அத்தியாயம் 13 

மொழி பேசுவதை விட 

அதிகம் தான் பேசுகிறது 

உந்தன் வெட்கம்!!!

சத்யா மணமகன் அலங்காரத்தில் கம்பீரமாக சிரித்த முகத்துடன் மணமேடையில் அமர்ந்திருக்க ஸ்ரீ வீணாவை கை பிடித்து மேடைக்கு அழைத்து வந்தாள்.

மயில் கலர் பட்டுப் புடவையில் மணப்பெண் அலங்காரத்தில் மேடைக்கு வந்த வீணாவை விட்டு சத்யா கண்ணை எடுக்க வில்லை.

அவன் அருகே குனிந்த அவனது நண்பன் அறிவழகன் “என்னமோ பொண்ணு பிடிக்கலை, கல்யாணத்தை நிறுத்தணும்னு சொன்ன? இப்ப என்னடான்னா வச்ச கண் எடுக்காம பாக்குற?”, என்று கேட்டான்.

“ஓஹோ சாருக்கு என்னைக் கவனிக்க எல்லாம் நேரம் இருக்கா? நானும் வந்ததுல இருந்து உன்னைக் கவனிச்சிட்டு தான் இருக்கேன். வீணாவோட தங்கச்சியை சைட் அடிக்கிறதை?”, என்று பதிலுக்கு வாரினான் சத்யா. அடுத்து அவன் ஏதாவது பேசுவானா என்ன?

ஆனாலும் நண்பன் தவறாக எடுத்துக் கொள்வானோ என்ற  பயத்தில் “சும்மா தான் டா சத்யா பாத்தேன். தப்பா எந்த எண்ணமும் இல்லை”, என்றான்.

“நான் உன்னை எதுவும் தப்பா நினைக்கலை. பங்க்சன் வீட்ல இதெல்லாம் சகஜம். சீரியஸா இருந்தாலும் ரெண்டு பேருக்கும் பிடிச்சா அடுத்து கல்யாணம் தான்”

“டேய் அந்த அளவுக்கு எல்லாம் நான் யோசிக்கலை. நீ வேற. நீ உன் ஆளையே சைட் அடிப்பா. என்னை விட்டுரு டா மாப்பிள்ளை”, என்று சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டான்.

வீணா அவன் அருகில் வந்து அமர்ந்ததும் “கடைசி சந்தர்ப்பம் இது தான். என் கிட்ட இருந்து தப்பிக்கணும்னா இப்பவே தப்பிச்சிக்கோங்க. அப்புறம் உங்க வாழ்க்கை உங்க கைல இருக்காது”, என்றாள் சிறு சிரிப்போடு.

“ஆயுளுக்கும் என்னோட வாழ்க்கையை உன் கைல ஒப்படைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இதுல எந்த மாற்றமும் இல்லை. எனக்கு எந்த குழப்பமும் இல்லை”, என்று சொல்லி சிரிக்க ஏனோ அவன் அழகாக இருப்பது போல இருந்தது வீணாவுக்கு.

“அக்கா மாம்ஸ் உங்க ரெண்டு பேரையும் தான் எல்லாரும் பாக்குறாங்க. கொஞ்சம் உங்க ரொமான்சை அப்புறம் வச்சிக்கோங்க”, என்று மது சொன்னதும் தான் நடப்புக்கு வந்தார்கள்.

அதே நேரம் ஸ்ரீ அவர்கள் பேச்சைக் கேட்டு லேசாக சிரிக்க அவளுடைய சிரிப்பு கண்களை எட்ட வில்லை என்பதை மிதுன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

அவனுக்கு கஷ்டமாக இருந்தது. தன்னால் தான் தன்னுடைய அன்னையால் தான் அவள் இப்படி இருக்கிறாள் என்று தெரிந்த பிறகு அவன் எப்படி நிம்மதியாக இருப்பான்? அவனுக்கும்  வலித்தது. ஸ்ரீயை அவன் எதுவும் தவறாக நினைக்க வில்லை.

அவனைப் பொறுத்த வரை அவளுக்கு வந்தது பருவக் கோளாறு மட்டுமே. அதை அவன் பெரிது படுத்தவே இல்லை. ஆனால் அவள் மனதை அல்லவா நோகடித்து விட்டார்கள். நிச்சயம் அவன் அம்மா என்ன பேசி இருப்பாள் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அதற்காக இப்போது அன்னையிடம் பேசினால் பார்வதி ஸ்ரீயை மேலும் பேசுவாள் என்பதால் இந்த பிரச்சனையை அப்படியே விட்டான். ஆனாலும் ஸ்ரீயைப் பார்க்க பார்க்க கஷ்டமாக இருந்தது.

அவன் அன்னை நினைத்தது என்னவோ அவள் தன்னுடைய மகனை மயக்கி விடுவாள் என்று. ஆனால் உண்மையிலே அவன் அன்னை செய்த செயலே மிதுனின் மனதில் அவள் மீதான எண்ணத்தை அழுத்தமாக விதைத்தது.

அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவளை சமாதானப் படுத்த வேண்டும் என்று ஆரம்பித்த எண்ணம் அவளிடம் தனியே பேச வேண்டும் என்ற எண்ணத்தில் முடிந்து அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான்.

முகூர்த்த நேரம் வந்ததும் ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க வீணாவின் சங்கு கழுத்தில் தாலியைக் கட்டினான் சத்யா. தீனா மற்றும் குல்கர்னி இருவரும் கைகளைப் பிடித்து தங்களின் மகிழ்ச்சியை காட்டினார்கள்.

அனைவரின் ஆசீர்வாதம் மணமக்களுக்கு கிடைக்க திருமண சடங்குகள் நண்பர்கள் கேலி என களை கட்டியது.

எல்லாம் நல்ல முறையில் நடை பெற அனைவரும் உணவு அருந்த சென்றார்கள். மிதுன் ஸ்ரீயிடம் பேசுவதற்காக அவள் அருகில் செல்ல அதை உணர்ந்தோ இல்லை, தூரத்தில் இருந்து பார்வதி அவர்களை பார்ப்பது தெரிந்தோ “என்னை எங்க அம்மா கூப்பிட்டாங்க மிதுன். ஒரு நிமிஷம் இருங்க வரேன்”, என்று சொல்லி விட்டு விலகிச் சென்றவள் அடுத்து மது அருகில் சென்று நின்று கொண்டாள். அவளை விட்டு அகலவே இல்லை. அவனாலும் அவளை நெருங்க முடியவில்லை. தங்கையை அருகில் வைத்துக் கொண்டு அவளிடம் என்ன பேசுவானாம்?

மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பினார்கள். வீணா வீட்டில் வைத்து முதலில் சடங்குகள் நடக்க அங்கே எல்லாம் முடிந்ததும் கண்ணீரும் கம்பலையுமாக தன்னுடைய வீட்டில் இருந்து சத்யாவுடன் அவனுடைய வீட்டுக்கு பயணமானாள் வீணா.

இந்த நேரத்தில் எல்லா பெண்களுக்கும் தோன்றுவது போல “நாங்க மட்டும் தான் எங்க வீட்டை விட்டு வரணுமா?”, என்ற எண்ணம் வீணாவுக்கும் வந்தது. அதில் சிறிது கோபமும் வந்தது. ஆனாலும் “நான் என் அம்மா அப்பாவை அடிக்கடி போய்ப் பாப்பேன். என்னை யார் தடுப்பா? தடுத்தா அம்மா வீட்டுக்கே போயிருவேன்”, என்று எல்லாரையும் போல அவளும் அவளை சமாதானப் படுத்திக் கொண்டாள்.

அவள் நிலை உணர்ந்தோ என்னவோ சத்யா ஆறுதலாக அவள் கையைப் பற்றிக் கொண்டான். அந்த தொடுகையில் அவள் மனது முழுதாக சமாதானம் ஆக வில்லை என்றாலும் அந்த தொடுகையில் அவள் கவனம் அவன் பக்கம் திரும்பியது.

அவனைக் கண்டு “என்ன?”, என்றாள்.

“என்ன என்ன?”

“கையெல்லாம் பிடிக்கிறீங்க?”

“நீ தானே சொன்ன என்னோட வாழ்க்கை இனி உன் கைலன்னு. அதான் உன் கையைப் பிடிச்சு என் வாழ்க்கையை உன் கிட்ட ஒப்படைக்கிறேன். உனக்கு பிடிக்கலைனா கையை எடுத்துறவா?”

“பிடிக்கலைன்னு நான் சொல்லவே இல்லையே?”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல மெல்லிய சிரிப்பு அவனிடம்.

மணமக்கள் காருக்கு முன்னே ஒரு காரில் பெரியவர்கள் நான்கு பேரும் செல்ல பின்னால் ஒரு காரில் மது, சத்யாவின் நண்பன் அறிவு, மிதுன் மற்றும் ஸ்ரீ நால்வரும் வந்தார்கள். அவர்களுக்கு பின்னால் வந்த வேனில் மற்ற உறவினர்கள் வந்தார்கள்.

சத்யா வீட்டுக்கு வந்ததும் ஸ்ரீ தான் மணக்களுக்கு ஆரத்தி எடுத்தாள். அங்கேயும் சில சடங்குகள் இருக்க அதற்கு பிறகு அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

அங்கே பார்வதி இருந்ததால் ஸ்ரீ அறையை விட்டு வெளியே வரவே இல்லை. ஏனோ அவளை எதிர்க் கொள்ள ஸ்ரீயால் முடியவே இல்லை. மதுவுடன் அவளுடைய அறைக்குள் பதுங்கிக் கொண்டாள்.

பார்வதி மிதுனை வேறு கவனித்துக் கொண்டே இருக்க அவனாலும் அங்கிருந்து நகர முடிய வில்லை. ஆனாலும் எரிச்சலாக இருந்தது அவனுக்கு.

இன்று விட்டால் ஸ்ரீயை வேறு எப்போது பார்க்க என்று தவிப்பாக இருந்தது. இரவு உணவை சத்யா மொட்டை மாடியில் ஏற்பாடு செய்திருக்க அனைவரும் சாப்பிட சென்றிருந்த இடைவெளியில் மது மற்றும் ஸ்ரீ இருந்த அறைக்குள் சென்று விட்டான் மிதுன்.

அதை ஸ்ரீ எதிர் பார்க்கவே இல்லை. அவள் திகைத்து விழிக்க “என்ன அண்ணா? அம்மா கூப்பிட்டாங்களா?”, என்று கேட்டாள் மது.

“இல்லை மது, எனக்கு உன் பிரண்ட் கிட்ட கொஞ்சம் பேசணும். தப்பா எதுவும் இல்லை. மன்னிப்பு கேக்கணும். இங்க ரொம்ப பேச முடியாது. எப்படியாவது நாளைக்கு அவளை நம்ம பிரவுசிங் சென்டர்க்கு வரச் சொல்லு. நீயும் கூட வந்தாலும் சரி தான். அப்படி வரலைனா நான் நாளைக்கு நைட் இந்த வீட்ல வந்து எல்லார் முன்னாடியும் எங்க அம்மா பேசினதுக்கு மன்னிப்பு கேக்க வேண்டியது இருக்கும்”, என்று சொன்னவன் வந்த வேகத்தில் அபடியே சென்று விட்டான்.

மது ஸ்ரீயைப் பார்த்த படி திகைத்து நிற்க ஸ்ரீயோ தளர்ந்து கட்டிலில் அமர்ந்து விட்டாள்.

“என்ன டி ஸ்ரீ ஆச்சு? அண்ணா உன்னை எதுவும் சொல்லிட்டானா? பெரியம்மா என்ன சொன்னாங்க?”, என்று கேட்ட படி அவள் அருகே அமர்ந்தாள்.

“எதுவும் சொல்லலை? ஆனா பயமா இருக்கு”

“என்ன ஆச்சு டி? எதுக்கு நேர்ல பேசனுமாம்?”

“அது.. அது வந்து.. உங்க பெரியம்மா கொஞ்சம் சத்தம் போட்டாங்க”, என்றவள் நடந்ததைச் சொல்ல மதுவுக்கு என்ன சொல்ல என்றே தெரிய வில்லை.