சுந்தரம் குளிக்கச் செல்லவும், கடையில் வேலை செய்யும் வெற்றி கடை சாவி வாங்கிக்கொண்டு செல்ல, உள்ளே வந்தார் கண்மணி.
“ஹே கனி…. எப்படி டி இருக்க? தேனு காலேஜ் போயாச்சா?… சித்தப்பா கிளம்பிட்டாங்களா?” என்று ஒரு தூக்குச் சட்டியை அவளிடம் கொடுத்து, “உளுந்து பால் செஞ்சேன்…. குடி…” என்று சொன்னாள்.
“அப்பா குளிக்கிறாங்க அக்கா… இட்லி சாப்பிடுறீங்களா?”  என்றபடி கண்மணி கொண்டு வந்ததை ஒரு தம்ளரில் ஊற்றி குடிக்க ஆரம்பித்தாள்.
“என்ன கனி உன் முகமே சரியில்ல? காலையிலேயே உங்க பஞ்சாயத்தை ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று விசாரிக்கத் தொடங்கினாள் கண்மணி. சுந்தரம் குளித்து வந்தவர்,
” வா கண்மணி… வேணு கிளம்பியாச்சா?”
“ஹான் சித்தப்பா, மாமாவும் அவங்களும் பேங்க் வரை போயிருக்காங்க….”
“கனி…. சாப்பாடு எடுத்து வை… அக்காவுக்கு இஞ்சி டீ போட்டு கொடு… கண்மணி புதுசா போன வாரம் ஒரு பொடி ரெடி பண்ணினல….”
“ஆமா சித்தப்பா… கத்திரிக்கா சாம்பார் பொடி… அப்படியே சுடு சாதத்துல போட்டு சாப்பிடலாம்…”
“ஹ்ம்ம்…. அதை என் நண்பன் ஒருவனுக்கு கொடுத்தேன்.. அவனுக்கு அது ரொம்ப பிடிச்சு போச்சுன்னு கேட்டான். அவன் அடுத்த மாசம் அவன் மகனைப் பார்க்க அமெரிக்கா போறானாம். அங்க எடுத்துட்டுப் போக கேட்டான்.”
“சரி சித்தப்பா… ரெடி பண்ண சொல்றேன்.”
“கொஞ்சம் கடைக்கும் சேர்த்து செய்…. நம்ம கடையிலும் வைக்கலாம். புதுசா பொருள் போட்டு மாசக்கணக்காச்சு…” என்றவர் வியாபாரம் பற்றி மற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டே உண்டு முடிக்க, கனி, இருவருக்கும் டீ கொண்டு வந்துக் கொடுத்தாள்.
“நீ கடைக்கு வரலையா?” சுந்தரம் கண்மணியிடம் கேட்க,
“நான் பதினொரு மணி போல வரேன் சித்தப்பா….”
“சரி மா…. நான் கிளம்புறேன்…. கனி சாப்பிடு…. கண்மணி இன்னைக்கு கனிக்கு பேசியிருக்க மாப்பிள்ளை வீட்டுல பேசணும்…. நீ கடைக்கு வந்தும் பேசுவோம்.” என்று கிளம்பிவிட்டார்.
” ஏ கனி…. கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன பின்ன எதுக்கு சோகமா இருக்க?” என்று மீண்டும் அவளை விசாரிக்க,
“அக்கா… தேனு விசயத்தை அப்பாகிட்ட சொல்லிட்டேன்…”
கண்மணி  புரியாமல் பார்க்க, “தேனுக்கு ருத்ரன் அத்தான் பிடிக்கும்னு சொல்லிட்டேன்….”
“ஏண்டி? அவ உன்கிட்ட அப்படின்னு சொன்னாளா?”
“இல்லைன்னு சொல்லுறீங்களா…” என்றவள் அவளின் மேஜையில் இருந்த அவளது நாட்குறிப்பை எடுத்து வந்து கண்மணியிடம் கொடுக்க,
“பாருங்க… இதுல என்ன எழுதியிருக்கானு….”
அதை புரட்டிய கண்மணி, “வெறும் கவிதை போல ஏதேதோ இருக்கு….”
“எல்லாம் சோகக் கவிதை…. எப்படி இருப்பா தேனு…. அவளை இப்படி இந்த ஒரு வருஷமா பாக்க கஷ்டமா இருக்கு அக்கா… “
“என்ன இருந்தாலும் அவளே உறுதியா நம்பாத விசயத்த அப்படி தானு நீ சொல்லியிருக்க கூடாது கனி…”
“இருக்கு… இல்ல… எதுன்னு இப்போ உறுதியாகிடும்ல….”
“அடியே! உனக்கு சங்கடம் இருக்க கூடாதுனு அந்தப்பிள்ளைய கோர்த்து விட்டிருக்க…”
“என்ன கா நீயும் இப்படி பேசுற… காலையில அவளும் நான் சுயநலமா இருக்குற போல பேசிட்டா…. ” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்ல,
“சரி சரி… கல்யாண பொண்ணு எதையும் மனசுல வச்சு வெசனப்படாத… சித்தப்பா பார்த்துப்பார்… தேனு வந்ததும் சகஜமா பேசு… நம்ம வழிக்கு வந்திடுவா… அவளை பத்தி தான் உனக்குத் தெரியுமே… இந்நேரம் யோசிச்சு…  நீ செஞ்சது தப்பில்லைனு புரிஞ்சிருப்பா… அவளுக்குத்  தான் தைரியம் வரல…. தெளிவும் இல்ல…. இனி நடக்கிறது நடக்கட்டும்னு விட்டிடு…. டயர்ட்’டா இருக்க…. நல்லா தூங்கி எழுந்திரி. மதியம் சமைக்க வேணாம். நான் எடுத்துட்டு வரேன்… நேரமாச்சு நான் கிளம்புறேன்….” என்று கிளம்புகையில் அழைத்துவிட்டான் அவரின் புதல்வன் கார்த்திக்.
அழைப்பை ஏற்று பேசிய கண்மணி, அவனின் உணவு என்னவென்று கேட்டு முடித்து கனியிடம் கைபேசியை கொடுக்க,
“சித்தி….. கண்ணின் மணி”, என்று ராகம் பாடினான்.
“டேய்!!! ஏன் டா இழுக்குற….”
“சித்தி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டியா? இன்னுமா ஓகே சொல்லாம இருக்க? இந்த நிலன் சித்தப்பா சரியில்லை…. நீ எப்போ ஓகே சொல்லி… உன் கல்யாணம் முடிஞ்சு தேனு சித்திக்கு பையன் பார்த்து… அவங்க கல்யாணம் முடிஞ்சு… நான் எப்போ கல்யாணம் பண்றது….”
“டேய் டேய்… உனக்கு இப்ப தான் இருபத்தி மூணு, அதுக்குள்ள கல்யாணம் கேட்குதா?” என்று கனி அவன் பேச்சை தடைச் செய்ய,
“அட போ சித்தி…. இப்ப இருக்குற பாஸ்ட் உலகத்துல… எல்லாம் சீக்கிரம்  செய்திடனும்…. நமக்கு எல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல… வீட்டுக்கு ஒரே பையனு இறுமாப்புல இருந்த எனக்கு ட்வின்னிங் டிராபிள்’லா ரெண்டு சித்தி’ஸ்…. உங்க கல்யாணம் முடிஞ்சா தான் தர்ஷனா வீட்ல பேசுவேனு மணியம்மை ஒரே ரவுசு….” என்று அவன் மேலும் காரணங்கள் கூறி அவளை வம்பிழுத்து பேசி வைத்தான்.
அவன் பேசியை வைத்தபின், “என்ன சித்தி இவன் இப்படி பேசிட்டு இருக்கான்?” என்று கண்மணியிடம் கேட்டாள் கனி.
“அதை ஏன் கேட்கிற…. இருபத்தி அஞ்சு வயசுல அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடனுமாம்…. இப்பவே அவங்க வீட்டுல பேசி நிச்சயம் செய்யணுமாம்… இவன் பண்ற அட்டூழியம் இருக்கே! எல்லை மீறி போய்ட்டு…. இப்போதைக்கு உங்க ரெண்டு பேரைச் சொல்லி தான் நிறுத்தி வச்சிருக்கேன்… அவன் அப்பா அதுக்கு மேல… பையன் ஆசைப்படுறான்…. நம்ம தான் கல்யாணம் செஞ்சு பிரிஞ்சி இருந்து ஒத்த பிள்ளையோட நிப்பாட்டிடோம், அவனாவது ரெண்டு மூணு குழந்தைகளை பெத்துகிட்டு சந்தோஷமா வாழட்டுமே! காசு பணத்துக்கு நமக்கு என்ன குறைச்சலுனு தினமும் சண்டை தான்….” என்று சலித்துக் கொண்டவள், “நான் கிளம்புறேன் கனி…. நீ தூங்கு… சாயந்திரம் வரேன்…” என்று சொல்லி விடைபெற்றாள்.
அவர் கிளம்பவும் கனியின் கைபேசி இசைக்க,  நிலன் தான் அழைப்பில்,
எடுத்தவள், வீட்டில் நடந்தவற்றை எல்லாம் ஒருபாடு அவனிடம் சொல்லி, அழுது கடைசியில் அவனை குற்றம் சாட்டினாள்.
“எல்லாம் உங்களால தான்… உங்களை யாரு என்னை லவ் பண்ண சொன்னது? எதுக்காக அப்பாகிட்ட பேசுனீங்க? அதுனால தான் இது எல்லாம்…” என்று ஆற்றாமையாகக் கூற,
“என்ன பண்றது…. வொய் கனிமொழி? எனக்கும் பதில் தெரியல… ஆனா உன்னை தான் பிடிக்குது…. நீ என்கிட்ட பிடிக்கொடுக்காம இருந்தப்பவே இது கஷ்டம் தானு புரிஞ்சது…. அதான் டைரக்ட் ‘ டா உங்க வீட்டுல பேசினேன். என் காதலுக்கு எங்கயிருந்தெல்லாம் எதிர்ப்பு வரும்னு நினைச்சேனோ அங்கெல்லாம் கிளியர் ஆக… இப்படி மொத்த எதிர்ப்பும் உன்கிட்ட இருந்து வரும்னு நினைக்கல…. இதுக்கு நான் தயாராவும் இல்ல… என்ன பண்ணும் கனி? ஒன் இயர் போகட்டும்னு சொன்ன…. அதுக்கு ஓகே சொல்லிட்டேன்…. இன்னும் ஒன் இயர் வேணுமா?” என்று அவன் அயர்வாகக் கேட்க, அவனை நினைக்கவும் பாவமாக தான் இருந்தது கனிக்கு. அவளுக்கும் அவனை பிடித்திருந்தது. அவனின் பொறுப்பு, பொறுமை, தன் அப்பாவிடம் வந்து பேசியது, அதன் பின் தன் சம்மதம் வாங்கியது எல்லாம் எல்லாம் அவனைப் பிடிக்க வைத்திருந்தது. அவனை மிகவும் சிரமப்படுத்துகிறோம் என்று புரிய, “ஏங்க!” என்றாள்.
“ஏங்க தான்டி விடுற…. ” என்று பெருமூச்சு விட்டான்.
“அப்பா இன்னைக்கு உங்க வீட்டுல பேசுவாங்க….”
“ஹே! கனி…. நிஜமாவா?”
“ஹ்ம்ம்…”
“இதுக்கு தான் இத்தனை அழுகையா? இதை முதலயே சொல்றதுக்கு என்ன? பேபி… நான் உடனே வீட்ல  சொல்லிடறேன்…. உனக்கும் விசாக்கு ப்ரோசெஸ் ஆரம்பிச்சுடுறேன்…. இதுக்கு அப்புறம் உன்னை பிரிஞ்செல்லாம் இருக்க முடியாது…” என்று அவன் போக்கில் அவர்களின் வருங்காலத்தைப் பற்றி  பேச ஆரம்பித்துவிட்டான்.