“வெற்றி அந்த கஸ்டமரை கவனி, அந்தப்புள்ள நேத்து தான் புதுசா சேர்ந்திருக்கு, அதுக்கு அவங்க கேட்டது தெரியல பாரு…. முழிக்குது….நீ போய் என்னன்னு விசாரி….” என்று வெற்றியை அனுப்பி விட்டு பில் போடும் இடத்தில் அமர்ந்தார் சுந்தரம்.சொன்னது போலவே கண்மணி பதினொரு மணி போல கடைக்கு வர,
“என்ன சித்தப்பா இந்நேரம் இங்க உட்கார்த்திருக்கீங்க?”
“இன்னைக்கு பாண்டி பையன் லீவு கண்மணி… நேத்து தான் புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கு, அதுக்கு பெருசா ஒன்னும் தெரியல… சொல்லிக்கொடுத்தா செய்யுது… அதான் வெற்றி பயல அங்க பாத்துக்க அனுப்பிட்டு நான் இங்க பாக்குறேன்.”
“பாண்டிக்கு என்ன ஆச்சு?”
“அதை ஏன் கேட்கிற… அவன் அம்மைக்கு சொகமில்ல…. முன்னேயே சொன்னேன் மதுரை பெரியாஸ்பத்திரில ஒருக்கா காமிச்சுட்டு வானு… கேட்டானில்ல… இப்ப ரொம்ப முடியாம இருக்கு… அதான் லீவு கொடுத்து கூட்டிட்டு போக சொன்னேன்…”
“ஓ!!! அதான் அவுக காட்டு பக்கம் வரலியா? அவுக கொஞ்சம் வாய கட்டுப்படுத்தனும். சுகரு கூட அவுகளுக்கு. சரி சித்தப்பா, நான் போய் இதெல்லாம் அடுக்கிட்டு வாரேன். நாம, கனி சமந்தகாரங்க வீட்டுக்கு பேசிடுவோம். அதுக்கு முன்ன நீங்க கனி மாப்பிள்ளைகிட்ட ஒரு வார்த்தை பேசிடுங்க…”
“சரித்தா… வெறசா வா…. பன்னெண்டு மணிக்குள்ள பேசிடுவோம். அப்புறம் நேரம் நல்லா இல்ல.பொண்ணுங்க கல்யாண பேச்செடுத்தாலே தடங்கலா வருது. நல்லபடியா எல்லாத்தையும் முடிக்க பார்ப்போம். பெரிய கருப்பா கூடவே இருந்து வழிகாட்டுப்பா!!” என்றும் வேண்டிக்கொண்டார்.
“சித்தப்பா, இந்த வருசம் சிவன் ராத்திரிக்கு கனி குலசாமி கோவிலுக்கு வரலல?” என்று கேட்டுக்கொண்டே, அவளின் பொருட்களை முன்னே இருக்கும் வரிசையில் அடுக்கினாள்.
“ஆமாத்தா… அவளுக்கு லீவு கிடைக்கில…”
“நாளைக்கு அவளை அங்க பொங்கல் வச்சு சாமி கும்பிட சொல்லுங்க சித்தப்பா… தேனு கூட இருப்பா…”
“சரி மா சொல்லிடறேன்…” என்றவர் வெற்றி அங்கு வரவும்,
“பார்த்துக்கோடா… அந்தப்புள்ளைக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தியா?”
“ஆச்சுங்க ஐயா…. பவுனு இருக்கா பார்த்துப்பா… இதோ இப்போ சேகர் வந்திடுவான். புதுசா வந்த லோட் எல்லாம் எடுத்து வச்சிட்டியான்.”
“ம்ம்….” என்று அவனுக்கு தலையசைப்பை கொடுத்தவர், “கண்மணி மாப்பிள்ளைகிட்ட பேசிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு அவருக்கென்று இருக்கும் தனியறைக்குச் சென்றார்.
“என்னக்கோவ் தேன் அக்காவுக்கு கல்யாணமா? மாப்பிள்ளை யாரு?”
“தேனுக்கு இல்லடா கனிக்கு….”
“ஓ!!! அதான் கனியக்கா வந்திருக்கா? மாப்பிள்ளை என்ன பண்றாரு?”
“நீ எதுக்குளே விசாரிக்கிறா?”
“சும்மா டைம் பாஸ்” என்று அவன் கோணி சிரிக்க.
“வேலைய பாருடா….”
“எப்போ கல்யாணம் வைக்க முடிவு பண்ணிருக்காரு பெரியவரு?’
“எதுக்குடே”
“இல்ல சித்திர திருவிழா அப்போ பயலுக மேகமலைக்கு போலாம்னு சொல்லிட்டு இருக்கானுக… அதான்…”
“அதுக்கு இன்னும் நாள் கிடக்கு. நடக்கும்போது சொல்றேன். புதுசா வந்த பொண்ணு ஓகேவா?”
“ஹ்ம்ம்… எங்கக்கா பேசவே பயப்படுது.எங்கயிருந்து புடிச்ச அந்தப் பிள்ளையை?”
“ஆத்தா இல்லாத பிள்ளைடா. நம்ம சோலையம்மா இருக்குல”
“யாரு கா?”
“டேய்! அதான் போன வருஷம் அவ பையன்கூட காலேஜ் படிக்கிற பிள்ளையை கல்யாணம் பண்ணிகிட்டானு பஞ்சாயத்தா இருந்துச்சே!”
“அட நம்ம பயில்வான்…”
“ஹ்ம்ம் இப்படி சொல்லி சொல்லி தான்டா அவனை ஏத்தி விட்டுருக்கீங்க.படிக்கிற பிள்ளையை கூட்டிக்கிட்டு வந்திருக்கான் கோட்டி பையன்.”
“அந்தப்புள்ளையா இது?”
“அட இல்லடா….”
“யெகோவ்!! நீ நேரா பதில் சொல்ல மாட்டியா? ஊரு கதை அம்புட்டையும் பேசுத”
“அப்படி சொன்னாதாம்ல உன் மர மண்டைக்கு புரியும்.” என்று அவன் தலையில் கொட்டு வைக்க,
“ரொம்ப பண்ற கா.இரு இரு ஐயாரு வரட்டும்.”
“அவரு என் சித்தாபாரு டா…”
அவளை அவன் முறைக்க, அவளோ அலட்டிக் கொள்ளாமல் சுந்தரம் இருக்கும் அரை நோக்கி நடக்க, “ஏ அக்கா… அந்தப்புள்ள யாருனு சொல்லிட்டு போ” என்று இவன் கத்த,
“அந்தப் புள்ள பேரு என்ன?” என்று கேட்டாள் கண்மணி.
“சோபியா”
“அவ்ளோ தெரிஞ்சா போதும் உனக்கு.அந்தபுள்ள அக்கவுண்ட்ஸ் படிச்சிருக்கு.ஆனா கொஞ்சம் பயந்த சுபாவம். தேனு தான் வேலைக்குச் சேர்த்து விட்டிருக்கு.அவளோட பிரின்ட் யாரோ சொல்லி வந்திருக்கு. கொஞ்ச நாள் இங்க இருக்கும் வேற வேலை கிடைக்கிற வர…”
“ஓ!!! தேனுக்கா சிபாரிசா? சரி சரி….” என்று அவனுக்கு வேண்டியவைக் கிடைக்கவும் வேலையை பார்க்க ஆரம்பித்தான். கண்மணி சுந்தரம் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
“சரிங்க மாப்பிள்ளை. அப்படியே பண்ணிடுவோம். நான் இப்போ பேசுறேன். நல்லதுங்க. நீங்க என்னனு பார்த்துட்டு சொல்லுங்க. வீட்டுலயும் என்ன சொல்றாங்கனு பாத்துகிடுவோம். நல்லது நல்லது. வச்சிடட்டுமா. நல்லது!” என்று பேசி முடித்தார் சுந்தரம்.
“என்ன சொல்றாரு தம்பி?”
“கனி பேசிட்டா போல… மாப்பிள்ளையும் அவரு வீட்டுல இப்போ தான் பேசினாராம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா நல்லது தான். இதோ இப்போ சம்பந்திக்கு போடுறேன்.” என்றவர் நிலனின் தந்தைக்கு அழைப்பு விடுக்க, அவரும் வியாபாரம் செய்பவர் தான். இப்போது சொந்தமாக துணிக் கடை வைத்திருக்கிறார். அவர்கள் தஞ்சாவூரை சார்ந்தவர்கள். நிலனின் குடும்பமும் போராடி உயர்ந்த குடும்பம்.
            அதேபோல சுந்தரத்தின் உழைப்பும், கனியின் குணமும் அவர்களுக்கு பிடித்து போய்விட, இந்த காதல் திருமணத்தை பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணமாக எண்ணிக்கொண்டனர். நிலன் அவ்வாறு தான் செய்திருந்தான். அவனுக்கு விருப்பம் என்றதும் வீட்டினில் சொல்லிவிட்டான்.
            அதன் பின் கனியின் முடிவை அறிந்துகொள்ள முயல, அவள் அப்பாவை கைக் காட்ட, அதையும் அவன் வீட்டில் சொல்ல, அவர்கள் தான் அவனுக்கு ஊக்கத்தை கொடுத்து சுந்தரத்திடம் அனுப்பி வைத்தது. சுந்தரமும் அவனின் பெற்றோர்கள் சம்மதம் அறிந்து சரியென சொல்லிவிட, ஒரு வருட காத்திருப்பிற்குப் பின் இன்று கல்யாண தேதி குறித்து பேச முடிவெடுத்திருகிறார்கள்.
         சுந்தரத்தின் அழைப்பு ஏற்கப்படவும், “சொல்லுங்க சம்மந்தி. இப்போ தான் நிலன் பேசினான். ரொம்ப சந்தோஷங்க. பிள்ளைகளும் ஒரு வருஷம் வெயிட் பண்ணிட்டாங்க. இனி நம்ம கடமை தான் பாக்கி இருக்கு. பிள்ளைங்க விரும்பினதுனால ஜாதகம் பாக்க வேணாம்னு எங்க வீட்டுல சொல்றாங்க. ராசி, நட்சத்திரம் வச்சு கல்யாண தேதி குறிச்சுக்கிடுவோம். நீங்க கல்யாணத்தை மதுரையில வைக்க விரும்புறதா நிலன் சொன்னான். எங்களுக்கு ஓகே தான். கல்யாணம் உங்க பொறுப்பு. நான் இங்க ரிசப்ஷன் வைச்சுகிறேன்.சரி தான?” என்று அவர் கடகடவென பேசிவிட, மறுப்பாரா சுந்தரம்,
     “அப்படியே செஞ்சுடலாம் சம்பந்தி. தங்கச்சிக்கு எல்லாம் ஓகே தான?”
“உங்க தங்கச்சி சொன்னத தான் நான் சொல்றேன். வேற பேசிட முடியுமா?” என்று கேட்டு அவர் சிரிக்க, சுந்தரத்தின் முகத்திலும் புன்னகை. “சரிங்க அப்போ நான் நாள் பார்த்திட்டு சொல்றேன். உங்களுக்கு எது தோதுனு சொல்லுங்க. அதுக்கு ஏத்த போல விமர்சையா செஞ்சுடலாம்.” என்று மேலும் சில விசாரிப்புகள் எல்லாம் முடித்து கைபேசியை அணைத்தார்.
“சந்தோஷமா சித்தப்பா?” கண்மணியும் அவரின் மலர்ந்த முகத்தைப் பார்த்தபடி கேட்க,
“ஹ்ம்ம்…. கொஞ்சம் பயமும் இருக்கு. எந்த பிரச்சனையும் இல்லாம முடியனுமே!”
“அதான் உங்க பெரிய மருமகன் இங்க தான இருக்காரு… எல்லாம் அவரு பார்த்துப்பாரு. நானும் இருக்கேன்.தைரியமா இருங்க சித்தப்பா.”
மென்மையாக சிரித்தவர், “வெங்கடேசன் மச்சானுக்கு பேசணும். அன்னைக்கு தேவி கேட்டப்போ முடியாதுனு அவசரப்பட்டு சொல்லிட்டேன். தேனுக்கு பிடிக்கும்னு தெரியாது.” என்று அவர் வருந்த,
“சித்தப்பா, ருத்ரனுக்கு தான் விருப்பம். தேனுக்கு உங்க சம்மதம் தான் முக்கியம். வெங்கட் மாமா பிரச்சனை இல்ல, இந்த தேவி அத்தை தான். கொஞ்சம் பிகு பண்ணுவாங்க. ருத்ராக்கு விருப்பம் இருக்கு நாம தயங்க வேணாம். பேசுங்க என்ன சொல்றாங்கனு பார்ப்போம். முடிஞ்சா ரெண்டு பேரு கல்யாணத்தையும் சேர்த்து முடிக்க பார்ப்போம்.” என்று ஊக்கினாள் கண்மணி.
“ஹ்ம்ம்….” என்றவர் தயக்கத்துடன் தான் வெங்கடேசனுக்கு அழைப்பு விடுத்தார்.
அழைப்பு சென்று நிற்கும் தருவாயில் ஏற்கப்பட்டது. “சொல்லுங்க மாப்ள இந்நேரத்துல கூப்பிட்டு இருக்கீங்க. எதுவும் முக்கியமான விஷயமா?” என்று அவர் படபடக்க,
“அதெல்லாம் இல்ல மச்சான். வேலையா இருக்கீங்களா? தொந்தரவு பண்ணலயே?”
“இல்ல மாப்ள. சொல்லுங்க” என்றவர் தன் பணியிடத்திலிருந்து எழுந்து வெளியே சென்றார்.  அவர் மும்பையில் ரயில்வே அதிகாரியாக பணிபுரிகிறார். அவரது மனைவி தேவிகா வீட்டை பார்த்துக்கொள்கிறார். இவர்களுக்கு இரு மகன்கள் ருத்ரதேவ் மூத்தவன், ராணுவத்தில் இருக்கிறான். இளையவன் சர்வேஷ், மும்பையில் விளம்பர நிறுவனத்தில் புகைப்பட கலைஞராக பணிபுரிகிறான்.
     தேவிகாவின் தந்தை, தாத்தா அனைவரும் ராணுவத்தில் இருந்ததாலே ருத்ரனுக்கும் நாட்டுப்பணியில் ஆர்வம் அதிகம். தேவிகாவின் குடும்பம் அவரது தந்தை காலத்திலே மும்பையில் குடிப்பெயர்ந்துவிட்டனர். வெங்கடேசனுக்கு இது பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் தான். திருமணத்தின் பின் அவருக்கு மும்பையில் வேலையை மாற்றிக்கொடுத்து மகளை தங்கள் அருகிலேயே குடிப்பெயர்த்துவிட்டார் அவளின் தாய்.
    தேவிகா கல்லூரி படிப்பை முடித்த தருவாயில் அவளின் அப்பா ராணுவத்தில் வீர மரணம் அடைந்திருக்க, வெங்கடேசனின் பெற்றோர்களும் அவன் தேவிகாவின் தாயுடன் மும்பையில் இருக்க ஒப்புக்கொண்டனர். வருடத்திற்கு ஒரு முறை வந்துச் செல்வார் குடும்பத்துடன். கடந்த மூன்று வருடமாக தான் வரவில்லை. அதற்கு காரணம் சுந்தரத்தின் மறுப்பு.
     இன்று சுந்தரம் அழைத்திருக்க ஏதோ நல்ல விஷயமாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் கொஞ்சம் படபடப்பும் சேர்ந்துக் கொள்ள, எழுந்து வெளியே வந்திருந்தார். அவரின் ஆசை தங்கையின் கணவன் அல்லவா? அந்த மரியாதையுடன் பேசினார்.
அந்தப்பக்கம் இன்னும் அமைதியாக இருக்க,
“ஹலோ மாப்ள….”
“மச்சான். அது. நல்லா இருக்கீங்களா? தேவி?  அப்புறம் ருத்ரன் சர்வேஷ்?” என்று சட்டென்று பேச வராது அனைவரின் நலனையும் விசாரித்தார் சுந்தரம்.
சுந்தரத்தின் தயக்கத்தை உணர்ந்த கண்மணி அவரின் தோள் தொட்டு, “தைரியமா பேசுங்க சித்தப்பா” என்று சொல்ல,
“கண்மணி கூட இருக்கா மாப்ள?”
“ஆமா மச்சான்…”
“என்ன விஷயம் சொல்லுங்க மாப்ள”
“அது… வந்து…. கனிக்கு கல்யாணம் பேசிருக்கேன். வர்ற சித்திரை திருவிழா அப்போ நடக்குற மாதிரி வரும். அதான் தேனுக்கு….. மன்னிசுடுங்க மச்சான். அன்னைக்கு தேவி கேட்கவும் பட்டுன்னு வேணாம்னு சொல்லிட்டேன். தப்பு தான். நம்ம தேனுக்கு ருத்ரனை கட்டிக் கொடுப்பீங்களா?” என்று தயங்கினாலும் கேட்டுவிட்டார் மனிதர்.
“ஹ ஹா….” என்று சிரித்தவர், “என்ன மாப்ள! ருத்ரனுக்கு தான் தேனுனு எப்போவோ முடிவு பண்ணிட்டோம் நாங்க. நீங்க தேனுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிருந்தா பிரச்சனை பண்ணிருப்பேன். என் வேதா மக என் வீட்டுக்கு தான் வரணும். ருத்ரன் கிட்ட பேசுறேன். கவலையை விடுங்க. இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.” என்று அவர் பேசவும் தான் சுந்தரத்துக்கு நிம்மதியானது. கண்மணியும் மகிழ்வுடன், “சொன்னேன்ல சித்தப்பா” என்றாள்.
சுந்தரமும் சிரிப்புடன் தலையசைக்க, “கண்மணி இருக்கா மாப்ள? போனை அவகிட்ட குடுங்க பேசி ரொம்ப நாளாச்சு” என்றார் வெங்கடேசன்.
கைபேசியை வாங்கிய கண்மணி, “என்ன மாமா… மும்பைக்காரவங்களுக்கு இன்னும் இந்த  கண்மணி ஞாபகம் இருக்கா?” என்று சடைத்துக்கொள்ள, “எங்களுக்கு நல்லா ஞாபகம் இருக்கு, மகன் வரவும் மருமகளுக்கு தான் இந்த மாமா மறந்துபோயிடுச்சு” என்று அவரும் வம்பு பேசினார்.
“அடியாத்தி… இது என்ன குற்றச்சாட்டு. மூணு வருஷமா ஊரு பக்கம் வராம இருக்கிறது யாரு?” என்று பேச ஆரம்பிக்க, மாறி மாறி குறை சொல்லிக்கொண்டு பின், தேன்மொழி, ருத்ராதேவின் கல்யாணம் பற்றி பேசிவிட்டு வைத்தார்கள்.
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடும்ல கண்மணி?” என்று சுந்தரம் சற்று கலக்கமாக கேட்க,
“எல்லாம் நல்லா நடக்கும் சித்தப்பா… நம்ம தேனுக்கும், கனிக்கும் எந்த குறையும் இருக்காது.” என்று வார்த்தைகளால் நம்பிக்கை அளித்தாள்.