அத்தியாயம் ஒன்பது:

தமிழ்செல்வனின் மனதிற்குள் பல முடிவுகள். இருப்பது ஒரு வாழ்க்கை. அதை வாழ்ந்து பார்த்தே ஆக வேண்டும்.

அம்மா இருந்தவரை பெரிதாக இடைவெளிகள் தெரியவில்லை. எல்லாம் தன்னைப் போல நடக்கும். அம்மா சென்ற இந்த ஐந்து ஆண்டுகளாக மனதிற்குள் ஒரு தனிமை தான். அதுவும் ஏதாவது கணவன் மனைவி சிரித்து பேசுவதை பார்த்தாலே இப்போதெல்லாம் ஏக்கமாக இருந்தது.

அவன் பேசியது சத்தியமான வார்த்தைகள். பிள்ளைகள் வளர்ந்து அவர்களுக்கு ஒரு வாழ்க்கை அமைந்த பிறகு, இவர்கள் இருவரும் இப்படி தனி துருவமாக நின்றால், வாழ்க்கையில் நிச்சயம் தனிமைப்பட்டு போவர்.

மனதை அலைபாயவிடாத இளைஞன். அதுவும் அந்த செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தைகள் வந்த பிறகு நிலாவின் வைராக்கியம் பார்த்து மனதே விட்டுப் போனது. அடுத்த குழந்தைக்கும் ஒன்பது வருடங்கள் கழித்தும் அதுவே தொடர,

முடியவே முடியாது என்ற எண்ணம் தான். அதனை அவளிடம் சொல்லவும் செய்தான். ஆனால் மங்கம்மா இருக்கும் போது இயற்கையாக தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாய் நிலைத்து நிற்க முடியவில்லை.

நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டான்.

இப்போதெல்லாம் மனது வெகுவாக துணை தேடியது.

நடக்குமா தெரியாது ஆனாலும் முயற்சித்து கொண்டே இருப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டான்.

காலையில் பிள்ளைகள் பள்ளிக்கு தயாராகும் நேரத்தில் தான் கண்விழித்தான்.

எழுந்தவன் முகம் கழுவி வந்து டைனிங் டேபிளில் அமர, இவன் வந்ததை பார்த்து நிலாவின் கைகள் காஃபி விட ஆயத்தமாக.. அவள் விட்டுவிட்டது புரிந்து அவனே கிட்சன் உள்ளே சென்று, சற்று தள்ளி  நின்றே “கொடு” என்றான் இயல்பாக, வெகு இயல்பாக.

‘இவன் எதுக்குடா இங்கே வரை வர்றான்’ என்ற பார்வை பார்த்தாள்.

அவன் சிறிதும் அலட்டவில்லை, கை நீட்டி நின்றான்.

‘இப்படியே வெச்சிட்டு போய்டுவோமா? அவனே எடுத்துக்கட்டும்’ என்ற நினைப்பு மனதில் ஓட, கண்டு கொண்டானோ என்னவோ?

“கைல கொடு கண்ணு” என்றான் மீண்டும்.

“ஜஸ்ட் பிரண்ட்ஸ் ஸாவாவது இருப்போமே” என்ற வார்த்தை அவனிடம் இருந்து வெளியே வரப் பார்க்க, அந்த வார்த்தை கொடுக்கும் ஆபத்தை உணர்ந்து,

“கைல கொடு கண்ணு” என்று மட்டும் சொல்லி விட்டான்.

“என்னவோ எல்லாம் புதுசா பண்ற, சரியில்லை” என்று சொல்லியே அவனின் கைகளில் வைத்தாள்.

பதிலே பேசவில்லை அவன், இயல்பாக வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.

பின் மகளின் பின் நிலா பரபரப்பாகச் சுற்ற, பார்த்திருந்தவன், “பாப்பா என்ன பண்றீங்க? அம்மாவை எதுக்கு இப்படி ஓட விடறீங்க, நீங்க சமத்து பாப்பா தானே. அம்மா சொல்றதை செய்ங்க” என்றான் கட்டளையான குரலில்.

“ம்ம்ம் சரிப்பா” என்று ஸ்ராவணி ஓடி அவனிடம் வர…

‘எனக்கும் என் பொண்ணுக்கும் இடையில நீ எதுக்கு’ என்ற வார்த்தைகளை நிலா உதிர்க்கும் முன்னரே…

“எஸ் பா, அவளை அடக்குங்க. அம்மாவை ரொம்ப படுத்தறா. நாங்க சொன்னா இவளுக்கு கோபம் வருதோ இல்லையோ அம்மாக்கு வருது” என்று சுதர்ஷன் அப்பாவிடம் சொல்லி விட்டான்.

“எதுக்குடா அடக்கணும். என் பட்டுக்குட்டி நாம சொன்னாலே கேட்பாலே. அவ ரொம்ப குட் கேர்ள். உனக்கு தான் தெரியலை” என்று சுதர்ஷனுக்கு சொல்லி…

“ஆமாம் தானே பட்டு” என்றும் சொல்ல,

“ஆமாம் பா, அண்ணாக்குத் தெரியலை என்று வேகமாக சொன்னாள்.

“அம்மா நான் என்ன பண்ணனும்?” என்று நிலாவிடம் சென்று நிற்க…

“குளிக்கணும் வா” என்று அவளை நிலா ரூமின் உள் அழைத்து போனாலும் செல்லும் போது தமிழை பார்த்த பார்வை சொன்னது ‘நீ புடுங்கறது அத்தனையுமே தேவையில்லாத ஆணி தாண்டா’ என்று.

அதையெல்லாம் துடைத்து தூர வைத்தான்.

பின் அவளை குளிக்க வைத்து மகன்களுக்கு தோசை சுட நிற்க…

“நான் சுடடுங்களா அம்மணி” என்று வேலை செய்பவர் கேட்ட போது,

“மா, நீ சுடு” என்ற கௌரிஷின் குரல் சத்தமாக ஒலித்தது.

சுதர்ஷனோ “அக்கா, நீங்க சுடாதீங்க, நான் தோசை கேட்டா நீங்க ஊத்தப்பம் சுடுவீங்க” என்று அவரிடமே நேரடியாக சத்தமிட்டான்.

இப்படியாக நிலா நின்று சுட…

சிம்மிஸ் உடன் “மா” என்று தட்டும் கையுமாக வந்து நின்றாள் ஸ்ரவாணி. உடை போட்டால் உண்ணுவதற்குள் நாஸ்தி செய்து விடுவாள்.

“மா, அப்பா ஊட்டி விடறாங்கலாம். எனக்கு தோசை” என்று நிற்க…

மீண்டும் நிலா தமிழ்செல்வனை பார்வையால் கண்டிக்க…

கண்டிப்பதை அவள் என்னவோ கண்ணடிப்பது போல இவன் பார்க்க…

அவன் மனதோ

“காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்”

என்று பீஜ்ஜியம் வாசித்தது.

இப்படி அவன் பாடல் ஓட்டும் போது, தோசையோடு மகள் வர…

ஊட்ட ஆரம்பித்தான்.

“பா, இதெல்லாம் ஓவர்” என்று கெளரிஷ் போர்க்கொடி தூக்கினான்.

“வேணும்னா நீயும் வாங்கிக்கோ, பாப்பாவை பார்த்து என்னடா பொறாமை”

“எனக்கும் வைங்க” என்று வந்து வாயை திறந்தான்.

தமிழ்செல்வனின் கைகள் சில நொடி நின்று மகனுக்கும் வாயில் வைத்தது. மனமும் நிறைந்தது.

“பா, நீங்க என்ன பாப்பாக்கு ஊட்டுற மாதிரி ஊட்டுறீங்க, நல்லா சாம்பார் தொட்டு வைங்கப்பா” என்றான் சலுகையாய்.

நிலாவுமே இதனை கவனித்து பார்த்தாள், மக்கள் தந்தையை இவ்வளவு தேடுகின்றனரா என்பது போல.

தந்தை மட்டுமில்லை, மக்களும் அவனை நெருங்கினர்.

சரியாக அந்த நேரம் அலைபேசி இசைக்க… கேசவ நாராயணன் அழைத்துக் கொண்டிருந்தார்.

எடுத்து “சொல்லுங்க ஐயா” என்றவனை நிலா அதிருப்தியாய் பார்த்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்தவன், மக்களோடு இருக்கும் நேரத்தில் அவன் எழுந்து சென்றால் அவ்வளவு தான், தான் அங்கே இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.

அவர் என்ன சொல்கிறார் என்று காதில் வாங்கினான்.

“தமிழு யாரோ பார்க்க வந்திருக்காங்க போல, வந்து என்ன விவரம்னு கேளு” என்றார்.

“ஐயா, நான் பசங்களை ஸ்கூலுக்கு கிளப்பிட்டு இருக்கேன். பாப்பாக்கு தோசை ஊட்டிட்டு இருக்கேன், இப்போ வர முடியாது. ராஜ் தான் அரசியலுக்கு வரணும்னு சொல்றானே அவனை விட்டு என்னன்னு கேளுங்க, இல்லை உட்கார வைங்க, நான் குட்டி கிளம்பினதும் வந்துடறேன்” என்றான்

இப்படி எல்லாம் சொன்னதே இல்லை, கேசவ நாராயணனுக்கு அதிர்ச்சி ஆச்சர்யம் எல்லாம்.

‘இவன் வம்பு செய்கிறானா நம்மிடம்’ என்று யோசித்தார்.

‘உன் பையனை பார்க்கச் சொல்லு. என்னை ஏன் சொல்ற’ என்ற துவனியா அதுவும் புரியவில்லை.

இவரின் முக பாவனைகளை பார்த்து எதிரில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ருத்ர மூர்த்தி “என்ன கேசவா?” என்றார்.

எதுவும் பேசாமல் கைபேசியை வைத்து விட்டார் கேசவ நாராயணன்.

பெரியவர் கேட்கவும்,

“ஆளுங்க வந்திருக்காங்கன்னு தமிழை வரச் சொன்னேன். அவன் பாப்பாக்கு தோசை ஊட்டுறானாம் வர முடியாதாம், ராஜ் ஜை பார்க்க சொல்றான்” என்று சற்று அதிருப்தியோடு சொல்ல…

“நல்லது தானே சொல்றான். இவன் தானே அரசியலுக்கு வரணும்னு சொல்றான், அவனை பேசச் சொல்லு” என்றவர்,

“தங்கப் பொண்ணுக்கு தோசை ஊட்டுறானா, அப்படியே தீபா போலவே குறும்பு” என்று ரசித்து சொன்னார்.

இன்னுமே அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஆகிப் போனது கேசவ நாராயணனுக்கு.

பெண்ணின் பெயரை எடுக்கவே மாட்டார், இன்று ரசித்து சொல்கிறார். ‘என்னடா நடக்குது என்னைச் சுற்றி’

தங்கப் பொண்ணுவின் முக்கியத்துவம் நொடியில் கடத்தி விட்டார் கேசவ நாராயணனுக்கு.

எங்கே போய் ராஜ் ஜை சொல்ல, அவன் படுக்கையை விட்டு எழ வேண்டுமே.

அவரே எழுந்தார் ஆட்களைப் பார்க்க…

அங்கேயோ தமிழ் தோசையை ஊட்டி முடித்து, ஸ்ராவணிக்கு உடை அணிவித்து தயாராக வைக்க, கெளரிஷ் வந்து நின்றான் “டை கட்டி விடுங்க” என்று.

சுதர்ஷன் நிலாவிடம் சொல்லியே விட்டான். “மா, என்னம்மா இவன் ரொம்ப கொஞ்சறான்” என்று.

நிலா எதுவும் சொல்லவில்லை, அவளுமே பார்த்தே இருந்தாள். அழைப்பு வந்ததுமே சென்று விடுவான் என்று நினைக்க, அவன் செல்லவில்லை.

அதையும் விட கௌரிஷ் அப்பாவிடம் இவ்வளவு சலுகை எடுக்கிறான்.

எதுவும் நினைக்க விரும்பவில்லை, சொல்லிக் கொள்ளவுமில்லை. அவளுக்குத் தான் அம்மாவின் அன்பு தெரியவே தெரியாது. அப்பா இருந்தும் இல்லாத நிலையே.

அதனால் தான் மக்களுக்கு செல்லம். அதுவும் மகளுக்கு அதீதம்.

அப்பாவிடம் அவர்கள் சலுகை எடுத்தால் அவளுக்கொன்றுமில்லை அவள் தடுக்கவும் மாட்டாள்.

இதனை எல்லாம் அமைதியாய் பார்த்திருந்தாள், கோபம் எரிச்சல் போல எதுவுமில்லை.

ஆனால் தமிழ் அந்த நொடியில் இதனை விட்டு வேலை என்று சென்று, பிள்ளைகள் அவனைத் தேடினால், அவ்வளவு தான் என்ன செய்வாள் என்று அனுமானிக்க முடியாது.

அவளின் பிள்ளைகள் தேடும் நேரம் அவன் இருக்க வேண்டும், அதை விட அவனுக்கு வேறு என்ன முக்கியம் என்ற நினைப்பு தான்.

அவளின் அமைதியில் அதனை உணர்ந்தானோ!

அதற்குள் ருத்ர மூர்த்தியிடம் இருந்து அழைப்பு.

அவரும் அங்கே அழைக்கிறார் என்று நினைத்து, வர முடியாது என்று சொல்ல நினைத்து, எடுக்க…

“என்னடா நல்ல காரியம் செய்யறியாம். தங்கப் பொண்ணுக்கு தோசை ஊட்டுறியாம், வர முடியாதுன்னு சொல்லிட்டியாம். இப்படித் தான் இருக்கணும். நிலாவும் பிள்ளைகளும் தான் உனக்கு முக்கியம்”

“சும்மா எல்லா நேரமும் இங்கயே சுத்தக் கூடாது” என்றார் கறாராய்.

“அங்க சுத்தக் கூடாதுன்னா வேற எங்க சுத்தறதாம்”

“அதை என் பேத்திக்கிட்ட கேளுடா” எனச் சிரிப்போடு சொல்ல,

நிலா முறைத்து பார்த்தாள். ஸ்பீக்கரில் தான் பேசிக்கொண்டு இருந்தான்.

சிரித்து விட்டவன், “உங்க பேத்தி சொல்லி தான் அங்க சுத்துறேன். அதாவது உங்களை சுத்துறேன், சுத்துவேன், சரியா” என்று சொல்ல,

சட்டென்று அமைதியாகி விட்டார் பெரியவர்.

நிலா இதற்கும் அவனை முறைக்க…

“என்னை முறைச்சு முறைச்சு பார்த்தா, கண்ணு வலிக்கலை” என்று கேட்டே விட்டான்.

“பா, அம்மா உங்களைப் பார்க்கறதே அப்படித் தான்” என்று சுதர்ஷன் நக்கலடித்து சொல்ல,

“சுதர்ஷா” என்ற நிலாவின் குரல் அதட்டலாய் ஓங்கி ஒலிக்க,

“நான் கிளம்பிட்டேன்” என்று பையோடு சென்று வாயில் திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

அவர்களுக்கு காரோட்டும் மேகலா வந்து விட…

பின்பு கௌரிஷ் வர, இருவரும் பையை காரில் வைத்து ஸ்ராவணி வருவதற்காக நிற்க “அம்மா, பட்டுக்குட்டி ரெடி” என்று நிலாவிடம் போய் நின்றாள்.

“எஸ், ரெடி, ரெடி” என்று அவளின் கன்னத்தில் முத்தம் வைத்து அவளின் பையை எடுத்து வந்தவள் “மிச்சம் வைக்காம சாப்பிடணும்” என்று காரின் அருகில் வரவும் சொல்ல…

“ஆமாம், இல்லைன்னா ஈவ்னிங் அம்மா உனக்கு அதைத்தான் ஊட்டு வாங்க” என்று கௌரிஷ் பாவனையாய் சொல்ல…

“உனக்கு ஸ்நாக்ஸ் கிடையவே கிடையாது” என்று சுதர்ஷன் சொல்ல…

‘அப்படியா’ என்பது போல ஸ்ராவணி நிலாவைப் பார்த்தாள்.

நிலா பதில் சொல்லும்முன்னே…

“மிச்சம் வைக்காம சாப்பிடணும் பாப்பா. அப்போ அண்ணாங்க சொல்றது சரியா தப்பான்னு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. மை தங்கக் குட்டி இஸ் அ குட் கேர்ள்” என்றான் தமிழ்செல்வன்.

அவனும் பின்னோடே வந்து நின்றிருந்ததை அப்போது தான் கவனித்தாள்.

அவனுக்கு வழி விட, அவளை முன் சீட்டில் அமர்த்தி சீட் பெல்ட் போட, அண்ணன்கள் இருவரும் பின்னே அமர கார் கிளம்பியது.

பெரியவர் வாயிலில் நின்று இதனைப் பார்க்க, கேசவ நாராயணன் வந்திருந்த ஆட்களிடம் பேசிகொண்டிருந்தாலும் இதனை கவனித்தார்.

“என்ன செய்கிறான் இவன்?” என்று அவருக்கு பயந்து வந்தது.

நிலாவும் தமிழ்செல்வனும் உள்ளே சென்று விட, இதனைப் பார்த்தே நின்றிருந்தார்.

அவருக்கு நிலா அவரின் மகள் அல்ல, தீபாவின் மகள்!

தீபாவிற்கோ அவளின் மகள் அல்ல கேசவ நாராயணனின் மகள்!

இப்படி வளர்ந்தவள் தான் நிலா.

தாத்தா அன்பாய் பார்த்தாலும், மங்கம்மா எல்லாமுமாய் இருந்து வளர்த்தாலும். தாய் தந்தை ஆகிட முடியாது.

அதனாலேயே பிடிவாதத்தின் மொத்த உருவமாய் வளர்ந்தாள்.

அதனால் தான் இவ்வளவு வைராக்கியமாய் தமிழின் புறம் சற்றும் திரும்பாமல் அவளால் இருக்க முடிகிறது.

தமிழ் உள்ளே வந்தவன் குளித்து உடை மாற்றி வந்து, கடவுளை வணங்கி, எதிர் வீட்டைப் பார்த்தான், இன்னும் ஆட்கள் இருக்கின்றனரா என்று.

இருந்தனர், ‘செல்லுவோமா’ என்று நினைக்க…

அவன் வேகமாக தயாராகி அங்கே செல்ல இருப்பதை பார்த்தவள்,

“எப்படி? அங்க ஆளுங்க உனக்கு காத்திருக்க மாட்டாங்க. ஆனா நான் சமைச்சது உனக்காகக் காத்திருக்கணுமா?” என்று எங்கோ பார்த்து பேசினாள்.

அவ்வளவு தான், வேகமாக உணவு மேஜை நோக்கிச் சென்றவன், அங்கிருந்த ப்ளேட்டில் அவனே இட்லியை வைத்துக் கொண்டு சாம்பார் ஊற்றி சாப்பிட ஆரம்பிக்க…

நிலா குளிக்கச் சென்றாள்.

அவள் குளித்து தயாராகி வரும் வரை அவனால் இனி செல்ல முடியாது.

வீட்டில் யாரும் காணவில்லை, வேலை செய்யும் அக்கா கடைக்கு சென்றிருப்பார் போல.

‘அப்போதே பிள்ளைகள் பள்ளி சென்று விட்டனர். இன்னும் ஏன் இவன் வராமல் இருக்கிறான், வேண்டுமென்றே செய்கிறான்’ என்று கேசவ நாராயணன் முடிவே செய்துவிட்டார்.

இங்கே அவனோ ஒய்யாரமாய் சோஃபாவில் அமர்ந்து, மனைவியின் அறையைப் பார்த்து, அவள் குளித்து வெளியே வந்து தயாராகும் நேரம் அனுமானித்து, அவளுக்குக் கேட்க பாடிக் கொண்டிருந்தான்.

“நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும்

பார்வையில் புது புது கவிதைகள் மலர்ந்திடும்

காண்பவை யாவுமே தேன்

அன்பே நீயே அழகின் அமுதே….”