கடந்த ஒரு மாதமாக கார்முகிலரசனுக்குப் பெரிய விழாக்களுக்கான அழைப்புகள் எதுவும் வரவில்லை. அவனுடைய பந்தல், கதிரை, சவுண்ட் செட் தொழிலுக்கு அந்த மாதம் கிடைத்த ஆர்டர்கள் வெறும் இரண்டே இரண்டுதான். ஒன்று பிறந்தநாள் விழா; மற்றொன்று மஞ்சள் நீராட்டு விழா.
வருமானம் குறைந்ததால், கையில் இருந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டிருந்தது. வீட்டுச் செலவுகளையும் திடீரென வந்த மற்ற செலவுகளையும் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான்.
அப்படியொரு சூழ்நிலையில், அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கார்முகிலரசனிடம் அவனுடைய தாய் பாக்கியலட்சுமி ஒரு செய்தியைக் கூறினார்.
“என்னம்மா சொல்றீங்க? பொண்ணு பார்த்தாச்சா? என்கிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லலையே!”
“இப்பத்தான் எல்லாம் பேசி முடிச்சிருக்கேன். பொண்ணோட வீட்டுக்காரங்க நல்லவங்களாம். ஞாயிற்றுக்கிழமை போய்ப் பார்த்துட்டு வருவோம்.”
“சரிம்மா…”
அவ்வளவுதான் அவன் சொன்னான்.
பெண்ணின் புகைப்படத்தைக்கூட அவனுடைய தாய் காட்டவில்லை. அவனும் அதைப் பற்றிப் பெரிதாகக் கேட்டுக்கொள்ளவில்லை.
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் இல்லாமல் இல்லை. ஆனால், இப்போதைய சூழ்நிலையில் திருமணம் தனக்குத் தேவையா என்ற கேள்வி அவனுடைய மனதில் எழுந்தது.
வீட்டில் அவனையும் சேர்த்து ஏழு பேர். தாய், இரண்டு தம்பிகள், மூன்று தங்கைகள் என அனைவரையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவனுடையது.
அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, படிப்புச் செலவு என எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள அவன் ஒருவனுடைய உழைப்பைத்தான் குடும்பம் நம்பியிருந்தது.
இந்த மாதம் முகூர்த்த நாட்கள் அதிகம் இல்லாததால், திருமண நிகழ்ச்சிகளும் பெரிதாக நடைபெறவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளிலிருந்து கிடைத்த வருமானத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவதே அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது.
அடுத்த மாதம்தான் முகூர்த்த நாட்கள் அதிகமாக இருந்தன. அதுவரை பிறந்தநாள் விழா, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா அல்லது துக்க வீட்டுக்கான அழைப்பு ஏதாவது வந்தால்தான் வருமானம் கிடைக்கும்.
இப்படியொரு சூழ்நிலையில், ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்தால் அவளையும் சரியாகக் கவனித்துக்கொள்ள வேண்டாமா?
அவளுக்கும் ஆசைகள் இருக்கும். கணவனிடம் எதிர்பார்ப்புகள் இருக்கும். அவளுக்குத் தேவையானவற்றைச் சரியான நேரத்தில் வாங்கிக்கொடுக்க வேண்டும். அவளுடைய சின்னச் சின்ன ஆசைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போனால், அவள் மனம் வருந்த வேண்டியிருக்குமே!
ஏற்கெனவே தன்னையே நம்பியிருக்கும் ஆறு உயிர்கள் வீட்டில் இருக்கின்றன. இப்போது புதிதாக ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டு வந்து, அவளையும் தன்னுடைய கஷ்டங்களுக்குள் இழுத்துவிடுவது சரியாக இருக்குமா?
யோசிக்க யோசிக்க அவனுக்குத் தலைவலிப்பதுபோல் இருந்தது.
‘நம்ம வீட்டுச் சூழ்நிலையைப் புரிஞ்சுக்கிட்டு வர்ற பொண்ணா இருந்தாலும், அவளுக்கு ஒரு கணவனா என்னால செய்ய வேண்டிய கடமைகளைச் சரியா செய்ய முடியுமா? குடும்பத்தைக் கவனிக்கிறதுலயே என் வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு. இதுல இன்னொரு பொறுப்பை ஏத்துக்கிட்டு அவளையும் கஷ்டப்படுத்திடுவேனோ?’
அவனுடைய மனம் பல கேள்விகளைக் கேட்டது.
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்காக அவர்களுடைய ஆசையை நிராகரிக்கவும் அவனுக்கு மனமில்லை.
ஆனால், தன்னுடைய நிலைமையை நினைக்கும்போது திருமணத்தைப் பற்றி முடிவெடுக்கவே அவனுக்குத் தயக்கமாக இருந்தது.
குடும்பத்துக்காக ஓடிக்கொண்டிருந்த அவனுடைய வாழ்க்கையில், தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆனால், அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் பெண்ணுக்கு அவனால் மகிழ்ச்சியைக் கொடுக்க முடியுமா?
அந்தக் கேள்விக்கான பதில் தெரியாமல், அமைதியாகத் தன்னுடைய அறைக்குள் சென்றான் கார்முகிலரசன்.
❤️
பாக்கியலட்சுமி!
பாக்கியலட்சுமி ஆரம்பத்தில் கார்முகிலரசனுக்குத் திருமணம் செய்து வைப்பதைப் பற்றியே யோசிக்கவில்லை.
தனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். மகனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால், அவனுடைய மனைவி தன்னையும் தன் மகள்களையும் ஒதுக்கிவிட்டால் என்ன செய்வது? இந்தக் குடும்பத்தைக் கட்டிக்காக்க மகனைத் தவிர வேறு யாரை நம்பியிருக்கிறோம் என்று நினைத்தார்.
ஆனாலும், மகனுக்கும் வயது ஏறிக்கொண்டிருக்கிறதே! அவனுக்குத் திருமணத்தை முடித்துவிட்டால், அடுத்து மாலதிக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று யோசித்திருந்தார்.
ஆனால், இப்போது வந்திருக்கும் இடம் அவரைத் திகைக்க வைத்தது.
வசதியிலும் அந்தஸ்திலும் தங்களைவிடப் பல மடங்கு உயர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் ஏன் தன்னுடைய மகனைக் கேட்டு வந்தார்கள் என்பதுதான் அவருக்குப் புரியவில்லை.
அவர்கள் நினைத்திருந்தால், தங்களுடைய வசதிக்கும் தகுதிக்கும் இணையான இடத்தில் பெண் தேடியிருக்கலாம். அப்படியிருக்க, தங்கள் மகளுக்குக் கார்முகிலரசன்தான் வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்களே!
அவர்கள் வந்தபோது கார்முகிலரசன் வீட்டில் இல்லை. அந்த நேரத்தைப் பார்த்து வந்த ராஜசேகரனும் இந்திராணியும், இருவருடைய ஜாதகமும் பொருந்துவதாகக் கூறித் திருமணத்தைக் கேட்டதோடு மட்டுமல்லாமல், தங்களுடைய நிபந்தனைகளையும் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
“எங்க மகளை உங்க மகனுக்குக் கல்யாணம் செய்து கொடுங்க. உங்க மூணு பொண்ணுங்களோட கல்யாணச் செலவையும் நாங்களே பார்த்துக்கிறோம். உங்க ரெண்டு பசங்களோட படிப்பு, வேலை எல்லாத்துக்கும் நாங்க செலவு செய்றோம். அவங்களுக்கு நல்ல தொழில் அமைச்சுக் கொடுக்க வேண்டிய பொறுப்பையும் நாங்களே ஏத்துக்கிறோம்.
“எங்களுக்கு உங்க மகன் மட்டும் மாப்பிள்ளையா வந்தால் போதும். எங்க பொண்ணு உங்க வீட்டுக்கு மருமகளா வந்து சந்தோஷமா வாழணும். உங்க மகனோட குணத்தைப் பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். எங்க பொண்ணை அவர் நல்லா பார்த்துக்குவார்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அந்த நம்பிக்கையைத் தவிர, உங்ககிட்ட இருந்து எங்களுக்கு வேற எதுவும் வேண்டாம்!”
என்று அவர்கள் கூறிவிட்டுச் சென்ற பிறகுதான் பாக்கியலட்சுமி திருமணத்தைப் பற்றித் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.
ஜாதகப் பொருத்தங்களைப் பார்த்து, மகனிடமும் திருமணத்தைப் பற்றிப் பேசி அவனுடைய சம்மதத்தைப் பெற்றார். அதன்பிறகு, திருமணப் பேச்சை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று, இப்போது பெண் பார்க்கும் படலம் வரை கொண்டுவந்துவிட்டார்.
ஆனால், இத்தனை வசதியும் அந்தஸ்தும் கொண்டவர்கள் தன்னுடைய மகனைக் கேட்டு வந்ததற்கான காரணம் மட்டும் இன்னும் அவருக்குப் புரியவில்லை.
‘என் மகன்கிட்ட அப்படி என்ன இருக்கு? இவ்வளவு பெரிய இடத்துல இருக்கிறவங்க எதுக்காக நம்ம வீட்டைத் தேடி வந்து பொண்ணு கொடுக்கணும்?’
என்ற கேள்வி மட்டும் பாக்கியலட்சுமியின் மனதுக்குள் திரும்பத் திரும்ப எழுந்துகொண்டே இருந்தது.
❤️
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அன்று மாலை பாக்கியலட்சுமி தன்னுடைய மகள்கள், மகன்களுடன் ராஜசேகரன் வீட்டிற்கு வந்திருந்தார்.
அவர்கள் வருவதற்கு முன்பே இந்திராணி தன் மகளை அழைத்துப் பேசினார்.
“கலை, இங்க பாரு. மாப்பிள்ளையோட அம்மாவை லேசா எடை போட்டுடாதே. நீ செஞ்ச காரியத்தைப் பத்தி அவங்களுக்குத் தெரியாது. நீயா போய் உண்மையைச் சொல்லி ஏதாவது பிரச்சினையை இழுத்து வைக்காதே.
“நீ காதலிச்ச விஷயமும், அந்தப் பையன் வீட்டுக்குப் போன விஷயமும் நமக்குள்ளேயே இருக்கட்டும். நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை பார்த்திருந்தா, நாளைக்கு இதெல்லாம் தெரிஞ்சு பிரச்சினை வந்திருக்கும். அதனாலதான் நம்ம வசதிக்குக் குறைவான இடமா பார்த்தோம்.
“அதுவும் இல்லாம, கார்முகிலரசனைப் பத்தி விசாரிச்சோம். அவன் ரொம்ப நல்ல குணமுள்ளவன், பொறுமையானவன், குடும்பத்துக்காக உழைக்கிறவன் என்று தெரிஞ்ச பிறகுதான் இந்தக் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சோம்.
“நீ இங்கே இருந்து வசதியா வாழ்ந்துக்கிட்டு இருந்தா, நடந்ததை மறந்து உன்னால அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது. வாழ்க்கையில இருக்கிற போராட்டங்களைப் புரிஞ்சுக்கிற இடத்துக்குப் போனா, கொஞ்சம் கொஞ்சமா பழையதை மறந்து வாழ ஆரம்பிப்பேன்னு நினைக்கிறோம்.
“அதனால, சாயங்காலம் அவங்க வந்ததும் சிரிச்ச முகமா போய் வணக்கம் சொல்லு. காபி கொடுத்துட்டு உள்ளே வந்துடு. நாங்க கூப்பிடும்போது வந்தா போதும். முக்கியமா, தேவையில்லாத எதையும் பேசாதே.”
தாயின் பேச்சைக் கேட்ட கலைவாணி அமைதியாக இருந்தாள்.
ஆனால், அவளுடைய மனதுக்குள் ஒரு முடிவு ஏற்கெனவே உருவாகிவிட்டது.
தன் வாழ்க்கை பொய்யில் ஆரம்பிக்கக் கூடாது. நடந்ததை மறைக்கச் சொல்லி எல்லோரும் வற்புறுத்தினாலும், குறைந்தபட்சம் மாப்பிள்ளையிடமாவது உண்மையைச் சொல்லிவிட வேண்டும். தெரிந்தும் அவர் தன்னை ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளட்டும். இல்லையென்றால் இந்தக் கல்யாணம் வேண்டாம்.
பொய் சொல்லி ஒருவரை ஏமாற்றி வாழ்வதைவிட, உண்மையைச் சொல்லி விலகிவிடுவதே மேல் என்று தீர்மானித்தாள்.
மாலை நேரத்தில் கார்முகிலரசனின் குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர்.
வந்தவர்களை ராஜசேகரன் குடும்பத்தினர் தடபுடலாக வரவேற்றனர்.
அந்த வீட்டின் வசதியையும் செல்வச் செழிப்பையும் பார்த்த பாக்கியலட்சுமி, மாலதி, காவியா, பூஜா ஆகிய நால்வருமே ஒரு கணம் திகைத்துப் போனார்கள்.
தங்கள் வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் எவ்வளவு வித்தியாசம்!
பெண் குடும்பம் தங்களைப் விட கொஞ்சம் வசதியான குடும்பம் என்று நினைத்திருந்த பாக்கியலட்சுமிக்கு, அங்கே இருந்த வசதிகளைப் பார்த்ததும் மனதுக்குள் பல கேள்விகள் எழுந்தன.
வந்தவர்களுக்கு இனிப்புகளும் கார வகைகளும் கொடுத்து உபசரித்தார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு கலைவாணி அழைத்து வரப்பட்டாள்.
பிங்க் நிறப் புடவையில், தலைமுடியைத் தளர்வாகப் பின்னி, அதில் மல்லிகைப்பூ சூடியிருந்தாள். நெற்றியில் சிறிய சிவப்புப் பொட்டு. அம்மா கொடுத்திருந்த நகைகள் அனைத்தையும் அணியாமல், தனக்குப் பிடித்த மெல்லிய நகைகளை மட்டும் காதிலும் கழுத்திலும் அணிந்திருந்தாள். கைகளில் இரண்டு வளையல்கள் மட்டுமே!
அவளுடைய அந்த எளிமையான அலங்காரமே அவளைப் பேரழகியாகக் காட்டியது.
அங்கே வந்தவள், அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தபடி வணக்கம் தெரிவித்தாள். ❤️
கார்முகிலரசன் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு,
“நான் கலைவாணிகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்,” என்றான்.
ராஜசேகரனும் இந்திராணியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். பின்னர் மகளிடம் கண் ஜாடை காட்டினர்.
“கலை, மாப்பிள்ளையைத் தோட்டத்துப் பக்கம் அழைச்சிட்டுப் போய்ப் பேசும்மா,” என்றார் ராஜசேகரன்.
கலைவாணி முன்னால் செல்ல, கார்முகிலரசன் அவளைப் பின்தொடர்ந்தான்.