அத்தியாயம் 22:

அவர்களின் அடுத்த இலக்கான, மர்மங்கள் நிறைந்த தேரிக்காடு பாலைவனத்தை நோக்கி அனைவரும் புறப்பட்டனர்.

 

சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, தேரிக்காடு பகுதியை வந்தடைந்தனர். குறிப்பிட்ட பகுதிக்கு மேல் காரில் செல்ல முடியாததால், சாலையோரமாகக் காரை நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர்.

 

சாதாரணமாகக் காணப்படும் பாலைவனங்களைப் போல இல்லாமல், அங்கங்கே பனை மரங்களும் கருவேல மரங்களும் வளர்ந்திருந்தன. அதிலும், அங்கிருந்த மணல் செம்மண் நிறத்தில் காணப்பட்டது. அந்த வித்தியாசமான நிலப்பரப்பை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டனர்.

 

ஏதாவது தடயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன், தேரிக்காட்டுக்குள் மெதுவாக நடக்கத் தொடங்கினர்.

 

அப்போது, எதிரே வயதான முதியவர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவர்களைப் பார்த்ததும் சுற்றுலாப் பயணிகள் என்று நினைத்துக்கொண்ட அவர், “தம்பி… ரொம்ப தூரம் போயிடாதீங்க. திரும்பி வர வழி தெரியாது,” என்று எச்சரித்தார்.

 

அவரது எச்சரிக்கையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அனைவரும் தொடர்ந்து நடக்கத் தொடங்கினர். அவர்களைக் கடந்து சென்றுகொண்டிருந்த முதியவர், தலையை ஆட்டியபடி, “இந்தக் காலப் பிள்ளைங்களுக்கெல்லாம் எது சொன்னாலும் காதுல விழாது…” என்று முணுமுணுத்துக்கொண்டே தனது வழியில் சென்றார்.

 

சிறிது தூரம் சென்ற பிறகுதான் அனைவரும் சுற்றுப்புறத்தைக் கவனிக்கத் தொடங்கினர்.

 

சில நிமிடங்களிலேயே காற்றின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. பலமாக வீசிய காற்றால், பள்ளமான பகுதிகளில் மணல் குவிந்து மேடுகளாக மாறின. அதே நேரத்தில், ஏற்கெனவே மேடாக இருந்த பகுதிகளில் இருந்து மணல் பறந்து சென்று, அவை பள்ளங்களாக மாறிக்கொண்டிருந்தன.

 

பின்னால் திரும்பிப் பார்த்தபோது, அவர்கள் வந்த பாதை எங்கே இருக்கிறது என்றே அடையாளம் காண முடியவில்லை.

 

சுற்றிலும் மணல் மேடுகளும்… இடையிடையே தெரியும் பனை மரங்களும் மட்டுமே கண்ணுக்குத் தென்பட்டன.

 

அப்போதுதான் அனைவருக்கும் அந்த முதியவரின் எச்சரிக்கை நினைவுக்கு வந்தது.

 

“அந்தத் தாத்தா சொல்லும்போதே… யாராவது இந்த இடத்துக்கு வழி தெரிஞ்சவங்களைக் கூட கூட்டிட்டு வந்திருக்கலாம்,” என்று ஆதங்கத்துடன் கூறினாள் முகில்.

 

“அவங்களைக் கூட்டிட்டு வந்தா மட்டும் வழி தெரிஞ்சிடுமா என்ன? அதெல்லாம் இந்த மாதிரி பாலைவனத்துல யாராலயும் அவ்வளவு ஈஸியா வழி கண்டுபிடிக்க முடியாது, முகில்,” என்றான் அஜித்.

 

“சரி… இப்போ எப்படி வெளியே போறது?” என்று பதற்றத்துடன் கேட்டாள் ரோஸினி.

 

அவர்கள் அனைவரும் குழப்பத்துடன் சுற்றிப் பார்க்க, தாரகை மட்டும் முகத்தில் மெல்லிய புன்னகையுடன் அமைதியாக நின்றுகொண்டிருந்தாள்.

 

அப்போது பரமேஷ், “யாரும் கவலைப்பட வேண்டாம். கூகுள் ஆஃப்லைன் மேப் இருக்கு. அதுவும் இல்லைன்னா, அந்தப் பனை மரங்கள்ல ஏதாவது ஒண்ணுல ஏறிப் பார்த்தாலே போதும். எதாவது கிராமமோ, வீடுகளோ கண்ணுக்குத் தெரியும். நீங்க பயப்படுற அளவுக்கு இது பெரிய பாலைவனம் கிடையாது,” என்று நம்பிக்கையுடன் கூறினான்.

 

அவனது வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தலையசைத்தனர்.

 

ஆனால் ருத்ராவுக்கு மட்டும், யாரோ தங்களை வெகு தொலைவில் இருந்து கண்காணித்துக்கொண்டிருப்பதைப் போன்ற ஓர் உணர்வு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது.

 

திடீரென்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். அங்கே… மணல் மேடுகளும் பனை மரங்களும் மட்டுமே இருந்தன. யாரும் இல்லை.

 

சிறிது நேரம் அங்கேயே பார்த்துக்கொண்டிருந்தவள், பின்னர் எதுவும் இல்லை என்று எண்ணி மீண்டும் மற்றவர்களுடன் இணைந்துகொண்டாள்.

 

பரமேஷ் கொடுத்த தன்னம்பிக்கையில், அனைவரும் ஏதாவது தடயம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் மணல் பரப்பில் தொடர்ந்து நடந்தனர். ஆனால், சுற்றிலும் மணலும் மரங்களும் தவிர வேறு எதுவும் தென்படவில்லை.

 

சிறிது நேரத்திலேயே நீண்ட தூரம் நடந்த களைப்பில் அனைவருக்கும் உடலும் கால்களும் சோர்ந்துபோயின.

 

“டேய்… பக்கத்துல ஏதாவது கிராமம் இருக்கானு கூகுள்ல பாரு டா. ரொம்பத் தண்ணி தாகமா இருக்கு,” என்றான் அஜித்.

 

“எனக்கும் தான்…” என்று முகிலும் சோர்வுடன் கூறினாள்.

 

“எனக்கும்…” என்று ருத்ராவும் தலையசைத்தாள்.

 

அதற்கு மேல் நடக்க முடியாது என்பதை உணர்ந்த பரமேஷ், உடனே தனது அலைபேசியை எடுத்து அருகிலிருந்த கிராமத்தைத் தேடத் தொடங்கினான்.

 

சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு, “இங்க பக்கத்துலதான் ‘குதிரைமொழி’ன்னு ஒரு கிராமம் இருக்கு. அங்க போகலாம் டா,” என்றான்.

 

அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, அந்தக் கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

 

வழியில், ஒரு கட்டுவிரியன் பாம்பு மணலோடு தனது உடலை உரசியபடி மெதுவாக ஊர்ந்து சென்றது. சில அடி தூரம் சென்றதும், அருகிலிருந்த புதர்களுக்குள் புகுந்து மறைந்துவிட்டது.

 

அருகிலேயே நாகராணி தாரகை இருக்கும்போது, அந்தச் சிறிய பாம்பைக் கண்டு யாருக்கும் பெரிதாக அச்சம் ஏற்படவில்லை. அதைக் கண்டுகொள்ளாமல் அனைவரும் தங்கள் பாதையில் தொடர்ந்து நடந்தனர்.

 

சிறிது தூரம் சென்றபோது, கிராமத்தின் எல்லையில் ஒரு பழமையான கோவில் தென்பட்டது. அதன் அருகில் பரந்து விரிந்திருந்த பெரிய வேப்பமரத்தின் கீழ் சிறிய கடைகள் சில அமைக்கப்பட்டிருந்தன. அவற்றைக் கடந்து அனைவரும் கிராமத்திற்குள் நுழைந்தனர்.

 

ஓட்டு வீடுகளும் கான்கிரீட் வீடுகளும், அவற்றின் முன்புறம் நீண்ட திண்ணைகளுமாக அந்தக் கிராமம் அழகாகத் தோற்றமளித்தது. வழக்கம்போல் கிராம மக்கள் தங்கள் வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர்.

 

அன்று கோவில் திருவிழா என்பதால், வெளியூர்களிலிருந்து வந்திருந்த பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் ஏராளமாகக் காணப்பட்டனர். அதனால், இந்த ஆறு பேரையும் அங்கிருந்தவர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

 

அதற்குள் சூரியனும் மேற்கு வானில் மெல்ல மறையத் தொடங்கியிருந்தான். அமாவாசை என்பதால், இரவு வானில் நிலவு மறைந்திருந்தது.

 

‘இந்தக் கிராமத்திலேயே இன்று இரவு தங்கிவிட்டு, மறுநாள் காலையில் சென்று காரை எடுத்துக்கொள்ளலாம்,’ என்று பரமேஷின் மனதில் தோன்றியது.

 

உடனே, “இன்னைக்கு இங்கேயே எங்காவது தங்கிக்கிருவோம்,” என்று மற்றவர்களிடம் கூறினான்.

 

“இந்தக் கிராமத்துல எங்க போய் டா தங்குறது? அதுவும் மூணு பொண்ணுங்களை வச்சுக்கிட்டு?” என்று அஜித் சந்தேகத்துடன் கேட்டான்.

 

“டேய், இங்க தங்க உனக்கு என்ன? பாரு… எவ்வளவு அழகான கிராமம்! அழகான திண்ணை வீடு வேற இருக்கு. என்ன வேணும்? தாராளமா தங்கிக்கலாம்,” என்று முகில் உற்சாகமாகக் கூறினாள்.

 

சுற்றியிருந்த வீடுகளை ஒருமுறை பார்த்த ரோஸினி, முகத்தைச் சுளித்தாள். இருப்பினும், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

 

அப்போது எதிரே வயதான ஒருவர் நடந்து வருவதைக் கண்ட பரமேஷ், அவரிடம், “ஐயா… ஒரு நிமிஷம். இங்க ஊர் பெரியவர் வீடு எங்க இருக்கு?” என்று கேட்டான்.

 

“அதுவா தம்பி? அதோ தெரியுதே… அந்தப் பெரிய ஓட்டு வீடு. அதுதான் பஞ்சாயத்துத் தலைவர் வீடு,” என்று கைகாட்டிவிட்டு அவர் தனது பாதையில் சென்றார்.

 

ஆறு பேரும் அந்த வீட்டை நோக்கி நடந்தனர்.

 

வீட்டின் வாசலில் வயதான பெண்மணி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆறு பேரையும் பார்த்ததும், “என்ன தம்பி… திருவிழாவுக்கு வந்திருக்கீங்களா?” என்று கேட்டார்.

 

என்ன பதில் சொல்வது என்று ஒரு கணம் யோசித்த பரமேஷ், தலையசைத்து, “ஆமாம்,” என்றான்.

 

பின்னர், “தங்குறதுக்கு ஏதாவது இங்க வீடு கிடைக்குமா மா?” என்று பணிவுடன் கேட்டான்.

 

அந்தப் பெண்மணி அவர்களை மேலிருந்து கீழ்வரை ஒருமுறை பார்த்துவிட்டு, “தங்குறதுக்கு ஊர் எல்லையில கோவில் மண்டபம் இருக்கு தம்பி. ஊருக்குள்ள வீடு எதுவும் கிடைக்காது. அதுவும் இன்னைக்கு ஆடி அமாவாசைத் திருவிழா. ராத்திரி எல்லாரும் கோவில்லதான் இருப்போம்,” என்றார்.

 

“சரி மா,” என்று பணிவுடன் கூறிவிட்டு, ஆறு பேரும் மீண்டும் வந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

 

இருள் மெல்லக் கிராமத்தைச் சூழத் தொடங்கியதும், ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பெண்கள் அகல் விளக்குகளை ஏற்றினர். ஒன்றன்பின் ஒன்றாக எரியத் தொடங்கிய அந்தச் சிறிய விளக்குகள், இருளுக்கு நடுவே நட்சத்திரங்களைப் போல மின்னின. அந்தக் காட்சி அனைவருக்கும் புதிதாகவும் ரம்மியமாகவும் இருந்தது.

 

இதற்கான காரணம் என்னவென்று மற்றவர்களுக்குப் புரியாமல் இருக்க, ருத்ரா விளக்கத் தொடங்கினாள்.

 

“இன்னைக்கு ஆடி அமாவாசை. பொதுவா இந்த நாள்ல கோவில்கள்ல சிறப்புப் பூஜை நடக்கும். வீடுகள்லயும் அகல் விளக்கு ஏத்தி முன்னோர்களை வழிபடுவாங்க.”

 

அவள் கூறியதை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டே நடந்தனர். அப்போது, முன்பு கவனிக்காமல் கடந்து வந்த கோவில் இப்போது அவர்களது பார்வையில் தெளிவாகப் பட்டது.

 

சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கோவில் வளாகம், இருளுக்கு நடுவே பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. அங்கங்கே பூக்கடைகள்… சிறிய ஐஸ் வண்டிகள்… பலூன் கடைகள்… பானிபூரி கடைகள்… என்று திருவிழாக்கோலமாகக் காட்சியளித்தது.

 

அந்தக் காட்சிகளை ரசித்தபடியே அனைவரும் கோவில் மண்டபத்தை வந்தடைந்தனர். மக்கள் ஒவ்வொருவராக அங்கு வரத் தொடங்கினர்.

 

பெரிதாக அறைகளோ, வசதிகளோ எதுவும் இல்லாத அந்த மண்டபத்தின் வெட்டாந்தரையில், புதிதாக வந்த வெளியூர்க்காரர்கள் பாய்களை விரித்து, குடும்பம் குடும்பமாக அமர்ந்துகொண்டிருந்தனர்.

 

காரிலேயே அதிக எடையுள்ள பொருட்களை விட்டுவிட்டு, தேவையான சிறிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அனைவரும் வந்திருந்தனர்.

 

“எல்லாரும் இங்கேயே இருங்க. நான் போய் வெளிய பாய் கிடைக்குதான்னு பார்த்து வாங்கிட்டு வரேன்,” என்று பரமேஷ் எழுந்தான்.

 

“நில்லுங்க… நானும் வரேன்,” என்று உடனே ருத்ராவும் எழுந்தாள்.

 

‘நீங்க மட்டும் எப்படி தனியாகப் போகலாம்?’ என்பதுபோல் தாரகையும், “நானும் வரேன்,” என்று எழுந்தாள்.

 

அடுத்ததாக ரோஸினியும், “நானும் வரேன், பரமேஷ்,” என்றாள்.

 

மூவரையும் பார்த்த பரமேஷ், “நீங்க யாரும் என்கூட வர வேண்டாம். நான் மட்டும் போய் வாங்கிட்டு வரேன்,” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

ரோஸினியால்தான் தன்னை அழைத்துக்கொண்டு செல்லவில்லை என்று நினைத்த தாரகை, அவளை முறைத்துப் பார்த்தாள். அதேபோல், தாரகையால் தான் தன்னை அழைத்துக்கொண்டு செல்லவில்லை என்று நினைத்த ருத்ராவும் தாரகையை முறைத்துப் பார்த்தாள்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு, பாய்களையும் போர்வைகளையும் வாங்கிக்கொண்டு பரமேஷ் திரும்பி வந்தான்.

 

மூன்று பாய்களை அடுத்தடுத்து விரித்து, ஆறு பேரும் வட்டமாக அமர்ந்துகொண்டனர். பெரிய கவரிலிருந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்து அனைவருக்கும் கொடுத்தான்.

 

அதன்பின், பழைய நாளிதழில் பெரிதாகக் கட்டப்பட்டிருந்த ஒரு பொட்டலத்தைப் பிரித்தான். அதில் பருப்பு வடை, உளுந்த வடை, போண்டா எனப் பலவிதமான தின்பண்டங்கள் இருந்தன. பசியில் இருந்த அனைவருக்கும் அவற்றைப் பார்த்ததும் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது. அதைப் பார்த்த ருத்ராவின் கண்கள் மட்டும் இன்னும் அதிகமாக மின்னின.

 

ஆவலுடன் ஓர் உளுந்த வடையை எடுத்தவள், அதை ரசித்துச் சுவைக்கத் தொடங்கினாள்.

 

‘என்ன இருந்தாலும் நம்ம ஊர் சைட் டேஸ்ட்டே தனிதான்…’ என்று மனதிற்குள் மெச்சிக்கொண்டாள்.

 

இதுவரை ஜவ்வாது மலை, மகாபலிபுரம் எனப் பல இடங்களுக்குச் சென்றிருந்தாலும், அங்கிருந்த விலையுயர்ந்த உணவகங்களில் சாப்பிட்ட எந்த உணவிலும் அவளது கிராமத்து சுவை கிடைத்ததில்லை.

 

ஆனால், இத்தனை நாட்களுக்குப் பிறகு, இப்போதுதான் மீண்டும் அதே சுவையை ரசித்து ருசித்தாள்.

 

மற்றவர்களும் ஒவ்வொன்றாக எடுத்து, வயிற்றுப் பசி தீர உண்ணத் தொடங்கினர்.

 

தாரகை மட்டும் சற்றுத் தயக்கத்துடன் ஒரு போண்டாவை எடுத்தாள். அதை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியாமல், சிறிது நேரம் கையில் வைத்தபடியே ஆராய்ந்துகொண்டிருந்தாள். அவளுக்கு அது முற்றிலும் புதிதாக இருந்தது.

 

பின்னர், அதை ஒரே வாயில் முழுதாக விழுங்கினாள். எல்லாவற்றையும் முழுங்கியே பழக்கப்பட்டவள் என்பதால், இதையும் அப்படியே முழுங்கிவிட்டாள்.

 

தாரகை போண்டாவை முழுதாக விழுங்குவதைப் பார்த்த பரமேஷ் புன்னகைத்தான்.

 

“அது அப்படி முழுங்கக் கூடாது, தாரகை. இப்படி சாப்பிடணும்,” என்று கூறியபடி போண்டாவை மெதுவாகக் கடித்துக் காண்பித்தான்.

 

“ஓஓ…” என்று தலையசைத்த தாரகை, இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தாள். உடனே, அவன் கையில் இருந்த போண்டாவைப் பிடுங்கி, பரமேஷ் கடித்த அதே இடத்தில் கடித்தாள்.

 

போண்டா சுவையாக இருந்ததோ, இல்லையோ… பரமேஷ் சுவைத்ததைத் தானும் சுவைத்துவிட்டோம் என்ற திருப்தி மட்டும் தாரகையின் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

 

அதைக் கவனித்த ருத்ராவின் முகத்தில் ஒரு கணம் ஏமாற்றம் மின்னியது.

 

ஆனால், அதைத் தாரகையின் வழக்கமான விளையாட்டாகவே எடுத்துக்கொண்ட பரமேஷ், அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

 

நண்பர்களுக்குள் ஒருவர் உண்டதை இன்னொருவர் உண்பது அவனுக்குச் சாதாரணமான விஷயமாகவே தோன்றியது. ஆனால், ருத்ராவைப் பொறுத்தவரை, அத்தகைய உரிமை கணவன்–மனைவிக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.

 

ஏற்கெனவே தாரகைதான் பரமேஷுக்கு ஏற்றவளோ என்ற குழப்பத்தில் இருந்த அவளது மனம், இந்தச் சம்பவத்தைக் கண்டதும் மீண்டும் குழம்பியது.

 

கண்களில் ஏக்கத்துடன் பரமேஷை வெறித்துப் பார்த்தாள்.

 

அதே நேரத்தில்…அவர்களுக்குத் தெரியாமல், வெகு தொலைவில் இருந்து இன்னொரு உருவம் அவர்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.

 

தொடரும்…

படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை கூறுங்கள் 😊 நண்பர்களே..