கவிதை – 3

“உள்ளூர் சம்பந்தம் வேணாம் மாமா..” என்ற விநாயகத்தின் கூற்றில், கண்ணதாசன் தவிர, மற்ற அனைவருமே கொஞ்சமல்ல நிறையவே  அதிர்ந்து தான் போனார்கள்.

அதிலும் அதிகமாய் அதிர்வைக் காட்டியது மகாலட்சுமி தான்.

“என்னங்க மாமா?! என்ன சொல்றீங்க?!” என்று கேட்டவரின் பார்வையோ, நொடியில் அனைவரையும் சற்றி வந்தது.

“ஆமா மகா. கண்ணனுக்கு அந்நியத்துல பார்த்தா நல்லதுன்னு தோணுது. உள்ளூர் வேணாம்..” என்ற விநாயகம் மிக மிக அழுத்தமாய், தன் கருத்துக்களை முன் வைத்தார்.

அவரின் குரலும், முகமுமே அவர் இதில் முடிவாய் இருக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்ல, மகாலட்சுமியோ “மாமா, யோசிச்சுத்தான் பேசுறீங்களா?” என்றார், மகனையும்  ஒரு பார்வை பார்த்துக்கொண்டு.

கண்ணதாசனோ, அப்பாவின் வார்த்தைகளுக்கு மறுப்பாகவும் பேசவில்லை. ஆமோதிப்பாகவும் பேசவில்லை. மௌனமாய் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்க்க,

மகாவின் பெரிய சித்தப்பா தான் “சரிதான் மாப்ள. இருந்தாலும், ஒரேதா வேணாம்னு ஏன் சொல்லணும்? வாங்கிப் பாருங்க. விசாரிங்க. ஒத்துவரலைன்னா அடுத்து வேற பார்ப்போம்..” என்று சொல்ல,

விநாயகம் ஆழ ஒரு மூச்செடுத்து விட்டவர் “மாமா, கண்ணன் கல்யாண விசயத்துல நான் ஒருசில முடிவு எடுத்திருக்கேன்..” என,

“மாமா!” என்று அதிர்ந்து நின்றார் மகாலட்சுமி.

இதுநாள் வரைக்கும் எல்லாம் எதுவும் சொல்லவே இல்லாமல், இன்று இப்படி கணவர் பேசுவது அவருக்கு புதிதாய் இருந்தது. அதுவும் தன்னிடம் கலந்துகொள்ளாமல், இப்படி அனைவரின் முன்பும், இதுதான் என்னுடைய முடிவு என்று அவர் சொல்வதை, அத்தனை எளிதாய் மனது ஏற்கவில்லை அவருக்கு.     

இருந்தும், அனைவரின் முன்னமும் எதையும் கேட்டுக்கொள்ள விரும்பாமல், அமைதியாய் ஒரு பக்கம் சென்று அமர்ந்துகொள்ள, விநாயகம் மனைவியைப் பார்த்தவர், எதுவும் பேசாமல், கண்ணனையும் ஒருமுறை பார்த்துவிட்டு,

 “பொண்ணுங்களைத்தான் உள்ளூர்ல, சொந்தத்துல குடுத்துட்டோம் மாமா. ஆனா மகனுக்கு வெளிய பார்க்கலாம்னு நினைக்கிறேன். சொந்தம் விஸ்தாரமாகணும். புது உறவுகள் வரணும். பழக்க வழக்கம் கூடி நிக்கணும். அப்போதானே குடும்ப வட்டமும் பெருசாகும். அவனும் முன்னேறிப் போக முடியும். உள்ளுக்குள்ளயே எடுத்து கட்டின்னு இருந்தா, அவன் வாழ்க்கையும் இங்கேயே இப்படியே முடிஞ்சிடும் மாமா. அதுவும் தாண்டி, கண்ணனுக்கு படிச்சு வேலையில இருக்க பொண்ணா தான் பாக்கணும்..” என்று சொல்லி முடிக்க,

அவர் சொன்னது எல்லாமே, மகாவின் எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும்  எதிர்பதமாய் இருக்கும் ஒன்றுதானே. ஒருமாதிரி மனது இப்போதே பிசைய, வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை எல்லாம், கடினப்பட்டே மென்று விழுங்கியவர் மௌனமாகவே தான் இருந்தார்.

பெரிய சித்தியோ “உங்க  யோசனை சரிதான் தம்பி. ஆனா மகா..” என்று இழுத்து, மகாவையும் பார்த்து வைக்க,

“மகாக்கு என்ன வந்துச்சு பெரியக்கா?! அவளுக்கு புரியலைன்னாலும், நான் எடுத்து சொல்லிக்கிறேன். நீங்க முயற்சி செஞ்சு ஜாதகம் வாங்கிட்டு வந்தது சந்தோசம் தான். ஆனா பாருங்க, நானுமே இப்படி முடிவு பண்ணி வச்சிருக்கேன்..” என்றவர்

“மாமா.. நீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க வட்டத்துல, நான் சொன்னது போல பொண்ணு இருந்தா பாருங்க. நல்ல குடும்பமா இருந்தா சரிதான். எல்லாமீறி கண்ணனுக்கு பிடிச்சும் இருக்கணும்..” என்று பேசி முடிக்க, வந்தவர்களுக்கு இதற்குமேல் என்ன சொல்ல என்று தெரியவில்லை.

அதனால் மேலும் ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு, பெரிய சித்தி கிளம்புகையில் “அப்புறமா போன் பண்றேன் மகா..” என்றுவிட்டு கிளம்பினார்.

வீட்டினிலோ பேரமைதி. கண்ணனோ அப்பாவிடம் “ப்பா..” என்று எதையோ பேச வர,

“நம்ம கடைக்கு வழக்கமா ஒரு ப்ரோக்கர் வருவார். அவர்கிட்ட உன்னோட ஜாதகம் போட்டோ எல்லாம் குடுத்திருக்கேன் கண்ணா. அப்புறம் இந்த மேட்ரிமோனில,  என்னன்னு பார்த்து பதிஞ்சு வை கண்ணா..” என்று பேச,

“சரிப்பா…” என்றான் மகன்.

“நாளன்னைக்கு வேற ஒரு வேலையா புதுக்கோட்டை போறேன். அங்கயும் எனக்கு தெரிஞ்சவங்க, கல்யாண தரகு பாக்குற ஆளுங்க இருக்காங்க. அவங்கக்கிட்டயும் சொல்லி வச்சிட்டு வர்றேன்..” என,

“கல்யாணத்துக்காவது நான் வரலாமா வேணாமா?!” என்று இடைபுகுந்தார் மகாலட்சுமி.

இத்தனை நேரம் அவர் அமைதியாய் இருந்ததே பெரிது. மகாவிற்கோ கோபம் ஒருப்பக்கம், ஆற்றாமை ஒருப்பக்கம். தன்னைக் கேட்காமல், தன்னிடம் கலந்துகொள்ளாமல், கணவர் தானாய் ஒரு முடிவு எடுத்திருப்பதும், அதற்கு மகனும் ஒன்றும் சொல்லாமல் இருப்பதும் கண்டு, உள்ளுக்குள் வெகுவாய் தவித்துப்போனார்.

கண்களில் நீர் பூத்துவிட்டாலும் கூட, பார்வையில் இருக்கும் அனல் குறையவில்லை. கணவன் மற்றும் மகன் இருவரையும் பார்த்தவர் “என்ன நடக்குது இங்க?!” என்று கேட்டு வைக்க,

“மகா..” என்றார் பொறுமையாய் விநாயகம்.

“என்ன மாமா?! என்னென்னவோ பேசுறீங்க? அதுக்கு இவனும் அமைதியா நிக்கிறான்? என்ன நினைச்சு வச்சிருக்கீங்க உங்க மனசுல. வந்த பெரியவங்க முன்னாடி, நானும் வேறெதுவும் பேசக் கூடாதுன்னு இருந்தேன். இந்த குடும்பம், குடும்பமா இருக்கணுமா, வேணாமா?!” என்று குரலை உயர்த்த,

கண்ணதாசனோ “ம்மா.. முதல்ல நீ முகத்தை கழுவிட்டு வா..” என்றான் ஒருவித இறுகிய குரலில்.

வெடுக்கென்று மகனை ஏறிட்டுப் பார்த்தவர் “என்ன கண்ணா?” என்று கேட்க,

“என்னம்மா? இல்லை, என்னோட கல்யாண பேச்சு ஆரம்பிச்சு, இப்போதான் ஒரு நாலைஞ்சு நாள் ஆகுமா? ஆனா ஒருநாள் கூட வீட்ல நிம்மதியில்லை. நீயும் அப்பாவும் எதுக்கெடுத்தாலும் சண்டை தான் போடுறீங்க?

அன்னிக்கு இருந்து நானும் சொல்றேன். கல்யாணம் சந்தோசமா செய்ய வேண்டிய ஒன்னு. இப்படி எல்லாத்துக்கும் சண்டை போட்டுட்டு, நான் சொல்றதுதான் சரி, நீ சொல்றது தான் சரின்னு பிடிவாதத்துல பண்ற ஒன்னு இல்லை ம்மா..” என்று கசந்தே சொல்லிவிட, சட்டென பெற்றவர்கள் இருவருக்குமே முகம் மாறிவிட்டது.

“கண்ணா.. கண்ணப்பா.. கண்ணதாசா..” என்று, விநாயகம் கொஞ்சம் பதறியே மகனது அருகினில் வர,

“இல்லடா அது..” என்று மகாவும் மகனது பக்கம் வந்து விட்டார்.

கண்ணதாசனோ, பெற்றவர்கள் இருவரின் கரத்தையும் ஒன்றாய் பற்றி “ரெண்டு பேருமே, எனக்கு நல்லதா ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்னு நினைக்கிறீங்க. ரெண்டு பேரோட எண்ணமும் ஒண்ணுதான். ஆனா போற வழி வேற வேறயா இருக்கு. ம்மா உனக்கு ஒன்னு சொல்றேன், நீ எப்படி நம்ம எல்லாம் சந்தோசமா இருக்கணும், நல்லா இருக்கணும்னு நினைக்கிறியோ, அதுபோலத்தானே அப்பாவும் நினைப்பாரு. அதுல உனக்கு என்ன சந்தேகம்?!

இத்தனை வருஷ வாழ்க்கைல அப்பாவை நீ புரிஞ்சுக்கலையா?! இல்ல அப்பா, அவரை புரியவைக்க தவறிட்டாரா? இருங்க இருங்க.. ரெண்டு பேரும் இப்போ பேசவேணாம். நான் பேசி முடிச்சிக்கிறேன். அக்காங்க கல்யாணம் நடந்தது. அது ஏற்கனவே முடிவு பண்ண ஒன்னு. சோ, குழப்பமே இல்லாம எல்லாம் தெளிவா, அடுத்து அடுத்து இது இதுன்னு பண்ணி முடிச்சிட்டீங்க.

ஆனா, என்னோட கல்யாணம் அப்படியில்ல. ம்மா அன்னிக்கே சொன்னேன், எதுவா இருந்தாலும் அப்பாவும் நீயும் கலந்து பேசி முடிவு பண்ணி பண்ணுங்கன்னு. கண்டிப்பா நீங்க பாக்குற பொண்ணத்தான் நான் கல்யாணம் பண்ணப் போறேன். ஆனா அதை சந்தோசமா, ஒத்துமையா நடத்திக்குடுங்க. இந்த ஒரு நாளைக்கே, நீ கண்ணீர் விட்டு நிக்கிற? என்னம்மா இது?!” என்று கேட்க,

தங்களின் மகனா இப்படி நீளமாய் பேசுவது என்றுதான் பார்த்து நின்றனர் பெற்றவர்கள். பின்னே கண்ணதாசனுக்கு இத்தனை நீளமாய் எல்லாம் பேசத் தெரியும் என்பது, இதோ இப்போதுதானே தெரிகிறது.

கண்ணதாசனுக்கு அவர்கள் பார்வைகளின் அர்த்தம் புரிந்தாலும், அதைப்பற்றி எல்லாம் எதுவும் சொல்லாமல் “நான் சொல்றது புரியுதுதானே?!” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

“அது.. அப்பா அப்படி பேசவும்..” என்று மகா ஆரம்பிக்க,

“ஏன் ம்மா, அப்பா சொல்றதுல என்ன தப்பிருக்கு?” என்ற கேட்ட மகனை மீண்டும் திகைத்துப் பார்க்க,     

“ம்மா நல்லா யோசிச்சு பாரும்மா. எனக்கென்ன வயசு?! இருபத்தி ஒன்பது ஆகப்போகுது. பொதுவா இப்போ இருக்கிற காலத்துல பொண்ணு கிடைக்கிறதே பெருசா இருக்கு. அதையும் மீறி கல்யாணம் நடந்து, குழந்தை பிறந்தாலும், வாழ்க்கை நிச்சயமா அப்படின்னு கேட்டா, அது கண்டிப்பா இல்லை.

எப்போவேணாலும், யாருக்கு வேணாலும் பிடிக்காம போகுது. டைவர்ஸ் ஆகுது. இப்போ நீ சொல்றமாதிரி வீட்டோட இருக்கிற பொண்ண, உள்ளூர்ல இருக்கிற பொண்ணயே கட்டுறேன்னு வை, நாளைக்கே அந்த பொண்ணுக்கு உன்னோட ஒத்துவரல. இல்லையா, அக்காங்க வந்து போறதுக்கு பேசுதுன்னு வை, தனியா போகணும்னு சொல்லுதுன்னு வை, நீ என்ன செய்வ?!” என்று கேட்டு வைக்க,

“என்னடா இப்படில்லாம் பேசுற?!” என்றார் மகா விழிகளை உருட்டி.

விநாயகமோ, மகன் எங்கே வந்து நிற்கப் போகிறான் என்பதனை உணர்ந்து, மனைவியை அவனே பேசி சமாதானம் செய்துகொள்ளட்டும் என்று, வெறும் பார்வையாளராய் அமர்ந்திருந்தார்.

“நிஜம்தான ம்மா.. ஊர் உலகத்துல நடக்காததையா சொல்றேன். இதோ பக்கத்துக்கு வீடு ரமேஷுக்கு போன மாசம் தானே டைவர்ஸ் ஆச்சு. இதுக்கு சொந்த தாய்மாமா பொண்ண கட்டினான். யாரும் எதிர்பார்த்தாங்களா?!” என, மகாலட்சுமியின் தலை இல்லை என்று ஆடியது.

“ம்ம் இப்போ வேலைக்கு போற பொண்ணுன்னா, குடும்பத்துல ஒண்ணுன்னா கை குடுக்குமா? சொல்ல முடியாது, இப்போ ஐடி பீல்ட்ல திடீர்னு எல்லாருக்கும் வேலையை தூக்கி விடுறான். எனக்கும் அதுபோல ஆகலாம். அப்போ நான் என்ன செய்ய முடியும்? அடுத்த வேலை கிடைக்கிற வரைக்கும், நான் யாரோட கையை பார்க்க முடியும்?” என,

“ஏன் டா நாங்க இல்லையா?!” என்றார் மகா வேகமாய்.