அதே நேரத்தில்… அவர்களுக்குத் தெரியாமல், வெகு தொலைவில் இருந்து இன்னொரு உருவம் அவர்களையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தது.
சில நொடிகள் அவர்களைக் கவனித்த அந்த உருவம், பின்னர் மெதுவாக அங்கிருந்து மறைந்து சென்றது.
மணி ஏழரைத் தொட்டிருந்தது.
குடும்பம் குடும்பமாக வந்திருந்தவர்கள், தங்களுடன் பெரிய பாத்திரங்களில் உணவையும் கொண்டு வந்திருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் கூட்டம் அதிகரித்துவிடும் என்பதை உணர்ந்த அருகிலிருந்த குடும்பத்தினர், தாங்கள் கொண்டு வந்த உணவுப் பாத்திரங்களைத் துணிப்பையிலிருந்து வெளியே எடுத்தனர்.
வாழை இலைக் கட்டைப் பிரித்த அந்தப் பெண்மணி, குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் இலையை விரித்துப் பரிமாறத் தொடங்கினார். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வரிசையாக அமர்ந்தனர்.
பெரிய தூக்குச்சட்டியைத் திறந்ததும், அதிலிருந்து கமகமவென எழுந்த எலுமிச்சைச் சாதத்தின் மணம் சுற்றிலும் பரவியது.
வயதான பெண்மணி அன்போடு அனைவருக்கும் உணவைப் பரிமாறினார். சிறு குழந்தைகள் விளையாடிக்கொண்டே சாப்பிட்டனர். உணவு முடிந்ததும், முதலில் பெரியவர்கள் இலையிலிருந்து எழுந்து கைகளைக் கழுவச் சென்றனர். ஆனால் குழந்தைகளோ, இலையில் மிச்சமிருந்த சாதத்தைக் கோலம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
“யார் சோத்தை மிச்சம் வைக்காம சாப்பிடுறீங்களோ, அவங்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தருவேன்!” என்று குழந்தைகளுக்கு ஆசை காட்டினார் அந்தப் பெண்மணி.
அதைக் கேட்டதும் குழந்தைகளின் கண்கள் குதூகலத்தில் மின்னின. அடுத்த நொடியே, போட்டி போடுவது போல வேகமாகச் சாப்பிடத் தொடங்கினர்.
அருகில் அமர்ந்திருந்த ஆறு பேரையும் ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி, அவர்களை நோக்கி, “தம்பி… சாப்பிடுறீங்களா?” என்று அன்பும் கனிவும் கலந்த குரலில் கேட்டார்.
யாரென்றே தெரியாத ஒருவர் தங்களை உணவருந்த அழைப்பது ருத்ரா தவிர்த்து மற்ற ஐந்து பேருக்கும் இதுவே முதல்முறை.
இது கிராமங்களில் இயல்பான விருந்தோம்பல் என்பதை அறிந்த ருத்ரா, “சாப்பிடுறோம் மா…” என்று பதிலளித்துவிட்டு, பசியின் காரணமாகக் குழந்தைகளுடன் சேர்ந்து முதலில் அமர்ந்துகொண்டாள்.
மீதமிருந்த ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சற்று தயங்கினர்.
இந்த நேரத்தில் உணவைத் தேடி அலைவதைவிட, தானாகத் தேடி வந்த அன்னத்தை மறுப்பதற்கு அவர்களுக்கும் மனம் வரவில்லை. இறுதியில், அமைதியாகத் தலையசைத்தனர்.
“வாங்க பா… தயங்காம உட்காருங்க. சாப்பாடு இருக்கிறப்போ நாலு பேருக்குப் போட்டா குறைஞ்சா போயிடும்?” என்று அக்கறையுடன் கூறிய அந்தப் பெண்மணி, அவர்களுக்கான இடத்தைக் காட்டினார்.
ஆறு பேருக்கும் வாழை இலை விரித்து, அதில் எலுமிச்சைச் சாதத்தைப் பரிமாறினார். தொட்டுக்கொள்ள எள்ளுப்பொடியும் கட்டித் தேங்காய் சட்னியும் அருகருகே வைத்தார்.
சாதம் எப்படி இருக்குமோ என்ற தயக்கத்துடன் ஆறு பேரும் முதலில் ஒரு வாய் எடுத்து ருசித்தனர். அடுத்த நொடியே அவர்களின் தயக்கம் காணாமல் போனது. சட்னியுடன் சேர்த்து உண்ட எலுமிச்சைச் சாதம் அவ்வளவு அருமையாக இருந்தது.
ருத்ராவோ, பசியை அடக்க முடியாமல் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் ஆறு பேரும் திருப்தியாக உணவருந்தி முடித்தனர். வயிறு மட்டுமல்ல… மனமும் நிறைந்திருந்தது.
அவர்கள் அனைவரும் கைகூப்பி அந்தப் பெண்மணிக்கு நன்றியைத் தெரிவித்தனர். அவரும் புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டார்.
எச்சில் இலைகளை எடுத்துச் சென்று அதற்கென வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, அருகிலிருந்த குழாயில் அனைவரும் கைகளைக் கழுவினர். பின்னர் மீண்டும் தாங்கள் அமர்ந்திருந்த பாயின் அருகே வந்து அமர்ந்துகொண்டனர்.
அப்போது அந்தப் பெண்மணி அவர்களைப் பார்த்து, “இங்க திருவிழாவுக்கு முதல் தடவை வரீங்களா தம்பி? இதுக்கு முன்னாடி உங்களை இங்க பார்த்ததே இல்லையே…” என்று கேட்டார்.
“ஆமா மா…” என்று அனைவரும் ஒரே குரலில் தலையசைத்தனர்.
“உங்களுக்கு எந்த ஊரு?” என்று பொதுவாக அனைவரையும் பார்த்துக் கேட்டார்.
“எங்களுக்கு சென்னை…” என்று நால்வர் ஒரே நேரத்தில் கூறினர்.
அதைக் கேட்டதும் அந்தப் பெண்மணி வியப்பில் வாயைப் பிளந்தார்.
“மெட்ராஸ்ல இருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கீங்களா, கண்ணுங்களா?”
“ஆமா…” என்ற பரமேஷ், மேலும் மேலும் பொய்களைச் சொல்ல மனமில்லாமல் உண்மையை ஓரளவு விளக்கத் தொடங்கினான்.
“நாங்க திருவிழாவுக்காக வரல மா… இங்க தேரிக்காட்டைச் சுத்திப் பார்க்க வந்தோம். வந்த இடத்துல நேரமாகிடுச்சு. அதனால இங்கேயே தங்கிட்டோம்.”
அவன் கூறியதைக் கேட்டதும், அந்தப் பெண்மணி கன்னத்தில் கைவைத்துக்கொண்டு, “சரியா போச்சு போங்க! விவரம் தெரியாத பசங்களா இருக்கீங்களே… இந்தத் தேரிக்காடு ரொம்ப ஆபத்தான இடம் தம்பி. ஜாக்கிரதையா இருங்க!” என்று எச்சரித்தார்.
“எல்லாரும் ஆளுக்கு ஆள் பயமுறுத்துறீங்க… அப்படி என்னதான் இங்க இருக்கு?” என்று சலிப்புடன் கேட்டாள் ருத்ரா.
அந்தப் பெண்மணி சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு, அவர்களைப் பார்த்தார்.
“இந்தப் பாலைவனம் எப்படி உருவாச்சுன்னு தெரியுமா உங்களுக்கு?”
“தெரியாது…” என்று அனைவரும் ஒரே நேரத்தில் தலையசைத்தனர்.
“பழங்காலத்துல பேச்சியம்மான்னு கல்யாணமாகி, புருஷனை இழந்த ஒரு பொண்ணு இருந்தாளாம். அப்போ இந்த ஊர்ல ஒரு அதிசயமான மாமரம் இருந்ததாம். அந்த மரம் ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாம்பழம்தான் கொடுக்குமாம். அந்தப் பழத்தை ராஜாவைத் தவிர வேற யாரும் சாப்பிடக் கூடாதாம். ஒருநாள் அந்த மரத்துக்குப் பக்கத்துல இருந்த குளத்துல தண்ணி எடுக்க பேச்சியம்மா போயிருக்கா. அப்போ அவள் கொண்டு போன குடத்துக்குள்ள அந்த மாம்பழம் தவறுதலா விழுந்துட்டதாம்.”
அவ்வளவு சொல்லிவிட்டு அந்தப் பெண்மணி சற்று மூச்சை இழுத்துக்கொண்டார். பின்னர், விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர்ந்தார்.
“அது தெரியாம அவளும் அந்தக் குடத்தை வீட்டுக்குக் கொண்டு போய் வைச்சிட்டாளாம். மாம்பழம் காணாம போனதைத் தெரிஞ்சுக்கிட்ட ராஜா, காவலாளிகளை அனுப்பி ஒவ்வொரு வீடாகத் தேடச் சொல்லியிருக்காரு. கடைசில பேச்சியம்மா வீட்டு குடத்துல இருந்து அந்த மாம்பழத்தைக் கண்டுபிடிச்சுட்டாங்க.
உடனே அவளை ராஜா முன்னாடி கொண்டு போய் நிறுத்தியிருக்காங்க. ‘நான் திருடல… தெரியாமதான் குடத்துல விழுந்திருக்கும்’ன்னு அவ எவ்வளவோ கெஞ்சியிருக்கா. ஆனா ராஜா எதையும் கேக்காம அவளுக்கு மரண தண்டனை கொடுத்துட்டாராம். உயிர் போகுறதுக்கு முன்னாடி கோபத்துல பேச்சியம்மா, ‘நீ ஆளும் இந்த ராஜ்யமே மண்ணால நிறையட்டும்!’ன்னு சாபம் விட்டுட்டு போயிட்டாளாம். அதுக்கப்புறம்தான் இந்தப் பகுதி முழுக்க மணலாகி, இந்தத் தேரிக்காடு உருவானதாம்” என்றவரின் மனதில் பேச்சியம்மாளை குறித்த கவலை முகத்தில் தெரிந்தது.
அந்தக் கதையை ருத்ரா உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆனால் முகிலோ, மனதிற்குள், ‘இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? எல்லாம் வெறும் கட்டுக்கதை…’ என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள்.
“அப்படின்னா, ஒரு மாம்பழத்துக்காக ஒரு பொண்ணுக்கு மரண தண்டனை கொடுத்த ராஜா இருந்தாருன்னு சொல்றீங்களா?” என்று முகில் கேட்டாள்.
“அது எவ்வளவு பெரிய அநியாயம்னு அப்போ இருந்தவங்களுக்குத்தான் தெரியும் கண்ணு. ராஜா சொன்னதுதான் சட்டம்னு இருந்த காலம் அது,” என்று அந்தப் பெண்மணி பதிலளித்தார்.
மொத்தத்தில், ருத்ராவைத் தவிர அங்கிருந்த யாருக்குமே அந்தக் கதையின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. இருப்பினும், அந்தப் பெண்மணியின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தனர்.
“என்ன பசங்களா… கதை கேட்டதும் இப்படி அமைதியாயிட்டீங்க?” என்று அனைவரின் முகத்தையும் உற்றுப் பார்த்தார் அந்தப் பெண்மணி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மா… சாப்பிட்டதுல கொஞ்சம் தூக்கம் வர மாதிரி இருக்கு. அதுதான்…” என்று சமாளித்தான் பரமேஷ்.
“என்னது, தூக்கமா? இன்னைக்கு பன்னிரண்டு மணி பூஜை நடக்கும் தம்பி. அது முடிய ஒரு மணி ஆகிடும்.”
“அப்போ காலையில திருவிழா இல்லையா?” என்று நண்பர்கள் ஒரே நேரத்தில் கேட்டனர்.
அவர்களைப் பார்த்துச் சிரித்த பெண்மணி, “இது தெரியாமத்தான் இங்க வந்தீங்களா?” என்றார்.
ருத்ராவின் முகம் மட்டும் அந்த நொடியில் பிரகாசித்தது. திருவிழா என்றாலே அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
“டேய்… இதெல்லாம் செட் ஆகாது. மணி எட்டு தான் ஆகுது. பக்கத்துல ஏதாவது ஊர்ல ஹோட்டல் எடுத்து தங்கிக்கலாம். எல்லாரும் கிளம்புவோம்,” என்று பரமேஷிடம் அஜித் கூறினான்.
ஆனால் பரமேஷ், ருத்ராவின் கண்களில் மின்னிய மகிழ்ச்சியை ஏற்கெனவே கவனித்திருந்தான். அவளுக்காக இன்னும் சிறிது நேரம் அங்கேயே இருக்க வேண்டும் என்று அவனது மனம் சொல்லியது.
‘இதுதான் சரியான சமயம்…’ என்று நினைத்துக்கொண்ட ரோஸினி, “வாங்க… போவோம்,” என்று எழுந்தாள்.
சுற்றிலும் கூடியிருந்த ஊர்மக்களும், தங்குவதற்குப் போதுமான வசதியில்லாத அந்த வெட்டவெளியும் அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.
“இதுவரை இருந்துட்டோம்… ஒரு மணி வரைக்கும் என்ன நடக்குதுன்னு பார்த்துட்டுப் போவோமே. நம்ம தேடி வந்தது இந்தக் கிராமத்துல கூட இருக்கலாம் டா,” என்று ருத்ராவின் சந்தோஷத்திற்காகப் பொய்யான காரணம் ஒன்றைக் கூறினான் பரமேஷ்.
அவன் சொன்னதும் அனைவரும் சில நொடிகள் யோசித்தனர்.
பரமேஷ் கூறுவதிலும் நியாயம் இருப்பதாகத் தோன்றியதால், வேறு வழியின்றி ரோஸினியும் மீண்டும் அமர்ந்துகொண்டாள்.
அந்தப் பெண்மணி அவர்களை விட்டு நகர்ந்து தன் குடும்பத்தினருடன் ஐக்கியமாகிவிட்டார்.
அவர் சென்றதும், நண்பர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நேரத்தைக் கழித்தனர்.
நேரம் செல்லச் செல்ல, கோவிலைச் சுற்றியிருந்த கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. ஊரின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வந்துகொண்டிருந்தனர். சிலர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். வேறு சிலர் தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தனர். குழந்தைகளோ கூட்டத்துக்கு இடையே ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
மணி பதினொன்றைத் தொட்டதும், கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்தது.
சிறிது நேரத்திலேயே கோவில் மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. வெளியிலிருந்து மேளச் சத்தம் முழங்கத் தொடங்கியது. அதனுடன் நாதஸ்வர இசையும் இணைந்து ஒலிக்க, திருவிழாவின் உற்சாகம் அந்த இடம் முழுவதும் பரவியது.
அந்தச் சத்தத்தைக் கேட்டதும், என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்தில் அனைவரும் எழுந்து, மேளம் ஒலித்த திசையை நோக்கி நடந்தனர்.
கோவிலுக்கு வெளியே நால்வர் கொண்ட குழு ஒன்று நின்றிருந்தது. மூவர் மேளம் அடித்துக்கொண்டிருக்க, மற்றொருவர் நாதஸ்வரத்தை இசைத்துக்கொண்டிருந்தார். அவர்களைச் சுற்றிக் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
சற்றுத் தள்ளி, சிலர் கற்களை அடுக்கி, அதன் நடுவே விறகுகளை வைத்திருந்தனர். அதன் மேல் பெரிய பாத்திரங்களை வைத்து, பொங்கல் வைக்கத் தொடங்கியிருந்தனர். விறகுகள் எரியும் மணத்துடன், பொங்கல் தயாராகும் வாசனையும் காற்றில் கலந்தது. சில பெண்கள் பாத்திரங்களுக்கு அருகில் நின்று அரிசியையும் மற்ற பொருட்களையும் தயாராக வைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் நின்றிருந்த பெண்களில் ஒருவர் திடீரெனச் சாமியாடத் தொடங்கினார்.
அவரைத் தொடர்ந்து, ஒவ்வொருவராகச் சிலர் ஆட ஆரம்பித்தனர்.
ஆண்களில் சிலர் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடி ஆக்ரோஷமாக ஆடினர். பெண்களில் சிலரும் கைகளில் தீச்சட்டிகளை ஏந்திக்கொண்டு ஆடினர். அதில் ஒரு பெண்மணி, தீச்சட்டியை ஒற்றைக் கையில் பிடித்துக்கொண்டு, அதைச் சுற்றிச் சுழற்றியபடி ஆடினார்.
மேளத்தின் ஓசை அதிகரிக்க அதிகரிக்க, ஆடிக்கொண்டிருந்தவர்களின் வேகமும் அதிகரித்தது. சிலர் கைகளைக் காற்றில் வீசியபடி ஆடினர். வேறு சிலர் தலையை அசைத்தபடி தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர்.
அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் பயபக்தியுடன் நின்றுகொண்டிருந்தனர். சிலர் கைகூப்பி வணங்கினர். இன்னும் சிலர் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சாமியை வேண்டிக்கொண்டனர்.
அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த முகிலின் உதடுகளில் ஏளனப் புன்னகை மலர்ந்தது. அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல், கூட்டத்திலிருந்து மெதுவாக விலகி நடந்தாள்.
அவளைத் தொடர்ந்து அஜித்தும் சென்றான்.
அருகிலிருந்த மரத்தின் ஓரத்தில் நின்றதும், முகில் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கத் தொடங்கினாள்.
“அவங்களுக்கு சாமி வந்து ஆடுறாங்க. நீ அவங்களைக் கிண்டல் பண்ணிப் பேசாத.”
“இதுவா சாமி? நீ உண்மையிலேயே நம்புறியா? இதுவரைக்கும் சும்மா இருந்தப்போ வராத சாமி… சரியா கொட்டு அடிக்க ஆரம்பிச்சதும் எப்படி உடம்புக்குள்ள வந்துடுது? சொல்லு பார்ப்போம்.”
அஜித் அவளைச் சற்றுக் கடுமையாகப் பார்த்தான்.
“சாமி கும்பிடும்போதுதான் சாமி வரும். சும்மா இருக்கும்போது எப்படி வரும்? லூசுத்தனமா கேள்வி கேட்காத முகில்.”
அஜித்தைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த முகில், “நீதான் லூசு டா. சாமி உடம்புல வந்து ஆடுறதுக்கெல்லாம் அவங்களுக்குள்ள இருக்குற மன அழுத்தம் ஒரு காரணமா இருக்கலாம். சில நேரம் அந்தச் சூழலும், மேளச் சத்தமும் சேர்ந்து அவங்களை அந்த நிலைக்குக் கொண்டு போகலாம். அதுக்காகச் சாமியே வந்து ஆடுதுன்னு எப்படி நம்புறது?” என்றாள்.
“சரி… நீ சொல்ற மாதிரியே வச்சுக்குவோம். ஆனா நீ பார்த்தியே… அந்தத் தீச்சட்டியை! சாதாரணமா ஒருத்தரால அப்படி கையில பிடிச்சுக்கிட்டு ஆட முடியுமா? அதுக்கு அம்மன் அருள் வேணும். உனக்கு அதெல்லாம் புரியாது.”
முகில் சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்தாள்.
“தீச்சட்டியோட அடிப்பகுதியில் என்ன வைப்பாங்க தெரியுமா? சில இடங்கள்ல மண்ணோ, சாம்பலோ பயன்படுத்துவாங்க. அதோட, தீ எரியிற விதமும் சட்டியோட அமைப்பும் வெப்பம் கைக்கு வர்ற வேகத்தைப் பாதிக்கும். வேப்பிலையையும் சேர்த்து வச்சு அடிப்பாகத்தைப் பிடிச்சிருப்பாங்க. அதோட, நம்ம உடம்புல இயல்பாவே சில சக்திகள் இருக்கு. ஆபத்தான நேரத்துல நம்மளோட வழக்கமான திறனைவிட அதிகமாவே செயல்பட முடியும். ஒரு வீடியோவுல ஒரு சின்னப் பையன், சாதாரணமா அவனால தூக்க முடியாத ஏணியை, ஆபத்துல இருந்த அவனோட அம்மாவைக் காப்பாத்துறதுக்காகத் தூக்கினானே… அதேமாதிரிதான் இதுவும் இருக்கலாம். அந்த நேரத்துல அவங்களோட கவனம் முழுக்க சாமியாட்டத்திலேயே இருக்கிறதால, வெப்பத்தை உணர்ற விதத்துலயும் மாற்றம் ஏற்படலாம். ஆனா, இதையெல்லாம் வச்சு அவங்க அப்படிப் பிடிச்சிருக்கிறதுக்கு அம்மன் அருள்தான் காரணம்னு முடிவு பண்ணிட முடியாது!”
அவள் கூறியதை எதிர்த்து என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அஜித் திருதிருவென விழித்தான்.
அவனைப் பார்த்து மீண்டும் சிரித்த முகில், “என்னடா… இப்ப என்ன பதில் சொல்லப் போற?” என்று கேலி செய்தாள்.
“சரி, சரி… நீயே ஜெயிச்சுட்ட. இப்ப சந்தோஷமா?” என்று சலித்துக்கொண்டான் அஜித்.
அப்போது…சிறிது தூரத்தில், ஒரு மரத்தின் பின்னால் நின்று இவர்களை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு உருவம்.
அவர்களையே உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த அந்த உருவத்தை அஜித் கவனித்தான்.