“ஆமாங்க சம்பந்தி, நல்ல பெரிய மண்டபம் தான். மெயின் ரோட்டிலேயே இருக்கு, கார் பார்க்கிங் விசாலமா இருக்கும்.ரெண்டு கிலோமீட்டர் தூரத்துல ஹோட்டல் இருக்கு. அங்க ரூமுக்கும் பேசிட்டேன். பக்கத்துல இருக்கிறது தான் தோது பாருங்க” என்று இன்னும் பல தகவல்களை பகிர்ந்துவிட்டு, கலந்தாலோசித்து முடிவுக்கு வந்தனர் சுந்தரமும், நிலனின் குடும்பமும்.
நிலன், கனிமொழி திருமண பேச்செடுத்து இரு வாரங்கள் கடந்திருக்க, திருமண தேதி குறித்து, மண்டபம், தங்கும் வசதி என்று இன்னும் பிற ஏற்பாடுகள் வெகு ஜோராக நடந்துக் கொண்டிருந்தது.
அப்பா அலைபேசியில் இருப்பதை கவனித்த தேன், அவருக்கு சாப்பாடு எடுத்து வைத்ததைச் சுட்டி காட்டிவிட்டு, தனது பையுடன் வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.
வெங்கடேசனிடம் பேசி ஒரு வாரமாகியப்பின்னும் பதில் வராமல் போக, போன வாரம் அழைத்து பேசியிருந்தார் சுந்தரம். அதில் அவருக்கு கிடைக்க பட்ட செய்தி ருத்ரனை இப்போதைக்கு தொடர்பு கொள்ள இயலவில்லை, எனினும் இந்த மாத முடிவுக்குள் அவனை தொடர்பு கொண்டு செய்தியை கடத்திவிடுவேன் என்றும், அவனை வர சொல்லி அழைத்து பார்ப்பதாகக் கூறினார்.
அவன் வர முடியாதென்றாலும் வீட்டளவில் நிச்சியம் போன்று கனியின் திருமணத்தை ஒட்டி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார். அதற்கு சுந்தரமும் சம்மதித்துவிட்டார். மகளிடம் அதைப் பற்றி சொன்ன போது அவளின் முகம் பிரகாசிக்கவில்லை, பதிலாக தீவிர சிந்தனையில் ஆழ்ந்தது.
இந்த ஒரு வாரமாக மகளை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். எதையோ யோசித்தபடியே தான் சுற்றி வருகிறாள் என்பது புரிந்தது. அவளாக தெளிந்து விடுவாள் என்று சுந்தரம் கனியின் திருமண ஏற்பாடுகளில் முனைப்பாக இருந்தார். தேனின் நிச்சியத்தை எப்போது எவ்வாறு வைத்து கொள்ளலாம் என்று கனி, நிலன், நிலனின் பெற்ற்றோர் என்று அனைவரிடமும் பேசினார்.
நிலன் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு தான் வருவதாக இருந்தது. தேனின் நிச்சியம் கனியின் திருமணம் முடிந்த வாரமே வைத்துக்கொள்ளலாமா என்று சுந்தரம் கேட்டிருக்க,
“அப்படியே பண்ணிடலாம், அந்த வாரம் வெள்ளி கிழமை நல்ல நாள் தான் சம்பந்தி, இங்க ரிசப்ஷன் ஞாயிற்று கிழமை தான, அங்க முடிச்சிட்டு வந்திடுவோம், எப்படியும் பொண்ணும் மாப்பிள்ளையும் மறுவீட்டுக்கு வியாழன் அங்க தான வராங்க.” என்று சொல்லியிருக்க,
“நானும் அப்படி செய்யலாம்னு தான் யோசிச்சிருக்கேன், எதுக்கும் மச்சான் கிட்ட பேசிட்டு உங்களுக்கு தாக்கல் சொல்லுறேன்.” என்று பேசி முடித்தார்.
அன்று கடையில் கூட்டம் கணிசமாக இருந்தது. “வெற்றி, இன்னும் கண்மணி வரலையா?”
“இன்னும் இல்லைங்க ஐயா. அப்புறம் புது சரக்கெல்லாம் அக்கா சொன்னது போல இங்க முன்னாடியே வச்சிருக்கேன். நீங்க பாத்துக்கிடுங்க” என்று சொல்லிவிட்டு அவன் பில் போடுவதில் மும்மரமாகிவிட்டான்.
மணி பனிரெண்டை கடக்க கண்மணி வந்து சேர்ந்தாள். “என்னக்கா இம்புட்டு லேட்டு” என்று வெற்றி மேலும் சில புது வரவுகளை முன்னிருக்கையில் அடுக்கிக் கொண்டே கேட்க, “வேலைய பாருடா…” என்றவள் நேராக சுந்தரம் இருக்குமிடம் சென்றாள்.
“என்ன கண்மணி எதுவும் பிரச்சனையா?” என்று சுந்தரம், கண்மணியின் முகம் காண்பித்த கடுகடுப்பில் விசாரிக்க,
“ஆமா சித்தப்பா… இந்தப் பயலோட எனக்கு ஒரே மண்டையடி தான். நல்லா படிக்கட்டும், நாலும் தெரியட்டும்னு வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சேன். அவன் என்னடானா என் லவ்வர் வீட்டுல பேசுங்கனு ஒரு வாரமா அப்பாவும் பிள்ளையும் என்னைய போட்டு படுத்துறாய்ங்க.”
“உன் சம்மதம் அவனுக்கு முக்கியம்னு நினைக்கிறான், அதான் கேட்கிறான். பேசி தான் பாரேன்”
“அய்யோ சித்தப்பா அதுக்கு இல்ல”
“அம்மாடி அவன் இன்னமும் உன் பேச்சை கேட்டு தான் நடந்துகிறான். அப்போ நீ அவனுக்குன்னு பார்க்கணும்ல. பேச தான போற? பேசி பாரு.என்னவாகிட போகுது?”
“பேசலாம் சித்தப்பா தப்புன்னு இல்ல. அவனுக்கு என்ன வயசாகிடுச்சி? இப்போ தான் இருபத்தி நாலு. இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு. அதுக்குள்ள கல்யாணமா? படிச்சு வேலைக்குப் போக வேணாமா?”
“அதுலாம் கார்த்தி கெட்டிக்காரன், வேலையில சேர்ந்திடுவான். அப்படி இல்லைனாலும் இங்க என்ன பணமா இல்ல, இங்க வந்துகூட அவன் பொழைச்சுப்பான்.”
“நல்ல கதையா போச்சு. இங்கன அவன் சும்மானு இருப்பான் பாருங்க சித்தப்பா… அவன் பண்ண ரவுச பார்த்தீங்க தான. அரசியல், கட்சி, போராட்டம்னு அவனை சமாளிக்க முடியாம தானே அவனை வெளியில அனுப்பி வச்சது”
“அதுக்கு தான் நானும் சொல்றேன்.அவனுக்கு பிடிச்ச பொண்ணை பேசி முடி, அந்தப் பொண்ணு அவனை பாத்துக்கிடும்.”
“ம்கும்… நல்லா பாத்துக்கும். அவங்க பேசுற மொழியும் வேற, பழக்கவழக்கமும் வேற. இவன் படிச்சு முடிச்சதும் அங்கேயே வேலை பார்க்கணுமாம். அந்தப் பொண்ணுக்கு அங்க தான் செட்டில் ஆகணுமாம். ஒத்த பையனை வச்சிருக்கேன். அவ்ளோ தொலைவுல அவனை விட்டுட்டு நாங்க என்ன பண்றது?”
“இது என்ன பெரிய குதிரை கொம்பா, நீங்களும் அவனோட போய் இருங்க. மாமாவை நான் பார்த்துக்கிறேன்.”
“அதுசரி, அங்கிட்டு போயிட்டா இங்கன வயலு, பிசினஸ் இது எல்லாம் யாரு பார்ப்பா? மருமகனும் மாமாவும் நல்லா கதை சொல்றீங்க” என்று நொடித்தாள் கண்மணி.
“ஹாஹா… மாமாவும் எடுத்து சொல்லிருப்பாங்க போலயே “
“பின்ன… அதேன் லேட்! கார்த்தி அப்பா பொண்ணு வீட்டுல பேசிட்டாங்க சித்தப்பா”
“இம்புட்டு கதை பேசிட்டு , இப்போ சொல்லுத விசயத்தை” என்றார் சிரித்துக் கொண்டு சுந்தரம்.
“நமக்கு தான் எதையும் சுளுவா சொல்ல வராதே!”
“என்ன சொல்றாங்க பொண்ணு வீட்ல”
“முறையெல்லாம் சொல்லாதீங்க சித்தப்பா. அவங்களுக்கு இங்க நம்ம வீட்டை பார்க்கணுமாம். அடுத்த வாரம் புதன் கிழமை வராங்கலாம். தேனை லீவு போட சொல்லணும்னு, நீங்களும் பெருசா வேலை வச்சுகிடாதீங்க அப்புறம் அம்மா அப்பாவையும் வரச் சொல்லிருக்கேன்.”
“எதுக்குத்தா இத்தன கூட்டம்?”
“நமக்கும் ஜனங்க இருக்குன்னு காட்ட வேணாமா சித்தப்பா”
“சரியா போச்சு, பயந்துகிட போறாங்க”
“நம்ம வீடு இப்படி தானு சொல்லிடனும் சித்தப்பா, ஆளும் பெயருமா தான் இருக்கும்னு புரிஞ்சிகிட்டும். அந்தப்பிள்ளைய பார்த்தாலே தெரியுது”
“என்னன்னு?”
“ரொம்ப பதிவிசு போல, இவனுக்கு எங்க போச்சு புத்தினு புரியல”
“பேரனுக்கு பிடிச்சிருக்கு, அவன் சொல்றது போல நீ இன்னும் பட்டிக்காடா இருக்க” என்று சுந்தரம் கார்த்தி சொல்வதைப் போல கேலி பேச,
“இப்ப இருக்கிற பசங்களை என்னனு சொல்லிட முடியுது. நமக்கு கொடுப்பினை அவ்ளோ தானு நினைச்சுக்க வேண்டியது தான்.”
“இங்க இருந்தா கேசு, கட்சி, போராட்டம்னு சுத்திட்டு இருக்கானு புலம்புன. அந்தப் புள்ள பேச்சை கேட்டு தான் இப்போ மேல படிக்க போயிருக்கான். இதுக்கு மேல என்ன குறை? நல்ல பிள்ளையா தான் இருக்கும். அடுத்த வாரம் பேசி முடிச்சிடுவோம். கவலையை விடு.”
“ஹ்ம்ம்… அது என்னமோ சரி தான் சித்தப்பா. பேசிக்கிடலாம். நான் போய் எதெல்லாம் நிறைய போயிருக்கு கணக்கு பார்த்திட்டு வரேன். புதுசா வந்ததை முன்னுக்க வைக்க சொன்னேன்” என்று சொன்னவள், வேலையைப் பார்க்க சென்றுவிட்டாள்.
அன்றைய பொழுது வழக்கம் போல இவர்களுக்குச் செல்ல, கல்லூரியில் தேர்வுகள் நெருங்குவதால் லேப், இன்டர்னல் என்று மாணவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது தேன்மொழிக்கு. இருந்தும் இன்றைய கடைசி இரு வகுப்புகள் அவளுக்கு எதுவும் இல்லாமல் இருக்க, ரெகார்ட் நோட்டை திருத்திக் கொண்டிருந்தாள்.
பிரியா வகுப்பை முடித்து வந்தவள், “அடி தேனு…”
“என்னடி?”
“நாம மட்டும் தான்டி கடைசி ஹவர் ப்ரீயா இருக்கோம்”
“அதுக்கு என்ன இப்போ?”
அவள் திருத்திக் கொண்டிருந்த நோட்டை மூடி விட்டு, “கதை பேசுவோம்டி”
“எனக்குத் திருத்தனும்டி… நாளைக்கு லேப் இருக்கு, நேரம் இல்லடி. வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியாது”
“வீட்டுக்கு எல்லாம் எடுத்துட்டு போக வேணாம். நாளைக்கு லேப் இருக்குல, அந்த லேப் அசிஸ்டன்ட் மீனா பொண்ணுகிட்ட எல்லாத்தையும் விவரமா சொல்லிடு, அவ பார்த்துப்பா. நீ கண்ணும் கருத்துமா கரெக்ட் பண்ணு” என்றவள் , அவள் கையில் இருக்கும் பேனாவை வாங்கி மூடி வைத்தாள்.
“விட மாட்ட நீ… சரி என்ன பேச?”
“ஒரு சூப்பர் மேட்டர்” என்று நாற்காலியை தேன் பக்கமாக நகர்த்திவிட்டு, அதில் இன்ஸ்டாகிராம் சென்றவள், அவள் தேடிய ஐடியை எடுத்துவைத்தாள்.
“தேனு, இன்னைக்கு கிளாஸ்ல கேர்ள்ஸ் இந்த செலிபிரிட்டி பத்தி தான் பேசிட்டு இருந்துச்சுங்க. பசங்களும் தான். பைக் ரைடர். பாரேன்.” என்று அதில் இருந்த காணொளிகளை காட்டினாள்.
“ஹ்ம்ம் செம்ம… இப்படி காடு மலைனு எனக்கும் போக ஆசை தான்.”
“அதான் உனக்கு காட்டுறேன். நீ போனா என்னையும் கூட்டிட்டு போடி”
“எதுக்கு எங்க அப்பா என்ன ஓடவிட்டு அடிப்பாரு. போதாததுக்கு உன் வீட்டு ஆளுங்களும் சேர்ந்து எனக்கு டின் கட்டனும்?”
“ப்ச்… ஹே! உனக்கு தான் கல்யாணம் பேச போறங்க தான. உங்க அத்தான் செமையா பைக் ஓட்டுவாருனு சொன்னியே!”
அவளை திரும்பி முறைத்தவள், “அதெல்லாம் ஞாபகம் இருக்கா உனக்கு?”
“என்னடி இப்படி சொல்லிட்ட! அன்னைக்கு நடந்ததை நீ தான் ஒண்ணு விடாம சொன்னியே! எனக்கு அப்பவே தெரிஞ்சிடுச்சு நீ அவுட்டுன்னு”
“என்ன?” தேன் புரியாமல் கேட்க,
“காதல் கிரிக்கெட்டு விழுந்திடுச்சு விக்கெட்டு” என்று சிரிக்க,
அவள் தோளில் செல்லமாக அடித்த தேன்மொழி, “நீ என்ன வேணும்னாலும் செய். ஆனா பாட மட்டும் செய்யாதடி” என்று இப்போது காதை தேய்த்து விட,
“அடிங்க! என் புருஷன் நான் பாடுறதை எப்படி ரசிப்பாரு. போடி… கழுதை… ரசனையே இல்ல உனக்கு”
“சரிதானுங்க அம்மணி!”
“ப்ச்… நான் என்ன சொல்லிட்டு இருந்தேன். இந்த செலிபிரிட்டி ஃபேஸ் தெரியாதுடி யாருக்கும். பாரேன் ஹெல்மெட் போட்டு தான் எல்லா வீடியோவும் இருக்கு. பாதிக்கு பாதி வெளிநாட்டுல எடுத்த வீடியோ. ஆனா பாட்டு மொத்தமும் நம்ம யுவன் தான். என்ன ராசனைனு பார்த்தியா?” என்று சில காணொளிகளை போட்டு சிறிது சத்தம் வைத்தாள்.
“ரசனைக்காரன் தான்” என்று தேன்மொழியும் புகழ,
“பாரேன்! உங்க அத்தான் எப்படியாக்கும்?”
“எதுக்கு?”
“கல்யாணம் பண்ணிக்க போறியேடி தெரிஞ்சுக்க வேணாமா?”
“எங்க? மூணு வருஷமா பேச தான் டிரை பண்றேன்”
“இன்னுமா அவரு உன் மேல கோவத்துல இருக்காரு?”
“தெரியல!”
“நீ சரியான ட்யூப் லைட். போன்ல பேசி ஒரு புரோஜனுமும் இல்லைன்னு நினைச்சிட்டாரோ?”
அவளது ஐபாடை வாங்கி அவள் தலையில் அடிப்பது போல செய்ய,
“ஏய்!! ஆப்பிள் பிராடக்ட் டி” என்று வேகமாக தேனின் கையிலிருந்து அதை வாங்கினாள் பிரியா.