அத்தியாயம் 15 

இருவரையும் சந்தித்து கைகுலுக்க 

வைக்கும் விதி விடை பெறவும் 

வைக்க தான் செய்கிறது!!!

அடுத்து வந்த நாட்கள் யாருக்கும் எந்த பரபரப்பும் இல்லாமல் இயல்பாக நகர்ந்தது. மணமக்கள் இருவரும் முழுதாக ஒரு நாள் தான் வீணா வீட்டில் இருந்தார்கள். எவ்வளவு நேரம் தான் வீட்டில் சும்மாவே இருப்பது? அதுவும் புது தம்பதி வேறு.

அதனால் குல்கர்னி மிதுனிடம் சொல்லி அவர்களை டூர் அனுப்பி வைத்து விட்டார். சென்றது ஹனிமூன் என்ற பெயரில் தான். அவ்வளவு நெருக்கம் இருவருக்கும் இடையில் இல்லை என்றாலும் அவர்கள் உறவு நட்பு அடிப்படையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு சென்றிருந்தது. ஆண் பெண் ஈர்ப்பு என்பது ஆண்டாண்டு காலமாக நடப்பது தானே?

வெளியே செல்லும் போது, சாலையைத் தாண்டும் போது இருவரும் கை கோர்த்துக் கொள்வது, படம் பார்க்கும் போது அவள் அவன் தோளில் சாய்ந்து கொள்வது என்று இருவருக்குள்ளும் நெருக்கம் இருந்தது. சத்யாவை விட்டு வீணா தள்ளி எல்லாம் இருக்க வில்லை.  எதிலுமே தயக்கம் காட்ட வில்லை. உணவை பரிமாறிக் கொள்வது கூட அவர்களுக்குள் சாதாரணமாக இருந்தது. ஆனாலும் அடுத்த கட்டத்துக்கு செல்ல வில்லை.

இப்படியே நெருங்கவும் முடியாமல் விலகவும் மனதில்லாமல் நாட்கள் நகர்ந்தது. இருவரும் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பினார்கள். இப்போது அவர்கள் வீட்டின் அருகே இருந்த பள்ளியிலே வீணா வேலைக்கு சேர்ந்து விட்டாள். அந்த வீட்டிலும் நன்கு பொருந்தி போனாள். அவளது வேலை பிடிக்க வில்லை என்று சொன்னவனே இப்போது அவளை பள்ளிக்கு கூட்டிச் சென்று விடுவதும் மீண்டும் அழைத்து வருவதுமான வேலையை விருப்பத்துடன் செய்தான்.

அவளது குடும்பத்தை அதிகமாகவே மிஸ் செய்தாள் தான். ஆனால் கைபேசி அந்த இடைவெளியைக் குறைத்தது. அன்பான மாமியார், அக்கறையான மாமனார், நட்புடன் பழகும் நாத்தனார் என வீணா சந்தோஷமாகவே இருந்தாள். அதுவும் சத்யா, அவனை அவளுக்கு முன்பே பிடிக்கும் தான். இப்போது அவனுடன் பழகிய பிறகு இன்னும் பிடித்தது.

பேசத் தெரியாமல் பேசி மாட்டிக் கொள்ளும் குழந்தை போல தான் அவன் அவள் கண்களுக்கு தெரிந்தான். அதனால் அவனை அவன் இயல்பு படியே நேசிக்க பழகிக் கொண்டாள்.

சத்யா மனநிலையும் கிட்டத்தட்ட அப்படி தான். முதலில் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணினான் அதுவும் அவன் மனைவி அவனது வேலை சம்பந்தமாக படித்திருக்க வேண்டும் என்று எண்ணினான்.

ஆனால் இப்போது அவன் மனது வீணாவை அப்படியே அவனுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டது. அதற்கான உரிமையை அவள் கழுத்தில் மின்னிய தாலியும் அவளது அருகாமையும் அவனுக்கு கொடுத்தது. அவள் அருகாமையும் அவள் அழகும் நாளுக்கு நாள் அவனது கண்ணியத்தை விரட்டிக் கொண்டிருந்தது.

            அவள் மீது இருந்த பிடித்தமில்லாதது எல்லாமே இப்போது பிடித்ததாக மாறிப் போனது. அவளது வேலை, அவளது நடை, உடை, பாவனை அனைத்துக்கும் விசிறியாகிப் போனான்.

            அவள் வேண்டும் என்ற ஆசை பெருக்கெடுக்கிறது. ஆனால் அதை அவளிடம் எப்படிச் சொல்வான்? காலத்தின் ஓட்டத்தில் வாழலாம் என்று முடிவு எடுத்த பிறகு அவளிடம் தாபத்தை வெளிப்படுத்த தைரியம் இல்லை. அவளுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது என்று தெரிந்தது தான். ஆனால் அதை முதலில் யார் ஆரம்பிக்க என்ற மிகப் பெரிய கேள்விக்குறி இருவருக்கும் இடையில்.

            அவள் உன் மனைவி நெருங்கு என்று உணர்வுகள் சொன்னாலும் அமைதி காத்தான். அதுவும் அவள் காட்டிய பாசமும் நேசமும் அவனுடைய குடும்பத்தின் மீது அவள் வைத்த ஈடுபாடும் அளவிட முடியாதது. வேறு எந்த பெண்ணாலும் வீணா மாதிரி தன்னுடைய குடும்பத்துடன் ஒட்ட முடியாது என்றும் கடவுள் அவனுக்கு பார்த்திருந்த பெண் அவள் தான் என்றும் தெளிவாக புரிந்து கொண்டான்.

இவர்கள் வாழ்க்கை இப்படிச் சென்றது என்றால் மிதுன் வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. அவனிடம் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை என்றாலும் சின்ன வித்தியாசம் தெரிந்தது. அவனிடம் எப்போதும் இருக்கும் கலகலப்பு கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனாலும் அவன் உண்டு, அவனுடைய வேலை உண்டு என்று இருந்தான்.

            அவன் மாற்றம் முதலில் தெரிந்தது பார்வதிக்கு தான். என்ன இருந்தாலும் பெற்ற அன்னை அல்லவா? இத்தனை நாள் அவன் இருந்ததற்கும் இப்போதிருக்கும் மிதுனுக்கும் நன்கு வித்தியாசம்

தெரிந்தது.

இப்போதெல்லாம் பார்வதியும் ஸ்ரீ பற்றி அவனிடம் பேசுவதில்லை. எங்கே தானே அவன் மனதில் அவளைப் பற்றி பேசி ஆசையை உருவாக்கி விடுவோமோ என்று பயந்து தான் அமைதி காத்தாள். ஆனாலும் அவன் அமைதியாக இருப்பதைக் கண்டு அவளால் வாயை மூடிக் கொண்டு இருக்க முடிய வில்லை.

            அன்று காலை உணவின் போதே “எதுக்கு ஒரு மாதிரி இருக்க மித்து? நீ முன்ன மாதிரி இல்லை. ஏதாவது பிரச்சனையா? பணம் ஏதாவது வேணும்னா அப்பா கிட்ட கேக்கலாம்ல? நம்ம கிட்ட இருக்குறது எல்லாமே உனக்கு தானே டா?”, என்று கேட்டு விட்டாள்.

            “எனக்கு என்ன? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன். பணத் தேவையும் இப்ப இல்லை”, என்றான் மிதுன்.

            “அது இல்லைன்னா உனக்கு வேற என்ன பிரச்சனை?”

“ஒண்ணும் இல்லை. நான் எப்பவும் போல தான் மா இருக்கேன்”

“எங்களுக்கு தெரியாதா உன்னைப் பத்தி? நீ முன்ன மாதிரி இல்லை. எதையோ பறி கொடுத்தவன் மாதிரி இருக்க?”

            “அதெல்லாம் ஒண்ணும் இல்லை மா. சும்மா ஏதாவது சொல்லிட்டு இருக்காதீங்க”

            “நீ இப்படி இருக்க வீணா நாத்தனார் தான் காரணமா மித்து?”

            “அம்மா”, என்று அரட்டியவன் “நான் இப்படி இருக்குறதுக்கு காரணம் வேற யாரும் இல்லை. நீங்க தான். நீங்க மட்டும் தான்.  சும்மா அந்த பொண்ணு மேல பழி போடாதீங்க”, என்றான் கோபமாக.

            “நான் என்ன டா பண்ணினேன்?”

            “என்ன பண்ணலை? அந்த பொண்ணைப் பத்தி பேசி பேசி டார்ச்சல் பண்ணுறது நீங்க தான்”

            “நீ வீணா கல்யாணத்துல வச்சு அவளை ஆர்வமா பாத்த? எங்க அந்த பொண்ணு என் பையனை மயக்கிருவாளோன்னு சத்தம் போட்டேன். இது தப்பா?”

            “இது தப்பு இல்லையா? நீங்க என்னமோ பேசிட்டீங்க? நான் அவ கிட்ட காதலைச் சொன்ன மாதிரி என்னை திட்டி விட்டுட்டா. என்னை இது வரைக்கும் யாருமே அசிங்கப் படுத்துனது இல்லை. அது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? நான் அவளை ஆர்வமா பாத்தது உண்மை தான். உடனே லவ்ன்னு நினைப்பீங்களா? ஏன் என்னோட வயசை எல்லாம் கடந்து வந்தவங்க தானே நீங்க எல்லாரும்? அப்பாவைத் தவிர வேற யாரையும் சைட் அடிச்சது இல்லைன்னு சொல்லுங்க பாப்போம்”, என்று சொல்ல “யாரு சொன்னா உங்க அம்மாவுக்கு ஒரு லவ் ஸ்டோரியே இருக்கு”, என்று சொல்லி பார்வதியிடம் ஒரு முறைப்பைப் பெற்றுக் கொண்டார் மிதுனின் தந்தை சேகர்.