அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்க நேற்றைய களைப்பு என்று உணர்ந்தவள் அவன் தூக்கம் கலையாதவாறு பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
அந்த காலைக் காற்று அவள் மேனியைத் தீண்ட அவள் மனமும் உற்சாகமாக இருந்தகது. அவள் கண்கள் தோட்டத்தை ரசித்தது. அங்கிருக்கும் செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்க அவள் ஒவ்வொன்றையும் ரசித்தாள்.
சிறிது நேரத்தில் அவளது வீட்டின் நினைவும் வந்தது. இன்று அவர்களை இரண்டாம் மறுவீட்டுக்கு அழைக்க வருவார்கள். இன்று அவர்கள் வீட்டில் தங்க வேண்டும். அங்கே சத்யாவை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். அவனுக்கு எந்த மரியாதை குறைவும் வந்து விடக் கூடாது. அம்மா அப்பா சரியாக தான் இருப்பார்கள். ஆனால் உறவினர்கள் எதுவும் சொல்லி விடக் கூடாதே என்று இருந்தது.
அவள் யோசனை முழுக்க அவன் மட்டுமே. திருமணம் ஆனாலே கணவனைப் பற்றி தான் பெண்கள் மனம் நினைக்குமோ என்று அவளே அவளைப் பற்றிக் எண்ணிக் கொண்டாள்.
அவள் விருப்பப் பட்டு தான் அவனை திருமணம் செய்திருக்கிறாள். அவனும் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டான் தான். ஆனால் தங்களுக்குள் அனைத்தும் சரியாகி விட்டதா என்றால் தெரியாது. அவள் அவனை விரும்புகிறாள் தான். அவனும் அப்படி தான் சொல்கிறான். இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.
தங்களுக்குள் இருக்கும் இடைவெளியை பிறந்த வீட்டில் காட்டிக் கொள்ளக் கூடாது. எப்படியும் புது ஜோடியை சந்தோஷமாக இருக்கிறார்களா என்று கூர்ந்து கவனிப்பார்கள். அவள் மனது முழுக்க அதையே எண்ணிக் கொண்டிருந்தது.
அப்போது தான் சத்யாவுக்கு தூக்கம் கலைந்தது. கொஞ்சம் தாமதமாக எழுந்தது உடலுக்கு நன்றாக இருந்தாலும் அவனது தினசரி உடற்பயிற்சி நேரம் கடந்ததால் சிறு எரிச்சல் வந்தது. தலையை லேசாக பிடித்த படி எழுந்து அமர்ந்தவன் அருகில் மனைவியைத் தேடினான்.
அவள் படுக்கையில் இல்லை என்பதும் குளியல் அறையில் இல்லாததும் தெரிந்தது. அன்னையுடன் இருப்பாள் என்று எண்ணியவன் காலைக் கடன்களை முடித்து விட்டு ஐந்து நிமிடம் உடற்பயிற்சி செய்யலாம் என்று எண்ணி பால்கனிக்கு வர அங்கே அழகிய ஓவியமாய் தலையை காய வைத்த படி நின்றாள் வீணா. இதுவரை இல்லாத அழகான காலைப் பொழுது.
ஏனோ சட்டென்று ஒரு ஓவியக் காட்சி அவன் கண் முன் வர அதன் நாயகியாய் அவள். அவளையே ஒரு நொடி இமைக்காமல் பார்த்தவன் தலையை உழுக்கிக் கொண்டான்.
ஆனாலும் அவன் மனதில் இது வரை இருந்த எரிச்சல் மறந்து ஒரு புத்துணர்ச்சி அவளைக் கண்டதும் வந்தது. மனம் கூட அமைதியடைந்தது. ஜில்லென்று வெண்சாமரம் வீசியது போல ஒரு மனநிலை. ஏன் எதற்கு என்றெல்லாம் அவனுக்கு தெரிய வில்லை. அவன் வரவைக் கூட உணராமல் தீவிர யோசனையில் இருந்தாள்.
“காலைலே இங்க என்ன பண்ணுற?”, என்ற அவனின் குரல் திடீரென்று கேட்க பதறி அடித்துக் கொண்டு திரும்பியவள் அவனைக் கண்டதும் “நீங்க தானா? நான் பயந்துட்டேன்”, என்றாள்.
“என் ரூம்ல நான் இல்லாம வேற யார் இருப்பா?”
“ஹலோ, இது என்னோட ரூமும் தான்”, என்று பட்டென்று பதில் கொடுக்க அவள் அமைதியாக இருப்பதை விட இப்படி பேசுவது அவனுக்கு பிடித்தது.
மேலும் வம்பிழுக்க “காலைலே குளிச்சிட்ட போல? நான் கூட பல்லு கூட விளக்காம தான் இருப்பன்னு நினைச்சேன். நான் நினைச்சதை விட என் பொண்டாட்டி டீசென்ட் தான்”, என்றான்.
“தப்பு பண்ணிட்டேன். பல்லு விளக்காம இருந்திருந்தா நீங்க கவலைப் பட்டு விளக்கி விடுவீங்க போல? அவசரப் பட்டுட்டேனே”, என்று அவள் பதிலுக்கு கலாய்க்க “குளிக்க கூட வைக்கலாமே. தப்பு இல்லை”, என்றான்.
அதைக் கேட்டு அவள் முகம் சிவந்தது. அவள் அமைதியாக இருக்க “பாரேன் உனக்கு கூட வெக்கம் வருது”, என்று சொல்லி புன்னகைக்க “நான் டீ கொண்டு வரேன்”, என்று சொல்லி நழுவி ஓடி விட்டாள்.
மிதுன் காலையில் அமர்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருக்க அப்போது அங்கே வந்தார் குல்கர்னி.
பேப்பரில் பார்வையை பதித்திருந்தாலும் மிதுன் மனது வேறு எங்கோ இருந்தது. உண்மையிலே அவனுக்கு மனது பாரமாக இருந்தது. ஏனோ ஸ்ரீயின் பயந்த தோற்றமும் அவளது கலங்கிய முகமும் அவனை அதிகம் பாதித்தது.
கடைசியாக அவனைக் கண்டு அவள் முகம் வெளிறியதை கண்டு கஷ்டமாக இருந்தது. நிச்சயம் அது அவனது அன்னையின் பேச்சினால் என்று தெரியும் தான். இருந்தாலும் கஷ்டமாக இருந்தது.
இன்று அவளை நேரில் பார்க்க வரச் சொல்லியிருக்கிறான். ஆனால் வருவாளா என்று தெரியாது. வந்தாலும் என்ன பேசி அவளை சமாதானப் படுத்த என்று தெரிய வில்லை. அதுவும் இன்று வீணாவும் சத்யாவும் விருந்துக்கு வேறு இங்கே வர நிச்சயம் ஸ்ரீயும் அவள் தாய் தந்தையுடன் இங்கே வருவாள் என்று அப்போது தான் ஞாபகம் வந்தது.
“இதை எப்படி மறந்தோம்? அவ நம்பர் வேற இல்லையே? மதி கிட்ட சொல்லி நாளைக்கு வரச் சொல்லுவோமா? இன்னைக்கு நேர்ல சொல்லலாம். ஆனா அவ வந்தா அம்மா நம்மளை கண்காணிச்சிட்டே இருக்குமே? என்ன பண்ண?”, என்று எண்ணிக் கொண்டிருக்க “வாங்க அண்ணா”, என்ற தந்தையின் குரலில் தான் நடப்புக்கு வந்தான்.
குல்கர்னி அவனையே பார்த்த படி இருக்க “வாங்க பெரியப்பா”, என்றான்.
“பேப்பர்ல ரொம்ப மும்மரமா இருக்க போல?”, என்று கேட்ட படி அவன் அருகே அமர்ந்தார்.
அப்போது அங்கே வந்த பார்வதி “வாங்க மாமா, டீ குடிக்கிறீங்களா?”, என்று கேட்டாள்.
“இப்ப தான் மா சாப்பிட்டு வரேன். சரி நானும் மிதுனும் போய் சமபந்தி குடும்பத்தை விருந்துக்கு அழைச்சிட்டு வறோம்”, என்றார் குல்கர்னி.
“அவன் இன்னைக்கு சரக்கு இறக்க கேரளா போறான் அண்ணா. அது மட்டுமில்லாம இதுக்கு எதுக்கு சின்ன பையனைக் கூட்டிக்கிட்டு? நீங்களும் இவரும் போய்ட்டு வந்துருங்க. நானும் அக்கா கூட சமைக்க போயிருவேன். எங்களுக்கு ஏதாவது வேணும்னாலும் அவன் போய் வாங்கிட்டு வருவான்”, என்று அவசரமாக பதில் சொன்னாள் பார்வதி.
குல்கர்னி மிதுனைப் பார்க்க அவன் அமைதியாக இருந்தான். ஆனாலும் அன்னையை நினைத்தால் எரிச்சலாக வந்தது.
“சரி மா, நாங்க ரெண்டு பேரும் அவங்களை அழைச்சிட்டு வந்துறோம்”, என்ற குல்கர்னி எப்போது கிளம்ப வேண்டும் என்றெல்லாம் சொல்லி விட்டுச் சென்றார்.
அன்று மதியம் சத்யா குடும்பத்தில் இருந்த அனைவரும் வந்து விட்டார்கள். விருந்து முடிந்ததும் மற்றவர்கள் கிளம்ப சத்யா மற்றும் வீணா இருவரும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு செல்வார்கள். இது தான் அவர்கள் பிளான்.
வந்ததில் இருந்து ஸ்ரீ மிதுன் புறம் திரும்பவே இல்லை. அவள் மது அருகிலே இருந்து கொண்டாள். பார்வதி வேறு பார்த்துக் கொண்டே இருக்க மிதுனும் ஸ்ரீயிடம் பேச முயற்சி செய்ய வில்லை.
உணவு நேரம் கலகலப்பாக தான் சென்றது. மிதுன் மற்றும் ஸ்ரீ இருவருக்கும் தான் உள்ளுக்குள் ஒரு திணறல். அதுவுமே பார்வதி இருப்பதால் தான். அவள் இல்லையென்றால் இருவரும் இயல்பாக இருந்திருப்பார்களோ என்னவோ?
“மணி இப்ப 3 தான் ஆகுது. எல்லாரும் எங்கயாவது வெளிய போகலாமா?”, என்று கேட்டான் சத்யா.
“ஆமா வெளிய போய் ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குது. போகலாமே”, என்றார் குல்கர்னி.
“நாங்க ரெடியா தான் இருக்கோம். நீங்க எல்லாரும் தான் கிளம்பனும்”, என்றார் தீனா.
“அம்மாடி வீணா, சேலையை மாத்திட்டு வேற ஏதாவது டிரஸ் மாத்திட்டு வா மா”, என்றாள் பாமா. ஸ்ரீ மற்றும் மது இருவரும் சுடிதாரில் இருந்ததால் அப்படிச் சொன்னாள்.
“சரிங்கத்தை”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள் வீணா.
மெதுவாக மிதுன் அருகே வந்த பார்வதி “நான் உங்க கூட வரலை, எனக்கு வேலை இருக்குன்னு சொல்லு டா”, என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தாள்.
அவன் அன்னையை முறைத்துப் பார்க்க “என்ன அம்மா பையன் ரெண்டு பேரும் ரகசியம் பேசுறீங்க?”, என்று கேட்டாள் அம்சவேணி.
ஒரு நொடி அன்னையைப் பார்த்த மிதுன் “அது ஒண்ணும் இல்லை பெரியம்மா. அம்மாவுக்கு சமையல் செஞ்சு கால் ரொம்ப வலிக்குதாம். அதனால வரலையாம். நம்ம எல்லாரும் போகலாம்”, என்றான்.
திகைத்து விழித்த பார்வதி என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாற “நான் கூட மீதி இருக்குற வேலையை யார் பாப்பானு கவலைப் பட்டேன். சரி நம்ம எல்லாரும் கிளம்பலாம்”, என்றாள் அம்சவேணி.
“இல்ல நானும் வரேன். தனியா இருக்க கடுப்பா இருக்கும்”, என்று பார்வதி சொல்ல “வேண்டாம் வேண்டாம், உடம்பு முடியாம நீ அலைஞ்சுட்டு அப்புறம் நைட் எனக்கு கால் வலிக்குதுன்னு என்னை அமுக்கி விடச் சொல்லுவ? நீ வீட்லயே இரு”, என்றார் மிதுனின் தந்தை.