“கோர்ட்டுக்கு வரணும்னு உங்க கணவருக்கு நோட்டிஸ் போகும். அவருடைய பதிலை தாக்கல் செய்யலாம். கோர்ட் அனேகமா இரண்டு பேரையும் கவுன்சலிங் போகச் சொல்லும்.”
நெற்றியை தடவிக்கொண்ட குமுதினி, “இந்த கல்யாணத்துலர்ந்து விலகி ஓடி வந்தது நாந்தான்னு ஜெய் ஈசியா ப்ரூவ் பண்ணிடுவார். அவசரப்பட்டுட்டேன், வேணாம்னு லெட்டர் எழுதிவெச்சுட்டுதான் கிளம்பினேன். கண்டிப்பா அது அவர்கிட்ட இருக்கும் சர்.”
அவள் சொல்வதில் புருவம் உயர்த்தினார் திலீப். அவினாஷை ஒரு முறை பார்த்துவிட்டு, “பிரியற முடிவு உங்களோடதா இருந்திருந்தா, அப்போ நாம அதைக் காரணமா காட்ட முடியாது மேடம். நான் அவர்தான் உங்களை விட்டு போயிட்டார்னு நினைச்சிட்டேன்.”
“குமுதினிக்கு வேற என்ன காரணம் சொல்லி ஃபைல் பண்ண முடியும் சர்?”, அவினாஷ் கேட்கவும்,
“ம்ம்.. துன்புறுத்தல், வேற மதம் மாறிட்டார், குணப்படுத்த முடியாத அளவுக்கு மனச்சிதைவு, பைத்தியமாகிட்டார்னு சில காரணம் இருக்கு. அதுக்கான ப்ரூஃப் மேடம்தான் சப்மிட் பண்ணனும். “
“இல்லை இது எதுவும் யூஸ் பண்ண முடியாது.”, சுருக்கமாக முடித்துக்கொண்டாள்.
“ம்ம்.. லாஸ்ட் ஆப்ஷன், எட்டு வருஷ பிரிவுல இந்த கல்யாணம் மீட்க முடியாத நிலைக்கு போயிடுச்சுன்னு வாதாடலாம். சட்டத்துல எழுதலைன்னாலும், இதை காரணமா கொண்டு ஜட்ஜ்மென்ட் வந்திருக்கு.”
“அதை எப்படி ப்ரூவ் பண்ணனும் சர்?”, அவினாஷே கேட்டான்.
“குழந்தை இல்லை, இவங்க இரண்டு பேருமே சுய சம்பாத்தியத்தோட இருக்காங்கன்றது ப்ளஸ் பாயிண்ட். இத்தனை வருஷம் பிரிஞ்சிருந்தவங்களை சேர்ந்து இருக்கணும்னு சொல்றது மன உளைச்சல், க்ரூயல்ட்டின்னு வாதாடலாம். எட்டு வருஷம் தனியாதான் இருந்தீங்கன்றதுக்கான ப்ரூஃப், அடுத்து அவர்கிட்ட நீங்க எந்த பண உதவியும் வாங்கிக்காம இருந்தீங்கன்னு ஆதாரம் காட்டணும்.” குமுதினி சம்மதமாக தலையாட்டினாள்.
“அப்பறம், நீங்க சமாதானமாக முயற்சி பண்ணீங்கன்ற ஆதாரம் கேட்பாங்க. கவுன்சலிங் போனது, இல்லை ஊர் பஞ்சாயத்துல பேசினதுன்னு எதாவது..?”, குமுதினி இல்லை என்று சொல்ல, “ஹ்ம்ம்…சரி அது பார்த்துக்கலாம். “
“முதல்ல குடும்ப நல கோர்ட்ல கேஸ் ஃபைல் பண்ணலாம். ஒரு வேளை அவர் எதிர்த்து மனு செய்தா, அதைக் காரணமாக் கொண்டு மேல் முறையீடு செய்து சூப்ரீம் கோர்ட் வரை போய் இதை ரத்து செய்யலாம். ஆனால் ம்யூச்சுவல் டைவர்ஸ் ஈசி மா. நான் வேணா பேசிப் பார்க்கவா? ஜீவனாம்சம் வேணாம். அவர் சொத்துல எதுவும் உரிமை வேணாம்னு முன்னாடியே எழுதி தந்திடலாம்.”
“ம்ப்ச்… இல்லை சர். அதை ஒரு பொருட்டாவே நினைக்க மாட்டார். எனக்கு சேர்ந்து வாழ இஷ்டம்னு வேணும்னே சொல்லலாம்.“, குமுதினி மறுத்தாள்.
“நேரா சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முடியாதா சர்”
அவினாஷைப் பார்த்து முறுவலித்தவர், “இல்லை, குடும்ப நல கோர்ட்ல ஃபைல் பண்ணா ஒன்னரை வருஷத்துக்குள்ள முடிக்கலாம். அதுவே அவங்க கணவர் உயர் நீதி மன்றத்துல அப்பீல் போனா, இன்னும் இரண்டு மூணு வருஷமாகும். அதுக்கப்பறம்தான் சுப்ரீம் கோர்ட் போக முடியும். அங்கே போனா எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ள தீர்ப்பு குடுத்துடுவாங்க. எப்படியும் மொத்தமா எட்டு பத்து வருஷம் ஆகிடும். அதனாலதான் சொல்றேன், அவர்கிட்டவே பேசி, என்ன வேணும்னு கேட்டு ம்யூச்சுவலா ஃபைல் பண்ணுங்க. ஆறு மாசத்துல முடிச்சிட்டு அவங்கவங்க வாழ்க்கையை பார்த்துகிட்டு போகலாம்.” நீளமாக பேசி முடிக்க, அவினாஷிற்கு முட்டிக்கொள்ளத் தோன்றியது.
அவர்களின் முகம்போன போக்கை பார்த்தவர், “மேடம் வேற ஸ்டேட்ல வாழ்ந்திட்டு குடும்ப நல கோர்ட்ல ஃபைல் பண்ணா, உதாரணத்துக்கு நீங்க மும்பைக்கு போயிட்டா, ஒவ்வொரு ஹீயரிங்க்குக்கும் மிஸ்டர் ஜெயசிம்மன் அங்க வரணும். அலைச்சல் தவிர்க்க அவர் நேரா சுப்ரீம் கோர்ட்க்கு ட்ரான்ஸ்பர் செய்யக் கேட்கலாம். அப்போ கொஞ்சம் சீக்கிரமா ஆகும்.”
“அப்பவும் ஜெயசிம்மந்தான் கேட்கமுடியுமா? குமுதினி ட்ரான்ஸ்பர் கேட்க முடியாதா?”, அவினாஷின் கேள்விக்கு முடியாதென்றவர், “என் அட்வைஸ் அவர் என்ன எதிர்பார்க்கறார்னு தெரிஞ்சு அதை குடுத்து முடிக்கறதுதான். இல்லை தனியா ஃபைல் பண்ணாலாம் பரவாயில்லைன்னு முடிவெடுத்தா சொல்லுங்க, ப்ராசஸ் ஆரம்பிக்கலாம்.”, முடித்துக்கொண்டார்.
காரில் அமைதியோ அமைதி. “வேற வழியில்லை குமுதினி. நீயே பேசிப்பார். ஒரு நாள் முழுக்கன்னாலும் பேசித்தான் முடிக்கணும். வேற என்ன பண்றது? நானும் வேணா கூட வரேன்.”, இறக்கிவிடும்போது அவினாஷ் சொல்லவும், மறுக்காமல், தலையை மட்டும் அசைத்துவிட்டு அவள் வீட்டிற்கு செல்ல மாடி ஏறினாள்.
இரவு எட்டு மணி போல் சிம்மனுக்கு அழைத்தாள். ரிங் போய் நின்றது. ‘வேலையா இருக்கானா இல்லை வேணும்னே அவாயிட் பண்றானா தெரியலையே’, மனதுக்குக்குள் திட்டியவள் ஒரு மெசேஜ் தட்டி விட்டு காத்திருந்தாள்.
பதினோரு மணி போல சிம்மன் அழைத்தான். குரலிலேயே அசதி தெரிந்தது. “போன் செய்திருந்தியா குமுதினி? வேலையா இருந்தேன். சொல்லு. என் மேல கோவம் போயிடுச்சா?”
“ம்ம் கோவம் போறதுக்கு நீ என்ன செஞ்ச? அது அப்படியேதான் இருக்கு.”
“சாப்பிடாமலேயே போயிட்ட.”
“மனசு நிறைஞ்சிருந்துது. அதான் கிளம்பிட்டோம்.”, நக்கலாக பதில் வந்தது.
“அறிவிருந்திருந்தா அவனை கூட்டிட்டு வந்திருக்க மாட்ட. இந்த பிரபா எங்கிட்ட நீ ப்ளஸ் ஒன்னா அவினாஷை சொன்னதை சொல்லலை. இல்லாட்டி அப்பவே வேண்டாம்னு சொல்லியிருப்பேன். எங்க இரண்டு பேரையும் ஒரே இடத்துல கோர்த்துவிட்டா ஏதாவது ஒரு சைட் கண்டிப்பா பிரச்சனை ஆகும். பொண்டாட்டியோட லவ்வரை வாங்க வாங்கன்னு வரவேற்கற பாக்கியம் இருக்கே பாக்கியம்..” பல்லைக் கடிக்கும் சத்தம் குமுதினிக்கே கேட்டது.
“நீதான் திறப்பு விழாக்கு வரணும்னு சொன்ன ஜெய். எல்லா பேப்பர்லேயும் ஜோடியா நம்ம போட்டோ வருது. அவினாஷ் அம்மாவே அப்செட் ஆனாங்கன்னா நேர்ல நம்ம பார்த்த அவினாஷ்க்கு எப்படி இருக்கும்?”
“உனக்கு எப்படி இருந்தது? அதை சொல்லு.”
“ம்ம்…தர்மசங்கடமா இருந்தது. இதுல அவருக்கு மூணாவது ரோல சீட் குடுத்திருக்க. இன்சல்ட் பண்ணத்தானே?”, கோவமாய் கேட்டாள்.
“மண்ணாங்கட்டி. அவன் முதல் ரோல உட்கார்ந்திருந்தா கண்டிப்பா ருசிகர தகவல்னு வந்திருக்கும். இதுக்கே நாங்க அழைச்ச பிரஸ்ல மால் பத்தின ந்யூஸ் மட்டும்தான் வரணும்னு சொல்லி கவனிச்சு அனுப்பிச்சேன். நீயும் மீடியாலதான இருக்க. உனக்குத் தெரியாதா?”, அவன் கேட்டதும் நியாயம்தான்.
அதுவும் கவனித்து அனுப்பியதாக கூறவும்தான், அதுதான் எந்த கிசுகிசுவும் வரவில்லையா என்று நினைத்தாள்.
“என்னைக் கூப்பிடாமலேயே இருந்திருந்தா, இதெல்லாம் தேவையே இல்லை”, எனவும், ‘ஆத்தா மலையிறங்கறா’, என்று நினைத்துக்கொண்டான்.
“ஏன் குமுதினி? இத்தனை பில்டிங் கட்டறேன். பொண்டாட்டி ஒன்னாவது திறந்து வெச்சான்னு திருப்திப் பட்டுக்கறேனே. எப்படியும் நான் வேற கல்யாணம் செய்ய மாட்டேன். அதான், இந்த ஆசையும் தீர்த்துக்கலாமேன்னு”, கிண்டலாய்க் கூறினான்.
“வாழ்க்கையில ஒரு முறைதான் தாலி கட்டுவேன். எங்கப்பா மாதிரிதான் நானும். பொண்டாட்டின்னா நீ ஒருத்திதான்.”, அவன் குரலில் இருந்த பெருமை அவளை தூண்டியது.
“ஆமாமாம். உங்க அம்மா இறந்து போனதும், சாப்பாட்டுலர்ந்து, துணி மணி எடுத்துக் குடுக்கற வரைக்கும், அவர் வேலைங்களை கவனிக்க ஆள் போட்டுட்டார். வாரிசுக்கு நீ இருக்க. கட்டில் தேவைக்கும் அவுட் சோர்ஸ் பண்ணிட்டார். அப்பறம் எதுக்கு பொண்டாட்டி?”, காரமாய் குமுதினி கேட்க, ஒரு நிமிடம் அவள் பேசியது உள்வாங்கியவன்,
“ஏய்… அவுட் சோர்ஸ் பண்ணாரான்னு உனக்குத் தெரியுமாடி? சும்மா வாய்க்கு வந்ததை பேசின, அடுத்து பேச வாயிருக்காது பார்த்துக்கோ!”
“சும்மா வில்லனாட்டம் ஏய் ஏய்னு கத்தாத. உனக்கு உங்க அப்பா பத்தி இருக்கற பிம்பம் எனக்குத் தெரியும். அது முழுசும் நிஜம்னு நம்பினா அது உன் இஷ்டம். இப்ப நான் கூப்பிட்டது நம்ம டைவர்ஸ் பத்தி பேச. என்னிக்கு ஃப்ரீ நீ? ஒரு நாள் முழுசான்னாலும் பேசி முடிக்கலாம். இதை இழுத்துட்டே போறதுல எனக்கு இஷ்டமில்லை.”
அவள் பேசியது பற்றிய கோவத்தில் இருந்தவன், “பார்த்துட்டு தகவல் சொல்றேன். வை.”, என்றதோடு இணைப்பை துண்டித்தான்.