“ஸார் ஸார்… எனக்கு இதெல்லாம் சரி வராது. தம்பி கூட கொஞ்ச நாள் பழக்கம்னாலும் நல்லா பழகிட்டோம். தம்பியோட விஷயங்களை அவருக்கு தெரியாம உங்களுக்கு சொன்னா என் நிம்மதிதான் போகும். என்னால முடியாது ஸார்” என்றார் ஐஸக்.
“என் மனைவிக்கு மட்டுமில்ல ஐஸக் எனக்கும் அவன்னா உயிர். அதுக்காக கூடவே வச்சுக்கிட்டு கொஞ்சினா ஆச்சா? நம்ம கண்ணு முன்னாடி வச்சுக்கிட்டா நமக்கு சந்தோஷம்தான். ஆனா எவ்ளோ நாளைக்கு அப்படி பார்த்துக்க முடியும்? பெத்தவங்க எப்பவும் பசங்களோட எதிர்காலம் ஆக போறதில்லையே. அவனோட எதிர்காலத்துக்கு எது நல்லதுன்னு பார்த்து செய்றதுதானே சரி? அதைத்தான் நான் செய்றேன். அதுக்காக அவனை தண்ணி தெளிச்சு விட்டிட முடியுமா? நீங்க எல்லாத்தையும் எனக்கு அப்டேட் பண்ணனும்னு நான் கேட்கல. நிலைமை மோசமாகும் போது கூட என்கிட்ட உதவி கேட்க ரோஷப்பட்டுகிட்டு சொல்லாம இருப்பான் அவன். அப்ப நீங்க அவனுக்கு உதவுங்கன்னுதான் கேட்கிறேன்”
“நான் என்ன உதவ ஸார்?”
“அவனுக்கு என்ன பிரச்சனை என்ன தேவைன்னு நீங்க என்கிட்ட சொல்றதுதான் அவனுக்கு செய்ற உதவி” என சின்ன சிரிப்புடன் சொன்னார் வீரராகவன்.
“அப்ப சரிங்க ஸார். ஆனா இதை ஏன் சொல்லல அதை ஏன் சொல்லலைன்னு எல்லாம் என்கிட்ட கோச்சுக்க கூடாது. தம்பி செய்ற எல்லாத்தையும் உங்களுக்கு ஒப்பிக்கிறது எல்லாம் என் மனசாட்சி படி செய்ய முடியாதுங்க ஸார்” என ஐஸக் சொல்ல, சம்மதமாக தலையாட்டிக் கொண்டார் வீரராகவன்.
‘அப்பா கிளம்பி விட்டார்’ என ஐஸக் அழைத்துச் சொல்லவும் ஏதோ ஒரு வகையில் நிம்மதியாக உணர்ந்தான் சஞ்சய்.
தெரு விளக்கின் வெளிச்சத்தில் வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த சஞ்சயை கலக்கமாக பார்த்தார் ஐஸக்.
வீட்டில் மின்விளக்கு எரிவதை கண்டவன் கோவமாக ஐஸக்கை பார்த்தான்.
“ஒரு வார்த்தை நல்லவிதமா பேசிட்டு போறேன்னு சொன்னார் தம்பி, அதான்…” என தயக்கமாக சொன்னார் ஐஸக்.
பதிலுக்கு சஞ்சய் கோவமாக ஏதோ சொல்லப் போக, “உள்ள வா சஞ்சய்!” என கட்டளையாக சொன்னார் வீரராகவன். அவர் புக் செய்திருந்த டாக்சியும் வந்து நின்றது.
அப்பா கிளம்பத்தான் போகிறார் என்பதில் மனதை திடப் படுத்திக் கொண்டு வீட்டுக்குள் சென்றான் சஞ்சய்.
“எம்மேல பயங்கர கோவத்துல இருக்கேன்னு எனக்கு தெரியும் சஞ்சய். நல்லா யோசிச்சு பாரு, நான் பேசின எதுக்கும் உன்னால பதில் தர முடியலை. அந்த அளவுலதான் நீ இருக்க” என்றார் வீரராகவன்.
மறுபடியுமா என அலுத்தவன் தன் இறுகிய முகத்தை திருப்பிக் கொண்டான்.
“உனக்கு நான் கொடுத்த படிப்பு இருக்குதானே? அதை மட்டும் கைல வச்சுக்கிட்டு ஒரு வருஷம் உன்னை நீயே பார்த்துக்க சஞ்சய். எனக்கு தெரியாம உன் அண்ணன் அம்மா அக்கானு யார்கிட்டேயும் ஹெல்ப் கேட்க மாட்டேன்னு நம்புறேன். அப்படி செய்தா கூட என்னை ஏமாத்துறது இல்லடா உன்னை நீயே ஏமாத்திக்கிறேன்னுதான் அர்த்தம்” என்றார்.
என்ன சொல்ல வருகிறார் என்பதில் கவனம் வைத்தாலும் அவரின் முகத்தை பார்க்காமலேயே நின்றான் சஞ்சய்.
“இது உன் லைஃப். இதுல நீ மட்டும்தான் இருக்க. உன் ஃபாமிலி உன் கூட இல்லை இப்போ, எங்களையெல்லாம் மறந்து போயிடு. மனசுக்கு சரின்னு படுறத யாருக்கும் பயப்படாம செய். சரியோ தப்போ நீயே முடிவுகள் எடு. செய்ற தப்பிலேருந்து பாடம் படிச்சுக்க. நீ செய்ற தப்புக்கு நீயே பொறுப்பெடுத்து சமாளி. விழுந்தா கவலைப்படாத, ஒவ்வொரு முறை நீ கீழ விழும் போதும் எந்திரிக்கிற உன்னோட வேகம் அதிகமானா நீ சரியா போயிட்டிருக்கேன்னு அர்த்தம். தைரியமா விழுந்து எந்திரி. எது வந்தாலும் தனியா ஃபேஸ் பண்ணு. உன்னால முடியாதுங்கிற எண்ணம் வர்றப்போ மட்டும் என்கிட்ட உதவி கேளு, அதுவரை நீ மட்டும்தான் உனக்கு” என்றவர் அவனை நெருங்கி வந்து அவனது தாவாயை நிமிர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தார்.
“உன்னை நினைச்சி பயமா இருக்குடா சஞ்சய். நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது. உம்மேல உயிரா இருக்கிற யாருமே உனக்கு இல்லைனா கூட உன்னால இந்த உலகத்துல வாழ முடியனும். அதுதான் உன் அப்பாவோட ஆசை” என்றவரை வெறிப்பது போலத்தான் பார்த்தான்.
“இது நமக்குள்ள இருக்கட்டும். நீ நல்லாருக்க இங்க வேலை பார்த்திட்டு எக்ஸ்பீரியன்ஸ் கெய்ன் பண்ணிட்டு வர நினைக்கிறேன்னு வீட்ல சொல்றேன். உன் அம்மாவை சமாளிச்சிடுவேன். நீயும் அப்படியே சொல்லு. ஒரு வருஷம் கழிச்சு ஒரு ரூபாய் எனக்கு நீ தர வேணாம். எதையும் சமாளிப்பேன்கிற மனுஷனா வாடா, அது போதும்” என்றார்.
என்ன இருந்தாலும் காலையில் அப்பா அவனை குறித்து பேசிய வார்த்தைகள் அவனை பாதித்துக் கொண்டுதான் இருந்தன. இன்னுமே அவனால் அந்தப் பேச்சுக்களை கடக்க முடியவில்லை, ஆகவே அப்பாவுக்கு பதிலே தரவில்லை அவன்.
அவரே அவனை கட்டியணைத்துக் கொண்டார். அப்பாவை அணைக்க கைகள் எழுந்தாலும் வீம்பாக முஷ்டியை மடக்கி அவரை தீண்டாமல், உடலின் விரைப்பை கூட்டி அழுத்தமாக நின்றான். மகனின் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு விலகினார் வீரராகவன்.
“இந்த ஊர் உன்னை முழுசா மாத்தும்” என்றவர் சொடக்கு போட்டு, “இதோ முடிஞ்ச இந்த செகண்ட்டை யாராலேயும் திரும்ப கொண்டு வர முடியாது. ஒரு வருஷத்தை வேஸ்ட் பண்ணாம உன்னை நீயே ஷேப் பண்ணிக்கடா, நான் வர்றேன்” என்றார். மகனின் பாராமுகத்தில் நெடிய மூச்சுடன் வெளியேறி விட்டார்.
அப்பாவை வழியனுப்ப அவன் வெளியில் எல்லாம் செல்லவில்லை. ஹாலிலேயே அமர்ந்து விட்டான். கார் புறப்படும் ஓசை அவனுக்கு கேட்கவும் விட்டு விட்டு போயே விட்டாரா என ஒரு நொடி மனம் அதிர்ந்துதான் போனது. ஒரு வருடம் இங்குதான் இருக்க வேண்டுமா என்பது அவனது வயிற்றில் புளியை கரைத்தது.
தோள்கள் தளர இருக்கையில் சாய்ந்து கொண்டான். கல கலப்பான வாலிபன், மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைக்காத நல்லவன், அப்பாவின் எண்ணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. தனித்தீவில் தன்னை கை விட்டு சென்று விட்டார் என்றே நினைத்தவன் அவர் மீது இன்னுமின்னும் கோவத்தை வளர்த்துக் கொண்டான்.
இதுதான் நடக்கும் எனத் தெரிந்தாலும் ஏதாவது மாயம் நிகழ்ந்து சஞ்சய் சென்னைக்கு கிளம்பி விடுவான் என நப்பாசை கொண்டிருந்தார் ஐஸக். மகனை விட்டு வீரராகவன் மட்டுமே காரில் கிளம்ப ஐஸக்கிற்கு சொத் என்றாகி விட்டது. தொங்கிப் போன முகத்துடன் வீடு திரும்பியவரை அவரது மனைவி சுனிதாவின் அழுகைதான் வரவேற்றது.
சுனிதாவின் அண்ணனுக்கு திடீர் உடல்நலகுறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருக்கிறாராம். மச்சானைக் காண மனைவியை அழைத்துக் கொண்டு விடியற்காலையிலேயே பர்தமான் என்ற ஊருக்கு புறப்பட்டு விட்டார் ஐஸக்.
வழியிலேயே அவரது கைப்பேசி மீண்டும் அணைந்து போய் விட்டது.
கொல்கத்தா எனும் பெரும் நகரத்தில் சஞ்சயும் மீராவும் கடினமான சூழலில் இருக்க, அவர்கள் இருவருமே எதிர்பார்க்காத திருப்பம் அவர்கள் எதிர்பார்க்காத திசையிலிருந்து அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது!