மனம் மறுபடி சரிகிறதே!

8

உறவுகள் எல்லாம் முடிவு செய்துக் கொண்டது தியாகுவை கிருஷ்ணன் ஏற்கவில்லை என. 

ராஜியின் திருமணத்தில் தியாகு இறுதியாக வந்தான். 

ராஜி அழுதுக் கொண்டே “என் கடைசி ஆசை என வைத்துக் கொள்ளுங்கள் மாமா.. கண்டிப்பா நீ வரணும்” என அழுதுக் கொண்டே அழைத்தால் வந்தான். தியாகுவை சபரி கூட வரவேண்டாம் டா.. ராஜி கூப்பிட்டால் வருவியா.. அப்பா அம்மா மதிக்கவேயில்ல எதுக்கு வருகிறாய்.. என்றேதான் திட்டினான். ஆனாலும் ராஜிக்காக வந்து தலையை காட்டி விட்டு.. அவளுக்கு பட்டு புடவையும் மாப்பிள்ளைக்கு பட்டு வேட்டியும் வாங்கி பரிசளித்தான்.

மேடையில் ராஜியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் பார்த்து சற்று மிரண்டபடியே நின்றிருந்த புதுமாப்பிள்ளை மனோஜ்குமார். தியாகுவை பார்த்தும்.. ராஜி, பேசுவதும்.. நலவிசாரிப்பதும் லேசாக மேடையில் அந்த நபரை அணைப்பதும்.. பரிசுகளை ஆசையோடு வாங்கிக் கொண்டு சிரிப்பதையும் பார்த்து சந்தோஷமும் ஆராய்ச்சியும் எழுந்தது. தனக்கு புதுமனைவி இது யாரென அறிமுகம் செய்வாள் என காத்திருந்த மனோஜ்க்கு அப்படி ஏதும் நடக்காதது இன்னமும் அதிர்வை தந்தது.

தியாகுதான் ராஜியின் அன்பு பிடியிலிருந்து சங்கோஜமும்.. சபை நாகரீகமும் கருதி இதமாக விலகியவன்.. “மாப்பிள்ளை.. நான், தியாகராஜன்.. இவளின் இரண்டாவது தாய்மாமா..” என கைகுலுக்கி தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு.. “வாழ்த்துக்கள்.. சந்தோஷமாக இருங்க.. அவளையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்றான்.

மனோஜ் மனதில் ஒரு நொடி ஏதேதோ கேள்விகள்.. ஆனால், அடுத்த நபர் வர.. தியாகு விடைபெற்றும் விதமாக தலையசைக்க.. புதுமாப்பிள்ளையும் ஏதும் புரியாமல் விடைகொடுத்து அனுப்பினான்.

ராஜி மீண்டும் தன் சோகமுகத்தை தாங்கிக் கொண்டே மேடையில் நின்றாள்.

எல்லோரும் அவளிடம் வந்து.. “கொஞ்சம் கண்களை துடை.. சிரி..” என ஏதேதோ சொல்லி அவளை சமாதானம் செய்ய முயன்றாலும்.. ராஜி பிடிவாதமாக நின்றாள்.

ராஜி, அப்போது மட்டுமில்லை.. அதையேதான் மனோஜிடம் சொன்னாள். தன் வாழ்க்கையை தானே மண்ணள்ளி போட்டுக் கொண்டாள் எனலாம். இது முன்பு தியாகுவின் மேலிருந்த.. காதலால் வந்த கோவமல்ல, பெரியவர்கள் மேல் வந்த கோவம். எனது இரண்டு விருப்பங்களையும் மீறி.. வாழ்க்கையை இப்படி ஆக்கிவிடார்களே என்ற கோவம். அதில், என்ன செய்கிறோம்.. ஏது செய்கிறோம் என புரியாமல், முதலிரவில்.. கணவன் தன்னிடம் பேச முயன்ற போது.. பிடிகொடுக்காமல் நின்றாள்.

மனோஜ் நெருங்கி நின்று.. “என்னை பிடிக்கலையா.. பிடித்துதானே கல்யாணம் நடந்தது.. நான் ஏதும் இப்போது.. அதாவது, நாம பேசி புரிந்துக் கொள்ள வேண்டும்தானே..” என்றான் இதமாகவே.

ராஜி பட்டென.. பெரியவர்களை பழி வாங்குவதாக எண்ணிக் கொண்டு “இல்லை.. உங்களை பிடிக்கலைன்னு வீட்டில் சொன்னேன் கேட்க்கலை.. நான் வேறு ஒருவரை காதலித்தேன்..” என கட்டிலில் அமர்ந்தவள் எதோ யோசனையோடு “எனக்கு எப்போதும் உங்களை பிடிக்காது.. போதுமா.. நீங்க ப்ளீஸ் உங்க வழியை பார்த்துகுறீங்களா” என்றாள் கோவமாக.

மனோஜ் ஒருநொடிதான் அதிர்ந்து நின்றான், பின் தன் அன்னை தந்தை தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுவிட்டான் அப்போதே. மாப்பிள்ளை ஊர் கோவை. பெண்வீட்டில்தான் முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். அதனால், மாப்பிள்ளை வீட்டாரினை அருகில் ஒரு வீடெடுத்து தங்க வைத்திருந்தனர். அங்கே சென்றுவிட்டான் நடந்தே மனோஜ்.

மனோஜின் பெற்றோர், கிருஷ்ணனுக்கு அப்போதே அழைத்துவிட்டனர்.

நடுஇரவில்.. நடு வீட்டில்.. புதுமண தம்பதி தவிர மற்ற எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ராஜி, இப்போது அழுகையில்லாமல் தன் அறையில் அமர்ந்திருந்தாள். மனோஜ்தான் அரண்டு போய் அமர்ந்திருந்தான்.

ராஜி மாமியார் வீடு செல்லவேயில்லை. எந்த சமாதானமும் எடுபடவில்லை மனோஜ் வீட்டாரிடம். மருமகள் என ஏற்காமல் விட்டு சென்றனர்.

ராஜி, நிம்மதியாக அறையில் அடைந்தே இருந்தாள் அடுத்த ஒருவாரமும். அதை தொடர்ந்து.. தன்போல ஒன்றுமே நடவாதது போல வேலைக்கு கிளம்பிவிட்டாள். ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்தாள் அப்போது. அதனால் பள்ளிக்கு கிளம்பிவிட்டாள்.

தியாகுவிற்கு, ஏதும் தெரியவில்லை முதலில். பின் ஒருவாரம்  சென்று ராஜி தானே அழைத்து நடந்ததை சொன்னாள். சந்தோஷமாகவே இருந்தாள். அப்படிதான் இருந்தது அவள் பேச்சு.

தியாகு திட்டித்தான் விட்டான்.. அறிவிருக்கா.. ‘யாராவது இப்படி உளருவாங்களா.. ஏன் இப்படி படிச்ச முட்டாளா இருக்க.. உன் வாழ்க்கையயும் கெடுத்து.. அந்த பையன் வாழ்க்கையையும் கெடுத்து.. ஏன் டி இப்படி செய்த..’ என வைதான். ஆனால், அதிலும் சந்தோஷம் ராஜிக்கு. புன்னகையோடு மாமா நம்மிடம் முன்போல நல்லா பேசுறாங்க என எண்ணிக் கொண்டாள்.

யாரின் பேச்சும் காதில் ஏறவில்லை ராஜிக்கு. தன் வேலையை பார்த்தாள். புதுமஞ்சள் கயிறு பளபளக்க.. தன் வேலை முடிந்த பின் மாலை நேரத்தில் தியாகுவின் அலுவகலம்  செல்லத் தொடங்கினாள்.

ஒரு பழைய வீட்டினை போகியத்திற்கு அலுவலகமாக எடுத்திருந்தான் தியாகு. எப்போதும் சர்வீஸ் அழைப்புகள்தான் அதிகம். அதனால், பொருட்கள் வைக்க.. வேலை செய்பவர்கள் அந்த மிஷினை கொண்டு வந்து அலுவலகத்தில் வைத்து வேலை பார்க்க.. என இட வசதி தேவையாக இருக்க, வீட்டினைதான் அலுவலகமாக கொண்டிருந்தான். அதில் தியாகுவின் அறையில் மட்டுமே.. ஒரு சேர்.. டேபிள் சிஸ்டம்.. என இருக்கும். மற்றபடி.. எல்லா டேப்ளிலும் மிஷின் சர்வீஸதான். அப்போது நான்கு நபர்கள் தியாகுவிடம் வேலை செய்தனர்.

பிள்ளைகள் அங்கே இருக்க வசதியாக இருந்தது. ராஜியும் சும்மா அமர்ந்து அடுத்து தான் எடுக்க வேண்டிய வகுப்பின்.. குறிப்புகளை எடுப்பாள். 

தியாகுவிற்கு, ராஜி வருவது சங்கடமாகத்தான் இருந்தது, என்ன சொல்லுவதென புரியவில்லை. மனதிற்கு மாற்றம் தேவை என எண்ணிக் கொண்டு அவளை அனுமதித்தான் அலுவலகத்தில்.

லலிதாவிற்கு, ராஜி வருவது போவது எல்லாம் தெரிந்தது. ‘என்ன சொல்ல முடியும்’ என அமைதியாக இருந்தாள். லலிதா கல்லூரியில் தன் பணியை தொடங்கிய நேரம் அதனால், பிள்ளைகள் ஒருமணி நேரம்.. தியாகுவின் அலுவலகத்தில் இருப்பார்கள். பின், லலிதா தன் பணி முடித்து.. வீடு செல்லும் போது கூட்டி செல்லுவாள். தினமும் அலுவலகத்தில் ராஜியை சந்திக்க நேரிடும். ஆனால், ராஜிதான் லலிதாவோடு பேசுவதில்லை.. ஏன் பார்ப்பது கூட இல்லையே.. அதனால் லலிதா பிள்ளைகளை மட்டும் கூட்டிக் கொண்டு வந்துவிடுவாள்.

சிலநேரம் கணவன் அலுவலத்தில் இருந்தால்.. மனையாள் பணி முடித்து வரும் நேரமறிந்து ஏதாவது தின்பண்டம் வாங்கி வைப்பான். லலிதா, கணவனின் டூ வீலர் வெளியே நின்றால்.. அலுவலகத்தின் உள்ளே வருவாள். லலிதாவை பார்த்ததும்.. ராஜியிடம் இது நேரம் வரை பேசிக் கொண்டிருந்த ஜனனி.. “ப்பா.. ம்மா வந்தாச்சு” என தந்தையிடமும் அன்னையிடம் ஓடி ஓடி விளையாட. லலிதா, ராஜியை கண்டும் காணாமல் உள்ளே வந்தாள்.

தியாகுவின் அறையில் லலிதா பாகினை வைத்து அமர்ந்தாள். பிள்ளைகள் இருவரும் “அப்பா ஸ்னாக்ஸ்” என்க.

தியாகு, பிள்ளைகளுக்கு என வாங்கி வந்த சாம்பார் வடையை எடுத்து வைத்தான். தியாகு பிரணவ்விடம் ஒரு பாக்ஸ் கொடுத்து “ராஜி சித்திகிட்ட கொடுத்துட்டு வா” என அனுப்பினான்.

லலிதா முறைத்தாள்.

தியாகு “நீ காபி குடி” என சொல்லி பிளாஸ் எடுத்து வைத்தான், சமாதானக் குரலில்.

லலிதா ப்ளாஸ்கில் இருக்கும் காபியை கணவனுக்கும் தனக்கும் என எடுத்து கொண்டு பருகிக் கொண்டிருந்தாள். தியாகு தன் சேரில்.. மகளை அமர வைத்து.. சாம்பார் வடையை ஊட்டி கொண்டிருந்தான். மனையாள் ‘ப்ரணவ்விற்கு, சயின்ஸ் ப்ராஜெக்ட் செய்யணும்..’ என ஆரம்பித்து.. இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.

ப்ரணவ் அங்கே வர.. அன்னை அவனுக்கும் சாம்பார் எடுத்து கொடுத்து.. உண்ண வைத்து.. கிளம்பினாள்.

தியாகு, மகளை தூக்கிக் கொண்டு வந்து.. மனையாளின் வண்டியில் முன்புறம் அமர வைத்து.. டாடாட்டா காட்டி வழியனுப்பி வைத்தான்.

இதெல்லாம் எப்போதாவது நடப்பதுதான். மாதத்தில் ஒருமுறை இருமுறை.. தியாகு மாமா எனக்கானவர் என இருந்தராஜியின்  கண்களில் இதெல்லாம் படபட.. லலிதாவின் மேல் பொறாமை உருவாகியது. உண்மையாக இப்போதுதான் ராஜி, தான் எதை எல்லாம் இழந்திருக்கிறோம் என தியாகுவும் லலிதாவும் வாழும் வாழ்க்கையை அருகிலிருந்து பார்க்கும் போது.. உணர்ந்தாள்.