதெல்லாம் தெரிஞ்சா சங்கடம் தனா. சபரியும் சுபாஷும் என்ன நினைப்பாங்க..” என்று வருந்த,
“உன் தம்பிங்க தானே. அவங்களை எப்படி சரிகட்டனும்னு எங்களுக்குத் தெரியும்..” என்று தங்கையோடு சேர்ந்து நின்றாள் வரா.
“என்னவோ டி.. எனக்கு இப்பவும் படபடன்னு தான் இருக்கு..” என்று மகா சொல்ல,
“எதையாவது பேசி சொதப்பி வச்ச.. பார்த்துக்கோ..” என்று தனா அம்மாவை மிரட்டிவிட்டு, கோபமாய் இருப்பது போல கட்டிக்கொண்டே அடுப்படி விட்டு செல்ல,
வராவோ “வா ம்மா. பசிக்குது..” என்று மகாவையும் அழைத்துக்கொண்டு போனாள்.
இனியென்ன, அன்றைய தினம் விடுமுறை என்பதால், அனைவரும் இங்கேதான் டேரா போடுவார்கள் என்று விநாயகம் உணர்ந்தவர் “சரி நான் கடைக்கு கிளம்புறேன்..” என்றுசொல்லி,
“மகா..” என்று அழைக்க, மகாலட்சுமி வேகமாய் வாசலுக்கு வந்தார்.
“என்னாங்க?!” என்று கணவரைப் பார்க்க,
“ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. நான் கடைக்கு போயிட்டு வர்றேன். பார்த்துக்கோ..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அறைக்குள் அடைபட்டுக் கிடந்த கண்ணதாசனோ, அறைக்கு வெளியே வீட்டினுள் திடீரென ஒரு அமைதி நிலவுவதை இங்கிருந்தே உணர்ந்தவன் ‘என்ன எல்லாம் பேசி முடிச்சிட்டாங்களா?’ என்று எண்ணியபடி, அறைவிட்டு வெளியே வர,
“வா மாப்ள.. பயங்கரமான ஆளுடா.. எதுலயும் சிக்குறது இல்லை..” என்று அவன் தோள் மீது கை போட்டு பட்டென இழுத்தான் சுபாஷ்.
“மாமா..!” என்று லேசாய் அதிர்ந்தவன் “சாப்பிட்டாச்சா எல்லாம்?” என்று குட்டீஸை பார்த்துக் கேட்க,
“நீயும் வா டா சாப்பிடலாம்..” என்று சின்ன பாட்டி அழைக்க,
“நீங்க எல்லாம் சாப்பிடுங்க..” என்றவன் “அப்புறம் மாம்ஸ்..” என்று தன் இரு அக்காக்களின் கணவன்மார்களைப் பார்க்க,
“ம்ம் இப்போவே கல்யாண மாப்ளை கலை வந்துடுச்சுடா உனக்கு..” என்றான் சபரி.
“மாமா..” என்று இருவரையும் கண்ணதாசன் சிரித்த முகத்தோடு, கொஞ்சம் முறைப்பாகவும் பார்க்க,
‘போச்சுடா..’ என்று தலையை கோதிக்கொண்டவன் “மாம்ஸ் உங்க மொபைல் கொடுங்க..” என்று சபரியிடம் அவனின் அலைபேசியை வாங்கி, அதிலேயே தான் பதிவு செய்திருந்த மேட்ரிமோனி தளத்தில் உள் நுழைந்து மற்ற விபரங்களையும் சொல்லிவிட்டு, நகர்ந்துகொண்டான்.
அடுத்து அங்கே பொழுது சிறப்பாய் செல்லும் என்றும் அவனுக்குத் தெரியாதா என்ன?!
“ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்னு சொல்லவே இல்லை கண்ணா?!” என்று கேட்டபடி, அவனுக்கு தட்டில் இட்லியை வைக்க,
“இப்போ சொல்லிட்டேன் தானே ம்மா..” என்றவன் உண்டுவிட்டு வேலையில் அமர்ந்துகொண்டான் மீண்டும்.
மனதோ அதுவும் தன் வேலையை காட்டும்பொருட்டு, கவிதாஞ்சலியிடம் செல்லப் பார்த்தது.
‘வேணாம் கண்ணதாசா. அளவுக்கு மீறி ஆசைப்படக் கூடாது..’ என்று தனக்கு தானே குட்டு வைத்துக்கொண்டவன், ஒரு தலை குலுக்களோடு வேலையில் கவனம் வைக்க, அங்கே கடையினில் இருந்த விநாயகத்தின் முன்னே அவரின் பால்ய சிநேகிதர் வந்தமர்ந்திருந்தார்.
“அய்யய்யா.. சொல்றதை கேளுடா..” என்று நண்பனை அதட்டியவர் “பொன்னம்மா பாட்டியோட அக்கா வீட்டுக்கார் அப்போவே அராசங்க வேலைன்னு சென்னைல செட்டில் ஆகிட்டாங்க. இப்போ அவங்க இல்லை. ஆனா அவங்க குடும்பம் அங்க நல்லா இருக்கு. அவங்க மகன் பாஸ்கரை எனக்கு ஓரளவு நல்லா தெரியும். அவங்க பொண்ணுக்கு இப்போ வரன் பாக்குறாங்க..” என்று சிவா எடுத்துக் கொடுக்க,
“அப்படியா?! மேற்கொண்டு விபரம் சொல்லு..” என்றார் விநாயகமும்.
சிவாவும் பாஸ்கர் மற்றும் தாரணி பற்றி விபரங்களைச் சொல்லிவிட்டு “மகனுக்கு காதல் கல்யாணம். அதுனால அங்கேயே பண்ணிட்டாங்க. பொண்ணுக்கு அப்படில்லாம் எதுவும் இல்லையாம். ஊர்பக்கம் எதுவும் வரன் அமைஞ்சா பார்க்க சொன்னாங்க. என் மகனை சென்னைல காலேஜ் சேர்த்துவிட, பாஸ்கர் தான் உதவி பண்ணாப்ல விநாயகம். நல்ல மனுசங்க..” என்று பேசியபடி, கவிதாஞ்சலியின் விபரங்களையும், ஜாதகத்தையும், விநாயகத்தின் அலைபேசிக்கு அனுப்பி வைக்க,
“பொண்ணு நல்ல வேலையில இருக்கே ப்பா..” என்றார் விநாயகம்.
“ம்ம் ஆமா. கல்யாணத்துக்கு அப்புறம் வேலையை விட்டாலும் விட்ருமாம். இல்லைன்னா தோதுக்கு ஏத்தது போல வேலையை மாத்திக்குமாம்..” என்றிட,
“ம்ம்ஹும்..” என்று தலையை ஆட்டிக்கொண்டவர் மகனின் சம்பளத்தை விட, அதிக சம்பளம் என்பது உறுத்தினாலும், நல்ல குடும்பம் நல்ல பெண் என்கிறபோது, முயற்சி செய்து பார்ப்போம் என்றுதான் தோன்றியது.
“போட்டோ இல்லையே ப்பா..” என,
“அட பொண்ணே ஊருக்குதான் வருது. கல்யாணத்துக்கு வர்றாங்கப்பா.. ஆனா எனக்கு பாரேன், என் மச்சான் மகளுக்கும் அதே நாள்ல கல்யாணம். நான் இன்னிக்கு நைட்டே கிளம்புறேன். இல்லைன்னா நேர்ல இருந்தே என்னன்னு பேசி பார்ப்பேன்.. நீ ஜாதகம் பார்த்துட்டு சொல்லு. நான் பேசுறேன். பொண்ணு கல்யாணத்துக்கு வருது. நேரடியா பார்த்துக்கோங்க. எல்லாம் ஓகே அப்படின்னா மேற்கொண்டு பேசலாம்.. ஆனா ஒன்னு விஷயம் வெளிய போகக் கூடாது..” என்று சொல்ல,
“சரி சிவா.. நீயும் கல்யாணத்துக்கு போயிட்டு வா. நானும் என்னன்னு பார்த்து வைக்கிறேன்..” என்று முடித்துக்கொண்டார் விநாயகம்.