மகிழினி இல்லாத வாழ்வை வினோத்தால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இனி அவள் கிடைக்க மாட்டாள் என அறிவுக்கு எட்டினாலும், அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
“எப்படி மகிழினி.. அவனை எப்படி நீ கல்யாணம் பண்ணலாம்? என்னை உனக்கு பிடிக்கும் தானே.. எனக்கு தெரியும்” என வினோத் பேச,
அவனை வெறுப்பாய் பார்த்தாள் மகிழினி.
“என்னை விட்டு நீ போகமாட்ட.. போகக்கூடாது.. போகவும் விடமாட்டேன்” என்றவாறு அவளருகே வர,
“டேய்!!!” என அவனை இடைமறித்தான் கெளதம்.
வினோத் அவன் சட்டையைப் பிடிக்க.. தன் சட்டையைப் பிடித்தவன் கையை கெளதம் உதறிவிட அங்கொரு பிரச்சனை ஆரம்பிப்பதற்குள்,
“இருங்க கெளதம். அவன் பேசட்டும்” என்ற மகிழினியின் குரலில் இருவரும் அவள் புறம் திரும்ப,
“சொல்லு வினோத். எதை வெச்சு எனக்கு உன்னை பிடிக்கும்னு நீ நினைக்குற?” என்றாள் அவனை கூர்துளைக்கும் பார்வையில்.
கௌதமை விடுத்து அவளருகே வந்தவன்,
“மகிழ்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டி. நீ பிறந்ததே எனக்காக தான்னு நெனச்சு வாழ்ந்துட்டு இருக்கேன். அத்தை, மாமா போனதுல இருந்து என் கண்ணுக்குள்ள வெச்சு உன்னை பார்த்துக்கிட்டேன். எங்க அம்மாவை கூட உன்னை எதுவும் பேசவிட்டதில்லை. உனக்கே தெரியும் தானே?”
அவள் அமைதியாய் இருக்க, வினோத்துக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது.
“எங்க நீ என்னைவிட்டு போய்டுவையோங்கற பயத்துல தான் உன்னை யாரோடையும் பழக விடாம என்கூடையே வெச்சுக்கிட்டேன். உன்னை பார்க்காம.. நீயில்லாம என்னால இருக்க முடியலைடி. அதான் உன்னை ஹாஸ்டல்ல சேர்த்ததும் என்னால கோவத்தை கண்ட்ரோல் பண்ண முடியலை. நீயும் உடனே கிளம்பி போய்ட்ட.. எப்படி என்னைவிட்டு போகலாங்கற கோவம் தான்டி உன்மேல”
“மாமா என்னை ஹாஸ்டல்ல சேர்க்க யாரு காரணம்?” எனக் கேட்டாள் கூர்மையாய்.
“அதுல என்ன தப்பு மகிழ்? என் வீட்டுல எனக்கு உரிமைப்பட்டவளை நெருங்குனதுல எந்த தப்பும் இருந்ததா எனக்குத் தெரியலை. நீ என்னை விட்டு போகாம இருக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன். உன்மேல இருந்த லவ்..” என்ற வினோத்தை கெளதம் நெருங்குவதற்குள்,
அவன் கன்னத்தில் ஓங்கி ஒன்றை வைத்திருந்தாள் மகிழினி.
“ச்சே.. எப்படி உன்னால இதெல்லாம் நியாயப்படுத்த முடியுது? என்ன ஜென்மம் நீயெல்லாம்? செய்யக்கூடாதது எல்லாம் செஞ்சுட்டு கடைசில அதை லவ்னு அடையாளப்படுத்துற? உன்னைப் பத்தி இவ்வளவு பேசுற நீ, ஒருநாள் என் இடத்துல இருந்து யோசிச்சு பார்த்திருக்கியா? அன்னைக்கு மாமா மட்டும் வராம இருந்து, நீ என்னை ஏதாவது செஞ்சிருந்தா நான் அதுக்கப்பறம் உயிரோட இருந்திருப்பேன்னு நினைக்குறையா?” என உள்ளே அனல் தகிக்க, விழிகள் சிவக்கப் பேசினாள்.
“ப்ச்.. எதுக்கு இப்போ இவன்கிட்ட இதெல்லாம் பேசிட்டு. விடு மகிழ்” என ஆறுதலாய் அவளருகில் வந்து நின்றான் கெளதம்.
“மகிழ்! என்னை மன்னிச்சிருடி. என்னை நான் மாத்திக்குறேன். எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. வாங்கிக்குறேன். நீ என் கூட இருந்தா போதும். எனக்குன்னு இப்போ நீ மட்டும்தான் இருக்க. என்கூட வந்திருடி” என வினோத் மண்டியிட்டு அவள்முன் கெஞ்ச,
கண்களை மூடி தன்னை சமன் செய்து கொண்டவள்,
“நீ செஞ்ச காரியத்துக்கு எல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கு மன்னிப்பு கிடையாது வினோத். உன் ஆசை என்னைக்கும் நிறைவேறாது” என்றாள் அமைதியாய்.. அழுத்தமாய்.
“இனியும் இங்க நின்னு எங்க நேரத்தை வீணடிக்காம கிளம்புறது தான் உனக்கு நல்லது. நீ மகிழைப் பார்க்குறது இதுவே கடைசியா இருக்கட்டும். திரும்ப இவ முன்னாடி வரணும்னு கனவுலையும் நினைச்சிராத. அப்பறம் நான் உன்னை மாதிரி வெறும் வாய் வார்த்தையா எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டேன்” என எச்சரித்தான் கெளதம்.
அதில் வெகுண்டெழுந்த வினோத்,
“எல்லாம் என் தப்புதான். அன்னைக்கே உன்னை போக விட்டிருக்கக் கூடாது. என்னை விட்டு நீ எங்க போய்டுவன்னு இருந்துட்டேன். நீ இவ்வளவு தூரம் வருவைன்னு தெரிஞ்சிருந்தா அப்போவே உன்னை கல்யாணம் பண்ணியிருப்பேன். என்னால நீ இல்லாம இருக்க முடியாதுன்னு உனக்கு ஏன் புரிய மாட்டிங்குது மகிழினி…” எனக் கத்தியவன்,
“நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்ணுறேன்னு ஏன் புரிய மாட்டிங்குது. சின்ன வயசுல இருந்து ஒன்னா இருக்குற என்னைவிட நேத்து வந்த இவன் உனக்கு பெருசா போய்ட்டானா?” என கண்கள் சிவக்க அவளைப் பார்க்க,
“நீ எதை லவ்னு சொல்லுற? எல்லார்கிட்ட இருந்தும் என்னை பிரிக்க நீ செய்யுற இந்த பைத்தியகாரத்தனத்தையா? இல்லை என்னை மனசளவுல கொன்னுட்டு என்கூட வாழணும்னு ஆசைப்படுற உன் சைக்கோத்தனத்தையா?” என்றவள் அவன் அமைதி கண்டு,
“உன்னைவிட கெளதம் பெருசான்னு கேட்டியே.. ஆமா.. என் கெளதம் எனக்குப் பெருசுதான். உன்னை விட இல்லை.. இந்த உலகத்தை விடவும் பெருசுதான்” எனக் கத்த,
“என் கோபத்தை கிளறாத மகிழினி” எனக் கொதித்த வினோத்திடம்,
“போதும் நிறுத்து. உனக்கு மேல எனக்கும் ஆத்திரம் இருக்கு. உன்னை கொல்லுற அளவுக்கு” என கர்ஜித்தாள்.
அதில் நக்கலாய்ச் சிரித்தவன்,
“சேர்ந்து கூட சாகலாம் ஆனா உன்னைப் பிரிந்து போக விடமாட்டேன்” என்றான் அழுத்தமாய்.
அதில் அனைவருக்குமே பொறுமை பறந்திருந்தது.
“இவன் விட்டா பேசிட்டே போவான். கெளதம் அண்ணா, இவனை அடிச்சு தொறத்துங்க முதல்ல” என வர்ஷினி சொல்லவும்,
“இருங்க கெளதம்” என கௌதமை இடைமறித்த மகிழினி,
“இங்க பாரு வினோத். உனக்கு வேணும்னா ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு நல்லாத்தெரியும். இத்தனை நாள் உன்னை பார்த்திடவே கூடாதுன்னு மட்டும் தான் நெனச்சேன். நீயும் மனம் மாறி இந்த உலகத்துல எங்காவது ஒரு மூலைல நல்லா வாழ்ந்துட்டு இருக்கணும்னு தான் ஆசைப்பட்டேன்” என்றவள் சில நொடிகள் இடைவெளிவிட்டு,
“ஆனா இந்த நிமிஷம் தோணுது..” என்று அவன் விழிகளை நேருக்கு நேர் சந்தித்து,
“அன்னைக்கு ஆத்துலயே நீ போயிருக்கக் கூடாதான்னு..” என்றாள் அவன் மீதிருந்த மொத்த வெறுப்பையும் முன்னிறுத்தி.
ஒரு நொடியில் அவனது இதயம் இயங்க மறுத்து நின்றது போல் உணர்ந்தான் வினோத். என்ன சொன்னாள் அவள்? நீ இல்லாதே போயிருக்கலாம் என்று தானே சொன்னாள்?
அவள் வார்த்தைகள் அவன் செவிகளுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்க, ஒரு நெடிய பெருமூச்சை வெளியேற்றியவன் ஏமாற்றம் பொங்க வாய்விட்டுச் சிரித்தான்.
கண்கள் கலங்க.. மனது வலிக்கச் சிரித்தான்.
“உன்னால தான் நான் என் குடும்பத்தை இழந்தேன். தனியா நின்னேன். எத்தனை கஷ்டம்.. எத்தனை அவமானம்.. அத்தனையும் சகிச்சிட்டு நடைபிணமா இருந்தேன்” என்ற மகிழினி,
“ஆனா இன்னைக்கு, எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. இதுக்கு மேலையும் நான் தனியா நிற்கவேண்டிய அவசியம் எனக்கில்லை. என் குடும்பத்தை யாருக்காகவும் எதுக்காகவும் நான் இழக்குறதாவும் இல்லை. இனியும் உனக்கு புரியலைன்னா நீ மனுஷ ஜென்மமே கிடையாது” என்று முடித்தாள் ஆயாசமாய்.
கொஞ்சம் நிதானத்திற்கு வந்திருந்த வினோத்,
“சரி, எனக்கு ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லு. நான் இப்பவே இங்க இருந்து போய்டுறேன். இனி உன் பக்கமே வரல” என்றான்.
என்னவென்பதாய் மகிழினி பார்க்க,
“இத்தனைக்கும் அப்பறம் ஒரு இடத்துல கூடவா என் மனசுல உன்மேல இருந்த காதலை நீ உணரலை? அப்படி இவன்கிட்ட உன்னைக் கொடுக்க என்ன காரணம்னு மட்டும் சொல்லு?” என்றான் அவள் பதிலைப் பெரிதாய் எதிர்பார்த்தவனாய்.
“வினோத்!” என்றவள்,
“உனக்கு பிடிச்சிருக்குன்னு நீ என்னை பிடிச்சு வெச்சுக்க நினைக்குற. ஆனா கெளதம் அவருக்குப் பிடிச்சதால என்னை சுதந்திரமா பறக்க விட்டுப் பார்க்குறாரு. கூண்டா.. வானமான்னு கேட்டா ஒரு பறவைக்கு எது மகிழ்வுன்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என கௌதமைப் பார்க்க,
அவனும் மகிழினியை விட்டு விழிகளை விலக்காதவனாய் இருந்தான்.
வினோத் அமைதியாய்ச் சிந்திக்க,
“உனக்கு உன் சந்தோசம் மட்டுந்தான் பெருசா தெரிஞ்சுது வினோத். ஆனா எனக்குன்னு ஒரு மனசு இருக்கு.. அதில ஆயிரம் ஆசை.. கனவு.. லட்சியம் எல்லாம் இருக்கு. இதெல்லாம் சேர்ந்துதான் நான். ஆனா நீ என்னை வெறும் ஒரு பொம்மையா மட்டும் தான் பார்த்த. உனக்கு வேணும்னா வேணும் அவ்வளவுதான்” என கசப்பாய்க் கூறியவள்,
“என் கெளதம் அப்படியில்லை.. என்னை தெரிஞ்ச நாள்ல இருந்து இப்போ வரைக்கும் ஒரு சந்தர்ப்பத்தில கூட என்னை தனியா ஃபீல் பண்ண விட்டதில்லை. எனக்கு எந்த நேரத்துல என்ன தேவைன்னு என்னை விடவுமே அவருக்கு நல்லாத் தெரியும்” என்றபோது அவளது அகமும், முகமும் சேர்ந்து மலர்ந்திருந்தது.
“என் கெளதம் இதுவரை நான் இழந்த ஒவ்வொன்னையும் எனக்கு திருப்பிக் கொடுத்திருக்காரு. உன்னால நான் தொலைச்ச என் முகவரியையும் சேர்த்தே தான்” என்றாள், அந்த முகவரியில் சற்று அழுத்தம் கொடுத்து.
வார்த்தைக்கு வார்த்தை ‘என் கெளதம்’ என்று அவள் கூறியதில், மகிழின் முகவரியாய் அவன் மாறியிருப்பது வினோத்துக்குப் புரிந்தது.
“போதும் மகிழினி” என்று அவள் பேசுவதைக் கேட்க விரும்பாதவனாய் இடைமறித்து,
“நான் கிளம்புறேன். இனி வரமாட்டேன். நீ நல்லா இரு” என்றுவிட்டு விறுவிறுவென வெளியேறிக் கொண்டான் வினோத்.
அவனுக்கு உடைந்து அழவேண்டும் போல் இருந்தது. அவர்கள் முன்னிலையில் அதற்கு வாய்ப்பளிக்காது வெளியே வந்துகொண்டான்.
இத்தனை நாட்கள் மகிழினிக்கு யாருமில்லை என்ற நினைப்பே அவனை அளவிற்கும் மீறி ஆட வைத்திருந்தது. இன்று அவளுக்கு அத்தனை பேர் இருக்க.. தான் தனிமரம் ஆனதை எண்ணி வருந்தினான்.
எங்கு செல்கிறோம் என்ற இலக்கின்றி, அவளை விட்டு வெகு தூரம் செல்லவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு அங்கு நின்றுகொண்டிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.
பக்கத்துல வாழும் போது
உன்னருமை தெரியலை..
உன்னருமை தெரியும் போது
பக்கம் நீயில்லை..
தன்னந்தனி படகு போல
தத்தளிக்கும் வாழ்க்கை போல..
தண்டனைகள் இன்னும் இல்லை
இந்த மண்ணிலே..
சாரதியின் ஆழமான வரிகளில் பிரதீப் குமாரின் உணர்வுபூர்வ குரலில் ஒலித்தது அந்தப் பாடல்.
பேருந்து கிளம்பியிருக்க.. அவனைப் போலவே அவனது நினைவுகளும் எங்கோ பயணித்தது.
வினோத் சென்றதும் புயல் மழை அடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது கௌதமின் வீடு.
“அந்த வினோத் மானஸ்தனா இருந்தா இனி இந்தப் பக்கமே வரமாட்டான்” என்றாள் அஸ்வினி மெதுவாய்.
“இனி எந்த மூஞ்சியை வெச்சுட்டு வருவான். வந்தாலும் மூஞ்சியை பேத்து அனுப்பாம கெளதம் அண்ணா விடமாட்டாரு” என கவிதா சொல்லவும், அவர்கள் நால்வரும் கௌதமைத் தான் பார்த்தனர்.
இறுகிய முகத்தோடு நின்றிருந்தான்.
சமையல் அறையிலிருந்து கல் உப்பையும் காய்ந்த மிளகாயையும் எடுத்து வந்த கலைச்செல்வி,
“திரும்பு மகிழினி” என மகிழினியை கிழக்குப் பார்த்து நிற்க வைத்து,
“இன்னையோட உன்னை பிடிச்சதெல்லாம் போகட்டும்” என அவளுக்குச் சுற்றிப் போட்டுவிட்டு வர அவர் கையைப் பிடித்தவள்,
“அத்தை! நடந்ததெல்லாம் உங்களுக்கு சரியா தெரியாது. நான் என்னன்னு தெளிவா சொல்லுறேன்” என்றாள் ஒருவித கலக்கத்தோடு.
“எல்லாம் தெரியும் மா” என்ற சத்யமூர்த்தியின் குரலில் மகிழினி அவர் புறம் பார்க்க,
“மதிவாணன் என் நண்பர் தான்” என்றார்.
அவளுக்குப் புரிந்துபோனது.
“அப்பா! நானும் உங்ககிட்ட ரொம்ப நாளா இதை சொல்லணும்னு இருந்தேன். ஏன் அன்னைக்கு அவ்வளவு அவசரமா எங்க மேரேஜ்…” என கெளதம் ஆரம்பிக்க,
“அதுவும் தெரியும் ப்பா. நீ சரியான முடிவை தான் எடுத்திருக்க” என சத்யமூர்த்தி அவனுக்கு அதிர்ச்சியளித்தார்.
‘எப்படித் தெரியும்’ என்பதாய் கெளதம் பார்க்க,
அவர் பார்வை கீர்த்தனாவின் மேல் விழுந்தது. கெளதம் அவளைப் பார்க்க.. மென்மையாய்ப் புன்னகைத்தாள் அந்த டேட்ஸ் லிட்டில் ப்ரின்செஸ்.
அவள் அன்றே அவர்களது ‘பெங்களூர் டேஸ்’ சம்பவங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் வீட்டில் எடுத்துக்கூறி அவர்களுக்குள் ஒரு சுமூகத்தைக் கொண்டுவர முயன்றிருந்தாள்.
“இருந்தாலும் என்னை மன்னிச்சிருங்க ப்பா. அன்னைக்கு எல்லாரு முன்னாடியும் உங்களை தலைகுனிய வெச்சுட்டேன்” என்றான் கெளதம் மனதார.
“நானும் உன் விசயத்துல அவசரப்பட்டிருக்கக் கூடாது கெளதம்” என்றவரது வார்த்தைகளால், அதுவரை இருந்த அவனது குற்றவுணர்வு மெல்ல விலகியிருந்தது.
“கெளதம்!” என ஏகாம்பரம் தாமாக முன்வந்து கௌதமிடம் பேசினார்.
“நீங்களும் என்னை மன்னிச்சிருங்க அங்கிள்” என அவன் அவரிடமும் சொல்ல,
“இல்லப்பா.. தப்பு எங்க மேலையும் தான் இருக்கு. சொல்லப்போனா நீ நல்லதுதான் செஞ்சிருக்க” எனவும், அவன் புரியாது பார்த்தான்.
“என் பொண்ணு ரம்யா, அவகூட வேலை செய்யுற பையனை விரும்பியிருக்கா. அது தெரியாம அவ என் முடிவுக்கு கட்டுப்படுவான்னு நம்பி நான் உன்னோட நிச்சயம் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன். விசயம் தெரியவும் லெட்டர் எழுதி வெச்சிட்டு வீட்டை விட்டு வெளிய போய்ட்டா” என்றார் ஏமாற்றமாய்.
மறுநொடியே அதிர்ந்த விழிகளோடு கலைச்செல்வி சத்யமூர்த்தியைப் பார்த்தார்.
அவர் எந்த சலனமுமின்றி அமைதியாய் இருக்க, முன்னரே அவருக்கு விசயம் தெரிந்திருப்பதை அது உணர்த்தியது.
“அப்பறம் நாங்க ரெண்டு வீட்லையும் பேசி சமாதனம் செய்து ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சோம்” என சோகமாய் முடித்த ஏகாம்பரம்,
“நாம நம்ம அப்பா அம்மா சொல்லுறதுக்கு எல்லாம் கண்ணை மூடிட்டு தலை ஆட்டுற மாதிரி இப்போ இல்லை. இந்தக் காலத்துல பசங்க விருப்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கணும்னு நல்லா புரிஞ்சு போச்சு. இல்லையா சத்தி?” என,
ஆமோதிப்பதாய் தலையசைத்தார் சத்யமூர்த்தி.
“உங்களுக்கு என்மேல வருத்தம் இல்லையா அத்தை?” என்றாள் மகிழினி, கவலை கலந்த குரலில் கலைச்செல்வியிடம்.
“ஆரம்பத்துலயே என் மனுசுல இருந்த எல்லா வருத்தத்தையும் உன்மேல காட்டிட்டனே மா. நீ எல்லார்த்தையும் பொறுமையா கடந்து வந்துட்ட. நான் தான் உன்னை புரிஞ்சுக்காம அவசரத்துல வார்த்தையை விட்டுட்டேன். இனி திரும்ப அள்ளவா முடியும்” என அவள் கைகளைப் பற்றி வருந்தினார்.
மகிழினி தனக்கு உரிமைப்பட்டதையே உதறி வந்திருக்க, முன்பொருநாள் நகை விசயத்தில் அவர் உதிர்த்த வார்த்தைகள், அவர் நடந்து கொண்ட விதமெல்லாம் இப்போது அவரை சங்கடம் கொள்ளச் செய்தது.
“அதெல்லாம் இல்லை அத்தை. உங்க சூழ்நிலையில யாரா இருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பாங்க. அதையெல்லாம் மறந்திருங்க” என்றாள் சிறு புன்னகையோடு.
அதில் அவர் மனமும் லேசுபட்டிருக்க,
“அம்மா!” என கெளதம் மெல்ல ஆரம்பித்தான்.
“நீ பேசாம இருடா” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் கலைச்செல்வி.
அதில் கீர்த்தனாவுக்கு சிரிப்பு வந்து தொலைக்க.. அவளை கெளதம் முறைக்க.. அங்கு ஒரு சிப்ளிங்க்ஸ் ஃபைட் ஆரம்பமானது.
“அத்தை! கேக் மெல்ட் ஆகிட்டே இருக்கு. எப்போ கட் பண்ணி கொடுப்பிங்க” என்ற வைஷ்ணவியின் குரலில் தான் அனைவரும் பர்த்டே மோடிற்கு வந்தனர்.
அப்போதுதான் உள்ளிருந்து மகளை அழைத்து வந்திருந்தான் விஜய்.
ஏதாவது சண்டை என்று வந்தாலே விஜய் முதலில் பத்திரப்படுத்துவது அவன் வைஷுவைத் தான்.
‘குட் பேரென்ட்டிங்’ என அவனைப் பெருமிதமாய்ப் பார்த்தாள் கீர்த்தனா.
‘தேங்க்ஸ் டியர்’ என அவள் பார்வை அறிந்து கண்களால் கவி பாடிவிட்டு,
“மச்சா! இனியும் மசமசன்னு நின்னுட்டு இருக்காம வேகமா வா” என்று கௌதமை அழைத்தான்.
விஜய்யின் அழைப்பில்,
“இதோ வரேன் மாமா” என சற்றுமுன் நடந்த அனைத்தையும் உதறித்தள்ளி உற்சாகமாய் வந்தான் கெளதம்.
சில நொடிகளில் அனைத்தும் அழகாய் மாறியிருந்தது.
பார்ட்டி போபர்களை விஜய்யும் கீர்த்தனாவும் வெடிக்கத் தயாராக, கெளதம் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தான்.
“ஹேப்பி பர்த்டே மகிழினி” என்ற வாழ்த்துகளில் மூழ்கி,
“வைஷு குட்டி இங்க வாங்க” என வைஷுவை அழைத்து அவள் கையோடு சேர்த்து கத்தியைப் பிடித்து கேக்கை வெட்டினாள் மகிழினி.
மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது அவளது மகிழகம்.