“ஜீவனா கொஞ்சம் கேபின் வரைக்கும் வாங்க…” அவளின் எம்.டி., குணா அழைக்க, இவளும் உள்ளே சென்றவள், “குட் மார்னிங் குணா சார். சொல்லுங்க…” என நின்றாள்.
“உட்காருங்க கொஞ்சம் பேசணும்” என தொடங்கிய குணா, அவள் அமர்ந்ததும், “நம்ம மார்க்கெட் ஏரியாவில் முடிச்சு கொடுத்தோமே ஒரு பிராஜெக்ட் அதை பார்த்து ஒரு கிளையண்ட் ரொம்ப இம்பிரஸ் ஆகிட்டாங்க. அவங்களும் கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனி தான்… அவங்க கட்டிட்டு இருக்க வீட்டுக்கும் இதே மாதிரி நல்லபடியா இன்டீரியர் செய்யணுமாம். நான் உன்னை பத்தி தான் சொன்னேன்… அதுக்கு அவங்களுக்கும் வொர்க் பண்ணித் தர முடியுமான்னு கேட்கிறாங்க…” என வேலை விஷயத்தைப்பற்றிக் கூற,
“என்ன குணா சார்… நம்ம கம்பெனி பிராஜெக்ட் கூட இல்லையே…” என ஜீவனா தயங்கினாள்.
“அதுனால என்ன ஜீவனா? அவங்களும் நல்ல கம்பெனி தான். அவங்களே வந்து நம்மகிட்ட கேட்கும் போது மறுக்க முடியலை… மறுக்க காரணமும் இல்லையே! அதோட இதுல என்ன இருக்கு… இந்த சர்வீஸ்க்கான பேமெண்ட் தனியா தந்துட போறாங்க…”
குணா இவ்வளவு தூரம் சொல்வதால், “ஹ்ம்ம்” என்று மட்டும் அரைமனதாக சொன்னாள்.
“என்ன ஆச்சு ஜீவனா? சென்னை போயிட்டு வந்ததிலிருந்தே ரொம்ப டல்லா தான் இருக்கீங்க. முன்னாடி இருந்த என்தூ சுத்தமா இல்லை. லூக்கிங் சோ டல். அம்மாவுக்கு சரி ஆயிடுச்சு தானே?”
“அம்மாவுக்கு இப்ப சரியாயிடுச்சு குணா சார்… நான் எப்பவும் போல தான் இருக்கேன்”
அவளின் மழுப்பல் புரியாமல் போகுமா அவருக்கு? “இல்லை சம்திங் எஸ் பிஸ்ஸி. வாட்ஸ் ஈட்டிங் யுவர் மைண்ட்… மைண்ட் எப்பவும் பீஸ் புல்லா வெச்சுக்கங்க ஜீவனா… இன்னும் தலையில பாரத்தைத் தூக்கி சுமக்க எல்லாம் வயசு இருக்கு… இப்ப பட்டர்பிளை லைப்பை என்ஜாய் பண்ணுங்க…” என சொல்ல,
“ம்ம்… ம்ம்ம்…” என எல்லா பக்கமும் மண்டையை உருட்டினாள்.
அவளின் வாட்டத்தை, சோர்வைப் பார்த்து கவனிப்பவர்கள் எல்லாரும் இதையே தான் வேறு வேறு விதமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி அப்பட்டமாகவா என் தோற்றம் என்னைக் காட்டிக் கொடுக்கிறது என்றிருந்தது அவளுக்கு.
ஆனால், என்ன செய்ய? என்ன செய்து தன்னை சந்தோசமாக இருப்பவள் போலக் காட்டிக்கொள்வது என்பதே அவளுக்குத் தெரியவில்லை. முன்பு அப்படி எந்த மாதிரி தான் இருந்தோம் என யோசித்து யோசித்துச் சோர்ந்து போனது தான் மிச்சம்.
முன்பு இருந்தது போலவே உடை, அலங்காரம் என எல்லாவற்றையும் மெனக்கெட்டு செய்து கொண்ட போதிலும்… முகத்தின் வாட்டமும், சிரிப்பற்ற தன்மையும், ஏக்கமும் நிராசையும் சுமந்த விழிகளும், தேய்ந்து கொண்டே போகிற உடலும் எல்லோருக்கும் இவளின் நிலையைப் பறைசாற்றி விடாதா?
“தலையை நல்லா உருட்டுற… ஆனா ஒரு முன்னேற்றமும் தெரியலை” என்று சலிப்புடன் சொன்ன குணா, “சரி போஸ்ட் லன்ச் ரெடியா இரு அந்த புது சைட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்று சொல்லவும், “ஓகே சார்… வேற எதுவும் இருக்கா?” என கேட்டாள்.
“இல்லை நீ டெஸ்க் போ…” என்று அனுப்பிவிட்ட குணா, அந்த மற்றொரு நிறுவனத்திற்கு அழைத்து இன்று மதியம் மூன்று மணி போல வருவதை அவர்களிடம் உறுதிப் படுத்தினார்.
லன்ச் முடிந்து குணாவின் காரில் தான் அந்த புது சைட்டுக்கு சென்றார்கள். உள்ளே வேலையாய் இருந்தவரிடம் அழைத்துப் போனவன், “ஹலோ மிஸ்டர் கௌதமன் இவங்க தான் நான் சொன்ன இன்ஜினியர்… பேர் ஜீவனா…” என அறிமுகம் செய்து வைக்க, அசைய மறுத்த சிலை போல நின்றிருந்தாள் பெண்ணவள்.
இங்கு எப்படி இவன்? அவளின் மூளை சிந்திக்க மறந்தது. “ஜீவனா…” குணா தான் அவளின் கையைப்பற்றி உலுக்கினார்.
“இவர் தான் நான் சொன்னேனே அந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஓனர். பேர் கௌதமன்…” என அறிமுகம் செய்து வைக்க, மிக லேசாகத் தலையசைத்ததைத் தவிர அவளால் எந்தவித எதிர்வினையையும் உடனே ஆற்ற முடியவில்லை.
ஏற்கனவே எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல, “ஹாய்…” என்று புன்னகையுடன் கையை நீட்டிய கௌதமனை பார்க்கப் பார்க்க அவளுக்கு காரணமே இல்லாமல் சுர்ரென்று ஏறியது.
வேண்டா வெறுப்பாக பதிலுக்கு அவனுக்கு கையை நீட்டினாள். “ஓகே ஜீவனா… இனி மேற்கொண்டு நீங்க பேசிக்கங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…” அறிமுகம் செய்ததோடு என் வேலை முடிந்தது என்பது போல குணா கிளம்ப பார்க்க, என்ன சொல்லித் தடுக்க முடியும் இவளால். தலையை மட்டும் உருட்டினாள்.
குணா வெளியேறியதும், “என்ன தீவிர டயட் போலவே…” கேலியில் கண்கள் சுருங்க கௌதமன் கேட்க இவளுக்கு கடுப்பாக வந்தது. பல்லைக்கடித்து அமைதியாக நின்றாள்.
ஆனால், சீண்ட வேண்டும் என முடிவு செய்பவன் அவ்வளவு இலகுவில் விட்டு விடுவானா என்ன?
“டயட் இல்லையா? அப்படின்னா சர்க்கரை வியாதியா என்ன?” என அநியாயத்துக்கு வியப்பு காட்டி கேட்கவும், தீயென முறைத்தாள் அவனை.
“ஹே இந்த அஞ்சாறு மாசத்துல பெரிய சேஞ். அதுதான் கேட்டேன். அதுக்கு போயி இப்படி முறைச்சா எப்படிம்மா?” என்று சொல்பவனின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன என்று தோன்றியது.
அதையே அவள் முகமும் காட்டி கொடுத்ததோ… “நல்லவேளை வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சதால இங்கே கல்லு, மண்ணு எல்லாம் எதுவும் இல்லை…” என்று பெருமூச்சுடன் சொன்னவனை திரும்பிப் பார்த்தவள்,
கடுங்கோபத்துடன், “கல்லு எதுக்கு? அதுதான் இந்த கை இருக்கே! போதாதா?” என கேட்டபடி அவனை அடிக்க நெருங்க, வேண்டுமென்றே போக்கு காட்டி ஓடினான்.
கூடவே கோபமாக, “எங்கே போன இத்தனை நாள்? ஒரு போன், மெசேஜ் எதுவும் பண்ணலை? மாசக்கணக்குல என்னைத் தேடியும் வரலை… இப்ப மட்டும் எதுக்கு வந்த?” என கத்தினாள்.
அவன் சிரித்தபடி கையில் சிக்காமல் ஓட, “சிரிக்காதடா… சொல்லு என்னை மறந்துட்டியா? அதுதானே உனக்கு அத்தை பொண்ணு இல்லாட்டி மாமன் பொண்ணு… உன் மேல வந்து விழறதுக்கு பொண்ணுங்களுக்கா பஞ்சம்… அப்படியே ஜாலியா இருந்திருப்ப… அங்கேயே இருக்க வேண்டியது தானே? இப்ப எதுக்கு இங்கே வந்தியாம்?” என கோபமாகத் திட்டியபடி துரத்த,
ஓடியவன் திடீரென்று நின்றிருந்தான். இதை எதிர்பார்க்காதவள் அவன் மீதே மோதி நின்றாள். ஓடிய வேகத்தில் மூச்சு வாங்க, சட்டென்று அவள் புறம் திரும்பி அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.
“ஹே…” என்று அவள் வேகமாக விலகப்பார்க்க, “ஏன்டி நீ மட்டும் எப்படியாம்? தினம் நூறு போன் பண்ணிட்டு இருந்தியா?” என்று அவளின் மூக்கை ஆட்டி கேட்டான்.
“ம்ப்ச் விடு முதல்ல…” என நழுவப் பார்த்தாள்.
“ஏன் ஏன் விடணும்? பேசாம அமைதியா நில்லு கொஞ்ச நேரம்” என்று கண்டித்தான்.
“ம்ப்ச்… அதுக்குன்னு இப்படியா நிப்பாங்க…”
“நான் இப்படித்தான் நிப்பேன். சொல்லு… நான் மட்டும் தானே பிரபோஸ் பண்ணினேன். எனக்கு சாதகமா சின்ன பதிலையாவது நீ தந்திருப்பியா? எவ்வளவு சுத்தல்ல விட்ட… அதுவும் உங்க அம்மா கூப்பிட்டாங்கன்னு திரும்பி கூட பார்க்காம உங்க அம்மா பின்னாடியே வந்துட்ட… என் நிலைமையை கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தியா?”
“ஏன் உன் நிலைமைக்கு என்ன? அதெல்லாம் ஜம்முன்னு தான் இருக்க…” என்றாள் கடுப்புடன்.
“ஓ… மேடம் மாதிரி துரும்பா இளைச்சா தான் என் காதலை நம்புவீங்களா?” என்றவன் அவளின் கன்னத்தை அழுத்திக் கடித்தான்.
“ஹே… சீ சீ…” என வேகமாக கன்னத்தை துடைத்தவள், “முதல்ல தள்ளி போ டா… உனக்கு தான் உன் மாமன் பொண்ணு இருக்காளே…” என அவன் நெஞ்சில் அடித்தாள்.
“மாமன் பொண்ணு எதுக்குடி?” என்றான் சிரித்தபடி.
அவன் சிரிப்பில் இவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது. “ஹ்ம்ம் கல்யாணம் பண்ணிக்கத்தான்… மாலை டும் டும்ன்னு பாடினது எல்லாம் மறந்து போச்சா?”
அவளின் எந்த முயற்சிக்கும் பயனே இல்லை. உடும்பென பிடித்திருந்தவன், “சரி சொல்லு அத்தை கிட்ட என்னைப் பத்தி எதுவும் பேச்சு எடுத்தியா இல்லையா?” என்று விசாரித்தான்.
“முதல்ல விடு… மூச்சு முட்டுது. அப்பறம் எங்க பதிலை சொல்ல?” என அவள் சிடுசிடுக்க, “ஏன்டி ஆசையா கட்டி பிடிச்சிருக்கேன். கூச்சமா இருக்கு… வெக்கமா இருக்குன்னு எதையாவது சொல்லறியா? அதை விட்டுட்டு மூச்சு முட்டுதாம்…” என எரிச்சல் பட்டபடி அவளை விட்டு விலகினான்.
“ஹான் நீ இப்படி கங்காரு குட்டியை பிடிக்கிற மாதிரி இறுக்கி பிடிப்ப. கன்னத்துல கடிச்சு வேற வெப்ப… இதுல எங்க இருந்து எனக்கு வெக்கம் வருமாம்? அதெல்லாம் வராது போ…”
“அடியே! நான் கேட்டதுக்கு பதிலை சொல்லேன்…” என பாவமாகக் கேட்டவனின் குரலில் போனால் போகிறதென்று, “நான் எதுவும் சொல்லலை. எங்க அம்மாவும் உனக்கு சாதகமா எதுவும் பேசலை” என்றாள் உண்மை நிலவரத்தை.
“நீ பேச வேண்டியது தானே?”
“என்னன்னு?”
“உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ல வேண்டியது தானேடி…”
“என்னது அப்பவேவா? அப்ப தான் நான் உன்கிட்ட பிரபோஸ் பண்ணி இருந்தேன். அந்த சமயத்திலேயேவா?” என அவன் ஆச்சரியமானான்.
“என்ன பிரயோஜனம்? இப்பவரைக்கும் எங்க அம்மா மனசு மாறலை…” என்று சொன்னபோது அவளின் குரலோடு சேர்ந்து முகமும் வாடி இருந்தது.
“இனி அத்தை மறுக்க எந்த காரணமும் இல்லை…” என கௌதமன் உறுதியோடு அறிவிக்க, ஜீவனா அவனைப் புரியாமல் ஏறிட்டாள்.
“அத்தை சொன்ன எந்த தடங்கலும் இனி இருக்காது ஜீவி… அங்கே சென்னையில ஏற்கனவே பாட்டிக்கு தேவையான வேலையாட்களை வெச்சுட்டு அப்பா, அம்மா வேற வீட்டுக்கு போயிட்டாங்க… அப்பறம் சுபத்ரா அத்தை அவங்களை நம்பி ஒப்படைச்ச பிராஜெக்ட்ஸ் எல்லாம் நஷ்டம் வராம இருந்தா போதும்ங்கிற நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தவும், அவரையும் அவர் ஹபண்டையும் வேலைக்கே வரக்கூடாதுன்னு சொல்லியாச்சு…
அண்ட் நான் உன் பின்னாடியே சேலம் வந்துட்டேன். இங்கே நம்ம கம்பெனிக்கு இன்னொரு பிரான்ச் தொடங்கி அது கொஞ்சம் பிக்கப் செஞ்சாச்சு… இந்த வீடு கூட நமக்காகத்தான்… நானும் இனிமே சேலத்து வாசி தான்…” என்று சொல்ல, அவன் சொன்னதை எல்லாம் கேட்கப் பிரமிப்பாக இருந்தது.
“என்ன கெளதம் ஏதேதோ சொல்லற?” அவள் பிரமிப்பில் விழி விரித்துக் கேட்க,
தனக்காக என்ன எல்லாம் செய்திருக்கிறான் என்று புரிந்ததிலேயே அவள் சிலையாகி விட்டாள். இதை அவள் எதிர்பார்க்கவே இல்லை.
“சொல்லு… இப்ப நான் வந்து பொண்ணு கேட்டா எங்க அத்தை எனக்கு தருவாங்க தானே?” என புருவம் உயர்த்தி கேட்க,
அப்பொழுதும் அவளுக்குள் லேசான தடுமாற்றம். “எல்லாரும் சென்னைக்குப் போகும் போது… நீங்க உங்க தொழிலை சேலத்துக்கு மாத்திட்டீங்களே… உங்களுக்கு இந்த ஊரு ஓகேவா?” என்றாள் தயக்கமாக.
“ஆறு மாசம் இங்கே தான்டி இருக்கேன். ஏன் இப்படி சந்தேகம் கேட்கிற? கல்யாணம் முடிஞ்சதும் மறுபடியும் சென்னைக்கே போயிடுவேன்னு நினைக்கறியா?”
“ம்ப்ச்… அதெல்லாம் இல்லை… ஆனா, எனக்காகவா?”
“உண்மையை சொல்லணும்ன்னா… இது அத்தைக்காக தான் ஜீவி. நினைச்சு பாரு அத்தைக்கு நடந்த எல்லாமே அநியாயம் தானே? அதை என்ன செஞ்சும் சரிகட்ட முடியாது… அப்பா சொல்லறாரு தங்கச்சிக்கு சேர வேண்டிய சொத்தை மாச மாசம் அவ பேர்ல ஒரு பேங்க் அக்கவுண்ட் வெச்சு போட்டுட்டு தான் இருக்கேன்னு… ஆனா அது அவங்களுக்கு நியாயம் வாங்கி தந்துடுமா? அவங்க இத்தனை காலம் இழந்ததை மீட்டு கொடுத்திடுமா? அதுதான் அவங்களை கொஞ்சமும் உறுத்தாம நம்ம கல்யாணம் நடக்கணும். அவங்களோட ஆசிர்வாதம் பூரணமா கிடைக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன். நம்ம கல்யாணம் கூட சேலத்துல தான் பிளான் செய்வேன். பாட்டியால இவ்வளவு தூரம் வர முடியாது. சுபத்ரா அத்தை குடும்பத்துக்கு அழைப்பு கிடையாது…”
தன் அன்னைக்கு நடந்த அநியாயத்திற்காக இவ்வளவு தூரம் பார்ப்பவன் மீது நேசம் இன்னமும் பெருகியது. கண்களில் கண்ணீர் கசிந்தது.
“ம்ப்ச்… என்னடி?” என அதட்டி அவள் கண்ணைத் துடைத்து விட்டவன், அவளை தன் நெஞ்சில் சாய்த்து ஆறுதல் படுத்தினான்.
“நீ அவசரக்காரன்னு நினைச்சிருக்கேன் தெரியுமா? ஆனா இப்ப எவ்வளவு நிதானமா யோசிச்சு ஒவ்வொன்னையும் செஞ்சுட்டு இருக்க… என்னவோ தெரியலை எனக்கு உன்னை இப்ப ரொம்ப ரொம்ப பிடிக்குது…” என்று சொன்னவள், அவன் நெஞ்சிலிருந்து அவனை ஏறிட்டுப் பார்த்து, “ஐ லவ் யூ…” என்றாள் கண்ணீரும் புன்னகையுமாக.
இந்த வார்த்தைகள் அவனுள் விளைவித்த ஜாலங்களை அவனின் கண்கள் பிரதிபலித்தது.
மௌனமதில் யுத்தம் செய்தவளின் காதல் மொழியில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளது இதழமுதை பருக அவள் இதழ்கள் நோக்கி குனிந்தான் கௌதமன். அவளின் கண்கள் ஒருவித எதிர்பார்ப்பில் மெல்ல மூடிக் கொண்டது.
ராதிகாவின் சம்மதம் பெற்று இவர்களது திருமணம் இனிதே நடைபெற்று வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக மாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் நாமும் இவர்களிடமிருந்து விடைபெறுவோம்.
*** சுபம் ***
கதையைக் குறித்த உங்களது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அமேசான் கமெண்ட்டிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவியுங்கள். அதனை வாசிக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எனது கதைகள் YOUTUBE தளத்தில் – “Sugamathi Tamil Novels” என்ற சேனலில் செவிவழியில் கேட்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் கேட்டு பாருங்கள்.
எனது மின்னஞ்சல் முகவரி sugamathistories [at] gmail [dot] com