அஜித் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த அந்த உருவம், அடுத்த நொடியே சட்டென்று திரும்பி, பாலைவனத்தை நோக்கி ஓடத் தொடங்கியது.

அதைக் கண்ட அஜித்தும் தாமதிக்காமல் அதன் பின்னால் ஓடினான். அவனைப் பின்தொடர்ந்து முகிலும் ஓடினாள்.

சிறிது தூரம் சென்றதும், மூச்சு வாங்கியபடி ஓட்டத்தை நிறுத்திய முகில், தன் முன்னால் பார்வையைச் செலுத்தினாள். ஆனால், அதற்குள் அஜித் அவளது கண்களிலிருந்து மறைந்து, பாலைவனத்தின் இருளுக்குள் சென்றுவிட்டிருந்தான்.

அதிர்ச்சியடைந்த முகில், உடனே திரும்பி நண்பர்கள் இருந்த இடத்தை நோக்கி ஓடினாள்.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவர்களின் முன்னால் வந்து நின்றவள், மூச்சைச் சீர்படுத்திக்கொள்ளச் சில நொடிகள் போராடினாள். பின்னர், “அஜித்… ஒரு உருவத்தைத் துரத்திட்டு அந்தப் பாலைவனத்துக்குள்ள போயிட்டான்!” என்று மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியபடி கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்டதும், தாரகையைத் தவிர மற்றவர்கள் ஒரு நொடியும் தாமதிக்காமல் அஜித் சென்ற திசையை நோக்கி ஓடத் தொடங்கினர்.

முகிலும் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடி, பாலைவனத்தின் ஓரத்தில் நின்றாள்.

“இங்கதான்… இங்கதான் அஜித்தைக் கடைசியா பார்த்தேன்…” என்று கூறியவள், தன் கையை நீட்டி அந்தப் பகுதியைக் காட்டினாள்.

அனைவரும் அந்த இடத்தை அடைந்ததும், சுற்றிலும் தேடிக்கொண்டே, “அஜித்! அஜித்!” என்று குரல் கொடுத்தனர். ஆனால், பதிலாகக் கேட்டது பாலைவனக் காற்றின் ஊளையொலி மட்டுமே.

இருள் கவிந்திருந்த அந்தப் பகுதியில், காற்றில் பறந்த மணல் அவர்களின் முகங்களில் மோதியது. டார்ச் லைட் இல்லாமல் அந்த இருளுக்குள் செல்வது ஆபத்தானது என்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் தயங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது, டார்ச் லைட்டுகளுடன் மெதுவாக நடந்து வந்தாள் தாரகை. அவர்களிடம் வந்தவள், ஒரு டார்ச் லைட்டை பரமேஷின் கைகளில் கொடுத்துவிட்டு, மற்றொன்றைத் தன் கையில் எடுத்துக்கொண்டாள்.

பலமாக வீசிய பாலைவனக் காற்று, மணலை அவர்களின் முகங்களில் வாரி இறைத்துக்கொண்டிருந்தது. அந்த இருளைக் கிழித்தபடி டார்ச் லைட்டுகளின் வெளிச்சத்தைச் செலுத்திக்கொண்டு, அனைவரும் மெதுவாகப் பாலைவனத்திற்குள் நடக்கத் தொடங்கினர்.

ஓரளவு தூரம் சென்றதும் மீண்டும், “அஜித்! எங்க இருக்கடா?” என்று அனைவரும் குரல் கொடுத்தனர். ஆனால், மறுபுறத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

முகிலின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

“பரமேஷ்… எப்படியாவது அஜித்தைக் கண்டுபிடிச்சுத் தா டா…” என்று கலங்கிய குரலில் கூறினாள்.

“அதெல்லாம் அஜித்துக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. சரியா? நீ தேவையில்லாம கவலைப்படாத,” என்று அவளைத் தேற்றியபடி பரமேஷ் தன் டார்ச் லைட்டைச் சுற்றிலும் திருப்பினான்.

அடுத்த நொடி… அவனது டார்ச் லைட் வெளிச்சம், மணலுக்கிடையே நின்றிருந்த ஓர் உருவத்தின் மீது விழுந்தது.

அந்த உருவம் பற்களை வெளியே காட்டியபடி அவர்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.அதைக் கண்ட அனைவரும் ஒரு கணம் உறைந்து போயினர்.

அது மனித உருவம் அல்ல. ஆனால், மனிதனைப் போல இரண்டு கால்களில் நின்றுகொண்டிருந்தது. பல்லி இனத்தைச் சேர்ந்த பிரம்மாண்டமான உடும்பு!

“இதுதான் அந்த உருவம்னு நினைக்கிறேன், பரமேஷ்…” என்று முகில் நடுங்கிய குரலில் கூறினாள்.

அவளது பார்வை அந்த உடும்பின் மீதே பதிந்திருந்தது.

“இதை விட்டுடாத… கண்டிப்பா இதுதான் அஜித்தை ஏதாவது பண்ணியிருக்கணும்!” என்று கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கூறிய முகில், மற்றவர்களுடன் சேர்ந்து அந்த உடும்பை நோக்கி நகர்ந்தாள்.

“முகில், கொஞ்சம் பொறு! அது என்ன செய்யும்னு நமக்குத் தெரியாது!” என்று பரமேஷ் எச்சரித்தான்.

ஆனால், அஜித்தைப் பற்றிய கவலையில் இருந்த முகில், அவனது எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. வேறு வழியில்லாமல் அவளுக்குப் பின்னால் அனைவரும் சென்றனர்.

அவர்கள் அந்த உடும்பின் அருகில் சென்ற அடுத்த நொடியே… அந்த விபரீதம் நிகழ்ந்தது.

அவர்களின் காலடிக்குக் கீழிருந்த மணல் திடீரெனச் சரிந்து போனது.

“ஐயோ! கவனமா இருங்க!” என்று ஒருவர் மற்றவர்களை எச்சரிப்பதற்குள், அனைவரும் நிலைதடுமாறி மணலுக்குள் சரிந்தனர்.

அது சாதாரண மணல் அல்ல. புதைமணல்!

எவ்வளவு முயன்றும் அவர்களால் வெளியேற முடியவில்லை. மணல் அவர்களின் கால்களை மட்டுமல்லாமல், மெல்ல மெல்ல உடல்களையும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு உள்ளிழுக்கத் தொடங்கியது.

“பரமேஷ்! என்னால வெளியே வர முடியல!” என்று முகில் பதற்றத்துடன் கத்தினாள்.

“எல்லாரும் கொஞ்சம் பதற்றபடாம இருங்க..ஒருத்தர்  கையை இன்னொருத்தர் பிடிக்கப் பாருங்க!” என்றான்.

தங்களின் உடல்களை தளர்த்தியும் ,இன்னொருவரின் கைகளை பிடிக்க முயன்றும் முடியாமல் திணறினர். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகின. மணல் அவர்களை மேலும் மேலும் உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. என்ன நடக்கப்போகிறது என்றே புரியாமல், சாகப்போகிறோம் என்ற பீதி ஒவ்வொருவரின் கண்களிலும் வெளிப்பட்டது.

சில நிமிடங்களுக்குள்… அவர்களின் உடல்கள் முழுவதுமாக அந்த மணலுக்குள் மறைந்தன.

மேலிருந்து கீழாக வந்து ஓரிடத்தில் “பொத்” தென்று விழுந்தனர். எவ்வளவு நேரம் கடந்தது என்று அவர்களுக்கே தெரியவில்லை. மெல்லக் கண்களைத் திறந்தனர்.

ஆச்சரியத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தங்களுடைய கைகளையும் கால்களையும் தொட்டுப் பார்த்துக்கொண்டவர்கள், உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்ததும் பெருமூச்சு விட்டனர்.

ஆனால், அடுத்த நொடியே அவர்களின் பார்வை சுற்றிலும் சென்றது. அவர்களுக்கு முன்னால் விரிந்திருந்த காட்சி, அவர்களைப் பேச்சிழக்கச் செய்தது.

அது ஒரு நகரம்!ஆனால், அவர்கள் இதுவரை பார்த்த எந்த நகரத்தையும் போன்றதல்ல அது.

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மணலுக்குள் புதைந்து போனதாகக் கூறப்படும் அந்தப் பழமையான நகரம், காலத்தின் சுவடுகளைத் தன்னுள் சுமந்தபடி அவர்களின் முன்னால் விரிந்து கிடந்தது.

உயர்ந்து நின்றிருந்த பிரம்மாண்டமான சுவர்கள் பல இடங்களில் இடிந்து சரிந்திருந்தன. அவற்றின் மேற்பகுதிகளில் படிந்திருந்த மணல், சிறிய குன்றுகளைப் போலக் காட்சியளித்தது. சில கட்டிடங்களின் கூரைகள் முற்றிலும் சரிந்து, அவற்றின் சுவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. இன்னும் சில கட்டிடங்கள் பாதியளவு மணலுக்குள் புதைந்திருந்தன.

அந்தப் பழமையான கட்டிடங்களின் சுவர்களில், காலத்தால் மங்கிப்போன சிற்பங்களும் விசித்திரமான குறியீடுகளும் ஆங்காங்கே தென்பட்டன. ஒருகாலத்தில் மனிதர்கள் வாழ்ந்திருந்ததற்கான சுவடுகள் அங்கிருந்த ஒவ்வொரு கல்லிலும் பதிந்திருந்தன.

நகரத்தின் நடுவே நீண்டு சென்ற பாதைகள் மணலால் மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் அவை குறுகிய குகைகளைப் போலத் தோற்றமளித்தன. அவற்றின் உள்ளே எங்கே கொண்டு செல்லும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்திருந்தது.

ஓரிடத்தில், பிரம்மாண்டமான தூண்களைக் கொண்ட ஒரு கட்டிடத்தின் முன்பகுதி மட்டும் மணலுக்கு மேலே தெரிந்தது. அதன் தூண்களில் செதுக்கப்பட்டிருந்த உருவங்கள் சிதைந்திருந்தாலும், அவற்றின் வேலைப்பாடுகள் அந்தக் காலத்து மக்களின் கலைத்திறனைப் பறைசாற்றின.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரம் உயிர்ப்புடன் இருந்தபோது, அதன் வீதிகளில் எத்தனை மனிதர்கள் நடமாடியிருப்பார்கள்? எத்தனை வீடுகளில் விளக்குகள் எரிந்திருக்கும்? இந்தச் சுவர்களுக்குள் எத்தனை கதைகள் நிகழ்ந்திருக்கும்? இப்போது அவற்றுக்குப் பதிலாக எஞ்சியிருந்தது, காலத்தின் மௌனமும் மணலின் ஆழத்தில் புதைந்திருந்த மர்மங்களும் மட்டுமே.

“அந்த ஆன்டி சொன்ன கதை உண்மைதான் போல!” என்று முகில் வியப்புடன் கூறினாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்ட பரமேஷ், சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான்.

“எப்படி இவ்வளவு பெரிய நகரம் மண்ணுக்குள்ள புதைஞ்சிருக்கும்?” என்று வியப்புடன் கேட்டான்.

சுற்றிலும் பார்த்த ருத்ரா மெதுவாக, “இதுதான்… எல்லாரும் சொல்ற அந்தப் புதைக்கப்பட்ட நகரம்னு நினைக்கிறேன்…” என்றாள்.

“எனக்கும் அப்படித்தான் தோணுது,” என்று பரமேஷும் மெதுவாகக் கூறினான்.

அவர்களின் பார்வை மீண்டும் அந்தப் பழமையான நகரத்தின் மீது படிந்தது.

“அதெல்லாம் அப்புறமா பேசுங்க… முதல்ல அஜித்தைத் தேடுவோம்!” என்று முகில் அவசரமாகக் கூறினாள்.

அப்போதுதான் மற்றவர்களுக்கும் அஜித்தின் நினைவு வந்தது.

“ஆமா! அவன் எங்க இருக்கான்னே தெரியல!” என்று ரோஸினி பதற்றத்துடன் கூறினாள்.

“அஜித்! எங்க இருக்கடா?” என்று குரல் கொடுத்தபடி அனைவரும் எழுந்து, தங்கள்  ஆடைகளின் மேல் படிந்திருந்த மண்ணை தட்டிவிட்டபடி, நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் தேடத் தொடங்கினர்.

டார்ச் லைட் வெளிச்சத்தில் இடிந்த சுவர்களையும் குறுகிய பாதைகளையும் ஆராய்ந்தபடி முன்னேறினர். சில இடங்களில் மணல் அவர்களின் முழங்கால் உயரம் வரை குவிந்திருந்தது. இன்னும் சில இடங்களில், இடிபாடுகளுக்கு இடையே மனிதர்கள் நடந்து செல்லக்கூடிய அளவுக்குச் சிறிய வழிகள் தென்பட்டன.

சிறிது நேரத்திற்குப் பிறகு… ஒரு இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்த அஜித்தைக் கண்டனர்.

“அஜித்!” என்று முகில் பதற்றத்துடன் அவனருகே ஓடிச்சென்றாள்.அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“அஜித்! எழுந்திரிடா!” என்று முகில் அவனது தோளைப் பிடித்து அசைத்தாள். ஆனால், அஜித்தின் உடலில் எந்த அசைவும் இல்லை.

அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்ற எண்ணம் தோன்றியதும், முகிலின் இதயம் படபடக்கத் தொடங்கியது.

“அஜித்துக்கு ஒண்ணும் இல்லை, முகில்… நீ கொஞ்சம் அமைதியாகு,” என்று ரோஸினி அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு சமாதானப்படுத்தினாள்.

அப்போது சற்று தொலைவில், தொட்டியைப் போன்ற ஒரு பழமையான அமைப்பில் தேங்கியிருந்த நீர் ருத்ராவின் கண்களில் பட்டது.

அந்த நீர் நீண்ட காலமாக அங்கே தேங்கியிருந்ததால், அதன் மேற்பரப்பில் தூசியும் சிறிய இலைகளும் மிதந்துகொண்டிருந்தன. இருப்பினும், வேறு வழியில்லாததால் ருத்ரா அங்கிருந்து சிறிது நீரை அள்ளிக்கொண்டு வந்தாள்.

அவள் அஜித்தின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள். முகத்தில் தண்ணீர் பட்டதும், அஜித்தின் கண்கள் மெதுவாகத் திறந்தன.

“அஜித்!” என்று முகில் நிம்மதிப் பெருமூச்சுடன் அழைத்தாள்.

தன்னைச் சுற்றி அனைவரும் நிற்பதைப் பார்த்தவன், குழப்பத்துடன் எழுந்து அமர்ந்தான்.

“ஏதோ ஒரு உருவத்தைப் பார்த்துட்டுத் துரத்திட்டு வந்திருக்கியே… உனக்கு அறிவில்லையா? எங்களையும் சேர்த்து கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல!” என்று கோபத்துடன் பரமேஷ் கேட்டான்.

அதைக் கண்டுகொள்ளாமல் முகில் அமைதியாக அஜித்தை இறுக அணைத்துக்கொண்டாள்.

அவளது பதற்றத்தை உணர்ந்த அஜித்தும் அவளை அணைத்துக்கொண்டு, “எனக்கு ஒண்ணுமில்லை, முகில்… நான் நல்லாத்தான் இருக்கேன்,” என்று அவளைத் தேற்றினான்.

சில நொடிகள் கழித்து அவளைத் தன்னிடமிருந்து மெதுவாக விலக்கியவன், தான் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் பார்த்தான்.

“ஆமா… இது என்ன இடம்? நான் எப்படி இங்க வந்தேன்? அந்த உடும்பு எங்க போச்சு?” என்று அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினான்.

“அதைத்தான் நாங்களும் தேடுறோம். அதைத் துரத்தி வந்துதான் புதைமணலுக்குள்ள மாட்டிக்கிட்டோம். அப்படியே இந்த இடத்துக்கு வந்துட்டோம்,” என்று நடந்த அனைத்தையும் பரமேஷ் விளக்கினான்.

“புதைமணலா?” என்று அதிர்ச்சியுடன் கேட்ட அஜித், தாங்கள் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தான். அங்கே மணலால் மூடப்பட்டிருந்த பாதையைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

முகிலின் கையைப் பிடித்துக்கொண்டு அஜித் எழுந்தான்.

“சரி, முதல்ல அந்த உடும்பைக் கண்டுபிடிப்போம். அதுக்குப் பிறகு இங்கிருந்து வெளியேற வழி தேடலாம்,” என்றான் பரமேஷ்.

அனைவரும் அந்த உடும்பைத் தேடத் தொடங்கினர்.அப்போது… தாரகையின் பார்வை திடீரெனக் கூர்மையடைந்தது. சில நொடிகளுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்த அவளது கண்கள், இப்போது பச்சை நிறத்தில் மின்னின.

அதைக் கண்ட மற்றவர்கள் ஒரு கணம் திகைத்தனர்.

தாரகை அவர்களுடைய வியப்பைப் பொருட்படுத்தாமல் சுற்றிலும் பார்வையைச் செலுத்தினாள். அவளது கண்கள் இருளில் மறைந்திருந்த ஒவ்வொரு மூலையையும் ஆராய்ந்தன.

அப்போது, ஒரு மண் சுவரின் மறைவில் அந்த உடும்பு நின்றுகொண்டிருப்பதை அவள் கண்டாள்.

“அங்க இருக்கு!” என்று சைகையால் அனைவருக்கும் காட்டினாள். அனைவரும் ஒன்றுசேர்ந்து அதை நோக்கி நகர்ந்தனர். ஆனால், அவர்கள் நெருங்குவதற்குள் மூர்க்கத்தனமாகத் தாரகையின் மீது பாய்ந்தது உடும்பு!

அடுத்த நொடியே தாரகையின் உடல் மாற்றமடைந்தது.

அவள் நாக உருவத்திற்கு மாறி, சீறியபடி உடும்பின் மீது பாய்ந்தாள். தன் விஷப் பற்களால் அதன் உடலைக் கொத்தினாள். ஆனால், அதன் தடிமனான செதில்கள் விஷம் உடலுக்குள் செல்வதையே தடுத்துவிட்டன.

உடும்பு ஆக்ரோஷமாகத் தன் கால்களால் தாரகையைத் தாக்கியது. அந்தத் தாக்குதலில் தாரகை சற்றே தடுமாறினாள். மீண்டும் அதனைத் தாக்க முயன்றாள்.

மீண்டும்… மீண்டும்…ஆனால், எந்தத் தாக்குதலும் அந்த உடும்பின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, தாரகையின் உடலில் காயங்கள் அதிகரித்துக்கொண்டே சென்றன. அவளது மேனியில் இரத்தம் வழிந்தோடியது. உடலில் பலமிழந்தவள் மூச்சு வாங்கத் தொடங்கினாள்.

அவளது பலவீனத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட உடும்பு, தன் முன்னங்கால்களால் மேலும் தாக்கியது. அதில் தாரகைக்கு இன்னும் அதிகமான காயங்கள் ஏற்படவே, அவள் சுருண்டு விழுந்தாள்.

“தாரகை!” என்று பரமேஷ் பதற்றத்துடன் கத்தினான்.

அவளை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் மற்றவர்கள் திகைத்துப் போய் நின்றனர். அந்தப் பிரம்மாண்டமான உடும்பின் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தினால், தாரகைக்குப் பதிலாக அவர்களும் தாக்கப்படக்கூடும்.

அப்போது ருத்ராவின் பார்வை உடும்பின் முகத்தில் பதிந்தது.அதன் தடிமனான செதில்கள் உடலின் பெரும்பகுதியைப் பாதுகாத்தாலும், கண்கள் மட்டும் பாதுகாப்பின்றி இருப்பதை அவள் கவனித்தாள்.

அவள் திடீரென, “தாரகை! அதோட கண்ணைக் குறி வை!” என்று தன்னால் முடிந்த அளவு கத்தினாள்.

ருத்ராவின் வார்த்தைகள் தாரகையின் காதுகளில் விழுந்தன. உடனே தன் முழு பலத்தையும் ஒன்று திரட்டி, புதுத் தெம்புடன் எழுந்தாள்.

அடுத்த நொடி, உடும்பு அவளை நோக்கிப் பாய்ந்தது. சரியான தருணத்திற்காகக் காத்திருந்த தாரகை, உடும்பின் கண்களை நேராகக் குறிவைத்து தன் விஷத்தைப் பீய்ச்சினாள்.

விஷம் அதன் கண்களில் பட்டதும், உடும்பு தாங்க முடியாத எரிச்சலால் துடித்தது. தன் முன்னால் இருந்த உருவங்களைச் சரியாகக் காண முடியாமல் தடுமாறிய அது, மூர்க்கமாகத் தலையை அசைத்தது.

சில நொடிகளுக்குப் பிறகு அதன் உடல் நிலைகுலைந்து மணலில் சரிந்தது.தாரகை நிம்மதிப் பெருமூச்சுடன் மீண்டும் மனித உருவத்திற்கு மாறினாள்.

அவளது கை, கால்கள் என உடலின் பல இடங்களிலும் ஏற்பட்ட காயங்கள் மறையத் தொடங்கின.

“தாரகை, நீ ஓகேவா?” என்று ருத்ரா கவலையுடன் கேட்டாள்.

“நான் ஓகேதான், ருத்ரா,” என்று கூறிய தாரகையின் கண்கள் பரமேஷை நோக்கின. அவன் தன்னிடம் அக்கறையுடன் விசாரிப்பான் என்று நினைத்தவளுக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அவளது முகம் இறுகியது.

“முதல்ல எப்படியாவது இங்கிருந்து வெளியே போறதுக்கான வழியைத் தேடுவோம்,” என்று பரமேஷ் கூறினான்.

சில நொடிகள் யோசித்த ருத்ரா, சுற்றிலும் பார்வையைச் செலுத்திக்கொண்டே, “எனக்குத் தெரிஞ்சு… நாம தேடி வந்த சாவியோட மூணாவது பாகம் இங்க எங்கையாவது இருக்கும்னு தோணுது,” என்றாள்.

அவள் கூறியதைக் கேட்ட மற்றவர்களுக்கும் அதில் உண்மை இருக்கலாம் என்று தோன்றியது.

ஏற்கெனவே இரண்டு இடங்களில் சாவியின் பாகங்களைத் தேடிக் கண்டுபிடித்திருந்ததால், இந்தப் பழமையான நகரத்திற்கும் அந்தச் சாவிக்கும் ஏதோ தொடர்பு இருக்கலாம் என்று அவர்கள் நினைத்தனர்.

“அப்படின்னா, இந்த இடத்துல முழுசா தேடிப் பார்ப்போம்,” என்று கண்கள் மின்னப் புன்னகையுடன் கூறினான் அஜித்.

அனைவரும் டார்ச் லைட் வெளிச்சத்தில் அந்தப் பழமையான சுவர்களையும் இடிந்த கட்டிடங்களையும் ஆராயத் தொடங்கினர்.

அப்போது ஒரு சுவரின் அருகே, குகையைப் போன்ற ஒரு குறுகிய பாதை உள்ளே செல்வதை ருத்ரா கவனித்தாள்.

மற்ற இடங்களைப் போல அந்தப் பாதை முழுவதுமாக மணலால் மூடப்படவில்லை. அதன் நுழைவாயிலில் சில கற்கள் சரிந்து கிடந்தாலும், உள்ளே செல்வதற்கு ஏற்ற அளவுக்கு இடம் இருந்தது.

அதன் அருகே சென்றவள், தயக்கமின்றி உள்ளே நுழைந்தாள்.

“ருத்ரா, கொஞ்சம் பொறு! உள்ளே என்ன இருக்கும்னே தெரியல. கவனமா போ,” என்று பரமேஷ் எச்சரித்தான்.

“சாவியோட பாகம் இங்க இருக்க வாய்ப்பிருக்கு. அதைக் கண்டுபிடிக்கணும்னா உள்ளே போய்த்தான் ஆகணும்,” என்று கூறிய ருத்ரா தொடர்ந்து நடந்தாள்.

அவளைத் தொடர்ந்து மற்றவர்களும் சென்றனர்.சில அடிகள் உள்ளே சென்றதும்… அவர்களின் கண்களில் ஆச்சரியம் விரிந்தது.

அந்தக் குகையின் சுவர்கள் முழுவதும் விதவிதமான பழங்கால ஓவியங்களால் நிறைந்திருந்தன.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் கலைத்திறனைப் பறைசாற்றும் வகையில், அந்த ஓவியங்கள் சுவர்களில் வரையப்பட்டிருந்தன. காலத்தின் தாக்கத்தால் சில ஓவியங்களின் நிறங்கள் மங்கியிருந்தன. சில இடங்களில் சுவரின் மேற்பரப்பு சிதைந்திருந்தாலும், பல ஓவியங்கள் இன்னமும் தெளிவாகத் தெரிந்தன.

ஒரு சுவரில் விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களின் உருவங்கள் காணப்பட்டன. மற்றொரு பகுதியில், கையில் ஆயுதங்களை ஏந்திய வீரர்கள் அணிவகுத்து நிற்பதைப் போன்ற ஓவியங்கள் இருந்தன.

இன்னொரு சுவரில், நீண்ட ஆடைகளை அணிந்திருந்த மனிதர்கள் ஏதோ ஒரு சடங்கில் ஈடுபட்டிருப்பதைப் போன்ற காட்சி வரையப்பட்டிருந்தது.

அந்த ஓவியங்கள் அனைத்தும் அந்தக் காலத்து மக்களின் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், போர்கள், வழிபாடுகள் எனப் பலவற்றைப் பற்றிய செய்திகளைத் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதைப் போலத் தோன்றின.

“எவ்வளவோ வருஷத்துக்கு முன்னாடி வரையப்பட்ட ஓவியங்கள் இன்னமும் இவ்வளவு தெளிவா இருக்கே!” என்று முகில் வியப்புடன் கூறினாள்.

“இந்த நகரத்துக்குள்ள எத்தனை ரகசியங்கள் புதைஞ்சிருக்கும்னே தெரியல,” என்று பரமேஷ் கூறினான்.

அவர்களின் உரையாடலைக் கேட்டபடியே, ருத்ரா டார்ச் லைட் வெளிச்சத்தைச் சுவரின் மீது செலுத்தி, ஒவ்வொரு ஓவியமாக ஆராயத் தொடங்கினாள்.

அப்போது… ஒரு ஓவியம் அவளது பார்வையை நிறுத்தியது.

கம்பீரமான வாளை ஏந்தியபடி ஒரு பெண் நின்றிருந்தாள். அவளது முகத்தில் வீரமும் உறுதியும் நிறைந்திருந்தன. அவளுக்கு அருகில் இன்னொரு ஆணின் உருவம் வரையப்பட்டிருந்தது. ஆனால், அந்த உருவம் தெளிவில்லாமல் அழிந்திருந்தது.

அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்த அடுத்த நொடியே, ருத்ராவின் மனதில் ஏதோ ஒரு மின்னல் தோன்றியது.

ஏற்கெனவே அவள் பார்த்திருந்த காயத்திரி தேவியின் வரைபட ஓவியம் அவளது நினைவில் மின்னியது.

அந்த ஓவியத்தில் இருந்த முகமும், இப்போது சுவரில் வரையப்பட்டிருந்த பெண்ணின் முகமும் ஒன்றுபோலவே இருந்தன.அவளது உள்ளுணர்வு ஒரே வார்த்தையை அழுத்தமாகச் சொன்னது.

‘காயத்திரி தேவி!’

‘இது… காயத்திரி தேவிதான்!’ என்று அவளது மனம் அடித்துக் கூறியது.

‘இங்கே எப்படி காயத்திரி தேவியோட ஓவியம்?’ என்ற கேள்வியுடன் மீண்டும் அந்த ஓவியத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினாள் ருத்ரா.

தொடரும்…