“எங்க பெரியம்மா கொஞ்சம் அப்படி தான் பட்டுன்னு பேசிருவாங்க. சாரி டி ஸ்ரீ”

“அது ஓகே தான். அதை விடு. ஆனா இவங்க என்ன பேசனுமாம்? எதுக்கு தனியா போகணும்? எனக்கு அது தான் பயமா இருக்கு”

“பெரியம்மா பேசினதுக்கு சாரி கேப்பானா இருக்கும். மத்த படி அண்ணாவைப் பாத்து நீ பயப்பட வேண்டாம். அவன் ரொம்ப நல்லவன்”

“நாளைக்கு நீயும் வரியா? எனக்கு அவங்களை பாக்க போக விருப்பம் இல்லை. ஆனா நான் போகலைனா அவங்க வீட்டுக்கு வருவேன்னு சொல்றாங்க. வீட்டுல வந்து நடந்ததைச் சொன்னா எல்லாருக்கும் தெரிய வரும். அண்ணாவுக்கும் அண்ணிக்கும் இப்ப தான் கல்யாணம் ஆகிருக்கு. இதெல்லாம் தேவையா?”

“சரி விடு, நாளைக்கு காலைல நான் வெட்டியா தான் இருப்பேன். அம்மா கிட்ட சாப்பிங்ன்னு சொல்லிட்டு வரேன். நம்ம போகலாம். சரி இப்ப வா சாப்பிட போகலாம்”

“ஹம்”, என்று சொல்லி அவளுடன் நடந்தாள்.

“ஏன் ஸ்ரீ, நான் ஒண்ணு கேக்கட்டா?”

“கேளு டி”

“அண்ணாவை உனக்கு பிடிக்கலையா?”

“அவங்களை யாருக்கு தான் பிடிக்காது. ஆனா அவங்களை பிடிக்க எனக்கு என்ன தகுதி இருக்கு? உங்க பெரியம்மா சொன்னது உண்மை தானே? நான் தப்பு பண்ணிட்டேன். அவ்வளவு தான். நாளைக்கு போறோம். மிதுன் கிட்ட தெளிவா பேசிட்டு உண்மைலே சாப்பிங் போறோம். புல்லா ஒரு கட்டு கட்டிட்டு வந்துறோம். ஓகே வா?”, என்று சிரித்தாள் ஸ்ரீ.

“சரி வா சீக்கிரம் சாப்பிட போகலாம். அங்க ஆள் என்னை காணும்னு காத்துட்டு இருப்பார்”

“ஹேய், யாரு டி அது?”

“மாம்ஸ் பிரண்ட் தான்”

“அறிவு அண்ணாவா?”

“ஆமா வச்ச கண் எடுக்காம பாக்காங்க. உடனே லவ் எல்லாம் இல்லை. ஆனா அவங்க பாக்கும் போது பதில் பார்வை பாக்கலைனா அவங்க மனசு என்ன ஆகும்?”

“அது சரி”

“பாக்கலாம் எது வரைக்கும் போகுதுன்னு. என் வாழ்க்கையை எல்லாம் அந்த கடவுள் கைல கொடுத்துட்டேன் பா”

“நானும் தான் டி, சரி வா போகலாம்”

“என்ன தான் கடவுள் கிட்ட கொடுத்துட்டாலும் சைட் அடிக்கும் போது குறுகுறுப்பா தான் இருக்கு”, என்று மது சொல்ல “உண்மை தான்”, என்று எண்ணிக் கொண்டாள் ஸ்ரீயும்.

அவர்கள் போன போது மணமக்கள் உண்டு கொண்டிருக்க மிதுன் அறிவு இருவரும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் இருவரையும் கண்டதும் அவர்கள் முகத்தில் சிறு வெளிச்சம்.

பிடித்தவர்களுக்கு பரிமாற கசக்குமா என்ன? தங்கைக்கும் ஸ்ரீக்கும் பாத்து பாத்து இலை எடுத்து வந்தான், தண்ணீர் எடுத்து வந்தான் மிதுன்.

தேடி தேடி அனைத்து உணவையும் அவர்களுக்கு பரிமாறினான் அறிவு. பார்வதி மற்ற பெரியவர்கள் அனைவரும் உணவு உண்டு விட்டு கீழே இருந்ததால் இங்கே இளையவர்களுக்கு கொண்டாட்டம் தான்.

“ஏன் மாப்பிள்ளை ஒரு கல்யாணத்துல பல ஜோடி உருவாகுவாங்களாம். அப்படியா?”, என்று கேட்ட அறிவு மதுவை ஒரு பார்வை பார்க்க அவளுக்கு ஜில்லென்ற உணர்வு.

ஸ்ரீ அவள் கரத்தைப் பற்றி “அறிவு அண்ணா உனக்கு தான் சொல்றாங்களோ?”, என்று சொல்ல ஸ்ரீ முகத்தில் இருந்த சிரிப்பை ரசித்துப் பார்த்தான் மிதுன். உணவு நேரம் நல்ல படியாக சென்றது.

இரவு பத்து மணிக்கு வீணாவை அங்கே விட்டுவிட்டு அவளது குடும்பம் கிளம்பிச் சென்றது. போகும் அவர்களைப் பார்த்த படி வீணா கண்ணீருடன் நிற்க எந்த தயக்கமும் இல்லாமல் அவள் தோள் மேல் கை போட்டு ஆதரவாக நின்றிருந்தான் சத்யா. அவளுக்கும் அப்போது அந்த அணைப்பு தேவையாக இருந்தது.

“அழக் கூடாது வீணாம்மா. நாங்க இருக்கோம் தானே?”, என்றாள் பாமா.

“ஆமா மருமகளே, இது இனி உன் வீடு. அம்மா அப்பாவை எப்ப வேணும்னாலும்  பாக்க போய்ட்டு வாங்க. அவங்களும் இங்க வருவாங்க. இன்னைக்கு ஒரு நாள் தான் இங்க. அடுத்து ஒரு வாரம் என்ன ஒரு மாசம் கூட அங்க இருந்துட்டு அப்படியே ஒரு ஹனிமூன் டிரிப் போய்ட்டு வாங்க. ஆபீஸை நான் பிரகாஷ் அறிவு எல்லாரும் பாத்துக்குறோம். நாங்களும் உனக்கு அம்மா அப்பா தான்”, என்றார் தீனா.

சரியென்று தலையசைத்தாலும் கண்ணீர் தான் வந்தது வீணாவுக்கு. “நேரம் ஆகுது பாரு சத்யா;. பிள்ளையை உள்ள கூட்டிட்டு போ”, என்று தீனா சொல்ல “வா வீணா”, என்று சொல்லி அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

அந்த இடத்தில் ஸ்ரீ அமைதியாக இருக்க “பாப்பா இங்க வா டா”, என்றார் தீனா.

அவள் அந்த பிரச்சனையில் சிக்கியதில் இருந்து தீனா அவளிடம் அதிகம் பேச வில்லை. அதற்காக முன்பு போல அவள் மீது கோபமும் காட்ட வில்லை. ஆனால் செல்ல அழைப்பு எல்லாம் காணாமல் போயிருந்தது. இப்போது அப்படி அழைக்கவும் இருந்த மன நிலையில் அவளும் அழுத படி தந்தை அருகில் சென்றாள்.

“என் செல்ல பொண்ணு எதுக்கும் அழக் கூடாது. அப்பாவுக்கு உன் மேல கோபம் வருத்தம்ன்னு எதுவும் இல்லை டா. எல்லாமே கெட்ட நேரம்ன்னு நினைச்சு மறந்துறனும். அண்ணா கல்யாணத்துல நிறைய வேலை இருந்ததால தான் கொஞ்சம் உன் கிட்ட பேச முடியலை. இனி உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் என் கிட்ட சொல்லணும் சரியா?”

“சரிப்பா.. சாரிப்பா”, என்றவள் அவர் நெஞ்சில் சாய்ந்து கொள்ள அவரும் அவளை அணைத்துக் கொண்டார். கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் பாமா. ஏனோ அப்பாவையும் மகளையும் கலைக்க அவளுக்கு மனதில்லை.

முன்பு இப்படி நடந்தால் “எந்நேரமும் என்ன கொஞ்சல் ரெண்டு பேருக்கும்? போய் தூங்குங்க. ஏய் போய் தூங்கு டி”, என்று இருவரையும் விரட்டி விட்டிருப்பாள். இன்று அப்படிச் செய்ய மனமில்லாமல் அவர்களை தனியே விட்டுச் சென்று விட்டாள்.

இன்றைய பாரம் எல்லாம் தீரும் அளவுக்கு தந்தையின் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் விட்டாள் ஸ்ரீ. ஆனால் தந்தையிடம் வாயைத் திறந்து எதுவும் சொல்லலை.

சிறிது நேரம் மகளை அழ விட்டவர் “சரி டா பாப்பா, நேரம் ஆச்சு. போய் தூங்கு. காலைல பாக்கலாம்”, என்று சொல்ல “சரிப்பா”, என்று சொல்லி விட்டு செல்லும் மகளைப் பார்த்த படி இருந்தவர் மனதுக்குள் “சாரி டா அகில், எனக்கு வேற வழி தெரியலை”, என்று இறந்த மருமகனையும் நினைத்துக் கொண்டு உறங்கச் சென்றார்.

ஆனால் உறக்கம் தான் வர வில்லை. மகனுக்கு திருமணம் முடிந்து விட்டது. மகளுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை. அவளை ஒரு நல்லவன் கையில் பிடித்துக் கொடுத்தால் போதும். ஆனாலும் அவருக்குள் மிகப் பெரிய குற்ற உணர்வு. அவரையும் மீறி செய்த செயல் அது.

அன்று சத்யாவை பழி வாங்க அகில் எடுத்த ஆயுதம் தான் தீனா. அவரை வைத்து தான் சத்யாவை கொல்ல முடிவு எடுத்தவன் தீனாவை அழைத்தான்.

ஏதோ ஒரு எண் என்று தான் எடுத்தார் தீனா. “மாமா”, என்று அகில் குரல் ஆழ்ந்து ஒலிக்க அவன் மீது அவ்வளவு கோபம் இருந்தாலும் அந்த நொடி உருகி போனது.

கடுமையாக திட்ட மனதில்லாமல் “மனுசனா டா நீ? சின்ன பொண்ணு டா ஸ்ரீ. அவளை இப்படி போதை பழக்கத்தை வச்சு ஏமாத்தி வச்சிருக்க? நீ மட்டும் நல்லவனா இருந்திருந்தா உனக்கு தான் டா அவளை கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பேன். உன் புத்தி மட்டும் எதுக்கு டா இப்படி போச்சு?”, என்று கேட்டவரின் கண்களில் கண்ணீர்.

“என்னை மன்னிச்சிருங்க மாமா. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நீங்களும் என்னை விட்டுருக்க கூடாது மாமா. உங்க பையனா இருந்தா விட்டுருப்பீங்களா? கூடவே அவனை வச்சு அடிச்சு உதைச்சாவது திருத்திருப்பீங்கல்ல? என்னோட அப்பா இருந்துருந்தாலும் என்னை விட்டுருக்க மாட்டார் மாமா”, என்று சொல்ல அவருக்குள் குற்ற உணர்ச்சி.

அகிலின் தந்தை சேது மாதவன் வேறு யாரும் அல்ல. தீனாவின் உயிர் நண்பன் தான். தங்கையை திருமணம் செய்து கொடுக்கும் அளவுக்கு அவர்களுக்குள் நட்பு இருந்தது.

இப்போது அகில் கேட்ட கேள்வி ஏனோ தீனாவுக்கு சேதுவே “எதுக்கு டா என் மகனை விட்ட? உன் மகனா இருந்திருந்தா இப்படி விட்டுருப்பியா?”, என்று கேட்பது போல இருந்தது.