“சரி” என்று அவளும் தலையாட்ட, வரப்போகும் ஆபத்தை உணராமல் மூவரும் நுழைவாயிலுக்குள் நுழைந்தனர்.

மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருந்த அந்த நுழைவாயிலின் மேற்புறத்தில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டிருந்தது. வாயிலின் இருபுறங்களிலும் நாகங்கள் மனித உருவில் காவல் காத்துக்கொண்டிருந்தன.

மற்றவர்கள் நுழைவதைப் போலவே மக்களோடு மக்களாக மூவரும் அந்த ராஜ்யத்திற்குள் நுழைந்தனர். அங்கே காணப்பட்ட பிரம்மாண்டமான கட்டிடங்களும் அழகிய வேலைப்பாடுகளும் அவர்களை வியப்பில் ஆழ்த்தின. தண்ணீருக்குள் இப்படியொரு அழகிய நகரம் இருக்குமென்று யாராவது சொன்னால், அதை யாரும் நம்பக்கூட மாட்டார்கள். அவ்வளவு அழகாகவும் பிரம்மாண்டமாகவும் அந்த நகரம் காட்சியளித்தது. மக்கள் அனைவரும் சந்தைகளில் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டும், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும் இயல்பாக நடமாடிக்கொண்டிருந்தனர்.

அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக வியப்புடன் பார்த்துக்கொண்டு வந்த ருத்ரா, அங்கிருந்த உணவுப் பொருட்களைக் கவனித்ததும் அவளுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது.

‘பாம்புகள் என்றால் தவளைகளைத்தானே உண்ணும்? இவர்கள் என்னடா என்றால் மனிதர்களைப் போலச் சந்தையில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்!’ என்று மனதிற்குள் நினைத்தவள், தன் சந்தேகத்தை அடக்க முடியாமல் பரமேஷிடம் கேட்டாள்.

“இவங்க எல்லாரும் என்ன சாப்பிடுவாங்க?”

அவளைத் திரும்பிப் பார்த்த பரமேஷ், “இப்போ அதுதான் உனக்கு முக்கியமா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

“இல்லை, பாம்புகள்லாம் தவளைகளைத்தானே திண்ணும்? இவங்க என்னன்னா மனுஷங்க மாதிரி காய்கறி, பழம் எல்லாம் வாங்குறாங்களே. அதான் கேட்டேன்!” என்றாள் ருத்ரா.

அவளுடைய கேள்வியைக் கேட்ட பரமேஷ், “நம்ம முதல்ல இங்கிருந்து உயிரோட வெளியே போவோமானு தெரியலை… இந்தக் கேள்விதான் உனக்கு முக்கியமா?” என்று கேட்டான்.

அவனுடைய பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த ருத்ரா அமைதியாகிவிட்டாள்.

அஜித் சுற்றிலும் பயங்கரமான தோற்றத்துடன் காணப்பட்ட மனிதர்களைக் கவனித்தபோது, அவனுக்குள் பயம் எழுந்தது. இருப்பினும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மெல்லப் பரமேஷின் பின்னால் நடந்தான்.

பரமேஷின் கண்கள் மட்டும் தங்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தன. அப்போது திடீரென்று நான்கு வீரர்கள் மூவரையும் சுற்றிவளைத்து நின்றனர். தப்பிக்க வழியில்லை என்பதையும், இப்போது அவர்களுடன் சண்டையிடுவது வீண் என்பதையும் உணர்ந்த பரமேஷ் அமைதியாக நின்றான்.

“யார் நீங்கள்? எந்த ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினர் வீரர்கள்.

“நாங்கள் கடம்ப ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். இங்கே வணிகத்திற்காக வந்திருக்கிறோம்” என்று தாரகை சொல்லிக்கொடுத்த பொய்யைக் கூறினான் பரமேஷ்.

அதற்கேற்ப, “ஆமாம்” என்று அஜித்தும் ருத்ராவும் தலையசைத்தனர்.

அவர்கள் கூறிய பதிலை ஏற்றுக்கொண்ட வீரர்கள் அங்கிருந்து சென்றதும், மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு ஆழ்ந்த மூச்சை வெளியேற்றினர்.

நெடுநேரமாக அந்த ராஜ்யத்தைச் சுற்றி அலைந்ததால் மூவரும் களைத்துப்போயிருந்தனர். அதனால், ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தனர்.

“இப்படியே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி டா அந்தச் சாவியோட இரண்டாவது பாகத்தைக் கண்டுபிடிக்கிறது?” என்று கேட்டான் அஜித்.

“அதுதான் எனக்கும் தெரியலை டா” என்று களைப்பு முகத்தில் தெரியக் கூறினான் பரமேஷ்.

ருத்ரா எதுவும் பேசாமல் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தாள்.

அப்போது அங்கே ஒரு குரல் கேட்டது.

“எனக்குத் தெரியுமே அந்த இடம்!”

குரல் எங்கிருந்து வருகிறது என்று மூவரும் சுற்றிலும் தேடினர். அப்போது பரமேஷ் வைத்திருந்த சிறிய பையிலிருந்து ஒரு சிறிய நாகமாக மாறியிருந்த தாரகை எட்டிப் பார்த்தாள்.

ராஜ்யத்திற்கு வெளியே தாரகை உள்ளே நுழையாமல் சென்றுவிட்டதாக மூவரும் நினைத்திருந்தனர். ஆனால், அவள் தங்களுடன் பையிலேயே வந்திருப்பாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

“உங்களுக்கு அந்தச் சாவி இருக்கிற இடம் தெரியுமா?” என்று கண்கள் மின்னக் கேட்டான் அஜித்.

“தெரியுமே!” என்று தன் தலையை அசைத்தாள் தாரகை.

“இதை ஏன் முதல்லேயே சொல்லல?” என்று இதுவரை தங்களை அலையவிட்ட கோபத்தில் அவளைப் பார்த்துக் கேட்டான் பரமேஷ்.

“முன்னாடியே சொல்லியிருந்தா, நான் எப்படி எதிரி ராஜ்யத்தைச் சுற்றிப் பார்க்க முடியும்?” என்று எந்தக் கவலையுமின்றி அலட்சியமாகப் பதிலளித்தாள் தாரகை.

அவளுடைய பதிலைக் கேட்ட பரமேஷுக்குள் கோபம் எழ, “நீ சுற்றிப் பார்க்கிறதுக்காக நாங்க உயிரைப் பணயம் வச்சு அலையணுமா?” என்று அவளை முறைத்துக்கொண்டே கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. அதான் நான் இருக்கேன்ல!” என்று அசட்டையாகத் தன் தலையை அசைத்தாள் தாரகை.

அவளுடைய அலட்சியமான பதிலைக் கேட்ட பரமேஷ் பெருமூச்சுவிட்டான். அதற்குமேல் அவளிடம் வாதாடிப் பயனில்லை என்பதை உணர்ந்தவன், “சரி, இப்போ சாவியோட இரண்டாவது பாகம் எங்க இருக்கு? சொல்லுங்க” என்று கேட்டான்.

தன் கண்களை மூடித் தன்னுடைய சக்திகளைக் குவித்த தாரகை, நேராக ஒரு திசையை நோக்கித் தலையசைத்துக் காட்டினாள்.

மூவரும் எழுந்துகொள்ள, தாரகை மீண்டும் பைக்குள் சென்று மறைந்துகொண்டாள்.

தாரகை காட்டிய திசையில் இருந்த ஒற்றையடிப் பாதையில் மூவரும் நடக்கத் தொடங்கினர். சிறிது தூரம் சென்றதும் அந்தப் பாதை ஒரு நீரோடையின் அருகே சென்று முடிந்தது. அதற்கு மேல் செல்ல வழியே இல்லாததைக் கண்ட மூவரும் சுற்றிலும் பார்த்தனர்.

ஒருவேளை கதைகளில் வருவதைப் போல நீரோடைக்குப் பின்னால் ஏதாவது ரகசிய வழி இருக்குமோ என்று நினைத்த ருத்ரா, நீரோடையின் அருகே சென்றாள்.

அவள் நீரோடைக்கு மிக அருகில் சென்ற அடுத்த நொடியே, திடீரென்று பெருக்கெடுத்து ஓடிய நீர் அவளை அடித்துச் சென்றது.

“ருத்ரா!” என்று பதறிய பரமேஷ், ஒரு நொடியும் யோசிக்காமல் நீரோடைக்குள் குதித்தான்.

நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட ருத்ராவை நோக்கி நீந்திச் சென்றவன், அவளைக் காப்பாற்ற முயன்றான். ஆனால், நீரோட்டம் மிகவும் வேகமாக இருந்ததால் அவனால் அவளை நெருங்கக்கூட முடியவில்லை. அடுத்த சில நொடிகளில் அவனும் நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.

நீரின் வேகத்தில் மூச்சுவிடத் திணறியபோதும், தன்னைச் சமாளித்துக்கொண்ட ருத்ரா, பரமேஷின் கைகளைப் பிடிக்க முயன்றாள். ஆனால், ஒவ்வொரு முறையும் அவளுடைய முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த அஜித்தும் பதறிப்போனான். நீரோடையின் கரையோரமாக ஓடிக்கொண்டே, அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்புடன் முயன்றான்.

மறுபுறம், நீரின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் பரமேஷும் தடுமாறத் தொடங்கினான். மூச்சுத்திணறல் அதிகரிக்க, அவனுடைய பலமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

ருத்ராவோ ஏற்கெனவே தன் பலத்தை முழுவதுமாக இழந்திருந்தாள். எப்படியாவது இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க வழி கிடைக்குமா என்று யோசித்தவளின் கண்களில், நீரோட்டத்துடன் அடித்துக்கொண்டு வந்த மரக்கட்டை ஒன்று தென்பட்டது.

சற்றும் தாமதிக்காமல் அதைப் பற்றிக்கொண்டவள், தன் தலையை மரக்கட்டையின் மீது சாய்த்துச் சில நொடிகள் ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பின்னர், பரமேஷ் எங்கே இருக்கிறான் என்று பதற்றத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

நீரின் வேகத்தில் பரமேஷ் அடித்துக்கொண்டு வருவதைக் கண்டதும் அவளுடைய இதயம் வேகமாகத் துடித்தது.

‘எப்படி பரமேஷைக் காப்பாத்துறது?’ என்று தவித்த அவளின் மனதிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அந்த நேரத்தில், தாரகை தன் நாக உருவத்திற்கு மாறி, நீரோட்டத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த பரமேஷை நோக்கிப் பாய்ந்தாள். அவனைத் தன் சக்தியால் நீரோட்டத்திலிருந்து விலக்கி, கரையின் ஓரமாகக் கொண்டுவந்து சேர்த்தாள்.

பரமேஷ் கரையை அடைந்ததும், ருத்ராவை நோக்கித் திரும்பிப் பார்த்தாள் தாரகை. மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டு அவள் தத்தளித்துக்கொண்டிருப்பதைக் கண்டவள், ஒரு கணம் அப்படியே நின்றாள்.

அவளைக் காப்பாற்ற வேண்டுமா என்ற தயக்கம் அவளுக்குள் எழுந்தது. ஆனால், பரமேஷின் பார்வை மீண்டும் ருத்ராவைத் தேடுவதை உணர்ந்ததும், அவளுடைய முகம் இறுகியது.

தன் மனதில் எழுந்த பொறாமையை மறைத்துக்கொண்டு, ருத்ராவையும் கரையின் ஓரமாகக் கொண்டுவந்து சேர்த்தாள்.

மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டு மெதுவாகக் கரையேறிய ருத்ரா, அங்கே நின்றுகொண்டிருந்த பரமேஷைப் பார்த்ததும் நிம்மதியடைந்தாள்.

அவளை நோக்கி ஓடிவந்த பரமேஷ், “நீ ஓகேதானா?” என்று மூச்சுவாங்கக் கேட்டான்.

“ம்ம்ம்…” என்று தலையசைத்தாள் ருத்ரா.

அப்போதுதான் தன் உடல் முழுவதும் நனைந்திருப்பதை உணர்ந்தவள், தன் கைகளை மார்புப் பகுதியின் குறுக்கே கட்டி மறைத்துக்கொண்டாள். அவளுடைய சங்கடத்தைப் புரிந்துகொண்ட பரமேஷ் உடனே மறுபுறம் திரும்பிக்கொண்டான்.

பெண்களை உச்சி முதல் பாதம் வரை காமப் பார்வையுடன் பார்ப்பவர்களுக்கு மத்தியில், ருத்ராவின் சங்கடத்தைப் புரிந்துகொண்டு பரமேஷ் திரும்பிக்கொண்டது அவளைச் சற்றே வியப்பில் ஆழ்த்தியது என்றே சொல்ல வேண்டும்.

அப்போது அவர்களுடைய அருகில் வந்த தாரகை, “உன்னைக் காப்பாத்துன எனக்கு ஒரு நன்றி கூட இல்லையா?” என்று பரமேஷை முறைத்தபடிக் கேட்டாள்.

“அய்யய்யோ! சாரிங்க. நான் உங்களை மறந்தே போயிட்டேன். என்னைக் காப்பாத்துனதுக்கு தேங்க்ஸ்!” என்றான் பரமேஷ்.

அவனுடைய பதிலைக் கேட்டதும் உதட்டோரத்தில் புன்னகை மலர, ருத்ராவை நோக்கிப் பார்த்தாள் தாரகை.

‘தாரகை நினைத்திருந்தால் ருத்ராவை அப்போதே காப்பாற்றியிருக்கலாமே, ஏன் காப்பாற்றவில்லை?’ என்ற கேள்வி பரமேஷிடம் எழுந்து மறைந்தது.

தன் தாவணியின் முந்தானையிலிருந்து நீரைப் பிழிந்து வெளியேற்றிய ருத்ரா, சிறிது நேரம் ஆடை காயும் வரை நீரோடையைப் பார்த்தபடி நின்றாள்.

அதற்குள் கரையோரமாக ஓடிவந்த அஜித்தும் அவர்களைத் தேடி அங்கே வந்து சேர்ந்தான்.

“மச்சா! உனக்கு ஒண்ணும் இல்லையே டா?” என்று பரமேஷின் அருகில் வேகமாக வந்தவன், அவனைப் பதற்றத்துடன் பார்த்துக் கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல டா. நான் ஓகேதான்” என்றான் பரமேஷ்.

நண்பனுக்கு ஒன்றுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட அஜித், பின்னர் தாரகையின் பக்கம் திரும்பினான்.

“இப்போ எங்கங்க அந்தச் சாவியைத் தேடிப் போறது?” என்று கேட்டான்.

“இங்கதான் இருக்கு அது” என்று சாதாரணமாகப் பதிலளித்தாள் தாரகை.

“என்னது, இங்கேயா?!” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அஜித்.

ருத்ராவும் பரமேஷும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவருடைய கண்களிலும் அதே அதிர்ச்சி தெரிந்தது.

“ஆமா!” என்ற தாரகை, சற்றுத் தொலைவில் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களை நோக்கித் தன் கையை நீட்டினாள்.

தங்களுடைய தேடலுக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் மூவரும் எழுந்துகொண்டு அந்தக் காட்டை நோக்கி நடந்தனர்.

காட்டிற்குள் காலடி எடுத்துவைக்கப் பரமேஷ் முயன்றபோது, அவனைத் தடுத்த தாரகை முன்னால் சென்றாள்.

அவள் காட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடியே, எங்கிருந்துதான் அவ்வளவு பாம்புகள் வந்தனவோ தெரியவில்லை. மரங்களின் அடியிலிருந்தும், புதர்களுக்கு இடையிலிருந்தும், பாறைகளின் இடுக்குகளிலிருந்தும் ஏராளமான பாம்புகள் வெளிவந்து தங்கள் தலைகளை உயர்த்தின.

ஆயிரக்கணக்கான பாம்புகள் அந்தக் காட்டையே ஆக்கிரமித்திருந்தன. அவற்றுக்கு நடுவே நடந்து செல்வது என்பது முடியாத காரியம் என்றே மற்ற மூவருக்கும் தோன்றியது.

தாரகை தன் நாக உருவத்திற்கு மாறி முன்னால் செல்ல, மற்ற பாம்புகள் அவளுடைய சக்தியைக் கண்டு அஞ்சி வழிவிட்டன.

அவளுக்குப் பின்னால் சென்ற மூவரும், எந்தப் பக்கத்திலிருந்து எந்தப் பாம்பு வந்து தங்களைத் தாக்கிவிடுமோ என்ற அச்சத்துடன் சுற்றிலும் பார்த்துக்கொண்டே மெதுவாக நடந்தனர்.

அந்தக் காட்டிற்குள் நிலவிய அமைதியைக் கலைக்கும் விதமாக, சருகுகள் நெளியும் சத்தமும் பாம்புகள் நகரும் சத்தமும் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன.

திடீரென்று அவர்களுக்கு முன்னால் ஒரு பெரிய நாகம் வந்து வழியை மறைத்துக்கொண்டு நின்றது.

அதன் பிரம்மாண்டமான உடலையும் உயர்ந்து நின்ற தலையையும் கண்ட மூவரும் அப்படியே உறைந்து நின்றுவிட்டனர்.

“டேய்… இது நம்மள போக விடுமா டா?” என்று அஜித் பரமேஷின் கையைப் பிடித்துக்கொண்டு மெல்லிய குரலில் கேட்டான்.

பரமேஷ் பதில் கூறாமல் அந்த நாகத்தையே உற்றுப் பார்த்தான். ருத்ராவும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய முடியாமல் தாரகையை நோக்கினாள்.

ஆனால், தாரகையின் முகத்தில் மட்டும் எந்தப் பதற்றமும் இல்லை. ஓர் அலட்சியப் புன்னகை மட்டும் தெரிந்தது.

தொடரும்…