வீணாவை அவளது புகுந்த வீட்டில் விட்டுவிட்டு அவளது குடும்பத்தினர் அந்த இரவில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர்.
மிதுன் ஓட்டிக் கொண்டிருந்த காரில் அவன் அருகே அவன் தந்தையும் பின்னே அவனது அன்னை மற்றும் மது இருவரும் அமர்ந்திருந்தார்கள்.
மது ஏதோ கலாய்த்துக் கொண்டே வர அவளைத் தவிர மற்ற யாரும் அதிகம் பேச வில்லை.
எப்போதும் மிதுன் இப்படி அமைதியாக இருக்க மாட்டான் என்பதால் “அண்ணா உனக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டாள் மது.
“அதானே? என்ன ஆச்சு மித்து?”, என்று கேட்டார் அவன் தந்தை.
அவனே பதில் சொல்லி இருந்தால் கூட ஏதாவது சொல்லி அவர்கள் வாயை அடைத்திருப்பான். “அவனுக்கு இப்ப ஒரு பேய் பிடிச்சு ஆட்டுது மது. அதான் பழைய மிதுனா இல்லாம இருக்கான். அதுவும் சாதாரண பேய் இல்லை. சரியான மோகினி பேய்”, என்றாள் அவன் அன்னை.
அதைக் கேட்டு “அம்மா”, என்று எரிச்சலுடன் முணுமுணுத்தான் மிதுன்.
“என்ன டா அம்மா? நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்?”, என்று பார்வதி சொல்ல “அண்ணா நீ லவ் பண்ணுறியா? சூப்பர். என் அண்ணி யாரு?”, என்று வேண்டும் என்றே வம்பிழுத்தாள்.
“ஏய் வாயை மூடு டி”, என்று அவளை அரட்டி விட்டு “இங்க பாரு டா. வீணா கல்யாணம் முடிஞ்சிருச்சு. இனி அவ வாழ்க்கை அவ பாத்துக்குவா. அவ இங்க நம்ம வீட்டுக்கு வந்தா பாத்துக்கோ. அதை விட்டுட்டு அவங்க வீட்டுக்கு எல்லாம் போற வேலை எல்லாம் வச்சிக்கிட்டா நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்”, என்றாள் பார்வதி.
“எதுக்கு இப்படி பேசுற? வீணா நமக்கு பொண்ணு மாதிரி. மிதுனுக்கு அக்கா. அவன் எதுக்கு அவளைப் பாக்க போகக் கூடாது”, என்று கேட்டார் அவனது தந்தை.
“அப்பா நான் சொல்றேன்”, என்றவன் நடந்த அத்தனையும் சொல்லி விட்டு “கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அந்த பொண்ணு பத்தி அப்படி பேசுறாங்க. அவ கிட்டயும் எதையோ சொல்லி கஷ்ட படுத்திட்டாங்க”, என்றான் மிதுன்.
“அதுக்குள்ள உன் கிட்ட ஒப்பிச்சிட்டாளா? அவளும் அவ மூஞ்சியும்?”
“பார்வதி.. வார்த்தையை அளந்து பேசு. லவ் பண்ணுறது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லை. ஒரு சின்ன பொண்ணு மனசு நோகுற மாதிரி பேசலாமா?”
“லவ் பண்ணுறது தப்பான விஷயம் இல்லை தான். ஆனா அவன் கூட சேந்து போதை எல்லாம் எடுத்துருக்கா. அவளை கடத்தி வேற வச்சிருக்காங்க. அங்க என்ன எல்லாம் நடந்துச்சோ?”
“அம்மா.. இன்னொரு தடவை அந்த பொண்ணு பத்தி பேசினா நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்”, என்றான் மிதுன்.
“பாத்தியா பாத்தியா அவளைச் சொன்ன உடனே உனக்கு அப்படி கோபம் வருது? அவ உன்னை ஏதோ பண்ணிட்டா? பல்லைக் காட்டின உடனே நீயும் மயங்கிட்ட அப்படி தானே?”
“பாருங்கப்பா எப்படி பேசுறாங்கன்னு. எனக்கு இது வரைக்கும் அப்படி எந்த எண்ணமும் இல்லை. ஆனா இவங்க எப்ப அந்த பொண்ணை பத்தி தப்பா பேசுறாங்களோ அப்ப எல்லாம் அவளை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுது”, என்று சொல்லியே விட்டான்.
அனைவரும் திகைத்து விழிக்க “அப்படி மட்டும் நடந்தா நான் உயிரோட இருக்க மாட்டேன்”, என்றாள் பார்வதி.
“ரெண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடுங்க”, என்று அரட்டிய அவன் தந்தை “என்ன டா மித்து இது?”, என்று கேட்டார்.
“கஷ்டமா இருக்கு பா. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. வாழ்க்கைல எல்லாருக்கும் சருக்குறது இயல்பு தான். அதுல இருந்து அவங்க வெளிய வர நாம உதவி செய்யணுமே தவிர குத்திக் காட்டி அவங்களைக் காயப் படுத்தக் கூடாது. இவங்களும் ஒரு பொண்ணு தானே?”, என்றான்.
“கொஞ்சம் அதிகமா தான் பேசிட்டோமோ?”, என்று எண்ணி பார்வதி அமைதியாக இருக்க “அண்ணா சொல்றது சரி தான். ஸ்ரீ ரொம்ப நல்ல பொண்ணு. அவளே எனக்கு அண்ணியா வந்தா கூட எனக்கு சந்தோஷம் தான்”, என்று எரிகிற தீயில் எண்ணையை வார்த்தாள் மது.
பார்வதி அவளை முறைத்துப் பார்க்க வேறெங்கோ பார்ப்பது போல பார்வையைத் திருப்பிக் கொண்டாள் மது. ஆனால் மிதுன் மனதில் லேசான பனிச் சாரல்.
ஸ்ரீ தனக்கு மனைவியாக வந்தால் எப்படி இருக்கும் என்று மிதுன் மனதும் லேசான கற்பனைக்குச் சென்றது. இது வரை இருந்த இறுக்கம் தளர்ந்து புது விதமான மனநிலையில் காரை இயக்கினான். அடுத்து யாரும் எதுவும் பேச வில்லை.
வீட்டுக்கு சென்றதும் நடந்த அத்தனை விஷயத்தையும் மது அவளது அன்னையிடம் சொல்ல அவள் அதை அப்படியே வீணாவின் அன்னை அமசவேணியிடம் சொல்ல அவள் அப்படியே குல்கர்னியிடம் ஒப்பித்து விட்டாள். அனைத்தையும் கேட்ட குல்கர்னி யோசனையில் ஆழ்ந்தார். உடனே முடிவு எடுக்க இது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லையே. அதனால் அமைதியாக தூங்கச் சென்றார்.
அடுத்த நாள் இயல்பாக விடிந்தது பிரகாசமான காலைப் பொழுது. தன்னுடைய ஒளிக்கதிர்களை இப்புவியில் பரப்பி கொண்டிருந்தான் ஆதவன். பறவைகள் கீச்கீச்சென்று சத்தமிட்டது. எந்த சத்தமும் தங்களை எழுப்ப முடியாது என்பது போல நன்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள் மணமக்கள்.
அந்த ஆதவனின் வெளிச்சம் ஜன்னல் வழியாக முகத்தில் பட்டதும் முதலில் கண் விழித்தது வீணா தான். எப்போதும் போல தான் இந்த காலையும் என்று எண்ணியவளுக்கு அதற்கு பிறகு தான் இருக்கும் இடமே வேறு என்று புரிந்தது. அடித்து பிடித்து அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.
அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த திருமாங்கல்யமும் அவளின் தற்போதைய நிலையை எடுத்துச் சொல்லியது. அருகில் திரும்பிப் பார்த்தாள். ஒரு சார்ட்சும் ஒரு வெள்ளை உள்பனியனும் அணிந்து குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருந்தான் சத்யா.
தான் தூங்கிய பிறகு எழுந்து உடை மாற்றி இருக்கிறான் என்றும் தெரிந்தது. உண்மையிலே அவள் இருக்கிறாள் என்பதால் தான் முதலில் உடை மாற்றாமல் அப்படியே படுத்தான். ஆனால் அவனால் அந்த உடையில் தூங்க முடிய வில்லை. அதனால் தான் மாற்றி விட்டுப் படுத்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வீணா.
இந்த திருமணம் நடந்து முடிவதற்குள் எவ்வளவு பிரச்சனைகள் என்று பெருமூச்சு வந்தது. அவன் மூச்சு காற்று சீராக வருவதிலே அவன் நன்றாக தூங்குகிறான் என்று புரிந்தது. அவள் கண்கள் அவனை அளவிட்டது. தூங்கும் போது தான் ஒருவனின் உண்மையான முகம் தெரியும் என்று எங்கோ படித்தது நினைவில் வந்தது.
கோதுமை நிறம், அலையலையாக புரளும் கேசம், மூடியிருக்கும் அழகான கண்கள், கூர்மையான நாசி, சிவந்த அதரங்கள், உடற்பயிற்சியின் காரணமாக இறுக்கி இருக்கும் தசைக் கோளங்கள், தட்டையான வயிறு, உறுதியான கால்கள் என ரோமானிய சிற்பம் போல இருந்தான் அவளவன்.
அவள் கண்கள் அவனை ரசிக்க அவனிடம் லேசாக அசைவு தெரியவும் அவசரமாக மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து விட்டாள். “பாத்துருந்தா என்ன காலைலே சைட் அடிக்கிறன்னு கேட்டுருப்பான்”, என்று எண்ணியவளுக்கு சின்ன புன்னகை.
குளித்து முடித்து ஒரு சுடிதார் அணிந்து வெளியே வர இப்போதும் அவன் உறங்கி கொண்டு தான் இருந்தான். மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தாள். ஸ்ரீ அறை பூட்டி இருந்தது. அதைப் போல பாமா மற்றும் தீனா அறையும் பூட்டி இருக்க இந்த நேரம் எதையாவது உருட்டி யாரையும் எழுப்பி விடக் கூடாதே என்று தோன்றியது. என்ன செய்ய என்று யோசிக்கும் போது சமையல் அறையில் சத்தம் கேட்க அங்கே சென்றாள்.
பாமா தான் பாலை காய்ச்சி கொண்டிருந்தாள். “சாரி அத்தை ரொம்ப நேரம் தூங்கிட்டேன்”, என்றாள் மன்னிப்பாக.
அவளைக் கண்டு புன்னகைத்த பாமா “நானே தூக்கம் வரலைனு தான் டா எழுந்தேன். இன்னைக்கு எல்லாருக்கும் லீவ் தான். அதனால ஒண்ணும் இல்லை. ஸ்ரீ காலேஜ்க்கு இப்ப போறது இல்லை. நீங்க எல்லாரும் வேலைக்கும் போனா தான் சீக்கிரம் எந்திச்சு சமைக்கணும். இப்ப டீ குடிக்கிறியா?”
“இப்ப வேண்டாம் அத்தை. நான் அப்புறம் குடிக்கிறேன்”
“சரி அப்ப உங்க ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு. அவன் எப்பவும் சீக்கிரம் எந்திச்சு வாக்கிங் போவான். இன்னைக்கு தூங்கட்டும்”, என்று சொல்ல சரி என்று சொல்லி விட்டு அறைக்குச் சென்றாள்.