மீரா சமையலறையில் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருக்க, கார்த்திகேயனுக்கு இன்னொரு முறை அழைத்தான் சஞ்சய்.
முக்கிய விஷயம் இல்லை என்றால் பின்னர் அழைப்பதாக செய்திதான் அவரிடமிருந்து வந்தது.
யோசனையாக மீராவிடம் வந்தவன், “ஸார் அப்புறம் பேசுறேன்னு மெசேஜ் போட்ருக்கார். நீ வேணும்னா ஆன்ட்டிகிட்ட பேசு, ஆனா மேரேஜ் விஷயத்தை ஸார்கிட்ட சொல்லாம சொல்ல வேணாம்” என்றான்.
ஊரில் ஏதும் பிரச்சனையோ என மீராவுக்கும் சந்தேகமானது.
“ஸார்கிட்ட முதல்ல பேசுவோம், அப்புறம் அம்மாட்ட பேசிக்கிறேன்” என உள்ளே போன குரலில் சொன்னாள்.
இடுப்பில் கை வைத்து அவன் அவளை முறைக்க, “இல்லையில்லை, நான் டல் ஆகல” என சற்று சத்தமாகவே சொன்னாள்.
துணி காய வைக்கும் ஸ்டாண்ட் வீட்டின் பின்பக்க வராண்டாவில் இருக்கும். அவள் துணிகளை காய வைக்க ஆரம்பித்தாள்.
“டே டைம்ல செய்யலாம்ல மீரா?” எனக் கேட்டான்.
“டைம் கிடைக்கறப்போ செய்திடுறேனே” என்றாள். சரி என்பது போல பார்த்தவன், “வா நாம டின்னர் டெரஸ்ல சாப்பிடலாம். உனக்கு மூட் சேஞ்ச் ஆகும்” என்றான்.
“ஹையையோ நான் நல்லாத்தான் இருக்கேன், அதெல்லாம் வேணாம். சாப்பிட்டு காலைக்கு கொஞ்சம் காய் நறுக்கி எடுத்து வைக்கலாம்னு இருக்கேன்”
“என்ன நீ, எப்போ பாரு ஏதாவது வேலை பார்த்திட்டே இருக்க? லைஃபை நல்லா என்ஜாய் பண்ணி வாழனும் மீரா. டெரஸ்க்கு போறோம் நாம” என முடிவாக சொல்லி விட்டான்.
சொன்னதோடு நில்லாமல் அவள் சமைத்து வைத்திருந்த பாத்திரத்தோடு தட்டு, தண்ணீர் எல்லாம் அவனே மாடிக்கு எடுத்து சென்று விட்டான்.
சஞ்சயின் செயல், பேச்சு எல்லாமே அவளுக்கு சிறு பிள்ளையை போலவேதான் தெரிந்தது.
மீரா மாடிக்கு சென்ற போது வீட்டினருடன் அழைப்பில் இருந்தான் சஞ்சய்.
முழங்கால்களில் கைகளை கட்டி, முகத்தையும் முழங்கால் முட்டியில் சாய்த்த படி எங்கோ வெறிக்க பார்த்து அமர்ந்திருந்தாள் மீரா. அவளை அப்படி கண்டதும் பின்னர் பேசுவதாக கைப்பேசியை வைத்து விட்டு அவளின் எதிரில் போய் அமர்ந்து கொண்டான்.
“எனக்கொரு கொடிய நோய் இருக்கு மீரா” என்றவன் பக்கம் பார்த்தாள்.
“என்னை சுத்தி உள்ளவங்க என்ன மூட்ல இருக்காங்களோ உடனே என்னையும் அது தொத்திக்கும்” என்றான்.
“கல்யாணம்ங்கிறது பெரிய விஷயம் இல்லையா சஞ்சய்? இன்னிக்கு அம்மாட்ட சொல்லிடலாம்னு நினைச்சிட்டேனா? சொல்ல முடியலங்கிறது கூட பரவாயில்லை, ஏதோ பிரச்சனையோன்னு யோசனையா இருக்கு. அம்மா அங்க ஏதோ கஷ்ட படற மாதிரியே மனசுக்குள்ள ஏதோ பண்ணுது. தூங்கி எழுந்தா சரி ஆகிடுவேன்” என்றாள்.
உடனே எழுந்து கொண்டவன், “நீ முதல்ல எந்திரி” என சொல்லி அவளையும் எழுப்பி நிறுத்தினான்.
ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றி இன்னொரு காலை மடித்துக் கொண்டு கைகளை இரண்டு பக்கமும் நீட்டிக் கொண்டு நின்றவன், “என்னை பார்த்தியா மீரா, நீயும் இப்படி நில்லு” என்றான்.
“எதுக்கு சஞ்சய்?”
“அட நில்லுன்னா” என சொல்லிக் கொண்டே அவளை நெருங்கி தான் சொன்ன படி அவளை நிற்க வைக்க முயன்றான். அவனது தொடுகையில் கூச்சமாக இருக்கவும் அவனை பிடித்து தள்ளி நிறுத்தியவள் தானாகவே அவன் சொன்னபடி நின்று கொண்டாள்.
“ஹ்ம்ம்… குட்! இப்போ ஹண்ட்ரட் வரை கவுண்ட் பண்ணுவேன். நீ பேலன்ஸ் பண்ணி நிக்கணும். காலை தரையில வச்சாலோ கையை கீழ விட்டாலோ திருப்பி ஃபர்ஸ்ட்லேருந்து கவுண்ட் பண்ண ஆரம்பிச்சிடுவேன்” என்றான்.
“ப்ச் எதுக்கு இந்த விளையாட்டு?”
“மூச்! வேற கேள்விலாம் கேட்க கூடாது” என அவன் மிரட்ட, அவளும் அவனை பொய்யாக முறைத்துக் கொண்டே நின்றாள்.
அவன் எண்ண ஆரம்பித்தான். முப்பது சொல்லும் போதே அவளுக்கு சிரமமாகி விட்டது.
“ஸ்டெடி ஸ்டெடி மீரா” என அவன் எச்சரிக்கவும் தன்னை சமாளித்து நின்று கொண்டாள். ஐம்பது வர மீண்டும் தள்ளாடினாள். அவளின் பின்னால் போய் நின்று கொண்டவன், அவள் விழாமல் உதவுகிறேன் பேர்வழி என ஒற்றைக் கை கொண்டு அவளின் வயிற்றை சுற்றி அணைத்துப் பிடித்துக் கொண்டே எண்ணுவதை தொடர்ந்தான்.
மீராவுக்கு சில நொடிகள் மூச்சு நின்றே போனது. சஞ்சய் வேறு எதையும் உணரவில்லை. விளையாட்டுப் பிள்ளைக்கு அந்த நொடி விளையாட்டாக மட்டுமே தெரிந்தது.
நூறு சொல்லி முடித்து அவன் விலக, இரண்டு கால்களையும் தரையில் வைத்து நின்றவளுக்கு இன்னும் அவளின் வயிற்றுப் பகுதியில் அவன் கை இருப்பது போலவே பட்டது.
“இப்படி பேலன்ஸ் பண்ணி நிக்கும் போது நம்ம கான்சென்ட்ரேஷன் முழுக்க அதுலதான் இருக்கும். மூட் மாறிப் போயிடும் மீரா, எப்படி?” புருவங்களை உயர்த்தி அவன் கேட்க, அவள் அவனை நிமிர்ந்து பார்த்தால்தானே?
“ஹோய் இன்னும் என்ன?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் தாடையை தொட்டு முகத்தை நிமிர்த்தினான்.
அவளின் முகத்தை பார்த்தவன் குழம்பிப் போனவனாக, “என்னாச்சு திடீர்னு உன் முகம் இவ்ளோ ப்ளஷ் ஆகியிருக்கு மீரா? இப்படி பேலன்ஸ் பண்ணினா மூட்தான் மாறும்னு நினைச்சேன். ச்சீக்ஸ் டொமெட்டோ கலர்க்கு மாறுமா என்ன?” எனக் கேட்டு, அவளின் கன்னச் சிவப்பையும் தொட்டுப் பார்த்தான்.
அவள் சங்கடத்துடன் தலையை பின் இழுக்க, “என்ன திடீர்னு உன் டெம்ப்ரேச்சர் கூடியிருக்கு?” எனக் கேட்டு கழுத்தில் புறங்கையை வைத்துப் பரிசோதித்தான்.
நாசூக்காக அவனது கையை விலக்கி விட்டவள், “நார்மல் டெம்ப்ரேச்சர்லதான் இருக்கேன்” என்றாள்.
“என்ன மீரா நீ? எம்மேல கோவமா ஏன் என் முகத்தை பார்க்காம அவாய்ட் பண்ணிட்டே பேசுற?” எனக் கேட்டான். அவளுக்கு ஹையோ என்றிருந்தது. திரும்பி நின்று கொண்டாள். விடாமல் அவள் கையை பிடித்திழுத்து தன்னைப் பார்க்க திருப்பினான். வேகத்தில் அவன் மீது மோதி நின்றாள்.
வாலிபனுக்கு இப்போதுதான் வயதின் இம்சை வேலை செய்ய ஆரம்பித்தது. தன் நெஞ்சத்தை தடவிக் கொண்டே அவளை பார்க்க முடியாமல் தவித்து, பின் சங்கடத்துடன் பார்த்தான். தவிப்போடு தரையை பார்த்து நின்றாள் மீரா.
தான் தொட்டதால் சிவந்தாள் என்பதும் திடீர் உணர்ச்சி பெருக்கில் அவள் உடலின் வெம்மை கூடியது என்றும் சஞ்சய்க்கு புரிபட்டு விட்டது. பெண்ணின் நெருக்கம் தனக்குள்ளும் ஏதோ மாயம் செய்வதை உணர்ந்தவன் அதை ரசித்தான்.
அமைதியாக உணவின் முன் அவள் அமர, அவனும் அவளுக்கு எதிரில் அமர்ந்து கொண்டான்.
புலாவ் மற்றும் ரைத்தா இதுதான் இரவு உணவு. இருவருக்கும் பரிமாறியவள் அவனிடம் ஒரு தட்டை நீட்டினாள்.
நகப் பூச்சு இல்லாமல் நேர்த்தியாக வெட்டி விடப் பட்ட அவளது கை விரல் நகங்களில் பதிந்தது அவனது பார்வை. நகங்களின் விளிம்பு முடியும் இடத்தில் விரல்களின் நிறம் சற்றே மங்கி அதன் பிறகு பள பளப்பாக இருந்தது. புறங்கையில் பச்சை நரம்புகள் ஓட அவனது பார்வை இன்னும் முன்னோக்கி பயணித்தது.
மணிக்கட்டை கடந்து வாளிப்பான முன் கையில் மெல்லிய ரோமங்கள் நிலவொளியில் தெரிய, தொட்டு தடவ ஆவல் பிறந்தது அவனுள். முழங்கையின் வளைவு சிரிக்கும் எமோஜியை நினைவு படுத்த அவனிடமும் சின்ன முறுவல். தோள் வரை பயணித்த அவனது பார்வை, தன்னை லேசான மிரட்சியோடு பார்க்கும் அவளின் கண்களை சந்திந்தது.
அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் புதிய உறவும், அந்த உறவுக்கான உரிமையை உணராத மெல்லிய தயக்கமும் அவர்களை சுற்றிப் படர்ந்திருந்தது.
மீராவின் அழகிய வதனம் அவனை மீள விடாமல் வேறெங்கோ இழுத்துச் செல்ல, “சாப்பிடுங்க சஞ்சய்” என உரைத்து அவனை மீண்டும் உண்மை உலகிற்குள் மீட்டாள் மீரா.
இணையத்தில் பார்த்துதான் சமைத்திருந்தாள். முதல் முயற்சியிலேயே அட்டகாசம் செய்திருந்தாள்.