“போ மீரா, நான் கத்து தர்றேன், லெஷர் டைம்ல விளையாடு”

“ஹையோ டைம் போத மாட்டேங்குது எனக்கு, எங்கேருந்து கேம் விளையாட?”

“ஹேய் ரொம்பத்தான்! அப்படியென்ன ட்வென்டி ஃபோர் ஹவர்ஸ்ம் எங்கேஜ்டா இருக்க நீ? சொல்லு சொல்லு”  எனக் கேட்டான்.

“நிஜமா டைம் போயிடும்” என அடக்கமான குரலில் சொன்னாள்.

சென்டரில் என்ன சொன்னார்கள் என விசாரித்தான். ஐந்து நபர்களை இங்கு சேர்த்து விட்டால் ஐம்பது சதவீத கட்டணத்தை தளர்த்திக் கொள்வார்களாம்.

“நல்லா ஆள் புடிக்கிறாங்க! லாங்க்வேஜ் தெரியாம யாரை இங்க சேர்த்து விடுவ? அதெல்லாம் ட்ரை பண்ணாத, ஏற்கனவே வாங்கினத எனக்கு திருப்பி தர போறதானே? அதோட இப்போ…” என அவன் பேசி முடிக்கும் முன்னரே வேண்டாம் என உறுதியாக மறுத்து விட்டாள்.

“சரி, அட்லீஸ்ட் கார்த்தி ஸார்கிட்டயாவது கேட்கலாம். அவரால தர முடியாட்டாலும் உன் அம்மாக்கு மெசேஜ் பாஸ் பண்ணுவார், அவங்க அரேஞ் பண்ணி தருவாங்க இல்லியா?”

“இல்லை சஞ்சய், எக்ஸ்ட்ரா டூட்டி பார்த்தா கூடுதலா பைசா கிடைக்கும். வி ஐ பி வீட்ல ஹோம் கேர்க்கு கேட்பாங்க, அப்படி போனாலும் நல்லா எர்ன் பண்ணலாம்”

“வாட்! அதெல்லாம் உனக்கு எப்படி சரியா வரும்? லாங்க்வேஜ் தெரியாம உன்னை அனுப்ப மேனேஜ்மென்ட்ல கூட யோசிப்பாங்க” என்றான்.

“ம்ம்… ஆனா எப்படியும் நானே பணத்துக்கு ஏற்பாடு பண்ணிப்பேன்” என்றாள் அவள்.

அவளது பிடிவாதத்தில் ஆயாசத்துடன் இடவலமாக தலையாட்டியவன் அதற்கு மேல் பணம் பற்றி பேசாமல் விட்டு விட்டான்.

அதன் பின் விடுதிக்கு அழைத்துச் செல்வான் என பார்த்தால் உணவு பார்சல் வாங்கினான்.

“ஹாஸ்டல்லேயே சாப்பிட்டுப்பேன்” என அவள் சொன்னதை அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

அவளுக்கு அந்த நகரத்தின் வழிகள் எல்லாம் புதிது என்பதால் விடுதிக்குத்தான் செல்கிறான் என்றே நினைத்திருந்தாள். ஆனால் அவனது வீட்டின் முன்னால் போய் பைக்கை நிறுத்தியவன், “ஐஸக் அங்கிள்… இவ என் ஃபிரெண்ட் மீரா” என்றான்.

“வாம்மா” என வரவேற்றார் ஐஸக்.

அவரைப் பார்த்து புன்னகை செய்தவள், யார் இவர் என்பது போல சஞ்சயை பார்த்தாள்.

“ஐஸக் அங்கிள், இந்த வீட்ல தனியா இருக்கிற கொடுமை கொஞ்சமாச்சும் குறையுதுன்னா இவர்தான் ரீசன்” என்றான் அவன்.

“ஓ உங்க வீடா இது?” என வீட்டைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“நான் தங்கியிருக்க வீடு” என்றான் அவன்.

“சரி டைம் ஆகிடுச்சு சஞ்சய்” என சற்றே பதற்றமாக சொன்னாள்.

“உன் டின்னர் டைம் என்ன? பீட்சா சாப்பிட்டதே எனக்கு ஹெவியா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல டின்னர் முடிச்சிட்டு போலாம்” என அவன் சொல்லவும், திகைத்துப் போய் அவனை பார்த்தாள் மீரா.

‘என்ன’ என பார்வையால் கேட்டவன், அவள் வேறு பேசும் முன், “உங்களுக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் அங்கிள்” என சொல்லி ஐஸக்’கிடம் ஒரு பார்சலை எடுத்து கொடுத்தான்.

“எனக்கு எதுக்குப்பா? வீட்ல சுனிதா செஞ்சு வச்சிருப்பா” என சொல்லிக் கொண்டே பார்சலை வாங்கிக் கொண்டார். சுனிதா அவரின் மனைவி.

“சஞ்சய் என்ன இது, நான் ஹாஸ்டல் போயிடுறேனே” என தயக்கமாக சொன்னாள் மீரா.

“டெய்லி ஹாஸ்டல்லதான் சாப்பிடுற, இன்னிக்கு என் கூட சாப்பிடு” என இலகுவாக சொல்லி அவளை காம்பவுண்ட் உள்ளே அழைத்தான்.

மீராவின் விடுதியில் அதிக கட்டுப்பாடுகள் இல்லை. பதினோரு மணி வரை வெளியிலிருக்க அனுமதி உண்டு என்றாலும் அதற்கு பின்னர் கூட சிலர் வருவார்கள். மீராவுக்கு விடுதியில் என்ன சொல்வார்களோ நினைப்பார்களோ என்ற பயமெல்லாம் இல்லை, அவளுக்கே இது ஒரு மாதிரியாக இருந்தது.

அம்மாவுக்கெல்லாம் தெரிந்தால் மிகவும் வருத்தப் படுவாரே என்ற நினைவில் அவளின் முகம் சின்னதாகி விட்டது.

சஞ்சயின் நண்பர்கள் பட்டாளம் எத்தனையோ முறை அவனது வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். தேர்வு சமயங்களில் ஒன்றாக தங்கி படிக்கவும் செய்திருக்கிறார்கள். வீட்டுக்கு வரும் பெண் தோழிகள் இரவில் அங்கே தங்கியதில்லை என்பதே அவனது நினைவில் இல்லை. தங்க சொல்லி இவன் கட்டாயப்படுத்தி, அதற்கு அவர்கள் மறுத்து என ஏதாவது சம்பவம் நடந்திருந்தால்தானே அவனுக்கு நினைவிருக்க?

ஐஸக் சுவாரஷ்யமாக இருவரையும் பார்த்து விட்டு தன் வேலையை தொடர்ந்தார்.

சஞ்சயின் வீடு ஏனோ தானோ என இருந்தது. அவன் வீட்டை பராமரிக்கும் லட்சணம் அப்படி.

இரவு நேரத்தில் இப்படி ஆண் நண்பனின் வீட்டிலிருக்கும் சங்கடத்தில் மீரா அமைதியாக இருந்தாள்.

சஞ்சய்தான் வள வளத்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில், “என்ன மீரா, ஏன் டல்லா இருக்க, என் மேல எதுவும் கோவமா?” எனக் கேட்டான்.

“எனக்கு இப்படி இந்த நேரத்துல உங்களோட இருக்கிறது எப்படியோ இருக்கு சஞ்சய், ப்ளீஸ் ஹாஸ்டல்ல விட்ருங்க” என அவள் சொல்லி முடிக்கும் முன் அவளின் விழிகள் கலங்கிப் போய் விட்டன.

“ஹேய் மீரா…” என பதறினான் சஞ்சய்.

“கொஞ்ச நாள் பழக்கம்னாலும் என்னை பத்தி நல்லா தெரியும்தானே உனக்கு? என் கூட இருக்க அழுகை வருதா உனக்கு?” என சற்று குறையாகவே கேட்டான்.

“உங்களை பத்தி தப்பா நினைச்சிருந்தா உங்களோட வெளில வரவே சம்மதிச்சிருக்க மாட்டேன் சஞ்சய். ஆனா… இப்படிலாம் எனக்கு பழக்கம் இல்லை” என்றவள் இப்போது அழுகையை உள் இழுத்து தன்னை நிலைப் படுத்தியிருந்தாள்.

இரு கைகளையும் மேலே உயர்த்தி, “ஸாரி… உன் மைண்ட் செட் தெரில எனக்கு. வெரி ஸாரி” என்றான்.

அவனை காயப் படுத்தி விட்டோமோ என அவளுக்கு கவலையாகி விட, “சீக்கிரம் சாப்பிட்ரலாம், அப்புறம் கிளம்புறேன்” என்றாள்.

“நிஜமாவா, உனக்கு பிராப்ளம் இல்லையா?” என வினவினான்.

“இப்போ ஓகே, ஆனா இதுதான் லாஸ்ட் சஞ்சய்!” என சற்று அழுத்தமாகவே சொன்னாள்.

“ஹையோடா! ரொம்ப மிரட்டாத, நீ அழுவேன்னு எல்லாம் நினைக்கல நான். இதுதான் லாஸ்ட், பிராமிஸ்” என்றவன் பசியில்லை என்றாலும் உணவை பிரிக்க ஆரம்பித்தான்.

அவளும் பிரிக்க உதவி சாப்பிட அமர்ந்தாள். இருவருமே சரியாக சாப்பிடவில்லை.

மீரா வீட்டுக்குள் வந்த அரை மணி நேரத்துக்கு உள்ளாகவே வெளியே வந்தனர்.

மீராவை விடுதியில் விட்டு வருவதாக ஐஸக்கிடம் சொல்லி புறப்பட்டான் சஞ்சய். மீராவுக்கு அவரின் கூரிய பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. தன்னை தவறாக நினைக்கிறாரோ என்ற எண்ணத்தில் வாய் மொழியாக விடைபெற முடியாமல் தலையை மட்டும் அசைத்தாள்.

‘நல்ல ஜோடிப் பொருத்தம்!’ என மனதில் சிலாகித்துக் கொண்டே அவளுக்கு விடை கொடுத்தார் ஐஸக்.

பைக்கில் செல்லும் போது இருவரிடமுமே அமைதி. சஞ்சய்க்கு அந்த அமைதி அறவே பிடிக்கவில்லை. விடுதிக்கு சற்று தூரம் இருக்கும் போதே, பைக்கை நிறுத்தி விட்டான்.

“என்னாச்சு சஞ்சய்?” என அப்போதுதான் வாய் திறந்தாள்.

“நீ ஏன் நான் ஏதோ பெரிய தப்பு செய்திட்ட மாதிரி என்னை ஃபீல் பண்ண வைக்கிற மீரா? இது சரியாகாம நைட் என்னால தூங்க முடியாது. ஐ ஹேட் ரெஸ்ட்லெஸ் ஸ்லீப்” என்றான்.

“நாம ரெண்டு பேரும் பிறந்த, வளர்ந்த சூழல் வேற வேற இல்லியா சஞ்சய்? சில விஷயங்கள் உங்களை போல என்னால ஈஸியா எடுத்துக்க முடியலை. உங்க இன்டென்ஷன் தப்பில்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். இது எக்ஸ்பெக்ட் பண்ணாம நடந்ததால உடனே என்னால நார்மல் ஆக முடியல. நீங்க நைட் நல்லாவே தூங்கலாம்” என்றாள்.

அவளை திரும்பி பார்த்து, “நீ ஓகேதானே?” எனக் கேட்டான்.

சின்ன புன்னகையுடன் அவள் ஆம் என சொல்லவும் மீண்டும் அவனது பைக் பயணப் பட்டது.

எதிர்பாராத நேரத்தில் நடக்கும் சில சந்திப்புகள் திருப்புமுனையாக அமைந்து  விடுகின்றன. தற்போதைக்கு வெறும் நட்பாக மட்டுமே பயணிக்கும் இவர்களின் பாதை வேறெந்த திசையில் இவர்களை கொண்டு செல்ல காத்திருக்கிறது என அவர்களுக்கே தெரியாது.