அறியாமல் தொலைந்தேனே -8

அத்தியாயம் -8

சஞ்சயின் வீட்டில் அவனது அப்பா வீரராகவனுக்கு மற்ற குடும்ப உறுப்பினர்களால் ஒரே அழுத்தம். எப்படியாவது சஞ்சயை சென்னைக்கு அழைத்து வந்து விட வேண்டுமாம். 

சஞ்சயின் அம்மா தேவகி கணவரிடம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிந்தார். திருமணம் ஆன நாள் முதலாக அதிர்ந்து கூட பேசாத மனைவியின் பாராமுகத்தில் வீரராகவனுக்கு கவலையாகி விட்டது. 

அவர்களின் இரண்டாவது மகள் சாதனா திருமணமாகி பனிரெண்டு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தாய்மை அடைந்திருக்கிறாள். மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார் மருத்துவர். 

மகள் இங்கு வந்து விட்டதால் தேவகி அவளை விட்டு நகர முடியவில்லை. இப்படித்தான் சஞ்சய் வயிற்றில் இருந்த போதும் அந்த நேரத்தில் தேவகி மிகவும் சிரம பட்டிருந்தார். 

பிள்ளைகள் வளர்ந்து தங்கள் வேலைகளை தாங்களே பார்த்துக் கொள்ளக் கூடிய நிலையில் இருந்த போது பிறந்த சஞ்சய், தேவகியின் வாழ்க்கைக்கு புத்துயிர் ஊட்டினான் என்றுதான் சொல்ல வேண்டும். 

சஞ்சய் தன் அம்மாவிடம் சிரம படுகிறேன் என வாய் விட்டு ஏதும் சொல்லியிருக்கவில்லை. இவருக்குத்தான் மகனின் குரலில் வருத்தம் இழையோடுவதாக நினைப்பு, அவனை அழைத்து வந்தே ஆக வேண்டும் என ஒரே பிடிவாதம். 

கடைக்குட்டி மகன் மீது மற்ற குடும்ப உறுப்பினர்கள் போலவே வீர ராகவனுக்கும் அளவு கடந்த அன்பு இருக்கிறதுதான். அதே சமயம் அவனது பொறுப்பற்ற தன்மையால் பிற்காலத்தில் வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல் கஷ்ட படுவானோ என்ற பயமும் அளவுக்கதிகமாக இருந்தது. 

அதனால்தான் தான் ஒருவனாவது அவனிடம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என இருப்பார். 

மகன் வீட்டை விட்டு வெளியேறியதில் வீரராகவனுக்கும் வருத்தம்தான். அவன் வேலைக்கு செல்கிறான் என கேள்வி படவுமே அவருக்கு அப்படியொரு நிம்மதியாக இருந்தது. 

இப்போதுதான் ஏதோ அவனுக்கு பொறுப்பு வந்திருக்கிறது, அதை மனைவியே கெடுக்க பார்க்கிறாளே என தேவகியின் மீது கோவமாக வந்தாலும் அதை அவரால் காண்பிக்க முடியவில்லை. இத்தனை வருட வாழ்க்கையில் அவரது ஏறு முகத்திலும் இறங்கு முகத்திலும் அவருக்கு உற்ற துணையாக நின்ற அருமையான பெண்மணியிடம் என்றுமே அவரால் கோவத்தை காட்ட இயலாது. 

வேறு வழியின்றி மகனை அழைத்து வர, தானே கொல்கத்தா செல்வதாக முடிவு செய்தார். 

மீராவுக்கு உறக்கமே வரவில்லை. ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பி விடுவேன் என சொல்லியிருந்த சஞ்சயிடமிருந்து இன்னும் எந்த செய்தியும் வந்திருக்கவில்லை.

‘வந்து விட்டாயா?’ எனக் கேட்டு குறுந்தகவல் அனுப்பினாள், பதிலே வரவில்லை. 

சற்று நேரம் சென்று அவனது எண்ணுக்கு அழைத்துப் பார்த்தும் விட்டாள், கைப்பேசி அணைந்து போயிருப்பதாக பதில் வந்தது. 

விடுதியில் தங்கியிருப்பவள் நடு இரவில் எப்படி போய் அவனை தேடுவாள்? ஒரு வேளை வீட்டுக்கு திரும்பி உறங்கியிருப்பானோ என்னவோ என தன்னை சமாதானம் செய்து கொள்ள பார்த்தாள். ஆனால் அவளால் இலவாக இருக்க முடியவில்லை. அவனுக்கு என்னவானதோ என மனம் அடித்துக் கொண்டது. 

விடியற்காலையில்தான் சஞ்சயிடமிருந்து அழைப்பு வந்தது. அவன் சொன்ன செய்தியில் ஸ்தம்பித்து விட்டாள். 

“மீரா…  மீரா… இருக்கியா?” என அவன் கேட்கவும்தான், “ஹஹான் சொல்லுங்க சஞ்சய்” என்றாள். 

“ப்ச் மீரா! அதான் சொன்னேனே. நீ ஐஸக் அங்கிளை போய் பார்த்து பேசி லாயர் யாரையும் ஏற்பாடு பண்ணிட்டு அவரை ஸ்டேஷனுக்கு வர சொல்லிட்டு அப்புறம் ஹாஸ்பிடல் போறியா? அவர் மொபைலுக்கு என்னாச்சுன்னு தெரியலை, ரிங் போகவே மாட்டேங்குது” என்றான். 

சரி என்றவள் வேகமாக தயாராகி புறப்பட்டாள். 

விஷயம் இதுதான். பைக்கில் மனம் போன போக்கில் சென்று கொண்டிருந்தான் சஞ்சய். வழியில் ஒரு வாடகை டாக்ஸி பழுதாகி நிற்க, ஒரு ஆணும் பெண்ணும் மிகவும் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்திருக்கின்றனர். நம்ம பையனுக்குத்தான் அடுத்தவர் கஷ்டம் என்றால் அப்படியே விட்டு போக முடியாதே. 

விசாரிக்கும் போதுதான் இருவரும் காதலர்கள், வீட்டில் சம்மதிக்காத காரணத்தால் வேறெங்கோ செல்ல திட்டமிட்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கிறது. 

காரில் ஏதோ பெரிய பழுது. இப்போது காரை இயக்க முடியாது என சொல்லி விட்டான் காரின் டிரைவர். 

எங்கள் இருவரையும் ரயிலில் ஏற்றி விட்டால் போதும் என அந்த காதல் ஜோடி கேட்டுக் கொண்டிருக்கிறது. சஞ்சயும் இருவரையும் தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு போய் ரயில் நிலையத்தில் விட்டிருக்கிறான். 

அவர்கள் ஏறிய இரயில் புறப்பட்டிருக்க, அங்கிருந்து கிளம்பும் போது இவனை மட்டும் காவலர்கள் பிடித்து விட்டனர்.

அவன் அழைத்துச் சென்ற இருவரும் காதலர்கள் அல்ல, கணவன் மனைவி. நவீன முறையில் திருட்டு வேலை செய்யும் ஜோடி. வயதான தம்பதியினர் இருந்த வீட்டில் நகைகள் மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பியிருக்கின்றனர். 

ரயில்வே காவலர்களுக்கு தகவல் சொல்லப் பட்டும் அந்த ஜோடியை பிடிக்க முடியவில்லை. ஏறிய ரயிலில் அவர்கள் இல்லையாம், எப்படி எங்கு தப்பிச் சென்றனர் என தெரியவில்லை. 

அந்த திருட்டில் சஞ்சய்க்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என சொல்லி அவனை விசாரிக்க என  காவல் நிலையம் வரை அழைத்து வந்து விட்டனர்.

 தன் குடும்ப விவரங்களை பகிரவே சஞ்சய்க்கு பயமாக இருந்தது. வீட்டுக்கு போக நினைக்கும் இந்த நேரத்தில் அப்பாவுக்கு விஷயம் தெரிந்தால் மீண்டும் கண்டபடி திட்டுவார், தன்னால் வீட்டுக்கு போக முடியாமல் போய் விடுமோ என நினைத்து இங்கு வேலை பார்க்கிறேன் என்பதை மட்டுமே சொன்னான். 

ஊருக்கு புதியவன், சாதாரண வேலை, ஆனால் விலை உயர்ந்த பைக் வைத்திருக்கிறாய் என்றெல்லாம் அவனை தோண்டி துருவி விசாரித்தனர்.

டாக்சி வழியில் நிற்கவும்தான் என்னவென போய் கேட்டேன், என்னை பிடித்த நீங்கள் அந்த டாக்சி டிரைவரையும் அழைத்து விசாரியுங்கள் என்றான் சஞ்சய். 

கண்காணிப்பு கேமரா வட்டத்தில் அந்த டாக்சி டிரைவர் எல்லாம் சிக்கவில்லையே. அதெல்லாம் நீ எங்களுக்கு சொல்லித் தராதே என கோவப் பட்டார் சப் இன்ஸ்பெக்டர். 

தான் இந்த ஊரில்தான் தங்கியிருக்கிறேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என பணிவாக கேட்டுக் கொண்டான் சஞ்சய். 

‘சரி, தெரிந்த யாரையாவது பேச சொல்’ என சப்இன்ஸ்பெக்டர் சொல்லவும் ஐஸக்’கிற்கு அழைத்திருக்கிறான், ஆனால் அவரது எண்ணுக்கு ரிங் செல்லவே இல்லை. 

மீராவிடமிருந்து குறுந்தகவல் வந்திருந்த போதும் இந்த நேரத்தில் அவளை தொந்தரவு செய்யவோ பயமுறுத்தவோ அவனுக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் அவளுக்கு அழைக்காமல் போனான். 

அதற்குள் காவல் நிலையம் வேறொரு கேஸ் சம்பந்தமாக பிஸியாகி விட, இவனை ஓரமாக அமர வைத்து விட்டனர். சஞ்சயின் கைப்பேசியும் சார்ஜ் இல்லாமல் அணைந்து போய் விட்டது. 

விடியும் நேரத்தில்தான் கான்ஸ்டபிள் ஒருவரிடம் சொல்லி கைப்பேசிக்கு சார்ஜ் செய்து கொண்டு வேறு வழியின்றி மீராவுக்கே அழைத்து விவரம் சொல்லி விட்டான். 

காலை நேரத்துக்கே இஸ்திரி செய்ய ஐஸக் வந்து விடுவார் என்றாலும் அவருக்கு முன் அங்கே வந்திருந்தாள் மீரா.

சஞ்சயின் வீட்டின் கேட் பூட்டப் பட்டிருக்க, ஐஸக் வழக்கமாக இஸ்திரி போடும் மரத்தின் அடியிலேயே நின்றிருந்தாள் மீரா. 

இந்நேரத்தில் கலவரத்துடன் மீரா நிற்பதை கண்டவரும் பதற்றத்துடன் என்னவென விசாரித்தார். அவள் சொல்லவும், “இந்த தம்பிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?” என அலுத்துக் கொண்டார். 

“லாயர் யாரும் தெரியுமா உங்களுக்கு?” எனக் கேட்டாள் மீரா. 

“அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஒரு மாதிரி. லாயர்லாம் சரியா வராது. நாம போரோ பாபு(பெரிய பாபு)கிட்ட போலாம்” என்றார் ஐஸக். 

யார் அவர் என்பது போல பார்த்தாள் மீரா.

“இங்க எல்லாமே அவர்தான். பெரிய தாதா. வாழ்க்கை தேடி வந்த தமிழ் ஆளுங்களுக்கு உள்ளூர்ல பிரச்சனைன்னு நான் சொல்லுறேன். நீயும் சொல்லு, கண்டிப்பா தம்பிய வெளிய கூட்டிட்டு வந்திடுவார்” 

“இல்லை, நாம லாயர் யாரையாச்சுமே பார்க்கலாமே, சஞ்சய் அப்படித்தான் சொன்னார். பணம் செலவானா கூட அவர் பார்த்துப்பார். தாதாலாம் வேணாமே” 

“தாதாங்கவும் பயந்து போயிட்டியாமா? கெட்டவங்களுக்குதான் அவர் அப்படி. நிஜமா கஷ்டம்னு சொன்னா மனம் இளகி போயிடுவாரு. உனக்கு அந்த இன்ஸ்பெக்டர் பத்தி தெரியாது. ஆளு நல்ல வெள்ளந்தி, கேட்க ஆளு இல்லைனு தெரிஞ்சா பொய் கேஸ் போட்டு விட்ருவான். இல்லைனாலும் இந்த விஷயத்தை விடாம சும்மா சும்மா விசாரிக்கிறேன்னு நச்சு பண்ணுவான். பணம் எவ்ளோ பார்க்கலாம்னு திட்டம் போட்டு டார்ச்சர் பண்ணுவான். லாயருங்க மட்டும் சும்மான்னு நினைக்காத, உள் குத்து உள்ள ஆளுங்கதான் அதிகம். நல்ல லாயரு யாருன்னு என்னால எப்படி கண்டு பிடிச்சு அழைச்சிட்டு போக முடியும்? இதுதான் சரி, வாம்மா நீ” என சொல்லி மீராவை சம்மதிக்க வைத்து விட்டார். 

ஆட்டோ பிடித்துக்கொண்டு பைரவ் மஜும்தார் இல்லத்துக்கு சென்றனர் இருவரும். வெளியில் நின்றவனிடம் ஐஸக் ஏதோ பேச, மீராவை கூர்மையாக பார்த்தவன் இருவரையும் உள்ளே செல்ல அனுமதித்தான். வெளிக் கேட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் ஐம்பது அடி தூரம் இருந்தது. 

மீராவுக்கு மிரட்சியாக இருந்தது. சஞ்சய் அல்லாமல் வேறு யாருக்காக என்றாலும் இப்படியெல்லாம் வந்திருக்க மாட்டாள். 

ஐம்பது வயது மதிக்கத் தக்க ஆள் வெளி வராண்டாவில் அமர்ந்திருக்க, அவருக்கு வணக்கம் வைத்து பெங்காலியில் ஏதோ பேசினார் ஐஸக்.

பார்க்க பயமுறுத்தும் படி இருப்பாரோ என நினைத்துக் கொண்டேதான் சென்றாள் மீரா. ஆனால் சாதாரணமாகத்தான் இருந்தார் அந்த பைரவ் மஜூம்தார். 

ஐஸக் என்ன பேசுகிறார் என மீராவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அடிக்கடி தன்னை பார்த்த அந்த ‘போரோ பாபு’வை எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே பார்த்திருந்தாள் மீரா. 

தன் கைப்பேசியை எடுத்து பார்த்தார் பைரவ். திரையில் தெரிந்த பெண்ணும் மீராவும் ஒரே ஆள்தான் என்பதை உறுதி செய்து கொண்டார். 

ஆமாம், மீராவை ஊருக்கு கொண்டு வர ராஜசேகரன் அணுகியிருப்பது பைரவ் மஜும்தாரைதான். 

மீராவின் வீட்டினர் தன்னிடம் நிறைய கடன் பட்டிருக்கிறார்கள். பெண் நல்ல பெண் என்பதால் எனக்கு மருமகள் ஆக்கிக் கொள்ள ஆசைப்பட்டேன். விலை மதிப்புள்ள இடத்தை அவளது குடும்பத்தினருக்கு கொடுத்தேன். இருந்த கடன்களையும் அடைத்தேன். அந்த பெண்ணின் சம்மதத்தோடு என் மகனுடன் அவளுக்கு நிச்சயத்தையும் ஊரறிய செய்து விட்டேன். 

ஆனால் திருமணத்துக்கு முன் தப்பி சென்று விட்டாள். என் குடும்ப மானமே இப்போது கேள்விக்குறி ஆகியிருக்கிறது. அவளை கொண்டு வந்து சேர்ப்பித்தால் அதற்கு என்ன கேட்கிறீர்களோ தருகிறேன் என டீல் பேசியிருந்தார் ராஜசேகரன். 

சஞ்சயும் மீராவும் காதலர்கள், இப்போதைக்கு ஆதரவு இல்லாதவர்கள், நல்ல பையன் சஞ்சய், யாருக்கோ உதவ போய் சிக்கலில் மாட்டிக் கொண்டான் என்றுதான் பைரவிடம் சொல்லியிருந்தார் ஐஸக். 

ஐஸக்கை தாதாவுக்கு முன்பே தெரியும். வேறொரு பிரச்சனை சம்பந்தமாக உதவி கேட்டு வந்திருக்கிறார். ஆனாலும் முன்பின் தெரியாத ஆட்களின் கூற்றில் எந்தளவு உண்மை இருக்கிறது எனத் தெரியாமல் எந்த விஷயத்திலும் இறங்குவது இல்லை பைரவ். 

ராஜசேகரன் சொன்ன கதையையும் ஐஸக் சொல்லும் கதையையும் ஒப்பிட்டு பார்த்தார் பைரவ். 

பின்னர் ஏதோ ஐஸக்கிடம் விசாரித்தார் அந்த தாதா. மீராவை பார்த்த ஐஸக், “ஏம்மா நீங்க எப்போ எப்படி கொல்கத்தா வந்தீங்க?” எனக் கேட்டார். 

எதற்கு இந்த விவரமெல்லாம் எனத் தோன்றினாலும் எல்லாம் சொன்னாள் மீரா. 

தன் அருகில் உள்ளவனை பார்த்தார் தாதா. ரயில்வே காவலர் ஒருவரிடம் விசாரித்து வந்த அந்த ஆள், ‘இந்தப் பெண் சொல்வது உண்மைதான், இருவரும் ஒன்றாகத்தான் கொல்கத்தாவுக்கு தப்பி ஓடி வந்திருக்கின்றனர்’ என்றான். 

மீராவின் புகைப்படத்தை ஐஸக்கிடம் காண்பித்து விவரம் சொன்னார் தாதா. ஐஸக் ஒன்றும் புரியாமல் மீராவை பார்த்து, “என்னம்மா உனக்கு வேற ஏதும் பிரச்சனையா ஊர்ல? உன்னை கொண்டாந்து விடச் சொல்லி பாபுகிட்ட உதவி கேட்ருக்காங்க” என்றார். 

என்ன சொல்கிறார் இவர் என்பதை புரிந்து கொள்ளவே மீராவுக்கு சில நொடிகள் பிடித்தது. 

‘இப்படி பணத்துக்காக இன்னொரு குடும்பத்தை ஏமாற்றி அவமானம் செய்வது நியாயமா?’ என மீராவை நோக்கி பெங்காலியில் கோவமாக இரைந்தார் தாதா. 

ஒன்றும் புரியாமல் உடல் நடுங்க பின்னால் ஓரடி எடுத்து வைத்த மீராவுக்கு அழகை பொங்கிக் கொண்டு வந்தது.