அவரும் காலையில் இருந்து மனைவியால் மகன் படும் பாட்டை பார்த்துக் கொண்டு தானே இருந்தார். மிதுன் அன்னையை நக்கலாக பார்க்க முறைத்துப் பார்த்தாள் பார்வதி.

            அனைவரும் கிளம்பி இருக்க வீணா மட்டும் வரவில்லை. அனைவரும் அவளுக்காக காத்திருக்க அப்போது மாடியில் இருந்து தேவதை போல வந்தாள்.

            சத்யா கண்கள் அவளை விட்டு நகர வில்லை. தங்க நிற சுடிதாரில் கழுத்தில் மின்னிய தாலியுடன் அவ்வளவு அழகாக வந்தாள். புதுப் பெண் என்பதால் தலையில் இருந்த மல்லிகைச் சரம் கூட அவள் அழகை இன்னும் கூட்டியது.

            அவன் கண்களுக்கு தேவலோக மங்கையாக தான் தெரிந்தாள். அதுவும் அவன் கண்கள் மனைவியாக அவளை வருடியது. இயற்கையின் அழகி இவள் தானோ என்று அவன் மனம் எண்ண கண்களை விட்டு பார்வையைத் திருப்ப முடியவில்லை.

            “மாம்ஸ் இப்படியே பாத்துட்டு இருந்தா நாம எப்ப வெளிய போறது?”, என்று மது கலாய்த்த பிறகு தான் அவன் பார்வையைத் திருப்பினான். அவளும் அவனைக் கண்டு முகம் சிவந்தாள்.

            அனைவரும் கிளம்பினார்கள். பார்வதி மட்டும் எரிச்சலுடன் அமர்ந்திருந்தாள். சிறியவர்கள் எல்லாம் ஒரு காரிலும் பெரியவர்கள் ஒரு காரிலும் அமர்ந்திருந்தார்கள்.

            காரில் செல்லும் போது கலகலப்பாக மது பேச மற்றவர்களும் சந்தோஷமாகவே பேசினார்கள். பார்வதி வேறு அங்கு இல்லாதது மிதுனுக்கு வசதியாக இருந்தது.

            சத்யா அவர்களுடன் நன்றாக வாயடித்தாலும் அவ்வப்போது அவன் கண்கள் அவன் மனைவியை வருடிச் சென்றது. அவன் பார்வை தன் மீது இருப்பது தெரிந்து அவள் நாணத்தில் சிவந்தாலும் அவனை நேருக்கு நேர் பார்த்து என்ன என்னும் விதமாய் புருவத்தை சுழித்தாள்.

            முதலில் பார்வையை திருப்பிக் கொண்டவன் அடுத்து அவனும் கண்களால் பேச அதைக் கண்டு மது கிண்டல் அடிக்க என அந்த பயணம் அவ்வளவு அருமையாக இருந்தது.

            இடையில் ஒரு முறை மிதுனுக்கு ஸ்ரீயிடம் பேச நேரம் கிடைத்தது. அருகில் மது இருந்தாள் தான். ஆனால் அவளை கண்டு கொள்ளாமல் “சாரி அம்மா பேசினதுக்கு”, என்றான் மிதுன்.

            “அவங்க தப்பா ஒண்ணும் பேசலை. அப்புறம் என்னால உங்களை தனியா சந்திக்க எல்லாம் வர முடியாது. ஏற்கனவே அம்மா அப்பாவுக்கு தெரியாம நிறைய தப்பு பண்ணி கெட்ட பேர் வாங்கிக்கிட்டேன். எல்லாரும் என்னை மன்னிச்சாலும் காலத்துக்கும் எனக்கு அது மறக்காது. எப்பவும் கருப்பு பக்கங்களா எனக்குள்ள இருந்துட்டே தான் இருக்கும். நீங்க எனக்கு நல்ல நண்பன். நான் காணாம போனப்ப என்னைக் கண்டு பிடிக்க உதவியா இருந்தீங்களாம். அதுக்கு ரொம்ப நன்றி. அதை தவிர நமக்கு நடுவுல பேச எதுவும் இல்லை. இனி என் வாழ்க்கைல என்ன முடிவா இருந்தாலும் என்னோட அப்பாவும் அண்ணனும் முடிவு எடுப்பாங்க. வா மது, உள்ள போகலாம்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.

            அவன் சாதாரணமாக தான் பேச முயன்றான். அவளும் சாதாரணமாக தான் பேசினாள். சரியாகவும் தான் பேசினாள். ஆனாலும் அவள் தன்னை உதாசீனப் படுத்தி விட்டுச் சென்றது போல ஒரு உணர்வு.

            அவன் ஒன்றும் காதலைச் சொல்ல வில்லையே. அன்னை பேசியதற்கு மன்னிப்பு கேட்க வந்தான். அதற்கு இப்படி பேச வேண்டுமா என அவனுக்குள் கேள்வி எழ அவள் ஒன்றும் தவறாக பேச வில்லையே? என்று அவன் மனசாட்சியே பதில் சொன்னது. அதை அடக்கி விட்டு மற்றவர்களுடன் சென்று அமர்ந்து விட்டான். ஆனாலும் அவளைக் காணும் போதெல்லாம் அவனையே அறியாமல் ஒரு உணர்வு எழுந்தது.

            ஸ்ரீயோ இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து மது மற்றும் வீணாவுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிட்டாள்.

என்ன தான் பார்வதி அங்கு இல்லாமல் போனாலும் மிதுனின் தந்தை மகனையும் ஸ்ரீயையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார். ஸ்ரீ பார்வையை மகன் பக்கம் திருப்பவும் இல்லை, அதுவும் இல்லாமல் அவனைக் கவர எந்த முயற்சியும் செய்ய வில்லை என்பதிலே அவள் மேல் அவருக்கு மரியாதை வந்தது.

கோயில், மால் என்று சுற்றி விட்டு வீட்டுக்கு வர இரவு ஏழு மணி ஆகி இருந்தது. தீனா கிளம்புவதாக சொல்ல அம்சவேணி சாப்பிட்ட பிறகு தான் போக வேண்டும் என்று சொல்லி விட்டாள்.

            பார்வதியும் சும்மா ஒன்றும் இருக்க வில்லை. இரவு உணவை தயார் செய்து தான் வைத்திருந்தாள்.  அனைவரும் உணவு உண்ண அமர்ந்தார்கள். அம்சவேணியும் வீணாவும் தான் பரிமாறினார்கள்.

            “மாப்பிள்ளை கூட உக்காரு வீணா”, என்று சொன்ன போதும் “கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன் மா. இப்ப பசிக்கலை”, என்று சொல்லி விட்டாள்.

            தன்னுடைய மனைவி உணவு பரிமாற திண்டாடிப் போனது என்னவோ சத்யா தான். அவளது நடமாட்டமும்  அழகும் அவனை அதிகம் சோதித்தது.

            அவளிடம் இருந்து பார்வையைத் திருப்புவது அவ்வளவு சுலபமானதாக இல்லை. அவசரமாக உணவை அருந்தியவன் கை கழுவ எழுந்து கொண்டான்.

            “வீணா மாப்பிள்ளைக்கு டவல் எடுத்துக் கொடு”, என்று தீனா சொல்ல அவள் மறுக்க எல்லாம் இல்லை. அவனைப் பார்த்துக் கொள்வது அவள் கடமை ஆயிற்றே.

            கை கழுவிக் கொண்டிருந்தவன் அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க அவனுக்கு பின்னே கையில் துண்டுடன் வந்து கொண்டிருந்தாள் வீணா.

            அவள் கொடுத்த துண்டில் கையைத் துடைத்தவன் அவள் தோள் மீதே போட்டு அவளை இமைக்காமல் பார்த்தான். அவன் பார்வையில் வித்தியாசம் தெரிய சிறு படபடப்புடன் “என்ன?”, என்று கேட்டாள்.

            “ரொம்ப அழகா இருக்க வீணா, பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு”, என்று நேரடியாகவே புகழ்ந்து விட அவள் முகம் செந்தாமரையாக சிவந்து போனது.

            அவளை ரசித்து அவளிடமே சொன்ன முதல் ஆண்மகன் அவன் தான். அதுவும் அவன் தாலி கட்டிய கணவனாக இருக்கையில் அவளுக்கு கோபமோ வெறுப்போ வருமா என்ன? அதுவும் அவன் கண்களில் இருந்த ரசனை கூட அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

            “என்னைக் கண்ணு போட்டது போதும். அத்தையும் மாமாவும் சாப்பிட்டு முடிக்க போறாங்க. இங்க இருந்தா தப்பா நினைக்க போறாங்க. வாங்க போகலாம்”, என்று சொல்லி அவன் மனநிலையை மாற்ற முயன்றாள்.

            “மகனும் மருமகளும் ரொமான்ஸ் பண்ணுறாங்கன்னு சரியா தான் நினைப்பாங்க. இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு?”, என்று கேட்க அவன் இடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

            அன்றைய இரவில் அவனை தனி அறையில் சந்திக்கவே கொஞ்சம் தயக்கமாக தான் இருந்தது வீணாவுக்கு. அவளை மட்டம் தட்டி பேசியவன் தான். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டான். அவளைப் பிடித்திருப்பதாகவும் சொல்லிய பிறகு அவனை மறுக்க அவளுக்கு எப்படி மனது வரும்? அதனால் தான் இந்த தடுமாற்றம்.

            அவன் அவளை எதற்கும் கட்டாயப் படுத்தப் போவதில்லை தான். ஆனாலும் உள்ளுக்குள் பெரிய தடுமாற்றம். அவளது தடுமாற்றமும் திணறலும் அவனுக்கு பிடித்திருந்தது.

            கட்டிலில் படுத்ததும் இன்னும் தடுமாற்றம். நேற்று இயல்பாக அவன் கைக்குள் புகுந்து கொண்டாள். அதில் இருந்தது காதலும் அவனது பாசமும் தான். ஆனால் இன்றோ அவனுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவளை இயல்பாக இருக்க விட வில்லை. அதுவும் அவனது அறையில் இருந்த கட்டிலை விட இது கொஞ்சம் சின்னது. அதற்காக இடித்துக் கொண்டு எல்லாம் இருக்காது.

            அவள் முகத்தில் இருந்த உணர்வுகளைக் கண்டவன் என்ன நினைத்தானோ? “நீ தூங்கு வீணா. எனக்கு ஒரு கால் பேசணும். பிரண்ட் கிட்ட தான். நான் ஆபீஸ் போகாதப்ப என்ன எல்லாம் செய்யணும்னு சொல்லிறேன். இல்லைன்னா அப்பாவை தொல்லை பண்ணிக்கிட்டே இருப்பான்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

            அப்பாடி என்ற நிம்மதியோடு படுத்தவள் அவன் வருவதற்கு முன் நன்றாக தூங்கி விட்டாள். அதற்கு பிறகு அறைக்குள் வந்தவன் நேற்று போல அவளை அணைத்துக் கொண்டு தான் படுத்தான். நேற்று படுத்ததும் உறங்கி விட்டான். ஆனால் இன்று அவள் அருகாமை அவனை ஒரு வழி செய்தாலும் அவன் கைகள் அவளை அணைத்தே இருந்தது.

            அவன் அருகாமையை உணர்ந்தாளோ என்னவோ? அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவள் அவன் சட்டையை இறுக்கிப் பிடித்த படி உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

தொடரும்..