“அப்படி ஒரு பையனை யாருக்கு தான் ஆண்ட்டி பிடிக்காது? நீங்க அவங்களை நல்லா வளத்துருக்கீங்க. ஆனா நான் தப்பா வளந்துட்டேன். அம்மா அப்பா மேல தப்பு இல்லை. நான் தான் தப்பு பண்ணிட்டேன்”, என்றவள் பழைய நினைவில் லேசாக கண்ணீர் விட பார்வதிக்கு என்ன சமாதானம் சொல்ல என்று தெரிய வில்லை.
ஒரு நொடியில் நடப்புக்கு வந்த ஸ்ரீ “உங்க வாழ்க்கைலயோ உங்க பையன் வாழ்க்கைலயோ என்னைக்கும் நான் வந்து குறுக்க நிக்க மாட்டேன். நீங்க கவலைப் படாதீங்க. நான் வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.
அதே நேரம் குல்கர்னி மிதுனின் தந்தை சேகரிடம் மிதுன் திருமண விஷயம் பற்றி பேசினார். அவரும் நடந்த விஷயங்களைச் சொல்ல “என் மனசுலயும் அந்த ஆசை இருக்கு. நம்ம மிதுனுக்கு மாப்பிள்ளையோட தங்கச்சியை கேக்கலாம்னு தோணுது”, என்றார் குல்கர்னி.
“எனக்கும் அது தோணுச்சு அண்ணா. ஆனா என் பொண்டாட்டிக்கு விருப்பம் இல்லை. அவளுக்கு எதிரா பேசி நம்ம முடிச்சு வச்சா நல்லா இருக்காது. கொஞ்சம் இந்த விஷயத்தை ஆறப் போடலாம். பார்வதி ஒண்ணும் கெட்டவ இல்லை. கொஞ்ச நாள்ல எல்லாம் புரிஞ்சிக்குவா. இப்ப என்ன அவனுக்கு வயசு அதிகமாவா ஆச்சு? அந்த பொண்ணும் படிச்சு முடிக்கட்டுமே”, என்றார் சேகர்.
குல்கர்னிக்கு அதுவும் சரி என்று பட அந்த பேச்சு அப்படியே முடிந்து விட்டது.
அடுத்த நாள் காலை நன்கு உறங்கிக் கொண்டிருந்த சத்யாவுக்கு விழிப்பு வந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் நிதானமாக இருந்தது அவன் மனதும். தன்னை நெருங்கி உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான். பார்க்க பார்க்க மனம் தடுமாறித் தான் போனது. அவனை இறுக்கிப் பிடித்திருந்ததால் அவள் இரவு உடை வேறு லேசாக விலகி அவள் இடுப்பு தெரிய சித்தம் கலங்கித் தான் போனது சத்யாவுக்கு.
அவன் கைக்கு அருகே அவள் பட்டுக் கன்னம் வேறு மின்ன அதை தொட்டு ரசிக்க ஆசை வந்தது. தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் அதன் மென்மையை அவன் விரல் வருட “எப்பா எவ்வளவு சாஃப்ட்டா இருக்கு?”, என்று எண்ணி மெய் சிலிர்த்துப் போனான்.
இன்னும் ஆசை ஊற்று பெருக்கெடுக்க அவன் இதழ்கள் அவள் நெற்றியில் பதிந்தது.
இப்படி அவளின் அணைப்பில் கட்டுண்டு கிடப்பது பிடித்திருந்தாலும், ஒற்றை இதழ் ஒற்றலோடு நிறுத்த முடியாது மேலும் மேலும் முன்னேற துடித்த மனதை அடக்க பெரும்பாடு பட்டான். அவளிடமிருந்து விலக நினைக்க அதற்கும் மனம் வராது அவளின் அருகாமையை இழக்க விரும்பாது இரு மனதாக போராடிய படி இருந்தவன் “என்னோட ஆசை வெறும் உடல் சார்ந்ததா இருக்க கூடாது. அவளும் முழு மனதாக தன்னை ஏற்றுக் கொண்ட பிறகு இயல்பாக இருக்க வேண்டும். காதலுடன் கூடிய வாழ்க்கையாக மட்டுமே தங்கள் வாழ்க்கை இருக்க வேண்டும்”, என்று எண்ணி மீண்டும் அவளை அணைத்த படியே உறங்கிப் போனான்.
“ஹலோ ஹீரோ சார் இன்னும் எந்திக்க மனசு இல்லையா?”, என்ற வீணாவின் குரல் கேட்டு அவன் கண் விழிக்கும் போது மணி ஒன்பது ஆகி இருந்தது.
சிறு சிரிப்புடன் கண் விழித்தவன் அவனது ஹீரோயினை கண்களால் ரசித்தான். அவன் மூடியிருந்த போர்வையை மடித்தவள் “என்ன சிரிப்பு?”, என்றாள்.
“இல்லை உன்னை ஹீரோயின்னு நான் சொல்லணும்னு தானே நீ எண்ணை ஹீரோன்னு சொன்னேன்?”, என்றான் வம்பிழுக்கும் நோக்கோடு.
“எப்பா சாமி, நான் எப்படியும் நினைக்கலை. நான் சாதாரண பொண்ணு தான். வேணும்னா சொல்லுங்க என் மாமனார் மாமியார் கிட்ட சொல்லி ஹீரோயின் மாதிரி ஒரு பொண்ணு பாத்து உங்களுக்கு கட்டி வைக்கச் சொல்றேன்”
“ஏய், எனக்கு வேற யாரும் வேணாம். ஏழேழு ஜென்மத்துக்கும் நீயே போதும். என் வீணா எல்லா ஹீரோயின் விட ரொம்ப அழகு. எனக்கு அவ தான் ஹீரோயின்”, என்றான்.
அவன் பேச்சில் குளிர்ந்த மனதை அடக்கி “சரி சரி வெட்டிக் கதை பேசினது போதும். எல்லாருக்கும் பசிக்குது. அதுவும் முக்கியமா எனக்கு ரொம்ப பசிக்குது. குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்”, என்றாள்.
அவள் பசி தாங்க மாட்டாள் என்று உணர்ந்தவன் “நீ எல்லாம் எடுத்து வை. அம்மா அப்பா ஸ்ரீ எல்லாரும் வறதுக்குள்ள நானும் வந்துருவேன்”, என்று சொல்லி விட்டு குளிக்கச் சென்றான்.
அவன் குளித்து முடித்து வரும் போது அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தார்கள். உணவு நேரம் நல்ல படியாகவே சென்றது.
காலை உணவு முடிந்ததும் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாமா மதியம் என்ன சமைக்க என்ற பேச்சில் ஆரம்பிக்க முடிவில் பேச்சு ஸ்ரீயிடம் வந்து நின்றது.
“குட்டி மா, இன்னும் கொஞ்ச நாள்ல படிப்பு முடிஞ்சிரும். மேற்படிப்பு படிக்க போறியா? இல்லைன்னா மாப்பிள்ளை பாக்கட்டுமா? அதுவும் மாப்பிள்ளை உனக்கு பிடிச்சா தான் கல்யாணம்”, என்று தீனா சொல்ல அவரை முறைத்துப் பார்த்தான் சத்யா.
“என்ன டா?”, என்று கேட்க அவன் ஒண்ணும் இல்லை என்று தலையசைத்தான்.
அப்போது எதற்காகவோ வீணா எழுந்து செல்ல “ஆனா உங்களுக்கு இவ்வளவு ஒர வஞ்சனை ஆகாது பா”, என்றான்.
“என்ன டா?”
“அவளுக்கு மட்டும் கல்யாணம் வேணுமானு கேக்குறீங்க? அதுவும் மாப்பிள்ளை பிடிச்சிருந்தா தான் கல்யாணம்ன்னு சொல்றீங்க? எனக்கு மட்டும் உடனே கல்யாணம். அதுவும் இந்த பொண்ணை தான் கட்டணும்னு வேற சொன்னீங்க?”, என்று கேட்க அவனுக்கு பின்னால் அவனை முறைத்த படி நின்றாள் வீணா.
“அச்சோ சிக்கிட்டேனே”, என்று எண்ணி அவன் பாவமாக அவளைப் பார்க்க அவனைப் பார்த்து சிரித்து விட்டாள் வீணா.
இப்போது அனைவரும் பதிலுக்காக ஸ்ரீயைப் பார்க்க “நான் படிக்க போறேன் பா. கல்யாணம் எல்லாம் இப்ப வேண்டாமே?”, என்று சொல்லி விட யாரும் எதுவும் கட்டாயப் படுத்த வில்லை. அவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
அறைக்குள் வந்ததும் “சாரி வீணா, நான் சொன்னதை நீ தப்பா எடுத்துக்கல தானே?”, என்று கேட்டான் சத்யா.
“கோபமா தான் இருக்கேன். இப்ப என்ன பண்ண போறீங்க?”, என்று கேட்டவள் அவன் முகம் மாறவும் சிரித்து விட அதற்கு பின்னர் தான் நிம்மதியாக இருந்தது.
“நான் போய் அத்தை கூட சேந்து சமைக்க போறேன். சாப்பிட்டு முடிச்சதும் வெளிய போகலாம். எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும்”, என்றாள் வீணா.