இருவரின் கண்களும் சந்தித்துக் கொள்ள, “ஒழுங்கா குடு” என்றான் அவள் செய்த அழிச்சாட்டியத்தில் தோன்றிய சிரிப்பை உள்ளடக்கி.
“என்ன அத்தாச்சி சப்போர்டுக்கு ஆளா?” என்று அவளிடம் சொன்னவள், அவனை பார்த்து, “எங்க அத்தாச்சியை நாங்களே பத்திரமா பார்த்துப்போம்” என்றாள் அவளுக்கு உணவை ஊட்டி விட்டுக்கொண்டே.
அவன் சிரிப்பை மீசைக்குள் மறைத்து அழகாக தலையசைத்தான்.
“நீங்க சாப்பிடலையா?” அவனை விசாரித்தாள் தேன்மொழி.
“சாப்பிடணும், நீ சாப்டியா?” என்று ருத்ரன் அவளிடம் கேட்க,
“இன்னும் இல்ல. நீங்க போங்க சாப்பிடுங்க .அப்புறம் பரோட்டா கிடைக்காது. எனக்கு கார்த்தி எடுத்து வச்சிருப்பான் ” என்றாள் ரகசியமாக.
“இந்தா அண்ணா” என்று தட்டுடன் வந்தான் சர்வேஷ்.
“பார்ரா!” என்று சர்வேஷை பார்த்து புன்னகைத்து, ஐஷ்வர்யா உண்டுமுடித்துவிட்டதால் கையைக் கழுவச் சென்றாள்.
அவள் நகரவும், “ஐஸ், லைட் கிட்ட கை காட்டு. மெஹந்தி ஸ்நாப் எடுப்போம். ராகவ் பேரு எழுதியிருக்கியா?” என்று விசாரித்துக்கொண்டே சில படைகளை எடுத்தான் சர்வேஷ்.
“ஹிந்தி தெரியாது சித்தப்பா. தமிழ்ல பேசுங்க” என்று வந்துவிட்டான் கார்த்திக்.
அவனை முறைத்த சர்வேஷ், தங்கையின் கைகளை படம்பிடிக்க, “மெஹந்தி போட்டவங்களை மட்டும் தான் போட்டோ எடுப்பீங்களா?” என்று கேட்டபடி வந்தாள் தேன்மொழி.
அவன் கை அசைத்து நீயும் நில் என்று காட்ட, “வாங்க அத்தாச்சி” என்று ஐஸ்வர்யாவை இழுத்து பிடித்து தன் அருகே நிறுத்திக்கொண்டாள். அவளின் அத்தாச்சி என்ற அழைப்பில் சர்வேஷ் முகம் சுழித்துப் பார்க்க, “தேனு, தயவு செஞ்சு அத்தாச்சினு கூப்பிடாத” என்று கெஞ்சினாள் ஐஷு.
“அத்தாச்சி அப்படினா என்ன?” ருத்ரன் கேட்க, “அண்ணாவோட ஒய்ப்’ப அப்படி தான் கூப்பிடுவோம்” பதில் சொன்னாள் தேன்.
“அண்ணினு கூட கூப்பிடு தேனு, தயவு செஞ்சு அத்தாச்சி வேணாமே!” என்றாள் ஐஷு மீண்டும் கெஞ்சலாய்.
“அதெப்படி அத்தாச்சி? நம்ம வீட்டுப்பக்கம் இப்படி தானே பழக்கம்”
“ஐஸ், அப்போ நீயும் அவளை அப்படியே கூப்பிடு” என்றிருந்தான் ருத்ரன்.
ஐஷ்வர்யாவும், சர்வேஷும் அதிர்ந்து பார்க்க, தேன்மொழி அவன் சொன்னதை விளங்கிக்கொள்ளும் முன்பே, “சித்தி…” என்ற கார்த்தியின் அழைப்பில் கவனத்தைச் சிதறவிட்டாள்.
“விடுங்க…விடுங்க… அத்தை, இது சித்தி பங்கு. தேனு சித்தி, சீக்கிரம் வந்து உன் பரோட்டாவை வாங்கிக்கோ. இதுக்கு மேல என்னால காப்பந்து பண்ண முடியாது” என்று அவன் கத்தினான்.
“இதோ வரேன்” என்ற தேன்மொழி பரோட்டா தான் முக்கியம் என்கிற ரீதியில், வேகமாக அவனிடம் சென்றாள். செல்லும் அவளை பார்த்தவன், பார்வையை மாற்றி, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தம்பி, தங்கையிடம் என்னவென்பதாக புருவம் உயர்த்த, ஐஷ்வர்யா தான் ஏக குஷியில், “அண்ணா…. என்ன சொன்ன நீ? நிஜமாவா?” என்றாள் குறுகுறு பார்வையுடன்.
அவன் விளக்கத்தில் ஐஷ்வர்யா தன் தலையை நாலாப்பக்கமும் உருட்ட, “வாட் ப்ரோ?” என்றான் சர்வேஷ்.
சன்னமாகச் சிரித்தவன், தட்டை வைக்கும் சாக்கில் அங்கிருந்து நகர, அவனின் பார்வையோ தேனை தான் மொய்த்தது. அவளோ தன் பங்கு பரோட்டாவை காத்து, அதை எடுக்க வருபவரை, “கையை வைச்ச… பிச்சு பிச்சு… ஓடிரு” என்று மிரட்டிக்கொண்டிருந்தாள். அவள் மிரட்டலின் தொனியில் தலையை கோதி கொண்டான் ருத்ரன்.
இப்போது அவன் கூறிய , “அப்ப நீயும் அவளை அப்படியே கூப்பிடு” அவள் காதில் மீண்டும் ஒலிப்பதை போல் இருக்க, தன் தலையில் மெல்ல தட்டிக்கொண்டு அவளின் நாட்குறிப்பை சிரிப்புடன் புரட்டினாள்.
அவள் ஐஸ்வர்யாவின் கையில், அவர்கள் இருவரின் பெயரையும் மறைத்து வரைந்திருந்த மாதிரி வரைப்படம் அங்கே இருந்தது. கல்யாணம் முடிந்த அன்று நடந்த நலங்கு விழாவில் அதை அவர்களை கண்டுபிடிக்குமாறு கூறி கேலி பேசியதெல்லாம் நினைவாக வந்தது. புன்னகையுடன் அந்தக் காலங்களை நினைத்தவள் அடுத்தப்பக்கம் திருப்ப, அதில் ஒரு காய்ந்த மல்லிகை பூ இருந்தது, அதை மெதுவாக வருடியவள், அதை பத்திரமாக தனது கைபேசியின் பின் வைத்து பாதுகாத்தது நினைவு வந்தது.
“எதுக்காக இதை பத்திர படுத்தினேன். எனக்கும் பிடிச்சிருந்ததோ!” என்று அவளின் சிந்தனை அதனை கொடுத்தவனிடம் சென்றது.
ருத்ரனின் மிடுக்கான தோற்றம் தான் நினைவில் வந்தது. அவனை நினைத்து அவளுக்கு பெருமை தான். அவனின் சாதனைகளை அறிந்துகொண்டவளுக்கு அவனின் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் உருவாகியிருந்தது. அவன் ஒருமுறை இவளிடம் படித்துமுடித்து என்ன செய்ய போகிறாய் என்று கேட்க, அவள் தெரியல என்று சொல்லியிருக்க, “லைஃப்ல கோல் வேணாமா? பிஹச்டி பண்ணு” என்று சொல்லியிருந்தான். அவனின் அறிவுரையை அப்படியே பின்பற்றினாள்.
காய்ந்த பூவை கையில் எடுத்து பார்க்க, அதை அவன் கொடுத்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.
ஐஷ்வர்யாவின் திருமண பரபரப்பில், மாப்பிள்ளைக்கு போடும் நகைகளை வீட்டில் வைத்துவிட்டு மண்டபம் சென்றிருந்தார்கள். அதை கடைசி நிமிடத்தில் தான் கண்டிருந்தார் ஐஸ்வர்யாவின் தாய். அப்போது அவர் எதிரில் தென்பட்ட தேன்மொழியிடம் அதை எடுத்துவாருமாறு கூறிக்கொண்டிருக்க, அவரின் பதற்றமான முகத்தை கவனித்து ருத்ரன் அருகே வரவும், அவர் முகத்தில் சிறு வெளிச்சம்.
“ருத்ரா… தேனை வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு , மாப்பிள்ளைக்கு போட வேண்டிய நகையை சீக்கிரம் எடுத்துட்டு வந்துடுப்பா. உங்க சித்தப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான். கொஞ்சம் சீக்கிரம்” என்று அவன் கைப்பிடித்துக் கூறினார்.
“சித்தி நீங்க நார்மலா இருங்க.நாங்க எடுத்துட்டு வந்திடுறோம். மொழி கேட்டுக்கோ. வெளிய வெயிட் பண்றேன் வா” என்று கூறிவிட்டு அவன் வேகமாக சென்றுவிட, இவளும் நகை எங்கிருக்கிறது என்று கேட்டுக்கொண்டு வெளியே வந்து அவனைத் தேடினாள்.
அவளின் தேடலை உணர்ந்து, அவள் முன் வந்து வண்டியை நிறுத்தினான். அவளும் பதட்டத்தில் இருந்ததால், அவனின் பார்வை, அவன் முகத்தில் தோன்றிய புன்னகை, அவள் ஏறி அமர்ந்ததும், அவன் கண்ணாடியைச் சரி செய்தது என்று எதையும் அவள் கவனிக்கவில்லை. முகூர்த்த நேரமும் நெருங்கிவிட அதற்குள் வீட்டிற்குச் சென்று எடுத்து வர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளிடம்.
மண்டபம் வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்க, ருத்ரனின் திறமையில் அங்கிருந்த வாகன நெரிசலை லாவகமாக கடந்து பதினைந்து நிமிடத்தில் வீட்டில் விட்டிருந்தான் அவளை. வீடு வந்ததும் சட்டென இறங்கியவள் அவனை கண்டுகொள்ளாது, வேகமாக வீட்டுக் கதவைத் திறந்து அவளது அத்தை சொன்ன இடத்தில் தேட அங்கே நகைகள் இல்லை.
ஒருநிமிடம் நின்று யோசித்தவள், ஏதோ யோசனையோடு பூஜை அறை சென்று பார்க்க, அங்கிருந்த சாமி படத்தின் முன்பு இருந்தது அந்த மோதிரமும், செயினும். அதனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் தேன்மொழி.
அவளின் முகம் பார்த்து, “எடுத்தாச்சா?” என்று கேட்டான் ருத்ரன்.
“ஹ்ம்ம் அத்தான்… எடுத்தாச்சு. வாங்க வாங்க… இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு முகூர்த்ததுக்கு. அதுக்குள்ள அங்க போகணும்” என்றவள் அப்போது தான் வண்டியை பார்த்தாள்.
பார்த்தவுடன் அவளது ஆசை மனம் அதனை ஓட்ட எண்ணி, “நா ஓட்டவா அத்தான்” என்றிட, அவளின் முதல் அத்தான் என்ற அழைப்பில் தன்னை மறந்து லயித்திருந்தவன், அவளின் அடுத்த அழைப்பில் தெளிந்தான்.
அவளை மேலும் கீழுமாக பார்த்தவன், சிரிப்புடன், “இப்படியேவா?” என்று அவளின் ஆடையைச் சுட்டிக்காட்டினான்.
அவள் குனிந்து தன்னை பார்த்தாள். கால் பாதங்கள் மறையும் படி பட்டுச்சேலை அவள் மேனியை தழுவி இருக்க, “சே! இத மறந்துட்டேன்” என்றாள் தலையில் கை வைத்து,
அவளை ஊடுருவும் பார்வை பார்த்துக்கொண்டே வண்டியில் ஏறி அமர்ந்தான். அவனின் பார்வை புரியாதவள், “எதுக்கு அப்படி பாக்குறீங்க?” என்று கேட்டாள் குறுகுறுப்பில்.
“உன் ஹைட்டுக்கு கால் எட்டுமா?” என்று அவன் நக்கலாக கேட்க,
“அதெல்லாம் எட்டும்” என்று ரோஷத்துடன் சொன்னவள், அவன் தோள் பிடித்து ஏறி அமர்ந்தாள். அவள் தன்னிச்சையாக செய்த அந்தச் செயல் ருத்ரனின் மனதைக் கொள்ளையடித்திருக்க, அவன் மனமோ விண்ணில் பறந்தது. வண்டியோ அவன் கைகளில் சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றது. மண்டபம் திரும்பும் போது தான் அவன் வண்டியை எத்தனை லாவகமாக ஓட்டுகிறான் என்பதை கவனித்தாள்.
பத்து நிமிடத்தில் மண்டபம் வந்திருக்க, வண்டியிலிருந்து இறங்கியவள், “அத்தான் செம்ம போங்க, கடைசியா அந்த ரோட்ல கட் பண்ணீங்களே…. வாவ்!” என்று அவனை பாராட்டி விட்டு வேகமாக அத்தையிடம் சென்றாள். வண்டியை நிறுத்தி அவனும் இறங்க, அவள் அமர்ந்திருந்த இடத்தில் அவள் தலையிலிருந்த மல்லிகை ஒன்று உதிர்ந்திருக்க அதை கையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.
மண்டபத்தின் உள்ளே நுழைந்தவன் அவளை விழிகளால் தேட, மணமகள் அறை பக்கம் அவள் இருப்பது தெரிந்தது. இவனும் அங்கே விரைய, காயத்ரியிடம் நகையை கொடுத்துவிட்டு திரும்பினாள்.
திரும்பியவளின் முன் அந்த மல்லிகை பூவை நீட்டி நின்றிருந்தான் ருத்ரன். அவள் என்னவென்று அவன் கண் பார்க்க, கண்ணில் சிரிப்புடன், “உன்னது தான். என் கையில கிடைச்சிருக்கு. பத்திரமா வச்சுக்கோ!” என்று கொடுக்க, அதை வாங்கிக்கொண்டவள், என்ன செய்வது என்று தெரியாமல் மழங்க மழங்க விழித்தாள்.
“மொழி….” என்று சற்றே அவளை நெருங்கியவன், கைபேசியை காட்டி, “இங்க பின்னாடி வச்சுக்கோ, உன் கைக்குள்ள இருக்கும்ம் நான்” என்று அவளைக் காண, “தேனு! தேனு!” என்று அவளை கைபிடித்து இழுத்தாள் கனி. “எங்க போயிட்ட? சீக்கிரம் வா தேனு, தாலி கட்ட போறாங்க” என்று அவளை இழுத்துக்கொண்டுச் சென்றாள். அவள் அவசரப்படுத்தியத்தில், ருத்ரன் சொன்னது போல அந்தப் பூவை அவளின் கைபேசியின் பின் வைத்துக்கொண்டாள்.
அவளின் செயல்களை கவனித்தவன், அவளின் பின்னே அவனும் மேடை ஏறினான். அவளை நெருங்கி நிற்க முயன்று அது முடியாமல் போக, அவள் முகம் பார்க்கும்படி நின்று கொண்டான்.
நாட்குறிப்பில் பூவை மீண்டும் வைத்தவள், பேனாவை எடுத்து அதன் அருகில், “மன்னவன் பெயர் சொல்லும் ஒற்றை பூவின் சங்கதி என்னவோ?” என்று எழுதினாள்.
‘சரியான பல்ப் நீ தேன்மொழி. இப்ப புரிஞ்சு என்ன பிரயோஜனம். ஒருமாறி பீல் ஆகுது’ என்று அவள் மனம் நினைக்க, திரும்பி மணியை பார்த்தாள். அது நள்ளிரவு என்று காட்ட, இன்னுமா பேசுறாங்க இந்த காதல் பறவைகள் என்று எழுந்து கனி இருக்கும் அறையை எட்டிப் பார்த்தாள்.
கனி, அவளை கண்டவள் வா என்று சைகை செய்தாள். “ஓகே நிலன் நான் மெயில் பண்றேன்.லேட் ஆச்சு. தூங்க போறேன். நாளைக்கு பேசுறேன்.குட் நைட்” என்று கைபேசியை அமர்த்திவிட்டாள்.
“அப்படி என்ன தான் பேசுவீங்களோ!” என்று கேட்டபடி படுக்கையில் விழுந்தாள் தேன்மொழி. “நீயும் பேசுவல அப்போ தெரிய வரும் அது என்னனு” என்ற கனியும், அவளை கட்டிக்கொண்டு படுத்துவிட்டாள். இருவரையும் நித்திராதேவி தழுவிக்கொண்டார் இனிமையாக.