12

மூன்று நாள் மறுவீட்டு விருந்து எப்படி முடிந்தது என்றே தெரியவில்லை. நான்காம் நாள் பொழுது விடிந்து காலை வழக்கம் போல் ஐந்து மணிக்கு எழுந்த ஐஸ்வர்ய நந்தினி காலைக்கடன்களை முடித்துவிட்டு, அழகிய தோற்றத்தில் விடியலை காண மெல்லமாக நடந்து கொண்டிருந்தாள்.

தாய் வீட்டிற்கு சென்று அன்றே, ஆதி ஈஸ்வரனை பிடித்து சோபாவில் தள்ளி விட்டான். மற்றவர் கண்களுக்கு இது எதேர்ச்சியாக இருந்தாலும் ஈஸ்வரனுக்கு நன்றாக புரிந்தது அவன் வேண்டுமென்றே செய்வது. சமூகத்தின் பார்வையில் ஆதியை தன்னுடைய மருமகனாக்கிக் கொண்டதில் ஈஸ்வரனுக்கு பயங்கர பெருமை. அவரது பார் கமிட்டி ஆட்கள் கூட வயிற்றெரிச்சலோடு அவரை வாழ்த்தியது இன்னும் நினைவில் இருக்கிறது.

தள்ளி விட்டதும் இல்லாமல் ஒரு மரியாதைக்காகவது மன்னிப்பு கேட்காமல் உதட்டின் ஓரத்தில் அவன் புன்னகையை மறைத்தது தான் அவரால் தாங்க முடியவில்லை. நர்மதா மருமகனுக்காக பார்த்து பார்த்து சமையலில் அசத்தி கொண்டிருக்க, ஐசு  தன்னுடைய அறையில் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

ஈஸ்வரன் நைசாக ஆதியிடமிருந்து நகர்ந்து, மகளைத் தேடிக் கொண்டு அவளது அறைக்கே வந்தார். தந்தையைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் ஐசுவின் கண்கள் விரிந்தது. அவர் அவளது அறையை எட்டிப் பார்த்தது கூட கிடையாது.

“அப்பா” வந்தவர் கதவை சாற்றி விட்டு

” என்ன அப்பா? அவன்கிட்ட கல்யாணம் ஆன ஒரே நாள்ல இல்லாததும் பொல்லாததும் சொல்லி கோல் மூட்டிருக்க. ஏற்கனவே அந்த விளங்கா வெட்டி பயலுக்கு மரியாதை துளி கூட கிடையாது. மரியாதை தெரியாட்டி என்ன ஆள் பெரிய பணக்காரன். இப்ப பணத்துக்கு இருக்கிற மரியாதை வேற எதுக்கு இருக்கு?

உன் முகர கட்டைக்கு எல்லாம் எப்படி மாப்பிள்ளை தேட போறேன் என் சொத்தே அழிஞ்சுருமேனு நான் பயந்துகிட்டு இருக்குறப்ப இளிச்சவாய மாதிரி அவன் அப்பா வந்து பொண்ணு கேட்டான். இவன் என்ன லேசு பட்ட ஆளா? இவனுக்கு உன்னை கட்டி கொடுத்தா சொசைட்டில எனக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கும் தெரியுமா?

அதே சமயம் உன் முகரைக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? இத ஏன் விடுவானேன்னு அவசர அவசரமா இந்த கல்யாணத்தை செஞ்சு வெச்சேன். அவன் கிட்ட நல்லபடியா என் அப்பா இப்படி,அவர்கிட்ட நல்லா நடந்துக்கணும். அவர மாதிரி ஒரு மனுஷன் இந்த உலகத்திலேயே கிடையாது. இப்படி வாயில வந்த எல்லாத்தையும் சொல்லி மாமனார மனசுல சாமி ரேஞ்சுக்கு ஏத்தி வச்சிருக்கணும். ஆனா நீ அவன்கிட்ட என்னத்தையோ சொல்லி இருக்க..

கொஞ்சம் கூட மனசுல மரியாதை இல்லாம என்ன புடிச்சு தள்ளிவிடுறான்? அன்னைக்கு மனசுல கொஞ்சம் கூட கூச்ச நாசமே இல்லாம வெறும் ஜட்டியோட நிக்கிறான். இவன் என்ன மனுசனா இல்ல மாடா? எருமை மாட்டுக்கு தான் சொரணை இருக்காது. இவனுக்கும் இருக்காதுன்னு இப்ப தான் தெரியுது. இதுக்கெல்லாம் நீ தான காரணம்?” அபாண்டமான குற்றச்சாட்டில் ஆடிப் போய் விட்டாள் ஐஸ்வர்ய நந்தினி.

” இல்லப்பா நான் அவர்கிட்ட எதுவுமே சொல்லல. இதுவரைக்கும் அவர்கிட்ட நான் மனசு விட்டு பேசக்கூட இல்லப்பா”

“நீ பேசுறியோ பேசலையோ அதை பத்தி எனக்கு கவலை கிடையாது. உன் புருஷன் கிட்ட சொல்லி வை. நானும் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது. அவசியமா என்கிட்ட வச்சுக்கிட்டா பின்விளைவு ரொம்ப மோசமா இருக்கும்”

வழக்கம் போல விஷத்தை கக்கி விட்டு அவள் அறையில் இருந்து வெளியே வந்தவரை படிக்கட்டில் இடை மறித்தான் ஆதி.

“இவனா? கிரகம் புடிச்சவன் ஹால்ல தானே ஒக்காந்து இருந்தான். என்ன எழவுக்கு இங்க வந்தான்?..”

யோசனையோடு

“என்ன மாப்பிள்ளை.. ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்திங்களா”

“ஆமா மாமா.. உடம்பெல்லாம் ஒரே அசதியா இருக்கு.மொத நீங்க என் காலு மேலயே விழுந்துடிங்க. சுளுகிருச்சு போல. பாருங்க பாதம் லேசா வீங்கிருக்கு. அத்தை சொன்னாங்க நீங்க சுளுக்கெடுக்குறதுல ஆஸ்கர் அவார்ட் வாங்கிருக்கீங்கன்னு. கொஞ்சம் உங்க கைவண்ணத என் காலுல காட்டுனா புண்ணியமா போகும்.

உங்க வீட்டுக்கு வந்த நேரம் இப்படியா ஆகணும்? எனக்கு வேற அப்றம் அடுத்த ரேஸ் பத்தி பிரஸ் மீட் இருக்கு. இப்படியே நொண்டிக்கிட்டு போனா நல்லாவா இருக்கும்? கல்யாணம் பண்ண ரெண்டே நாளுல என் காலு உடைஞ்சு போச்சு. பிரபல வக்கீல் ஈஸ்வரன் மகளை திருமணம் செய்ததால் கார் ரேஸரின் காலுக்கு அபத்தம்னு கொட்டை எழுத்துல மீம்ஸ் போட்டு கலாய்ப்பாங்க.இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா சொல்லுங்க”

அதிர்ந்து நிற்கும் போது நர்மதா வந்து

“ஆமாங்க. மாப்பிள்ளை சொல்றது சரிதானே. நம்ம வீட்டுக்கும் சொந்தக்காரங்க வந்து போக இருக்காங்க. இந்த நேரத்துல இவர் இப்படி நொண்டிக்கிட்டு நடந்தா எல்லாரும் நம்ம பொண்ண தானே தப்பா பேசுவாங்க. நீங்க தான் நல்லா சுளுக்கு எடுப்பீங்களே. கொஞ்சம் எடுத்து விட்டுருங்க”

படிக்கட்டில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தவனை கண்களால் எரித்தார் ஈஸ்வரன்.

வேறு வழியே இல்லாமல் ஆதி சோபாவில் அமர்ந்திருக்க,தரையில் அமர்ந்த ஈஸ்வரன், சுளுக்கிய அவனின் பாதத்தை எடுத்து தன் தொடை மீது வைத்து சுளுக்கு எடுக்க ஆரம்பித்தார்.ஐசுவுக்கு, ஆதி வேண்டுமென்றே செய்வது தெரிந்தது. ஆனால் காரணம் புரியவில்லை. ஈஸ்வரன் மேலிருந்து புகையாய் கிளம்பியது. அந்த அளவிற்கு உள்ளுக்குள் புகைந்து எரிந்து கொண்டிருந்தார் மனிதன். அவரால் ஆதியை ஒரு வார்த்தை பேச முடியவில்லை.

நர்மதாவும் ஏன் கார்த்திக் கூட நல்லா எண்ணெயை போட்டு அழுத்தி தேச்சு விடுங்கப்பானு அவரை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தான். வந்த ஒரு மணி நேரத்திற்குள் மருமகனின் காலை பிடிக்க வேண்டிய நிலைமை.இந்த இடத்திற்கு வர ஈஸ்வரன் எத்தனை பேரை பார்த்திருப்பார். குற்றவாளியின் கண்ணை பார்த்தாலே அவன் உண்மை சொல்கிறானா பொய் பேசுகிறானா என்பதை கண்டுபிடித்து விடுவார். அப்படிப்பட்டவருக்கு ஆதியின் கண்கள் கூறும் பாசை தெரியாதா?

சுளுக்கு எடுத்து முடித்ததும் ஈஸ்வரன் செய்த மறுவேலை அங்கிருந்து கிளம்பியதுதான். அப்போது மட்டுமல்ல ஆதி அந்த வீட்டில் இருக்கும் மூன்று நாளும் வீட்டு பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது என்ற வைராக்கியத்தோடு கிளம்பி விட்டார். அதற்கு தகுந்தார் போல அவருக்கு டெல்லி செல்ல வேண்டிய வேலை வந்தது. அதை உபயோகப்படுத்திக் கொண்டு அவசர வேலை இருப்பதாக காட்டி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவன் எதிரே வந்த ஐசு

” உண்மையிலேயே உங்களுக்கு கால் சுளுக்கிடுச்சா”

” ஏன் பாத்தா எப்படி இருக்கு”

” எனக்கென்னமோ நீங்க வேணும்னே செய்யற மாதிரி இருக்கு”

” உன்னோட ஊகத்துக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. உன் ஆசை தீர உன்னோட அம்மா கூட செல்லம் கொஞ்சிக்கோ. “

சொன்னவன் கண்ணை மூடி படுத்து விட்டான்.

அப்படி என்றால் ஆதி ஈஸ்வரனை வீட்டிலிருந்து துரத்தியது ஐசுவுக்காகவா?

அந்த மூன்று நாட்களும் நர்மதா ஆசை தீர மகள் மருமகனை கவனித்து அனுப்பினார். ஆதியே அவரது மலர்ந்த முகத்தைக் கண்டு

” என்னத்த மாமா இல்லன்னு  இவ்வளவு சந்தோஷம்? “

என்று கேட்டு விட்டான். அந்த அளவிற்கு வெளிப்படையாக முகத்தில் சந்தோஷத்தை காட்டினார் நர்மதா. ஆதி அந்த வீட்டிலிருந்து கிளம்பும் வரை தனக்கு போன் கூட பண்ண கூடாது என்று குழலி கண்டிப்பாக சொல்லி விட்டாள். கார்த்தி காரணம் கேட்டதற்கு அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

தோட்டத்தில் நடந்த வரை அந்த மூன்று நாட்களை எண்ணிப் பார்த்தாள் ஐஸ்வர்ய நந்தினி. திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. இந்த ஐந்து நாட்களுக்கு அவளது வாழ்க்கையில் பெரிதாய் மாற்றம் ஏற்பட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூறுவாள். அவளது வாழ்வில் ஏற்பட்ட ஒரே மாற்றம் தினம் சுடு சொல்லும் மனதை கூறு போடும் வார்த்தைகளில் இருந்து விடுதலை. அவளைப் பார்த்தாலே கெட்ட சகுனம் என்று விலகிப் போகும் தந்தையின் முகத்திலிருந்து விடுதலை.

மற்றபடி இந்த பெரிய வீட்டில் அவளுக்கு போர் அடித்தது. ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்தே ஆக வேண்டும் என்பது ஈஸ்வரன் அவளுக்கு விதித்த சட்டம். அவள் பிறந்ததிலிருந்து நர்மதாவுக்கு உடலில் பல வியாதிகள் குடியேறியது. ஐஸ்வர்ய நந்தினி வளர நர்மதா மேனியில் நோய்களும் வளர்ந்தது. இந்த நோயெல்லாம் ஐசு பிறந்ததால் வந்தது என அதற்கும் அவள் மீதே பழிப் போட்டார் ஈஸ்வரன்.

உன்னால் வந்த வினைக்கு நீயே முடிவு கட்டு என்பது போல பள்ளி செல்லும் காலத்தில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து அவர்கள் வீட்டு வேலையை மொத்தமாக முடிக்க வேண்டும். காலை உணவையும் அவளே தயாரிக்க வேண்டும். பள்ளி விடுமுறை என்றால் மூன்று வேளை உணவும் அவள் தலையில். நர்மதா எவ்வளவு மன்றாடி விட்டார். அதற்கும் சுடுச் சொல் வாங்கியது ஐசு தான். நர்மதாவே சமைக்கலாம் என்றாலும் கை பக்குவத்தை வைத்து ஈஸ்வரன் அறிந்து கொள்வார்.

ஈஸ்வரனுக்கு மனம் இல்லாவிட்டாலும் ஒத்துக்கொள்ளக் கூடிய ஒரே விஷயம் நர்மதாவை விட ஐசு பிரமாதமாக சமைப்பாள். அவள் என்னதான் பார்த்து பார்த்து சமைத்தாலும் ஒரு வார்த்தை வாய் திறந்து பாராட்ட மாட்டார். மாறாக உப்பு இல்லை உரைப்பு இல்லை இப்படியான குற்றச்சாட்டுகள் ஏராளம். காலையிலிருந்து பம்பரமாக வீட்டு வேலை, பின் பள்ளி கல்லூரி, படிப்பு முடிந்த பிறக்கும் நடன பள்ளி, இப்படி பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தவளுக்கு ஐந்து நாட்கள் கட்டாய ஓய்வே சளிப்பை ஏற்படுத்தியது.

மேலும், இவர்களின் திருமண செய்தி இன்டர்நேஷனல் ஊடகங்களின் வழியாகவும் உலகம் எங்கும் பரவியது. பிரபலமாக இருந்தால் இது ஒரு தொல்லை. ஆதியே பெரும்பாலும் வெளியிடங்களுக்கு செல்வதை நாசுக்காக தவிர்த்து விடுவான் என்பதை பல தடவை அமுதன் சொல்லியிருக்கிறார். அவர்களின் திருமணத்தின் போதே அவள் பார்த்து விட்டாள். வந்த கூட்டத்தில் பாதி பேர் மணமக்களை வாழ்த்தாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது நடந்த பள்ளிக்குச் சென்றால், தேவையில்லாத கிசுகிசுக்கு ஆளாக வேண்டும். அவளுடைய வாழ்வில் இருந்த ஒரே ஆறுதல் நடனம். திருமணம் என்ற நடனமாடும் கால்களை அவள் இழந்து விட்டாள். சுய பச்சாதாபத்தில் அவளையும் அறியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது ஐஸ்வர்ய நந்தினிக்கு.

தொடரும்