“இதோட இன்னைக்கு முடிச்சுக்கலாம்… அசைன்மென்ட் சப்மிட் பண்ண மன்டே தான் லாஸ்ட் டேட்…  முடியாதுனு நினைக்கிறவங்க இப்பவே என்கிட்ட சொல்லிடுங்க… கடைசி நிமிஷத்துல வந்து…. மேம்… அது… மேம் இதுனு நிக்க கூடாது…. இதுவும் இன்டர்னல் மார்க்குக்கு இங்கிளுட் ஆகும்… நினைவு வைச்சு செஞ்சிட்டு வாங்க….” என்று தேன்மொழி சொல்லி முடிக்க வகுப்பு முடிந்ததற்கான மணி அடித்தது. வகுப்பறையை விட்டு வெளியே வந்தவளுக்குச் சோர்வாக இருந்தது. இன்று காலை கல்லூரிக்கு வந்தது முதல் வகுப்புகள் இருக்க, அதை முடித்து வெளி வந்தவளுக்கு இனி மதியம் ஒரு வகுப்பு மட்டுமே.  ஸ்டாப் ரூமில் அமர்ந்தவளுக்கு வீட்டில் நடந்தவை எண்ணவோட்டங்களாக வலம் வர, அதன் தாக்கத்தில் சிறிது நேரம் இருந்தாள்.
அவளுள்ளே ஆயிரம் கேள்விகள். தான் ஏன் இப்படி மாறிப்போனோம்? சிந்தனையின் பிடியில் இருந்தவளுக்குச் சில நினைவின் தாக்கங்கள்.
அவளின் மூன்றாவது மாமனின் மகளான ஐஸ்வர்யாவின் திருமணத்தின் போது ருத்ரன் அவளிடம் தன் மனதை வெளிப்படுத்தியிருந்தான். அது நடந்து மூன்று வருடங்கள் கடந்திருந்தது. அப்போது தான் அவள் வேலையில் சேர்ந்திருந்தாள். அவள் நினைத்தவாறு முதுகலை பட்டம் பெற்றதும் வீட்டிலிருந்தே செல்லும்படி   அருகில் இருக்கும் கல்லூரியில் வேலை கிடைத்து விட வாழ்வின் முக்கியம் அம்சத்தைச் சாதித்த சந்தோஷத்தில் திளைத்திருந்த சமயம். ருத்ரன் அவனின் மனதை வெளிப்படுத்தி அவளின் வாழ்வின் அடுத்தக் கட்டத்தை சிந்திக்க செய்திருந்தான்.
அவளுடன் பணிபுரியும் பிரியா அவளின் தோள் தொட்டு அழைக்க, “ஹான்! என்ன பிரியா?” என்று கேட்டாள்.
“தேன் என்ன யோசனை? கூப்பிடுறது கூட கேட்டாகாம?”
“ஒண்ணுமில்ல…. கனி வந்திருக்கா… இன்னைக்கு லீவ் போட சொன்னா… எங்க? செமஸ்டர் வர போகுது… போன மாசம் கல்சுரல் அப்படின்னு ஓடிப்போச்சு… இவனுங்கள திரும்ப படிப்பு பக்கம் கொண்டு வர படாத பாடு பட வேண்டியிருக்கு… இப்போ நாம லீவ் போட்டா கொடுத்திருக்க அசைன்மென்ட் எதுவும் வந்து சேராது. அப்புறம் இன்டர்னல் மார்க் எது வைச்சு போடுறது? அதான்…” என்று அவள் நீளமாக பதில் கூற,
“என்னடி பசங்களுக்கு பாடம் சொல்லி தரது போல நீட்டமா விளக்கம் கொடுக்கிற?” என்று கேலி பேசினாள் தோழி.
“பசங்க தான் கிண்டல் பண்றாங்கனா நீயும் கேலி பேசுற? விளக்கம்மா சொன்னா தான சில மக்களுக்கு புரியும்…” என்று இவளும் நக்கலாகச் சொல்ல,
“டி… என்னைய மக்குனு சொல்லாம சொல்றியா?”
“நான் இவ்ளோ விளக்கம் தராம… ஒண்ணுமில்ல ஒரு யோசனை அப்படின்னு சொல்லியிருந்தா, என்ன யோசனைனு கேட்டிருப்ப… நானும், கனி லீவ் போட சொன்னா… நான் போடலனு சொன்னா… ஏன்? எதுக்குன்னு? அடுத்தக் கேள்வி கேட்ப…. அதான்… நானே விளக்கமா…” என்று கையை இழுப்பது போல காட்டி கூறினாள் தேன்மொழி.
“சரி தான்….” என்று தலையை அசைத்த பிரியா, பின் நினைவு வந்தவளாக, “கனி வந்திருக்கா… என்ன விஷயம்? கல்யாண பேச்சா?” என்று கண் அடித்து கேட்க,
“உனக்கு இதுல ஒரு குதூகலம்?”
“இருக்காதா பின்ன? இங்க தான் ரெண்டு பேரும் எம் எஸ் சி பண்ணோம்… வேலைக்கும் சேர்ந்திட்டோம். ஆறு மாசம் முன்னாடி எனக்குக் கல்யாணமும் ஆகிடுச்சு… நீயும் உன் பி எச் டி முடிச்சுட்ட . உனக்கும் ஆகிட்டா… சியர்ஸ் அடிச்சுக்கலாம்ல…”
“இப்ப கூட நம்ம சியர்ஸ் அடிச்சுக்கலாம்… இதுக்கு எதுக்கு எனக்குக் கல்யாணம் ஆகணும்?”
“நான் அனுபவித்த இன்பத்தை நீயும் அனுபவிக்கனும்ல? எல்லாம் ஒரு நல்ல எண்ணம் தான்…”
“நல்ல எண்ணம்???” என்று கேட்டு முறைக்க,
“ஆஃப் கோர்ஸ் தேனு…. யான் பெற்ற இன்பம் பெருக வையகம்”
“எது? நானும் உன்கூட சேர்ந்து மாமியார்கள் ஜாக்கிரதைனு போர்ட் ஓட லஞ்ச்ல சாப்பிடுறதுக்கா?”
“அதெல்லாம் சர்வ சாதாரணம்… மாமியாருனு இருந்தா இந்தப் பேச்செல்லாம் கேட்டு தான் ஆகணும்… அந்த உறவே அப்படி தான்… நான் அதுக்குச் சொல்லல தேனு…. சில பலான மேட்டரை எல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ண முடியல… அதுக்குச் சொல்றேன்…” என்று மீண்டும் கண்ணடிக்க,
“அடியே! காலேஜ் ப்ரோபெசர் மாதிரி பேசுடி…”
“ச்சு… அது ப்ரோபெஷன்… இது…”
“ஹான்… இது?”
“இது வேற…” என்று பற்கள் தெரியச் சிரித்தாள்.
“அடிப்பாவி! பசங்க மட்டும் இதெல்லாம் கேட்டா…. நமக்கு மரியாதையே இருக்காது…”
“அவனுங்க கேட்கிற போல நாம ஏன் பேச போறோம்…” என்று ஹஸ்கி வாய்ஸில் கூறினாள் பிரியா.
“அதான…. பிரியா மேம்’மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். இப்படி தான பிம்பத்தை உருவாக்கி வச்சிருக்க. இப்படி பேசும் போது மட்டும் பல் தெரியுற போல சிரிப்பு. மிச்ச நேரமெல்லாம் கடுவான் பூனை போல சிடு சிடுனு இருக்க வேண்டியது. கல்சுரல் அப்போ கூட விறப்பாவே இருந்தியே!”
“தேனு மா… இப்ப இருக்குற பசங்கிட்ட கொஞ்சம் சிரிச்சு பேசினோம்னு வை, அம்புட்டு தான். நம்மள கீழ போட்டு மிதுச்சுப்புடுவாங்க. அவனுங்களுக்கு ஸ்ட்ரிக்ட் பிரியா… என் தேனு’மாக்கு… பலானது…. பலானது… பலானதுதுது…” என்று பாடிக்கொண்டே அவள் அருகில் வந்தவள், அவள் நாடிபிடித்து , “எனக்கு செகண்ட் இயர் கிளாஸ் இருக்கு… லஞ்ச்ல மிச்சத்தைப் பேசுவோம்….” என்று கொஞ்ச,
அவள் கையைத் தட்டி விட்டு, “ச்சீ…பே…” என்று சொன்ன தேன்மொழிக்கு காற்றில் முத்தத்தைப் பறக்க விட்டு சென்றாள் பிரியா. அவளின் நெருங்கிய தோழி.
செல்லும் அவளை முகத்தில் பூத்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு,
“இவ இருக்காளே!!!” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டவளுக்கும் மனம் இலகுவானது. இப்போது காலையில் நடந்தவற்றை யோசிக்கையில் தான் நடந்துக் கொண்டது அதிகப்படியோ என்று தோன்றிற்று. கனி கூறுவது போல அன்றே தந்தையிடம் இப்படி என்று விசயத்தை சொல்லியிருக்க வேண்டுமோ? என்றும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஒருவேளை அப்படி நடந்திருந்தால்? என்று யோசிக்க,
“ச்ச…. அதான் நடக்கலயே! இப்போ யோசிச்சு என்ன ஆகப்போகுது… இனி என்ன நடக்குதோ அதைப் பார்ப்போம். தேன்மொழி… ரொம்ப யோசிக்காத, நடக்கிறது நடக்கட்டும்.” என்று தன்னை ஒரு நிலை படுத்திக்கொண்டவள், தனது கைபேசியை எடுத்து அவளின் உடன்பிறப்பை அழைக்க, உடனே அழைப்பு எடுக்கப்பட்டுவிட்டது,
“தேனு….” என்று கனிமொழி இழுக்க,
“என்ன இழுவ? கடலை போட்டுட்டு இருக்கியா?”
“ஹி ஹி….” என்று அவள் சிரித்து வைக்க,
“கண்டினியூ…. கண்டினியூ….” என்று அழைப்பைத் துண்டித்து விட்டாள். பெருமூச்சொன்று எழும்பி வீழ்ந்தது. தனது கைபேசியைப் பார்த்தவளுக்கு சிந்தனையெல்லாம் ருத்ரனைப் பற்றி தான். அவன் எல்லை பாதுகாப்பில் இருக்கும் வீரன் தான். இருந்தும் கைபேசி வசதியெல்லாம் உண்டு தான். அவன் அன்று இவளிடம் மறைமுகமாக விருப்பத்தைக்  கேட்டபின், இவள் புரியாமல் பதில் சொல்லாது இருக்க. அவனும் அதன் பின் அதை விளக்கவில்லை. மேலும் அவளின் தந்தையும் இத்திருமணம் வேண்டாம் என்று சொல்லியிருக்க, ருத்ரன் அதன் பின் இவளை திரும்பியும் பார்த்தான் இல்லை. அவன் வீட்டிற்கு வந்தே மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன என அத்தை புலம்பியது இவளின் காதிற்கு வந்து சேர்ந்திருந்தது. இந்த மூன்று வருடத்தில்  ஒரு முறை கூட இவளிடம் பேசியிருக்கவில்லை. மூன்று வருடமும் அவனின் பிறந்த நாளுக்கு இவளும் வாழ்த்துச் சொல்லி அனுப்பியிருக்க, அவனிடமிருந்து ஒரு நன்றி செய்தி கூட வந்ததில்லை. இந்த முறை செய்தியாக அனுப்பாது அவனுக்கு அழைத்தும் பார்த்தாகிவிட்டது. அவன் அழைப்பை  ஏற்கவில்லை. அவனின் பணி காரணமாக ஏற்காமல் இருந்திருப்பான் போலும் என்று இவளே இவளை சமாதானப்படுத்திருக்க, இவள் அழைத்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தது. இன்றைய நாள் வரைக்குமா அவளின் அழைப்பை பார்க்காமல் இருந்திருப்பான் என்ற கேள்வி. அவன் ஏன் தன்னை அலட்சிய படுத்துகிறான்?  அவன் கேட்டு பதில் சொல்லாததாலா? இல்லை அப்பா வேண்டாம் என்று சொன்ன கோபமா?
அவளிடம் விடை தெரியா கேள்விகள் தான் மிஞ்சி இருந்தது. நம்மை நேசித்தவர், நம்மிடம் பாராமுகம் காட்டினால் வலிக்க தானே செய்யும். தேன்மொழிக்கும் அவ்வாறே. அவனின் இந்த மௌனம் இவளை நிம்மதி இழக்கச் செய்திருந்தது.
இது என்ன வகையான உணர்வுகளோ!! தேன்மொழிக்கு ஆயாசமாக இருந்தது. இன்று வரையிலுமே அவளால் தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை. அப்பாவை இங்கு தனியே விட்டுச் செல்ல சிறிதும் அவள் விரும்பவில்லை. அதே போல ருத்ரனின் நேசமும் அவளை ஈர்த்திருந்தது.
சிறு வயதில் பெரும்பாலும் அமைதியாக இருந்தவன், இவள் கல்லூரி படிப்பை ஆரம்பித்த வருடம் முதல் தான் இவளிடம் நின்று பேசவே செய்திருந்தான். இவள் கல்லூரி படிப்பை முடிப்பதற்குள் அவன் ராணுவத்தில் சேர்ந்திருக்க அவன் மீது ஒரு மதிப்பு தன்னால் உருவாகியிருந்தது. அவன் மேஜர் ஆனதும் ஊருக்கு வந்திருந்த சமயம், அவனிடம் சரளமாக பேசத்தொடங்கியிருந்தாள்.  கனி அவனை ‘மேஜர் சார், மேஜர் சார் ‘ என்று அழைக்க, இவளோ அவனின் மீதான நன்மதிப்பில் வாங்க, போங்க என்று மரியாதையாகத் தான் பேசுவாள். எனினும் அக்காவும் தங்கையும் ஒன்று சேர்ந்து அவனை நியாயத்திற்கும் அதிகமாக கிண்டல் பேசுவார்கள். இரு சகோதரிகளுக்கும் வாய் கொஞ்சம் அதிகம் தான். அவனை “மிலிட்டரி அத்தான்… தென்ன மரம் ஏறுவீங்களா?” “மேஜர் சார் ஹண்ட்ரெட் புஷ் அப் பண்ணுவீங்களா?” என்று அவனை வைத்து அவர்கள் தெரு பிள்ளைகளுக்கு வித்தை காட்டுவார்கள். அவர்களின் சேட்டையை ருத்ரன் அறிந்தே இருந்தான்.
இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் பொழுதுகளில் எப்போதும் சிரிப்புடன், அவர்கள் சொல்வதைச் செய்து, அளவான பேச்சுடன் நிறுத்திக் கொள்பவன், தேன்மொழியுடன் தனித்து இருக்கும் சமயங்களில் அவளைப் பற்றி கேட்டுக் கொள்வான். வரம்பு மீறி பேசியதில்லை எனினும் அவளிடம் அவன் காட்டும் கரிசனம் தனித்தே தெரிந்தது தேன்மொழிக்கு.
அந்த வயதில் அது ஒரு ஈர்ப்பை அவன்பால் கொடுத்திருந்திருந்தது. அவனோடு அவ்வப்பொழுது அலைபேசியில் பேசியிருந்தாள். பொதுவான பேச்சுகள் தான் இருவரிடத்திலும். அத்திப்பூத்தார் போல எப்போதாவது அத்தை பெண் என்று சிறு கேலியோடு பேசுவான். இவளும் அந்த உரிமையில் அவனிடம் வம்பளப்பாள். அதைத் தாண்டி தேன்மொழிக்கு எதுவும் தோன்றவில்லை அவன் அவனின் விருப்பத்தை மறைமுகமாக கூறும் வரை.
அவன் சொன்ன நொடி இவளுக்குப் புரியாமல் போக, அவனின் அன்னை அவளின் தந்தையிடம்  அவளை பெண் கேட்டபொழுது தான் அவனின் விருப்பமே அவளுக்குப் புரிந்தது. அவள் மனதில் விதை விழுவதற்கு முன்பே அவளின் தந்தை மறுத்துவிட, இவளுக்கு தான் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் போயிற்று. அவன் ஒருமுறை பேசியிருந்தாலும் இவள் தெளிந்திருப்பாளோ என்னமோ? அவனும் பேசவில்லை, இவளும் யாரிடமும் பகிரவில்லை. அன்று தொடங்கிய குழப்பம் தான். இன்று வரை தீராத குழப்பமாக தான் இருக்கிறது. இதன் நடுவில் கனி எப்படியோ இவளிடம் கேட்டு விசயத்தை வாங்கியிருக்க, இதோ இன்று அதை போட்டு உடைத்துவிட்டாள். அவள் சொன்ன போது இருந்த கோபம் இப்போது இல்லை தேன்மொழிக்கு. அவள் சொல்வது போல இதற்கு ஒரு முடிவு வேண்டுமே! நடப்பது நடக்கட்டும் என்று ஒரு ஆசுவாசம். அலைபுறதல்கள் குறைந்து, எது நடக்கிறதோ அதுவே எனக்கானது என்ற முடிவிற்கு வந்திருந்தாள் தேன்மொழி அன்றைய தினத்தில்.