“ஒருத்தங்களை சும்மா ரசிக்கிறது வேற, லவ் பண்ணுறது வேற? ஒரு வேளை அவ மேல காதலே வந்தாலும் அது தப்பா என்ன? ஆனா நான் என்ன ஏதுன்னு யோசிக்கிறதுக்கு முன்னாடியே நீ அவளைத் திட்டி அவ என்னமோ நான் அவளை லவ் டார்ச்சல் கொடுத்த மாதிரி எங்க அம்மா அப்பா தான் முக்கியம், என் குடும்பம் தான் முக்கியம், பெரிய தப்பு பண்ணிட்டேன், இனி பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு போறா. என்னைப் பாத்தா உங்க ரெண்டு பேருக்கும் எப்படி தெரியுது? எனக்கு அது ஒரு மாறி அவமானப் பட்ட மாதிரி கஷ்டமா இருக்கு”, என்று சொன்னவன் உணவைக் கூட முடிக்காமல் எழுந்து சென்று விட்டான்.

            “இப்ப உனக்கு சந்தோஷமா பார்வதி?”, என்று கேட்டார் சேகர்.

            “நீங்களும் என்ன இப்படிச் சொல்றீங்க? அவன் நல்லதுக்கு தானே செஞ்சேன்?”

            “இன்னொரு பொண்ணைக் காயப் படுத்தினா உன் பையன் எப்படி நல்லா இருப்பான்?”

            “என்னங்க?”

            “வார்த்தைகளை பேசும் போது கவனமா பேசணும்? நீ பேசினதுக்கு மன்னிப்பு கேக்கப் போய் தான் அந்த பிள்ளை கிட்ட பேச்சு வாங்கிட்டு வந்துருக்கான். அவன் குணம் உனக்கு தெரியும் தானே? அவனுக்கு அவனை யாருமே தப்பா நினைக்க கூடாது. அந்த அளவுக்கு அவன் நடந்துக்கவும் மாட்டான். அப்படி யாரும் அவனை தப்பா நினைச்சிட்டா அதுல மனசை போட்டு உழப்பி கிட்டு கிடப்பான். இப்ப அவன் இப்படி இருக்க காரணம் நீ தான்”

            “இப்ப என்ன பண்ணுறது?”

            “நான் ஒண்ணு சொன்னா அதை உன் மனசுல நான் என்னோட எண்ணத்தை விதைக்கிற மாதிரி இருக்கும். உனக்கு எது சரின்னு தோணுதோ அதை பண்ணு”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டார்.

            “அம்மா நான் சென்டர் கிளம்புறேன். மதியம் பிரண்டு கூட வெளிய சாப்பிட்டுருவேன். சாப்பிட வர மாட்டேன். நீங்க சாப்பிட்டு மாத்திரை போடுங்க”, என்று சொல்லி விட்டு கிளம்பினான் மிதுன்.

            போகும் மகனை பார்த்த படியே அமர்ந்து விட்டாள் பார்வதி. சிறு வயதில் இருந்தே மிதுன் மற்ற ஆண்கள் மாதிரி அடாவடி எல்லாம் கிடையாது. அதற்காக கூச்ச சுபாவமும் கிடையாது. அவனுக்கு நண்பர்கள் அதிகம். வீணா, மது மீது உடன் பிறந்தவர்கள் போல தான் அன்பு வைத்திருப்பான்.

            மற்றவர்களை காயப் படுத்தும் எந்த வேலையும் செய்ய மாட்டான். அப்படி அவனை யாராவது தவறாக என்னை திட்டி விட்டால் கூட மனதளவில் மிகவும் பாதிப்படைவான்.

            படித்து முடித்து  விட்டு என்ன செய்யலாம் என்றெல்லாம் அவன் தேங்கி நிற்க வில்லை. ஐந்து மாதங்கள் ஒரு பெரிய பிரவுசிங் சென்டரில் வேலை பார்த்தான். பின் சொந்த ஊரில் அவனே ஆரம்பித்து விட்டான். இதுவா அதுவா என்றெல்லாம் அவன் யோசிக்கவே இல்லை.

            தந்தையிடம் கூட கடன் வாங்காமல் லோன் வாங்கி தான் ஆரம்பித்தான். லோன்க்கு சொத்து மதிப்பு காட்டும் போது மட்டும் தந்தை தன்னுடைய பெயரில் வாங்கிய நிலப் பத்திரங்களை கணக்கு காட்டினான். மாதம் மாதம் அந்த கடனை அவன் தான் கட்டினான். இப்போது முழுவதும் அடைத்தும் விட்டான்.

            கடன் அடைத்து முடித்ததும் அன்னைக்கு என்று நகை வாங்கித் தந்தவன் கூடவே வீணா மற்றும் மதுவுக்கு ஒரு மோதிரமும் வாங்கிக் கொடுத்தான்.

            வீணாவின் திருமணத்திற்கு அவனுடைய தந்தை நகை வாங்கிக் கொடுத்தது போக இவனும் தனியாக செய்தான். மதுவுக்கும் செய்வான்.

            அப்படிப் பட்டவனை அவசரப் பட்டு காயப் படுத்தி விட்டோமே என்று அவ்வளவு கவலையாக இருந்தது பார்வதிக்கு.

            கூடவே “பரவால்லயே அவனே வழிய போய் பேசியும் அந்த பெண் ஒதுங்கிச் சென்றிருக்கிறாளே?”, என்ற நல்ல எண்ணமும் ஸ்ரீ மேல் வந்தது.

            உடனே தன்னுடைய போனை எடுத்து மதுவுக்கு அழைத்தாள். “சொல்லுங்க பெரியம்மா, ஏதாவது வாங்கணுமா? வீட்டுக்கு வரணுமா?”, என்று கேட்டாள் மது.

            “எனக்கு அந்த பொண்ணு ஸ்ரீ நம்பர் வேணும், அனுப்பி விடு”, என்று சொன்னதும் மதுவுக்கு திக்கென்று இருந்தது.

            “பெரியம்மா அவ பாவம், நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் அவ இல்லை. அன்னைக்கு கூட அண்ணா கிட்ட..”

            “எனக்கு தெரியும். நீ நம்பர் கொடு. கொடுக்க போறியா இல்லை, நான் வீணா கிட்ட கேக்கவா?”

            “அக்காவுக்கு எதுவும் தெரிய வேண்டாம். அப்புறம் மாமாவுக்கு தெரிஞ்சா நீங்க திட்டினதுக்கு அக்காவுக்கு பிராப்ளம் வரும். ஆனா பாத்து பேசுங்க. நான் நம்பர் அனுப்புறேன்”, என்று சொன்னவள் “மித்து அண்ணனோட அம்மா உன் கிட்ட பேசணுமாம் டி. உன் நம்பர் கொடுக்குறேன். என்ன பேசினாலும் எனக்காக மன்னிச்சிரு. ரெக்கார்ட் பண்ணி வை அவங்க பேசினதை. எதுக்காட்டும் யூஸ் ஆகும்”, என்று ஸ்ரீக்கு ஒரு மெசேஜ் போட்டாள்.

அதை அவள் பார்த்து “ஓகே, ஆனா என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. அவங்க பேசட்டும் நான் பாத்துக்குறேன்”, என்று பதில் அனுப்பினாள்.

அதற்கு பிறகு தான் பார்வதிக்கு அவள் எண்ணை அனுப்பி வைத்தாள்.

            பார்வதி அழைத்ததும் அதை எடுத்த ஸ்ரீ “பார்வதி பேசுவதற்கு முன் “இங்க பாருங்க ஆண்ட்டி, நீங்க நினைக்கிற மாதிரி எனக்கும் உங்க பையனுக்கும் இடைல எதுவுமே இல்லை. அன்னைக்கு அண்ணா அப்பா கூட சேந்து அவங்களும் பெரிய மாமாவும் என்னைத் தேடிக் கண்டு பிடிக்கிறதுல பெரிய ஹெல்ப் பண்ணிருக்காங்க. அந்த நன்றிய சொல்ல தான் அவங்களைப் பாத்தேன். மத்த படி நான் அவங்களை மயக்க எல்லாம் நினைக்கலை. இன்னும் சொல்லப் போனா எனக்கு யாரையும் காதலிக்கணும் கல்யாணம் பண்ணணும்னு அப்படின்னு எல்லாம் எந்த எண்ணமும் இப்ப இல்லை. ஏற்கனவே பட்ட வரைக்கும் போதும். நீங்க பேசினதை கூட நான் பண்ணின பாவத்துக்கு கிடைச்ச தண்டனையா ஏத்துக்குறேன். நான் உங்க பையனை மயக்க எல்லாம் நினைக்கலை போதுமா?”, என்றாள்.

            “பரவால்ல இவ்வளவு பேசுவியா நீ?”, என்று பார்வதி கேட்க இப்போது மது அமைதியாகி விட்டாள்.

            “அன்னைக்கு என் மகன் நான் பேசினதுக்கு உன் கிட்ட மன்னிப்பு கேக்க தான் வந்தான். வேற எதுவும் இல்லை”

            “சரி”

            “ஆனா நீ எதுக்கு அவனை தப்பா நினைச்சு திட்டிருக்க?”

            “ஐயோ ஆண்ட்டி நான் அப்படி எதுவும் நினைக்கலை. அவங்களை அவாய்ட் பண்ண தான் அப்படி பேசுனேன். அவங்க சாரி கேக்கும் போது நான் சிரிச்சு பேசிருந்தா நீங்க சொன்ன மாதிரி நான் அவங்க கிட்ட பேச ஆசைப் படுறேன்னு நினைச்சு அவங்க என் கிட்ட மேலும் பேச வாய்ப்பு இருக்கு. அப்புறம் நீங்க என்ன சொல்லுவீங்க உங்க பையனை நான் மயக்கிட்டேன்னு சொல்லுவீங்க. அதனால தான் அப்படியே விலகி போய்ட்டேன். நான் எதுவும் தப்பா பேசிருந்தா சாரி”

            “ஆனா இப்ப நான் நினைச்ச மாதிரி தான் நடந்துருக்கு. அவன் உன்னை தான் நினைச்சிட்டு இருக்கான்”, என்று சொல்ல “என்னது?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டாள் ஸ்ரீ.