சித்தர் தொடர்ந்தார்.

“நான் கூறும் அனைத்து சேவைகளையும் நீங்கள் எட்டு ஊர்களிலும் ஒரே மாதிரியாகச் செய்ய வேண்டும். உங்கள் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இதைச் செய்ய வேண்டும்.

இதைச் செய்தால் பாவம் போகும், குழந்தை பிறக்கும், திருமணம் நடக்கும் என்ற எண்ணம் உங்கள் மனதில் துளியும் இருக்கக் கூடாது.

இது பரிகாரம் அல்ல; எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மனமுவந்து பிறருக்குச் சேவை செய்வதில் கிடைக்கும் ஆத்ம திருப்திதான் முக்கியம்!”

“நீங்க செய்ற உதவிகளை விளம்பரப்படுத்தக் கூடாது. புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடக் கூடாது. யாருக்கு உதவி செய்தீங்கன்னு ஊருக்கெல்லாம் அறிவிக்கக் கூடாது. உதவி பெறுகிறவர்களை மற்றவர்கள் முன்னிலையில் நிறுத்தி, அவர்களுடைய வறுமையை வெளிப்படுத்தக் கூடாது.”

அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் பேசினார்.

“ஒரு கையால் கொடுப்பதை இன்னொரு கை அறியாதபடி செய்வதுதான் உண்மையான அறம். உதவி செய்றதால உங்களுக்குப் புகழ் கிடைக்கணும்னு நினைக்காதீங்க. உங்களால ஒருத்தருடைய வாழ்க்கை கொஞ்சமாவது நல்லா மாறுதுன்னா, அதுவே போதும்!”

அந்த வார்த்தைகள் ஆதிவேந்தனின் பெற்றோருடைய மனதில் ஆழமாகப் பதிந்தன.

“இன்னொரு முக்கியமான விஷயம். இந்தப் பரிகாரத்தை நீங்க மட்டும் செய்தால் போதாது. உங்க பிள்ளைகளும் உங்களோடு சேர்ந்து செய்யணும். குறிப்பாக, ஆதிவேந்தன் இதில் முழுமையா ஈடுபடணும்.”

ஆதிவேந்தனின் முகத்தில் சிறிய மாற்றம் தெரிந்தது.

“சாமி, எனக்கு நிறைய தொழில் வேலைகள் இருக்கு. ஒரு மாதம் முழுக்க இப்படி ஊர் ஊரா போகச் சொன்னா என்னால் முடியாது.”

அதைக் கேட்ட சித்தர் புன்னகைத்தார்.

“உன் வாழ்க்கையில பணத்துக்கும் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாய். அது தவறில்லை. ஆனா, அவற்றைத் தாண்டியும் ஒரு உலகம் இருக்குன்னு நீ புரிஞ்சுக்கணும். மற்றவர்களுடைய கஷ்டத்தை நேரில் பார்க்கணும். அவங்களுக்காக உன்னால் முடிஞ்சதைச் செய்யணும்.”

பின்னர் அவர் உறுதியான குரலில் சொன்னார்.

“இந்தக் காரியத்தை நீ விருப்பமில்லாமல் செய்தால் அதற்கு அர்த்தமே இல்லை. உனக்கும் இதன் நோக்கம் புரியணும். ஆதி மனமுவந்து இதில் பங்கேற்கிற அளவுக்கு நீங்க அவனுக்கு எடுத்துச் சொல்லணும்.”

ஆதிவேந்தனின் அப்பா கைகூப்பினார்.

“நாங்க அவனிடம் பேசுறோம் சாமி. நீங்க சொன்னபடி எல்லாத்தையும் செய்ய முயற்சி செய்றோம்.”

சித்தர் மெதுவாகத் தலையசைத்தார்.

“நீங்க செய்ய வேண்டிய உதவிகள் ஒரு குறிப்பிட்ட ஊருக்குள் முடிஞ்சிடக் கூடாது. பழமையான சிவத்தலங்கள் அமைந்துள்ள எட்டு ஊர்களுக்குச் செல்லுங்கள்.”

1. மதுரை — மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.

2. திருநெல்வேலி — நெல்லையப்பர் திருக்கோயில்.

3. தஞ்சாவூர் — பிரகதீஸ்வரர் திருக்கோயில்.

4. சிதம்பரம் — நடராஜர் திருக்கோயில்.

5. காஞ்சிபுரம் — ஏகாம்பரநாதர் திருக்கோயில்.

6. திருவண்ணாமலை — அருணாசலேஸ்வரர் திருக்கோயில்.

7. திருவாரூர் — தியாகராஜர் திருக்கோயில்.

8. கோவை — பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில்.

“இன்னும் பல பழமையான சிவத்தலங்கள் அமைந்துள்ள ஊர்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் சென்று சேவைகளைச் செய்வதை உங்களால் முப்பது நாட்களுக்குள் முடிக்க முடியாது. எனவே, மீதமுள்ள திருத்தலங்களில் இந்த உதவிகளைப் பின்னர் தொடர்ந்து செய்யுங்கள்.”

அவர் சற்று இடைவெளிவிட்டு மீண்டும் பேசினார்.

“அறப்பயணத்தின் முதற்படி கொங்கு மண்ணிலே தொடங்கட்டும்! கோவை மாநகருக்கு அருகிலுள்ள பேரூரில், பட்டீசுவரப் பெருமான் வீற்றிருக்கும் திருத்தலத்தை நாடிச் செல்லுங்கள்!”

அவருடைய குரல் அமைதியாக ஒலித்தது.

“இறைவன் உறையும் ஆலயத்தில் தலைவணங்குவதோடு உங்கள் கடமை முடிந்துவிடாது! இறைவனின் படைப்புகளாய் இம்மண்ணில் வாழும் உயிர்களின் துயரையும் உணர்ந்திடுங்கள்!”

சிறிது நேரம் ஆதிவேந்தனை உற்றுப் பார்த்த சித்தர், தன்னுடைய வலது கையை உயர்த்தி அவனைச் சுட்டிக்காட்டினார்.

“நினைவில் கொள், மானிடா! உன் கரம் பிறருக்கு உதவ நீளும்போது, உன் உள்ளம் அறத்தின் வழியில் பயணிக்கத் தொடங்கும். அந்தப் பயணம் உன் மனத்தையும் மாற்றட்டும்!”

சித்தர் கூறியதைக் கேட்ட ராஜேந்திரவர்மன் கைகூப்பினார்.

“சாமி, நாங்க முதலில் பேரூருக்குப் போய் பட்டீஸ்வரரைத் தரிசனம் செய்துட்டு, அங்கேயே எங்களோட அறப்பணியைத் தொடங்குறோம்.”

சித்தர் புன்னகையுடன் தலையசைத்தார்.

“செல்லுங்கள்! இறைவனைத் தேடிச் செல்லும் உங்கள் கால்கள், துன்பத்தில் இருப்போரின் இல்லங்களையும் தேடிச் செல்லட்டும். அங்கே தொடங்கும் அறப்பயணமே உங்கள் குடும்பத்தின் முதல் சோதனையாகட்டும்!”

சில நொடிகள் அமைதியாக இருந்த சித்தர், பின்னர் தமது குரலைச் சற்றே உயர்த்திப் பேசத் தொடங்கினார்.

“முப்பது நாட்கள், மானிடா! உன் மனம் ஒருமைப்பட்டு, உன் சிந்தை சிதறாது, உன் உள்ளம் இறைவனின் திருவடியையும் அறத்தின் வழியையும் மட்டுமே நாடி நிற்க வேண்டும்!”

ஆதிவேந்தன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“கதிரவன் உதிக்கும் பொழுதுமுதல் ஆதவன் மறையும் பொழுதுவரை, உன் மனத்தைக் கட்டுப்படுத்தி, இறைவனைச் சிந்தித்து விரதமிருக்க வேண்டும். உன் சிந்தையில் செல்வத்தின் நினைப்பும் கலக்கக் கூடாது; தொழிலின் கவலையும் குறுக்கிடக் கூடாது; தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் தலைதூக்கக் கூடாது!”

அவர் ஆதிவேந்தனை ஆழமாகப் பார்த்தார்.

“‘இறைவனின் திருவருளைப் பெற வேண்டும்; இயன்றவரை இல்லாதோரின் துயர் துடைக்க வேண்டும்; அறத்தின் வழியில் நின்று தான தர்மங்கள் செய்ய வேண்டும்!’ என்ற எண்ணம் மட்டுமே உன் உள்ளம் முழுவதும் நிறைந்திருக்க வேண்டும்!”

பின்னர் தமது குரலை மென்மையாக்கினார்.

“இவ்வாறு மனத்தை ஒருமைப்படுத்தி, இறைச்சிந்தனையோடு நீ ஆற்றும் அறப்பணியே உன் பரிகாரத்தின் முதற்படியாகும்! நினைவில் கொள், மானிடா! உடல் வருந்துவதால் மட்டும் வினை தீர்ந்திடாது; உள்ளம் திருந்தி, பிறர் துயர் களையத் துணியும் பொழுதே அறம் முழுமை பெறும்!”

சித்தர் சொன்னவற்றைக் கேட்ட ஆதிவேந்தனின் பெற்றோர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

அப்போது சித்தர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

“உங்கள் இல்லத்தில் மலர வேண்டிய மழலைச் செல்வத்திற்காக, பத்து ஆண்டுகளாய் ஏங்கும் ஓர் உள்ளம் உண்டே! இல்லறம் தொடங்கி ஆண்டுகள் பல கடந்தும், மழலையின் மழலை மொழி கேளாத தாயுள்ளம் தவித்துக் கொண்டிருக்கின்றதே!”

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் மீனாட்சியின் கண்கள் கலங்கின.

ஆதிவேந்தனின் அக்கா மகாலட்சுமிக்கு முப்பத்தைந்து வயதாகியும் குழந்தை இல்லை. செந்தில்குமாரைத் திருமணம் செய்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், தாய்மை அடைய முடியாத ஏக்கம் அவளுடைய மனதை நாள்தோறும் வாட்டிக்கொண்டிருந்தது.

கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், தன்னுடைய மடியில் ஒரு குழந்தையை ஏந்த வேண்டும் என்ற ஆசை மட்டும் அவளுக்கு நிறைவேறாமல் இருந்தது.

மருத்துவ ரீதியில் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

சித்தர் மகாலட்சுமியையும் செந்தில்குமாரையும் நோக்கிப் பேசினார்.

“மகாலட்சுமியும் செந்தில்குமாரும் உங்களோடு சேர்ந்து, வசதி குறைந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் சத்தான உணவுகளையும் ஏற்பாடு செய்யுங்கள். வளைகாப்பு நடத்த வசதியில்லாத பெண்களுக்கு அவர்களுடைய ஆசைப்படி வளைகாப்பு நடத்தி வையுங்கள். பிரசவ நேரத்தில் ஆதரவின்றித் தவிப்பவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கவும் துணைநில்லுங்கள்.

இப்படி ஆதரவற்ற கர்ப்பிணிப் பெண்களின் தேவைகளை அறிந்து, அவர்களுடைய மனம் குளிர உதவி செய்து, அவர்களின் மனமார்ந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் உள்ளம் குளிர்ந்து உங்களை வாழ்த்தும்போது, இறைவனின் மனமும் குளிரும். உங்கள் முன்னோர்கள் செய்த பாவங்களின் வீரியமும் குறையும். அப்போது, உங்கள் குடும்பம் பத்து ஆண்டுகளாக ஏங்கிக்கொண்டிருக்கும் மழலைச் செல்வமும் அன்னை மகாலட்சுமியின் மடியில் வந்து சேரும்!”

சித்தரின் வார்த்தைகள் ஆதிவேந்தனின் மனதில் ஆழமாகப் பதிந்தன.

அவனுடைய அக்காவின் ஏக்கத்தை அவன் அறிந்திருந்தாலும், அதே வேதனையை அனுபவிக்கும் எத்தனையோ பெண்கள் உலகில் இருப்பார்கள் என்பதை அப்போதுதான் உணரத் தொடங்கினான்.

அதற்குள் ராஜேந்திரவர்மன் கைகூப்பிச் சித்தரிடம் கேட்டார்.

“சாமி, நீங்க சொன்னபடி நாங்க எல்லாத்தையும் செய்யத் தயாரா இருக்கோம். ஆனா, இந்தப் பரிகாரத்தை எப்படிச் செய்யணும், எத்தனை நாளைக்குச் செய்யணும்னு தெளிவா சொல்லுங்க.”

சித்தர் புன்னகைத்தார்.

“முப்பது நாட்கள் உங்கள் வாழ்வின் வழக்கமான கடமைகளை ஒதுக்கி, அறப்பணிக்காக ஒதுக்குங்கள். நீங்கள் செல்லும் ஒவ்வொரு தலத்திலும், இறைவனைத் தரிசிப்பதோடு நின்றுவிடாமல், இறைவனின் படைப்புகளான மக்களின் துயரத்தையும் துடைத்திடுங்கள்!”

அவர் தொடர்ந்து பேசினார்.

“நீங்கள் திரும்பி வரும்போது எத்தனை பேருக்கு உதவி செய்தீர்கள் என்று கணக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு பணம் செலவு செய்தீர்கள் என்று கணக்குக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் செய்த உதவிகளைப் பற்றி எந்தப் புகழுரையும் எனக்குத் தேவையில்லை!”

அவருடைய முகத்தில் மீண்டும் புன்னகை மலர்ந்தது.

“நீங்கள் உண்மையிலேயே மனமுவந்து இந்தக் காரியத்தைச் செய்தீர்களா என்பதுதான் முக்கியம். உங்கள் மனசாட்சிக்கு நீங்களே பதில் சொல்லக்கூடிய அளவுக்கு நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்!”

சிறிது நேரம் கண்களை மூடியவர், இறுதியாகச் சொன்னார்.

“வினை விதைத்தோர் விதி அறுப்பர்; அறம் வளர்ப்போர் அன்பு அறுப்பர்! காலம் கனியக் காத்திரு; கடமை தவறாது ஆற்றிடு!”

அந்த வார்த்தைகளின் பொருள் முழுமையாகப் புரியாவிட்டாலும், சித்தர் சொன்ன கட்டளையின் முக்கியத்துவம் அவர்களுக்குப் புரிந்தது.

ஆதிவேந்தனின் அம்மா கண்ணீருடன் அவரை வணங்கினார்.

“சாமி, நாங்க நீங்க சொன்னதைச் செய்யறோம். எங்க குடும்பத்துக்கு நல்ல வழி கிடைக்கணும்.”

சித்தர் அவர்களை ஆசீர்வதித்தார்.

“போய் உங்க குடும்பத்தினரிடம் பேசுங்கள். இந்தப் பயணம் உங்களுக்குச் சோதனையாக இருக்கலாம். ஆனால், அந்தச் சோதனையை எப்படிக் கடக்கிறீர்கள் என்பதுதான் முக்க்கியம்

நீங்கள் இந்த முப்பது நாள் அறப்பயணத்தை மனமுவந்து, நல்ல முறையில் நிறைவு செய்துவிட்டு, முப்பத்தொன்றாவது நாள் குடும்பமாக அனைவரும் இதே நேரத்தில், இதே இடத்திற்கு வாருங்கள். அன்றுதான் உங்களுடைய அடுத்தகட்டப் பயணத்தைப் பற்றியும், உங்கள் குடும்பத்தின் வினைப்பயனைப் பற்றியும் உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது..”

அவர்கள் மூவரும் மீண்டும் அவரை வணங்கிவிட்டுக் கோயிலைவிட்டு வெளியே வந்தார்கள்.

இத்தனை நாட்களாகத் தங்களுடைய மகனுக்குத் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே பரிகாரம் தேடி வந்தவர்கள், இப்போது ஒரு புதிய பொறுப்பைச் சுமந்துகொண்டு திரும்பினார்கள்.

அந்தப் பொறுப்பு அவர்களுடைய குடும்பத்துக்கு என்ன மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ஆனால், சித்தர் சொன்ன ஒரு விஷயம் மட்டும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

முன்னோர்கள் சேர்த்த சொத்துகள் மட்டுமல்ல, அவர்கள் விட்டுச் சென்ற வினைகளின் விளைவுகளையும் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அந்த உண்மையைப் புரிந்துகொள்ளும் பயணம் இப்போதுதான் தொடங்கியிருந்தது.

கோயிலைவிட்டு வெளியே வந்த ஆதிவேந்தனின் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

தொழிலில் எப்போதும் வெற்றி, பணம், லாபம் என்று மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த அவனுக்கு, பிறருடைய துயரங்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் புதிதாக இருந்தது.

அதிலும், தன்னுடைய அக்கா மகாலட்சுமியின் பத்து ஆண்டுகால ஏக்கத்தை நினைத்தபோது அவனுடைய மனம் கனத்தது.

அவளுடைய மடியில் ஒரு குழந்தை தவழ வேண்டும் என்ற ஆசை அவனுக்கும் இருந்தது. அவளுடைய கணவன் செந்தில்குமாரும் அவளுக்குத் துணையாக இருந்தாலும், குழந்தை இல்லாத வெறுமை அவர்களுடைய வாழ்க்கையில் இன்னும் நிறைந்திருந்தது.

அவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வதுடன், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் செய்து தர வேண்டும் என்று ஆதிவேந்தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

அதே நேரத்தில், சித்தர் கூறிய மற்றொரு விஷயமும் அவனுடைய மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

‘உன் எண்ணத்தால் காலத்தை வென்றிட இயலாது; உன் ஆணவத்தால் விதியின் பாதையை மாற்றிட இயலாது!’

அந்த வார்த்தைகள் அவனுடைய மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.

தன்னுடைய வாழ்க்கையில் எதையும் நினைத்தவுடன் சாதித்துவிடலாம் என்று எண்ணியிருந்த அவனுக்கு, இனி பொறுமையையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

அந்த முப்பது நாள் அறப்பயணத்தில், ஆதிவேந்தனின் பொறுமையை எந்த அளவுக்குச் சோதிக்கப் போகிறது என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

❤️ தொடரும்…